முன்னுரைப் பாதைகள்: “சாமிநாதம்”

முன்னுரைப் பாதைகள்: “சாமிநாதம்”

கட்டுரை:- பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

ஓலைப்பழுப்பில் சேகரமாகி இருள் மண்டிய அலமாரிகளிலும், அட்டாணிகளிலும், மரப் பெட்டிகளிலும் இவற்றைக் காட்டிலும் மறதியாலும், புறக்கணிப்பாலும் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த தமிழின் பழமையான நூல்களில் சிலவற்றை மடங்களின், தனிநபர்களின் நூலகங்களிலிருந்து விடுவித்து அவை சமூகப் பயன்பாட்டில் உயிர் பிழைத்திருக்க பிரதிகளைத் தேடுதல், எழுதுவித்தல், ஒப்புநோக்கி பாடபேதமறிதல், விடுபட்ட பகுதிகளை இணைத்தல், ஒழுங்கு குலைந்த அடிகளை சீர் செய்தல், சிதைந்த எழுத்துக்களை மீளப் படைத்தல், உரை எழுதுதல், அச்சிலேற்றுதல் ஆகிய கொடும் பணிகளை தங்கள் வாழ்நாள் கடமையாக எண்ணி நிறைவேற்றி தமிழர் நாகரிகத்தின் “மறுமலர்ச்சிக்குப்” பங்காற்றிய ஆளுமைகளில் ஒருவரான உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் முன்னுரைகள் தொகுக்கப்பட்டு, அவருடைய மூத்த அண்ணனென்று சொல்லப்பட்டவரும், கும்பகோணம் கல்லூரியில் உ.வே.சா அவர்களுக்கு தமிழாசிரியர் வேலை கிடைக்கக் காரணமானவரும், வறிய குடும்பத்தில் பிறந்த அவருக்கு ஏறக்குறைய வாழ்வு கொடுத்தவருமான, யாருடைய பங்களிப்பின்றி தன்னுடைய வாழ்நாளை பதிப்புப் பணிக்கு ஒப்புக் கொடுத்திருக்க முடியாதென்று சொல்கிறாரோ அவருடைய பெயரிடப்பட்ட சென்னை திருவேட்டீஸ்வரன் பேட்டையில் உ.வே.சா வாழ்ந்த “தியாகராச விலாசம்” வீடு இடிக்கப்பட்ட தருணத்தில் “சாமிநாதம்” என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்தது.

உ.வே.சா அவர்கள் பதிப்பித்த நூல்களில் அவர் சமர்ப்பணம் செய்த இரண்டு நூல்களில் ஒன்று (ஐங்குறுநூறு) தியாகராச செட்டியாருக்கும், மற்றொன்று (மணிமேகலை) இராமநாதபுரம் சேதுபதி ராஜாவுக்கும்.  தன்னுடைய ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கோ, திருவாவடுதுறை மடத்துத் தலைவருக்கோ கூட நூலை சமர்ப்பிக்காதவர் தியாகராச செட்டியாரின் “அன்புடைமைக்கும்”, “பேருதவிக்கும்” ஐங்குறுநூற்றின் இரண்டு பதிப்புகளையும் சமர்ப்பணம் செய்கிறார்.  தியாகராச விலாசம் இடிக்கப்பட்டது ஒரு நினைவழிப்பு. ஒரு நூல் தொகுப்போ நினைவு மீட்பாக அமைந்த பதிலீடு.

அச்சுக்கூடங்களில் நிகழ்ந்த மூதலீட்டின் விளைவாகவும், காலனிய ஆதிக்கத்தினால் எழுந்த நவீனகால அமைப்புகளான பொதுப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், நிர்வாக அமைப்புகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றால் சமூகம் மாற்றம் அடையத் துவங்கிய காலகட்டத்தில் அதுவரையிலும் ஓலைச்சுவடிகளுக்கு பூசனை செய்து ஓய்வு நேரத்தில் திண்ணைகளிலும், கோவில்களிலும் வாசித்துவந்த உயர்சாதியினர், மடங்களைச் சார்ந்தோர், ஆங்கில அரசு அதிகாரிகள், மாஜிஸ்ட்ரேட்டுகள், தமிழ் கற்பிப்பவர்கள், இவர்கள் அனைவரையும் அண்டிப் பிழைத்த புலவர்கள் அடங்கிய பிரிவினரைக் கடந்து தமிழ் வாசிக்க முடிகிற அனைவருக்கும் தமிழ் இலக்கியங்கள் சென்றடைந்த காலம் உண்மையாகவே தமிழ் மறுமலர்ச்சிக் காலம்தான். ஆனால் அப்போதும் பெரும்பாலும் உயர்சாதியினரே அதிகம் தமிழ் நூல்களை வாசித்தனர் என்பதற்கு ஆயிரம் பக்கங்களில் விரியும் உ.வே.சா முன்னுரைகளில் இருந்தும், அவரது “என் சரித்திரத்திலிருந்தும் உதாரணம் சொல்லலாம்.  பிராமணர்கள், பிள்ளைமார், செட்டியார்கள், முதலியார்கள், இதர அதிகாரமிக்க சமஸ்தானாதிபதிகளையே இந்த இரு புத்தகங்களிலும் பார்க்க முடியும். கூடுதலாக “என் சரித்திரத்தில்” உ.வே.சா சொன்ன கம்பராமாயணம் வாசிக்கும் முகம்மதியர்களையும், தமிழின் மீது தேட்டமுடைய வெள்ளைக்காரர்களையும் சேர்க்கலாம்.

தமிழ், உரைநடையைக் கண்டதும் அச்சுத் தொழில்நுட்பம் பரவலான காலகட்டத்தில்தான். உ.வே.சா அவர்களின் சமகாலத்தவரான மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழ் உரைநடைக்கு நாவல் வடிவத்தை அறிமுகம் செய்து வைத்தார். உ.வே.சா போன்றே பதிப்புப் பணியில் ஈடுபட்ட சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களும் கூட “காந்த மலர் அல்லது கற்பின் மாட்சி” எனும் நாவலை எழுதினார். படைப்பிலக்கியத்தில் செய்யுள்களை மட்டுமே எழுதிய உ.வே.சா அவருடைய காலத்தில் கையாளப்பட்ட இலக்கிய வடிவமான நாவல்களின் மீது கவனமற்றவராக இருந்திருக்கிறார்.  நாகூர் சித்தி ஜுனைதா பேகம் எழுதிய “காதலா கடமையா” நாவல்தான் உ.வே.சா எழுதிய ஒரே நாவல் மதிப்புரை (ப.1168). அதிலும் கூட நாவல் வடிவத்தை “அபிநவ கதை” என்றே எழுதியிருக்கிறார். ஆனால் உ.வே.சா அவர்கள் கட்டுரை வடிவத்தை தனக்குரிய நவீன வெளிப்பாட்டு வடிவமாக தேர்ந்தெடுத்தார்.  அதன் விளைவுதான் சில ஆயிரம் பக்கங்களில் அவர் தமிழுக்கு அளித்த பங்களிப்பு.

பிரமிடுகளால், நாகரிகச் சிதிலங்களால், மட்பாண்டங்களால், கற்கருவிகளால் அறியப்படுபவர்களைக் காட்டிலும் இலக்கியத் தொகுப்புகளால் அறியப்படுபவர்களின் பெருமித உணர்வு தலைமுறைகளை கடக்கும் வாய்ப்பு உடையது.  திராவிட இயக்கத்தவரால் குறிப்பாக தி.மு.கவினரால் எடுத்தாளப்பட்டு நிலைகொண்ட தமிழ்ப் பெருமிதத்திற்கு இலக்கியங்களே அடிப்படையை வழங்கின. நவீனத்துவ காலகட்டத்திலும் கூட தமிழர்களின் பழம் இலக்கியங்கள் செல்வாக்கு உடையவையாக இருப்பதற்கு திராவிட இயக்கத்தவர் அவற்றை எடுத்தாண்டதே காரணம். பக்தி (எதிர்) சங்கம் என்று இரு பிரிவுகளாகக் கூட இலக்கியங்களை அரசியலாக்க முடிந்தது.  நூற்பதிப்பித்தலில் பக்தி இலக்கியங்களே முன்வந்தவை. பின்பு இலக்கண, நீதி நூல்கள்.  சங்கம், தொல்காப்பியம் முதலாக, இதர காப்பியங்களும் பின்பே எழுந்தன. உ.வே.சா திராவிட இயக்கத்தவரின் தமிழ்ப் பெருமித உணர்வுக்கான பிரதிகளை தன் வாழ்நாளை செலவழித்து பூச்சிகளின் செல்லரிப்பிலிருந்து காப்பாற்றிக் கொடுத்தார்.

உ.வே.சா அவர்களது காலத்தில் பக்தி இலக்கியங்களை தவிர்த்து பிற தமிழ் இலக்கியங்களுக்கு என்ன விதமான மரியாதை இருந்தது என்பதை ஸ்ரீ சாமிநாத தேசிகர் சொன்னதிலிருந்து அறியலாம்.

“….மாணிக்கவாசகர் அறிவாற் சிவனே யென்பது திண்ணம் அன்றியும், அழகிய திருச்சிற்றம்பல முடையார் அவர் வாக்கிற்கு அலந்து இரந்து அருமைத் திருக்கையா லெழுதினார். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப் பாட்டு, கொங்குவேண் மாக்கதை முதலியவற்றோடு சேர்த்து அச்செய்யுட்களை ஒன்றாக்குவர்;…பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன் கதை, அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக வெண்ணி வாணாள் வீணாள் கழிப்பர்”. (பக். 317).

அவர் வைதது ஞாபகம் வரவே “பெருங்கதை” நூல் பிரதியை வாங்கி வைத்துக் கொண்டதாக உ.வே.சா சொல்கிறார்.  வடநூல் ஆதாரமின்மை, சோமசுந்தரக் கடவுளை “சொக்கன்” என்று கொச்சையாக எழுதியதால் ஒரு தமிழ் நூல் நிராகரிக்கப்பட்டதை பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடல் புராணம் குறித்த கதையில் அறியலாம் (பக்.473). அந்நூலே கூட வடநூல் ஆதாரம் உடையதுதான் என உ.வே.சா “குறைவற”, “அவைநடு”, “ஓதரிய”, “வியாதன் வான்மீகி” எனும் செய்யுள் ஒன்றால் நிறுவுகிறார்.

அதுவரையிலும் சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்திருந்த உ.வே.சா அவர்களை சேலம் இராமசுவாமி முதலியார் சிந்தாமணிக் காப்பியத்தை நோக்கி திசை திருப்புகிறார். தமிழ்நாட்டவர்க்கு கிடைத்தன காப்பியச் செல்வங்கள். அதன்பின் சங்க நூல்கள், மணிமேகலை, சிலப்பதிகாரம், சிற்றிலக்கியங்களும் அவரால் அச்சுக்கூட மர அச்சுக்களில் எழுத்துக்களாகப் பதிந்து இயந்திர ஓசையைக் கேட்டு மெய்சிலிர்த்தன.

ஓலைப் பிரதிகளை சேகரிக்க அவர் சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை பல ஊர்களுக்கு அலைந்திருக்கிறார். சென்னை பக்கிங்காம் கால்வாய் ஓரத்திலிருந்தும், “திருமயிலைக் கபாலீசர் பஞ்சரத்தினம்” நூலை சேலம் ஜில்லா வேலூரில் பதினெட்டாம் பெருக்கில் காவிரியில் நீராடும்போது மிதந்துவந்த ஒற்றையேடுகளில் இருந்தும் (ப.921) எடுத்து உ.வே.சா அவர்களிடம் சேர்த்தவர்கள் வரை பிரதி தேடுதலில் அவர் எடுத்த சிரமங்களுக்கு துணை நின்றவர்களை அவரது முன்னுரைகளில் அறியலாம். பாரிஸ் நகர புத்தகசாலையில் இருந்து ஜூலியன் வின்ஸ்லோ என்பவர் ஓராயிரம் தமிழ் ஏடுகளில் தேடியும் உதவியிருக்கிறார்

இந்த முன்னுரைகள் முழுதும் வாசித்து முடிக்கையில் தமிழ் இலக்கியங்கள், அவற்றின் இலக்கண அங்கங்கள் குறித்து ஒரு களஞ்சியப் புத்தகத்தை எழுதிவிட முடியும். உதாரணத்திற்கு ஒரு சிறிய பட்டியலை பின் வருமாறு உருவாக்கலாம்.

“ஒவ்வொரு செய்யுளின் துறை, வண்ணம், தூக்கு. சில பண்களின் பெயர்களான பாலை யாழ், நோதிறம், காந்தாரம், நட்டபாடை, சமணர்கள் சிந்தித்த துடிதலோகம், பாரமிதை, ரூபப்பிரம்மர், அரூபப்பிரம்மர். எந்திர யானையின் முன் உதயணன் வாசித்த யாழ், எந்திரப் பொறிகளான காளையின்றி விரைந்து செல்லும் எந்திரவண்டி, உயிருள்ளது போல் நடந்து செல்லும் யானைப் பொறி, காலத்தைக் காட்டும் எந்திரம், கடிகையாரம், நட்சத்திரங்களின் உதயத்தையும், அஸ்தமனத்தையும் காட்டும் பொறிமண்டலம். பரிபாடல் பதினோராம் பாடலில் சொல்லப்பட்டுள்ள கோள்களின் நிலைமையைக் கொண்டு புலவர்களின் காலத்தை அறிதல். ஆறுவகை களவொழுக்கங்களான இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், தோழியற் கூட்டத்துப் பகற்குறி, இரவுக்குறி, வரைவு கடாதல், உடன்போக்கு வலித்தல். நான்கு வகை கற்பொழுக்கங்களான அறத்தொடுநிலை, உடன் செலவு, சேயிடைப் பிரிவு, ஆயிடைப் பிரிவு. இரு ஒழுக்கங்களுக்கும் வகுக்கப்பட்ட 135 துறைகள். கோயில்களில் ஏற்றப்படும் தீப வகைகளான நட்சத்திரமாலை, கலாதீபம், வர்ணதீபம், தத்துவதீபம், புவனதீபம், பததீபம். சங்கப் பாடல்களின் சிற்றெல்லை, பேரெல்லைகள். 29 உரையாசிரயர்களின் பெயர்கள். திருவிளையாடல் புராணம் மேற்கோள் காட்டிய 28 புராணங்களின் பெயர்கள். அதே புராணத்தால் அறிய முடிகிற இசை, குதிரை, நவமணிகளின் இலக்கணங்களும், யுத்தச் சொற்களும். தமிழ்நாட்டு சிவத்தலங்களுக்கு வடமொழியில் எழுதப்பட்ட புராணங்கள். ஊர், குடி, வாயில், பள்ளி, ஈச்சரம், காடு, துறை, குன்றம், மலை, புரம், கா, கரை, தானம் என ஊர்ப்பெயர்கள் முடிதல். இசைக்கருவிகளான பேரி, கொக்கரை, பிறைமுகி, சச்சரி, தடாரி, பூரி, கைச்சதி, சல்லரி, முரசு, உடுக்கை, மத்தளி. கட்டிட வகைகளான மாடம், மாளிகை, மண்டபம், அம்பலம், தெற்றி, கூடம், கோபுரம், கொடிமதில், கழகம், செய்குன்றம், ஆடரங்கு, பாடரங்கு, அறச்சாலை. சகலாங்க செளந்தரி என்னும் தாசி. நைமிசாரண்யத்தின் 88 முனிவர்களின் பெயர்கள். ஊழிக்காலத்திலும் மூழ்காது நின்ற விருத்தாச்சலம் மலை குறித்த பாடல். 1008 சிவஸ்தலங்களில் தலையாய நான்கான விருத்தாசலம், காசி, சிதம்பரம், காளகஸ்தி. நாள்,நேரம்,நட்சத்திரம் பார்த்து புராணச் செய்யுள் எழுதிய முறை. குயிலம்மை, கோகிலாம்பிகை எனும் பெயர்களால் புதுச்சேரிக்கு அருகிலிருக்கும் வில்வநல்லூரை கண்டுபிடித்தது. கலம்பகத்தின் உறுப்புகளான பாண், இரங்கல், தூது, வண்டு, தழை. கைக்கிளை, அகப்புறக் கைக்கிளை, புறப்பொருட் கைக்கிளை என கைக்கிளையை வகுத்தல். சிற்றிலக்கியங்களில் கையாளப்படும் உத்திகளான சிலேடை, மடக்கு, தொனி முதலிய அணிகள். ஒருதுறைக் கோவையில் இதுவரை கிடைத்தவற்றுள் அமைந்த துறைகளான வண்டோச்சி மருங்கணைதல், நாணிக் கண்புதைத்தல், வெறிவிலக்கு. உலாக்களில் வரும் ஏழு பருவப் பெண்டிர் அனைவரும் பொதுமகளிராகவே இருத்தல். அப்பருவங்களில் பெதும்பைப் பருவத்தைப் பாடுதலே செய்யுள் செய்பவருக்கு கடினமாக இருத்தல். தூதிற்கான இலக்கணம். தூது செல்லத்தக்க அன்னம், மயில், கிள்ளை, மேகம், நாகணவாய்ப்புள், பாங்கி, குயில், நெஞ்சு, வண்டு எனும் பத்துப் பறவைகளும் பொருட்களும். இவை அல்லாமல் நெல், துகில், பணம், பொன், மான், மாதங்கி, மாலை, விறலி, புறா, வெள்ளாங்குருகு, தமிழ், இருவாட்சிப்பூ, வனசம், குவளை, பாரிசாதம், பிச்சி, சண்பகம், புகையிலை. “நெறுநெறன, குடகுடென” என உச்சரிக்கப்படும் சொற்களை “அணுகரண” ஓசை என வழங்குதல். கூத்தர் என்போர் ஆடுவோர், பொருநர் என்போர் பாடுவோர், கூத்தர்களின் பெண் இணைகள் விறலிகள். பொருநர்களில் ஏர்க்களம்,போர்க்களம்,பரணி பாடுவோர் பிரிவுகள். பாட்டுடைத் தலைவன், கிளவித் தலைவன் வேறுபாடு. உலா இலக்கணம்…”

தேர்ந்த பதிப்பாசிரியரான உ.வே.சா முன்னுரை எழுதும் போதும் அதே மாதிரியான கவனத்தோடு எழுதியிருப்பார் என நம்பலாம். முன்னுரைகளில் எழுதியுள்ள   ஒரு தகவலாக மாறும் என்கிற உணர்வு அவருக்கு இருந்திருக்க வேண்டும். கல்விப்புலத்திலும், வாசிப்பிலும் ஏற்பட்ட மாற்றத்தை அவர் உற்றுக் கவனித்திருக்க வேண்டும். முன்னுரைகளில் பரிசளிப்பு விவரங்களைக் கூட எழுதியிருக்கிறார். உள்ளூர் வழக்காறுகள் என தற்போது அறியப்படும் நாட்டார் பண்பாடுகள் குறித்து அவருக்கு கவனம் இருந்திருக்க வாய்ப்பில்லாத போதும், அவர் எழுதியிருக்கும் சில தகவல்களை பண்பாட்டு வழக்காறுகளை அறியப் பயன்படுத்தலாம்.

பழனி முருகனுக்கு புகையிலைச் சுருட்டை காணிக்கையாக்கும் பழக்கம் இருந்ததாக எழுதியிருக்கிறார் (பக். 772). தமிழர்கள் ஏளனம் செய்யப் பயன்படுத்தும் “கருப்பாயி” எனும் பெயர் ஏன் குறிப்பிட்ட பகுதியில் வழங்கப்படுகிறது, திருப்பனந்தாள் மடத்துத் தலைவர் காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் அமெரிக்க நிறுவனமான “தி மானுபாச்சரர்ஸ் லைப் இன்ஷூயுரன்ஸ் கம்பெனி”யாரிடம் இன்சூரன்ஸ் செய்திருப்பதும், அணைக்குடி எனும் ஊராருக்கு இருந்த தஞ்சை மன்னர்களுக்கு முடிசூட்டும் உரிமை, கணிகையர் கோயிலோடு சேர்ந்து ஒழுகுதல் வழிக்கொழிதல் என நூற்றாண்டுகளை புத்தகங்களாக ஆவணமாக்க முனைந்தால் உ.வே.சா பத்தொன்பதாம் நூற்றாண்டு பகுதிக்கு பெரும் பங்களிப்பவராகிவிடுவார். அவரது மற்ற கட்டுரைத் தொகுதிகளிலிருந்தும், இந்தத் தொகுப்பிலிருந்தும் பல்வேறு தகவல்களை ஒன்றாகத் திரட்டி ஒரு நூற்றாண்டின் சிதறல்களை பிரதியாக உருவாக்க முடியும்.

அவ்வளவு கவனமாக அவர் முன்னுரைகள் எழுதியுள்ள போதும் “பேசு முலாவிற் பெதும்பைப் புலி” என்று அவ்வையார் சொன்னதாக முந்தைய உலா முன்னுரைகளில் சொல்லும் உ.வே.சா “திருக்கழுக்குன்றத்து உலா” நூல் முன்னுரையில் அதே வாக்கியத்தை “ஒருவர் சொன்னார்” என்று எழுதியுள்ளார் (ப.697).

சைவத்தில் ஊறியவர் என்பதால் உதாரணம் சொல்லும் இடங்களில் கூட வைணவ இலக்கியங்களில் இருந்து தவறியும் ஒரு வரியைச் சொல்லாதவர். என்றாலும் இரண்டு வைணவ இலக்கியங்களையும் பதிப்பித்திருக்கிறார்.  ஆனந்த விகடன், கலைமகள் போன்ற வெகுஜன இதழ்களில் மட்டுமின்றி “தாருல் இஸ்லாம்” எனும் இஸ்லாமிய இதழிலும் எழுதியிருக்கிறார். உ..வே.சா அவர்களைப் பொருத்தவரை தமிழின் முன்பாக மதம் ஒரு பொருட்டில்லை என்றாலும் வைணவம் என்னவோ கொஞ்சம் பின்னுக்குத்தான் நிற்கும்.

அவரது பங்களிப்பு இல்லாது போயிருந்தால் பின்வரும் விளைவுகள் நேர்ந்திருக்கலாம்:

திராவிட இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த தமிழ்ப்பெருமைக்கான சரியான பிரதிகள் தாமதமாக கிடைத்திருக்கும்

திணைக் கோட்பாடுகள் குறித்த சிந்தனை உருவாக வேறு யாராவது காலத்தின் தூசி படிந்த அறைகளில் நேரம் செலவழித்திருக்க வேண்டும்

சமணமும், பெளத்தமும் தமிழ் நிலப்பரப்பில் தோன்றி வளர்ந்த காலகட்டம் குறித்த குழப்பங்கள் அதிகமாயிருக்கும்.  அவர்கள் தமிழுக்கு ஆற்றிய இலக்கணப் பங்களிப்பை விடவும் இலக்கியப் பங்களிப்பு அதிகம் எனத் தெரியவந்திருக்காது

இவை மூன்றும் தமிழ் நிலத்தின் தற்கால அரசியல், சிந்தனைப் போக்குகளில் குறையாத செல்வாக்குடைய கருதுகோள்கள்.

நவீன இலக்கிய வடிவில் “கபாடபுரம்” செய்த புதுமைப்பித்தன் முதலாக இன்றைய எழுத்தாளர்கள், தமிழில் வாசிப்பவர்கள், புலவர்கள், தமிழ்தேசியர்கள் ஆகியோருக்கு பக்தி இலக்கியங்களை விடவும் கூடுதலாக சங்க இலக்கியங்களின் மீதிருக்கும் காதலுக்கு காரணம் திராவிட இயக்கத்தவர் விதைத்த தமிழ்ப் பெருமை என்றாலும் அவ்வியக்கம் உருவாகி வளர்வதற்கு முன்பிருந்தே கூட தமிழ்ப் பெருமை பீடிப்பு இருந்திருக்கிறது என்பதற்கு “தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு” பணிக்கப்பட்ட திருமூலரிடமிருந்தும் உதாரணம் சொல்ல முடியும்.

உயிர்ப்போடு இருக்கும் சில செவ்வியல் மொழிகளில் தமிழ் அளவிற்கு செய்யுள்களும், பாடல்களும், கவிதைகளும் நிரம்பிய மொழி வேறு இருக்குமா என்று தெரியவில்லை. உரைநடை கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தோன்றியிருந்தாலும் பிடிவாதமாக கவிதை வடிவைக் கையாண்டவர்கள் தமிழர். ”இயல்” என்பது உரைநடையை செய்யுளாக்குவதையும் உள்ளடக்கியது. அதனால்தான் இன்றைக்கு யாரொருவரும் தமிழில் ஒரு நல்ல கவிதையாவது எழுதி விட முடிகிறது. அது மொழியிலே பொதிந்திருக்கும் ஓர் உள்ளுணர்வு.

உலகிற்கு தமிழும், தமிழரும் அளித்த பிரதியியல் கொடையான சங்க, நீதி, காப்பிய இலக்கியங்கள் நவீனகால தமிழர்களின் அரசியல், பண்பாட்டுச் சொல்லாடல்களில் மட்டுமின்றி ஓர் இனத்தின் வரலாற்றை அறியவும் பங்காற்றும் என்பதை உணர்ந்திருந்தவர் உ.வே.சா. அதை அவரது புறநானுற்று முன்னுரையில் பார்க்க முடியும்.  தமிழ் இனம், நாகரிகம் என்பவை உடற்கூறால் அல்லாமல் பிரதியால், மொழியால், கட்டிடக்கலையால் கட்டியெழுப்பப்பட்டவை எனத் துணிந்து சொன்னால் உ.வே.சா அதற்கு அளித்த பங்களிப்பு அவர் செய்த பணியின் முக்கிய விளைவு. அவர் செய்தது பதிப்புப் பணி எனச் சுருக்குவது பல சாத்தியங்களின் மீது ஒற்றை வண்ணத்தைப் பூசிப் பார்ப்பதற்கு சமம்.

“முதுமை மிகமிகப் பழம் பொருள்களிடத்தே மதிப்பு அதிகரிக்கின்றது” (பக். 1052) எனும் அவரது வாக்கியம் வெறும் பதிப்பாசிரியர் ஒருவரின் வரியாக இருக்க முடியாது.  இலக்கியப் பிரதியில் மட்டுமே காணக்கிடைக்கிற வாக்கியம்.

ப. சரவணன் அவர்களின் கவனமான உழைப்பில் உருவான ”சாமிநாதம்” நூலுக்கான முன்னுதாரணமாக சி.வை.தா அவர்களது முன்னுரைகள் தொகுப்பான “தாமோதரம்” இருந்தாலும் காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் இப்புத்தகம் கண்ணாடி பிரதிபலிக்கும் ஒளிச்செவ்வக சிதறலாக தமிழ்ப்பரப்பில் (பழம்)இலக்கியங்களை, அதன் அரசியலை கூர்ந்தும், அக்கறையுடனும் வாசிக்க முனைபவர்களின் கவனத்தின் மீது படியும்.