மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் – 1

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் – 1

சுரேஷ் பரதன்

1.பண வீக்கம். (Inflation)

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் பற்றி அறிந்து கொள்ள முயல்வோருக்கான சிறு புரிதலை ஏற்படுத்தும் முயற்சி  இது.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா கூடாதா. நல்லதா கெட்டதா.

அதற்கெல்லாம் முன்பு சில கேள்விகள்.

1.உங்களுக்கு சேமிக்கும் பழக்கமுண்டா.?

2.உங்கள் சேமிப்பு உங்கள் நோக்கத்தை, தேவையை சரியாக நிறைவேற்றியிருக்கிறதா? அல்லது சேமிப்புப் போக இன்னும் அதிகம் பணம் தேவைப்பட்டதா?

3.பணவீக்கம் என்றால் என்ன?

சிறு சேமிப்பு என்பது நல்ல பழக்கம். மழைநாளுக்கென எறும்புகள் சேமிக்கின்றன. அதைப் போல நாம் நம் எதிர்கால அத்தியாவசியத் தேவைகளுக்கு சேமிப்பது மிகமிக அவசியம். ஆனால் அந்த சேமிப்பின் போது பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு சேமிக்க வேண்டும். அப்போது தான் அது நம் தேவையை பூர்த்தி செய்யும்.

எனக்கு அடுத்த வருடம் ஜுலை மாதம் இரண்டு கிலோ ஆரஞ்சுப் பழங்கள் வேண்டும். இன்றைய விலை கிலோ ஐம்பது என்று வைத்துக் கொள்வோம். எனவே நான் நூறு ரூபாய் சேமிப்பில் வைக்கிறேன். அடுத்த வருடம் அந்த நுறு ரூபாயை அப்படியே எடுத்துக் கொண்டுபோய் ஆரஞ்சுப்பழங்கள் வாங்கப்போனால் அதன் விலை நூற்றியாறு ரூபாயாகி விட்டது. இந்த ஆறு ரூபாய் தான் பணவீக்கம்.

அப்படியானால் நான் நூறுக்குப் பதில் நூற்றியாறு ரூபாய் இன்றே சேர்க்க வேண்டும். அல்லது சேமிப்பிலிருக்கும் நூறு ரூபாயை ஆறுரூபாய் வட்டி வரும்படியான சேமிப்பு ஊடகத்தில் (Savings Instrument) நான் சேமிக்க வேண்டும்.

வங்கியின் சேமிப்பு கணக்கில் நான்கு சதவீதம் வட்டிதான் தருகிறார்கள். அதில் நூறு ரூபாய் நூற்றி நான்காய்தான் மாறும். அப்படியானால் அதிக வட்டி தரும் ஊடகம் அல்லது சாதனத்தை நான் தேர்ந்தெடுக்க வேண்டும். அவை என்னென்ன..

வங்கிக் கணக்கை விட அதிக வட்டி தருபவை Fixed Deposit மற்றும் Recurring Deposit கள். எட்டு சதவீதம் வரை வட்டி கிடைக்கும். இந்த வட்டிவிகிதங்களும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் இருக்கின்றன.

இரண்டு கிலோ ஆரஞ்சுப் பழங்களுக்கே வங்கி வட்டி விகிதத்தை விட அதிமாய்த் தேவைப்படுகையில் மற்ற செலவுகளுக்கு எவ்வளவு என்று யோசனை செய்து கொள்ள வேண்டும்.

சரி. இன்னொரு விசயம் ஒன்று பார்ப்போம். வங்கியின் சேமிப்பு கணக்கு நான்கு சதவிகிதம் வட்டி தருகிறது. அது சாதாரண வட்டி(Simple Interest). Fixed  Deposit மற்றும் Recurring Depositகள் தருவது கூட்டு வட்டி (Compound Interest). கூட்டுவட்டியில் வட்டிக்கு வட்டியுண்டு. இது எல்லாரும் சிறு வயதில் கணக்குப் பாடத்தில் படித்ததே.

இந்த கூட்டு வட்டி கணக்கின் படி மாதம் பதினைந்தாயிரம் பதினைந்து சதவீத வட்டிவிகிதத்தில் பதினைந்து வருடத்திற்கு சேமித்தோமெனில் வட்டி வட்டிக்கு வட்டியெல்லாம் கணக்கிட்டால் எவ்வளவு வரும் தெரியுமா. ஊகிக்க முடிகிறதா. தோராயமாக ஒரு கோடி ரூபாய். மிகச் சரியாக கணக்கிட்டால் சற்று அதிகமாகவே.

பதினைந்து சதவிகித வட்டி எங்கு கிடைக்கும். யார் தருகிறார்கள் ?

2.பங்குச் சந்தை முதலீடுகள்

பதினைந்து சதவிகித வட்டி எங்கு கிடைக்கும். யார் தருகிறார்கள்.

பப்ளிக் ப்ராவிடண்ட் ஃபண்ட் (PPF) கூட 8.1 சதவிகிதம் வட்டிதான் தருகிறது. பின் என்ன செய்யலாம். இங்குதான் பங்குச் சந்தை முதலீடு வருகிறது.

நன்றாகப் படியுங்கள். பங்குச் சந்தை முதலீடு. பங்குச் சந்தை வர்த்தகம் அல்ல. இரண்டிற்கும் வேறு வேறு அர்த்தங்கள் இருக்கின்றன.

முதலீடு வேறு வர்த்தகம் வேறு. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் எவ்வளவு நாள் பங்குச்சந்தையில் உங்கள் பணத்தை விட்டு வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வேறுபடுகிறது.
ஒரேயொரு நாளுக்கென முதலீடு செய்வது வர்த்தகம். காலையில் பணம் போட்டு மாலையில் லாபமோ நட்டமோ எடுத்து விடுவது Day Trading. இந்த ஒரு நாள் வர்த்தகத்தில் பணம் போட்டே ஆகவேண்டுமென்று கட்டாயமெல்லாம் கிடையாது. பணமே இல்லாமல் வர்த்தகம் செய்யலாம். இலாபம் கிடைத்தால் இலாபம் மட்டும் வங்கிக்கணக்கில் வந்து விழுந்து விடும். நட்டமானாலோ எவ்வளவு நட்டமோ அதை மட்டும் செலுத்தினால் போதுமானது. இதற்கெல்லாம் மிக மிக அதிகப் படியான பங்குச் சந்தைப் பற்றிய புரிதல்கள் அவசியம். எந்தப் பங்கு இன்று காளையின் வசம் எந்தப் பங்கு கரடியின் வசம். எப்போது காளையிடமிருந்து கரடி வசப்படும் அல்லது கரடியிடமிருந்து காளையின் கையில் பிடிபடும் என்றெல்லாம் கணிக்கத் தெரிய வேண்டும். இந்தப் புரிதல்கள் இல்லாமல் பங்குச் சந்தையில் லாபமடைந்தவர்களின் கதைகளை மட்டும் கேட்டுவிட்டு இதில் இறங்கிப் பணமிழந்தவர்கள் மிக மிக அதிகம்.

நான் இந்த நாள் வர்த்தகத்தைச் சொல்லவில்லை.  மூன்று மாதங்களிலிருந்து ஆறு மாதம் ஒரு வருடம் அதற்கு மேலும் கால அவகாசங்களில் வர்த்தகம் பண்ணுவதே பங்குச் சந்தை முதலீடுகள் என அழைக்கப் படுகின்றன. மூன்று மாதம் வரை குறுகிய கால முதலீடு (Short Term) , மூன்று மாதங்களுக்கு மேல் ஒரு வருடம் வரையிலான முதலீடுகள் மீடியம் டேர்ம், ஒரு வருடத்திற்கு மேற்பட்ட முதலீடுகள் லாங் டேர்ம் என வகைப்படுத்தப் படுகின்றன.

பங்குச் சந்தை முதலீட்டுக்கென சில வரைமுறைகளை நமக்கு நாமே வகுத்துக் கொள்வது மிக மிக அவசியம். அவை என்னென்ன??

 

(தொடரும்….)