மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் – 2

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் – 2

சுரேஷ் பரதன்

3.பங்குச் சந்தை முதலீட்டுக்கென சில வரைமுறைகள்.

பங்குச் சந்தை முதலீட்டுக்கென சில வரைமுறைகளை நமக்கு நாமே வகுத்துக் கொள்வது மிக மிக அவசியம். அவை என்னென்ன??
1. என்னுடைய எதிர்காலத் தேவை என்ன(What is my goal?) என்பதை நான் மிகத் தெளிவாக அறிந்திருக்கிறேன். அத்தேவைக்கு இவ்வளவு பணம் வேண்டுமென எனக்குத் தெரியும்.
அந்தப் பணம் எப்போது தேவை என்றும் தெளிவாய்த் தெரிந்திருக்கிறேன்.

2. அத்தேவைக்கான சேமிப்பை நான் என்னுடைய நிகழ்கால தேவைகளுக்குப் போக எஞ்சியிருக்கும் பணத்தில் மட்டும்தான் முதலீடு செய்வேன். வேறு தேவைகளுக்கென வைத்திருக்கும் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யமாட்டேன். அல்லது வேறு யாரிடமும் கடனாய்ப் பெற்ற பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யமாட்டேன்.

3. என்னுடைய தேவையை நான் அடைந்தவுடன் அதற்காய் முதலீடு செய்த பணத்தை பங்குச் சந்தையிலிருந்து நான் வெளியிலெடுத்து விடுவேன்.

4. யாருடைய தூண்டுதலின் பேரிலும் அல்லது யாருடைய பரிந்துரையின் பேரிலும் நான் பங்குகளைத் தெரிவு செய்யமாட்டேன்.

5. முக்கியமாக நான் உணர்ச்சிவசப் பட்டு முதலீடு சம்பந்தமாக முடிவுகள் எடுக்க மாட்டேன்.

என மேற்சொன்ன ஐந்து விசயங்களிலும் சரிவர ஒத்துப் போகும் ஒருவரால் தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்து இலாபம் பார்க்க முடியும். ஆனாலும் மேற்சொன்னவற்றை விட இன்னும் பல விசயங்கள் அறிந்திருக்க வேண்டும் அல்லது அறிந்த பின் முதலீடு செய்ய வேண்டும்.

ஒரு பங்கை முதலீட்டுக்காக வாங்குமுன் அந்தக் கம்பனி என்ன தயாரிக்கறார்கள்? அந்த தயாரிப்பின் மீதான தேவை எவ்வளவு இருக்கிறது? அதற்கு அவர்கள் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்கள்? தயாரிப்பின் தரமென்ன? யார் யார் கம்பனியை நிர்வகிக்கிறார்கள்? நிர்வகிப்பவர் திறமையானவர்தானா? கம்பனியின் எதிர்காலத் திட்டமென்ன? அதை நோக்கிய கம்பனியின் பயணம் சரியாய் இருக்கிறதா? கம்பனியில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? லேபர் ப்ராப்ளம் ஏதேனுமுண்டா? அந்தத் தயாரிப்பைச் சார்ந்த அரசு சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன? அந்த அறிவிப்புகளால் அந்த பொருள் விற்பனையிலோ அல்லது தயாரிப்பிலோ தேக்க நிலை வரக்கூடுமா? கம்பனியின் கடந்த பல வருடங்களின் இலாப நட்ட கணக்குகள் என்ன சொல்கின்றன? இந்தக் கம்பனிக்கு போட்டிக் கம்பனிகள் எவையெவை? அந்தப் போட்டிக் கம்பனிகளின் தயாரிப்புகளுக்கு இக்கம்பனி எவ்விதம் சரிக்குச்சரியான போட்டிகளை தருகிறது? என்றெல்லாம் ஆராய வேண்டும்.

மேற்சொன்னவை தவிர டெக்னிகல் ஜார்கன்களில் சொல்லப்போனால்,

Annualized earning growth in last five years, Debt-Equity Ratio, Average Return on Equity, Interest coverage Ratio, Market Capitalization, Price to earning growth
என்று ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கின்றன.

அத்தனையும் அலசி ஆராய்ந்த பின்னரே பங்குச் சந்தையில் அந்த கம்பனியின் பங்கை வாங்க வேண்டும். வாங்கும் முன்னர் எவ்வளவு விசயங்களை கவனித்தோமோ அத்தனை விசயங்களையும் நம் பணம் முதலீட்டில் இருக்கும் போதும் கவனிக்க வேண்டும்.

“Don’t put all your eggs in one basket.” என்பது பழமொழி. அது பங்குச் சந்தைக்கும் பொருந்தும். எனவே வெவ்வேறு பங்குகளில் நம் பணத்தை முதலீடு செய்வது நல்லது. ஒரு பங்கிற்கே இத்தனை மெனக்கெடல்கள் எனில் பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய ஒரு நாளின் பெரும்பகுதியை இதற்கெனவே செலவிட வேண்டியிருக்கும்.

இதையெல்லாம் இதற்கெனப் படித்தவர்கள் செய்து பல இணையதளங்களில் இலவசமாக வெளியிட்டுள்ளார்கள். நாம் அவற்றைச் சென்று படித்தால் போதுமானது. அவர்கள் இப்படி எல்லாமே நல்லவிதமாக இருக்கும் கம்பனியின் பங்குகளை ப்ளூசிப் பங்குகளென வகைப் படுத்தி பட்டியிலிட்டிருக்கிறார்கள். அப்படி ப்ளூசிப் கம்பனி பங்குகளாக தெரிவு செய்து முதலீடு செய்யலாம். ஆனாலும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது மிக மிக அவசியம். இப் பங்குகளும் காளையின் வசத்திலும் கரடியின் வசத்திலும் அகப்படும். அதாவது இந்தப் பங்குகளுக்கும் ஏற்ற இறக்கங்கள் உண்டு.

ப்ளூசிப் கம்பனிகளின் பங்கு விலை மற்ற கம்பனிகளின் பங்கு விலையை விட சற்று அதிகமாகவே இருக்கும். ஏனெனில் அக்கம்பனிகளின் செயல்பாடு நன்றாய் இருப்பதாய் நிருபிக்கப் பட்டுவிட்டதனால் அது ப்ளூசிப் பங்கு. எனவே அதை வாங்குவதற்கு போட்டிகள் இருக்கும். எனவே விலை அதிகமாய் இருக்கும். சப்ளை அண்ட் டிமாண்ட்டைப் பொறுத்துதான் விலை இல்லையா?
பங்குச் சந்தை முதலீடுகள் மொத்தமாகச் செய்பவை. மாதாமாதம் முதலீடு என்பது சில காலம் முன்னர் வரை இல்லாமல் இருந்தது. இப்போது சமீப காலங்களில் அவற்றையும் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எனினும் பங்குகளின் விலை தோராயாமாக 200 லிருந்து ஏழாயிரம் எட்டாயிரம் வரை இருக்கின்றன. இன்றைய தேதியில் (22-06-2017) HUL பங்கின் விலை 160 ருபாய் 50 காசுகள். HDFC வங்கியின் பங்கு விலை 1654 ருபாய் 70 காசுகள். (உதாரணத்திற்காவே இந்த பங்குகளின் விலையைக் கொடுத்திருக்கிறேன். வாங்குங்கள் என்ற பரிந்துரைக்காக அல்ல.)

அப்படியானால் நாம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய எவ்வளவு பணம் ஒதுக்கவேண்டும். எவ்வளவு நாடகளாய் முதலீடு செய்தால் நல்ல தரமான பங்குகளை நம் கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியும். ஒரு உத்தேசக் கணக்கை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.

அப்படியாயின் சிறு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யவே முடியாதா.. அவர்கள் பங்குச் சந்தையின் இலாப நட்டங்களை பகிரந்து கொண்டு சம்பாதிக்கவே முடியாதா.. இதற்கெல்லாம் வழியே இல்லையா..

4. சிறு முதலீட்டாளர்களுக்கான முதலீடுகள்

சிறு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யவே முடியாதா.. அவர்கள் பங்குச் சந்தையின் இலாப நட்டங்களை பகிர்ந்து கொண்டு சம்பாதிக்கவே முடியாதா.. இதற்கெல்லாம் வழியே இல்லையா.?

ஏனில்லை. அதற்குத்தான் மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கின்றனவே..

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் ஆனால் அதற்கான நேரமின்மையோ அல்லது போதிய புரிதல் இல்லாமையோ கொண்டவர்களிடமிருந்து பெற்ற பணத்தை(Pooled Funds) சிறந்த ஃபண்ட் மேனேஜர் ஒருவரைக் கொண்டு, பங்குச் சந்தையில் முதலீடு செய்து இலாபம் ஈட்டி பணம் போட்டவர்களுக்கு பிரித்துக் கொடுப்பதுதான் மியூச்சுவல் ஃபண்ட். பொதுவாக இது ஒரு AMC (Asset management company)யால் நடத்தப்படுகிறது. ஒரு AMC பல ஃபண்ட் திட்டங்களை நடத்துகிறது. இப்படி ஏகப்பட்ட AMCகள் இருக்கின்றன.

மியூச்சுவல் ஃபண்டுகள் பல வகைப்படும். பங்குதாரர்களைச் சேர்ப்பதில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். Closed Ended மற்றும் Open Ended. இதில் Closed Ended என்பது வாடிக்கையாளர்களை ஃபண்ட் தொடங்கப்பட்ட ஆரம்ப நிலையில் மட்டும் சேர்த்துக் கொள்வார்கள். அதாவது NFO எனப்படும் New Fund Offerல் மட்டும் வாடிக்கையாளர்கள் சேர்க்கை நடைபெறும். மூன்றாண்டுகளுக்கான ஃபண்ட் அல்லது ஐந்தாண்டுகளுக்கான ஃபண்ட் என ஆரம்பிக்கும் பொழுதே சொல்லிவிடுவார்கள்.அதுதான் ஃபண்டின் Maturity period. ஒரு குறிப்பிட்ட நாள் வரை முதலீடு செய்யலாம். அப்புறம் வாசலை சாத்திவிடுவார்கள். யாரும் உள்ளே செல்லவோ வெளியேறவோ முடியாது. சில Closed Ended fundகள் பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும். அப்போது வேண்டுமானால் விற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த வர்த்தகம் வெகு அரிதாகவே நடைபெறுகிறது. லாபமோ நட்டமோ மெச்சூரிட்டி நாள் வரை காத்திருக்க வேண்டியதுதான். இலாபமானால் பணம் தருவார்கள். நட்டமானால் கையை விரித்து விடுவார்கள். UTI US 64 இப்படியான ஒரு Closed Ended Scheme.

மாறாக Open Ended Scheme ஃபண்டுகளில் NFO காலம் முடிந்த பின்னர் சில காலம் கழித்து அதில் பண முதலீட்டுக்கான கதவைத் திறப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திரும்பப் பெறலாம். அதற்கான சிறு தொகையை வசூலித்துக் கொண்டு உங்கள் விருப்பப் படி உங்களை சேர்த்துக் கொள்வார்கள். இல்லை நீங்கள் கழண்டு கொள்ளலாம். இன்வெஸ்ட் செய்வதற்கு Entry Load வாங்கிக் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது எந்த ஃபண்டுக்கும் Entry Load வாங்கக் கூடாதென SEBI சொல்லிவிட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேறினீர்கள் என்றால் இப்போதும் Exit Load செலுத்தியாக வேண்டும். சராசரியாக 1% என்றிருக்கிறது இப்போது. பொதுவாக open ended ஃபண்டுகளே சிறு முதலீட்டாளர்களுக்குச் சிறந்தது. ஃபண்டின் செயல்படுதிறனை ஆராய்ந்த பின்னர் நன்றாக இருந்தால் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் அப்படிச் சேர்வதில் அதிகம் ப்ரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். எப்படி?

பொதுவாக மியூச்சுவல் பண்டுகள் Unitகளாக விற்கப்படுகின்றன. NFO காலத்தில் ஒரு யூனிட் என்பது பத்து ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது. நீங்கள் ஆயிரம் ரூபாய் NFOவில் முதலீடு செய்தீர்கள் எனில் உங்கள் கணக்கில் நூறு Unitகள் வரவு வைக்கப்படும். மொத்தம் பத்து பேர் தலா ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள் எனக் கொள்வோம். மொத்தம் பத்தாயிரம் ரூபாய் சேர்ந்து விட்டது. இது Pooled Fund. மொத்தம் 1000 யூனிட்டுகள். இதில் கொஞ்சம் பணத்தைக் கையிருப்பாய் வைத்துக் கொண்டு பங்குச் சந்தையில் மீதப் பணத்தை முதலீடு செய்வார் மேனேஜர். ஒன்பதினாயிரம் ரூபாய் முதலீடு செய்து பத்து நல்ல கம்பனிகளின் பங்குகளை வாங்குகிறார் என்று கொள்வோம். அன்றைய தினத்தில் பங்குச் சந்தை காளை வசமிருந்து மேனேஜர் முதலீடு செய்த பங்குகள் எல்லாம் விலையேறி முடிகிறது. நூறு ரூபாய் இலாபம் கிடைக்கிறது. இந்த நூறு ரூபாயை முதலீட்டில் உள்ள 1000 யூனிட்டுகளுக்கு சரி விகிதமாய்பிரித்து கொடுத்து விடுவார்கள். 100/ 1000=0.1. இப்போது யூனிட்டின் மதிப்பு 10.1ரூபாயாக மாறிவிட்டது. இப்படித்தான் ஒவ்வொரு நாளின் இலாபத்திற்கேற்ப யூனிட்டின் மதிப்பு ஏறிக்கொண்டை இருக்கும். நட்ட தினத்தில் யூனிட்டின் மதிப்பு குறையும். இதைத்தான் NAV என்கிறார்கள். NFO வில் முதலீடு செய்யாமல் பின் தேதிகளில் முதலீடு செய்பவர்களுக்கு பத்து ரூபாயில் யூனிட்டுகள் கிடைக்காது. NAV விலையில் தான் கிடைக்கும். நீங்கள் வாங்கப் போகும் பொழுது ஃபண்டின் NAV 12 ரூபாயெனில் நீங்கள் முதலீடு செய்யும் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் 83.3333 யூனிட்டுகள் உங்கள் கணக்கில் வைப்பார்கள். ஆம். மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்டுகள் தசம புள்ளிக்குப் பின் நான்கு இலக்கம் வரை கணக்கிடுகிறார்கள்.

இப்போது பாருங்கள். நீங்கள் ஆயிரம் ரூபாய் தான் முதலீடு செய்திருக்கிறீர்கள். அந்த ஆயிரம் ரூபாயைக் கொண்டு பங்குச் சந்தையில் ஒன்றோ இரண்டோ பங்குகள் தான் வாங்க முடியும். ஆனால் அந்த ஆயிரம் ரூபாயை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் பொழுது அது Pooled Fund உடன் இணந்து மொத்தமாய் வாங்கப்படும் பத்து கம்பனிகளின் பங்குகளை வாங்கப் பயன்பட்டு கிடைக்கும் இலாபம் NAV யில் சேர்க்கப் படுகிறது. NAV விலை உயர உயர உங்கள் முதலீடும் உயர்கறிது.
NAV 12 ரூபாயாக இருக்கும் பொழுது நீங்கள் செய்த ஆயிரம் ரூபாய் முதலீடானது (83.3333 யூனிட்டுகள்) பதினைந்து ரூபாயாக மாறும் பொழுது உங்கள் முதலீடு 1250 ரூபாயாக மாறுகிறது. இதுதான் இலாபம். ஆனால்12 ரூபாய் NAV 15 ரூபாயாக மாற குறைந்த பட்சம் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் ஆகலாம். பங்குச் சந்தையும் விடாமல் ஏறு முகத்தில் இருக்க வேண்டும்.

(தொடரும்….)