இரத்தம் சுவைக்கும் அட்டைகள் – அத்தியாயம் – 1

இரத்தம் சுவைக்கும் அட்டைகள்

தொடர்:- ஆதாரன்

இது ஒரு தொடரல்ல. ஆனால் தொடர்ச்சியாக வரும். எல்லோருக்கும் மிகவும் பிடித்த ‘பணம்’ பற்றி நாம் பேசப் போறோம். தனித்தனியாகத் துண்டு துண்டாக, ஒன்றுக்கொன்று சம்பந்தமேயில்லாமல் அலசப் போகிறோம். படிக்கும்போது தொடர்பில்லாமல் இருப்பதுபோலத் தோன்றினாலும், மொத்தமாகப் படித்ததும் அதன் முழுமை தெரியும். பணம் எப்படி மனிதனுடன் கலந்தது, இந்தளவுக்கு அது எப்படி ஆதிக்கம் பெற்றது என்பதைத் தெரிந்து கொள்ள பணத்தின் வரலாற்றைச் சற்றே நாம் தெரிந்து கொள்ளவேண்டும். பணம் தன்னைப் பல படிநிலைகளில் உருமாற்றிக் கொண்டிருக்கிறது. தங்கம், நிலம், அசையும், அசையாப் பொருட்கள் என்று எல்லாமே அதன் உருமாற்ற வடிவங்கள்தான். இப்போதெல்லாம் அது பிளாஸ்டிக் அட்டைகளாகக்கூடத் தன் வடிவத்தை  மாற்றியமைத்திருக்கிறது. இவை எல்லாமே மனிதத் தேவைகளின் ஒரு பரிணாம வளர்ச்சிப் பகுதிதான். ஒரு கல் விலங்கிலிருந்து தன்னைப் பரிணமித்துக் கொண்ட மனிதன், தான் வாழ்வதற்குத் தேவையானவற்றிற்கும் தனியானதொரு பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான். நாகரீக மாற்றங்களால் செயற்கைப் பரிணாமமாக அது வளர்தெடுக்கப்பட்டது. முறையற்ற வளர்ச்சிகளைப் பரிணாமம் என்று எப்போதும் சொல்வதில்லை. அவைப் புற்றுநோயாகவும் மாறிவிடாலாம். மனிதன் கண்டுபிடித்த இந்தப் பரிணாம வளர்ச்சியின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக நாம் பார்க்கலாம்.

உலகப் பிரசித்திபெற்ற ஊபெர் (Uber) டாக்சிக் கம்பெனியை உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலகின் மிகப்பெரிய டாக்சி நிறுவனம் அது. கலிபோர்னியாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட நிறுவனம் அது. ஐநூறுக்கும் அதிகமான உலகப் பெருநகரங்களில், ஊபெரின் பெயரால் இலட்சக்கணக்கான டாக்ஸிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. தினமும் கோடிக்கணக்கில் வருமானம். ஆனால்…………!

இந்த ஊபெர் நிறுவனத்துக்குச் சொந்தமாக ஒரு டாக்சிகூட இல்லை. தனக்கெனச் சொந்த வாகனத்துடன் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரின் கைத்தொலைபேசியில், அவர்களால் உருவாக்கப்பட்ட பிரத்தியேகமானதொரு மென்பொருளை உள்ளீடு செய்யவைத்து, யாரோ ஒரு அந்நியரை அவர் செல்ல வேண்டிய இடத்துக்குக் கொண்டுசென்று விட்டுவிட்டு வருவதன்மூலம் பெறப்படும் கமிசன் தொகையால், தினமும் கோடியில் கொழுத்துக் குலுங்குகிறது ஊபெர். எல்லாமே ‘ஆன்லைன்’. இணைய வசதியுடன் கூடிய கைத்தொலைபேசி மட்டுமே ஆதாரம். வாகனமே இல்லாமல், விர்ச்சுவலாக உருவாக்கப்பட்ட வாகனத்தின் மூலம் பணத்தை உருவாக்கிச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. யாரையும் அவர்கள் ஏற்றவுமில்லை. யாரையும் இறக்கவுமில்லை. ஆனால், ஏற்றி இறக்கியதற்கான பணம் ஊபெரின் கைகளில். இதுபோலத்தான் அமேசானும்.

உலகில் மிகப்பெரிய வர்த்தக மையம் அமேசான். வேண்டிய பொருட்கள் அத்தனையும் அங்கு விற்பனைக்கு உண்டு. அம்மா, அப்பா தவிர்த்து அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்க வைக்கும் பல்பொருள் அங்காடி அது. உலகம் முழுவதும் பரவி விரிந்திருக்கும் அமேசானின், ஒரு தினத்தின் வரவு கண்ணைக் கட்டும். கோடிகள் எல்லாம் வெறும் தூசு. உங்கள் வீட்டிலிருந்தே விரும்பிய பொருளை வாங்கிக் கொள்ளலாம். வாங்கியதும் அந்தப் பொருள் தானாகவே வீடு நோக்கி வரும். ஆனால், உலகம் முழுவதும் வியாபித்துப் பொருட்களை விற்கும் இந்த அமேசானுக்குச் சொந்தமாக ஒரு கடையோ, அங்காடியோ இல்லை. இது எப்படி? எல்லாமே மாய வர்த்தகம்தான். இணையத்தின் மூலமாக நடைபெறும் ஆன்லைன் வர்த்தகம். எங்கோ ஒருவரிடம் இருக்கும் பொருளை வேறெங்கோ இருக்கும் ஒருவருக்கு அனுப்பிவைத்து, இடையில் கமிசன் பெற்றுக் கொள்ளும் அமேசான்.

முன்னரெல்லாம் ஒரு வர்த்தகத்தை நீங்கள் தொடங்க வேண்டுமென்றால், அதற்கு ‘முதல்’ அவசியம். அந்த முதல், பணமாகவே பெரும்பாலும் இருக்க வேண்டும். ஆனால், இப்போது எதுவுமே தேவையில்லை என்றாகியிருக்கிறது. இணையத்தின் மூலம் மாய வணிகம் செய்வதாலேயே பணத்தைச் சம்பாதிக்கலாம் என்றாகிவிட்டது. அதற்கான உதாரணங்கள்தான் ஊபெரும், அமேசானும். இணையவழி வர்த்தகர்கள். அவர்கள் மட்டும்தான் இணையவழி வர்த்தகத்துக்கு உதாரணங்களா என்று பார்த்தால், இல்லையென்று சொல்லி வரிசை கட்டி நிற்கின்றன பல நிறுவனங்கள். ஒரு ரூபாய் நோட்டைக் கூடக் கையால் தொடாமல், பணத்தையே விற்றுப் பணத்தைச் சம்பாதிக்கும் வல்லுணர்கள் அதிகரித்திருக்கிறார்கள் இப்போது. இவை அனைத்தையும் விரிவாகப் பார்த்தோமானால், நாம் எவ்வளவு சின்னஞ்சிறிய பூச்சிகளாக இருக்கிறோம் என்பது புரியும். நாம் எப்படிச் சிலரால் திட்டமிட்டு ஏமாற்றப்படுகிறோம் என்பதும் தெரியவரும். இதை ஏமாற்றுதல் என்றுகூடச் சொல்லிவிட முடியாது. புத்தியால் அடித்தல் என்று சொல்லலாம். உங்களுக்கும் இதுபோன்ற திறமையான புத்தி இருக்கும் பட்சத்தில் நீங்களும் வெல்லலாம். பணத்தை அடைவதுதான் வெற்றியென்று நீங்கள் நினைத்தால்.


  நம்மைச் சுற்றி இருப்பவை எல்லாமே பணம் சம்பாதித்தல் என்னும் ஒரே நோக்கத்துடன் இயங்குகின்றன. பணம் என்றதும், அடுத்து நாம் நினைத்துக் கொள்வது சேமிப்பு என்பதைத்தான். தேவைக்கேற்ப உழைத்துப் பெறும் பணத்தை வைத்துத் திருப்தியாக நம்மால் வாழ முடியும். அதுவே தேவைக்கு அதிகமான பணம் வருமானமாக வரும்போது, ‘சேமிப்பு’ என்னும் நிலைக்குப் போய்விடுகிறோம். ஏழைகளும், மற்றவர்களும் கூடச் சேமிப்பவர்கள்தான். ஆனால், அந்தச் சேமிப்பு ஏதோவொன்றை இழந்து அல்லது இறுக்கிப் பிடிப்பதால் நடைபெறுவது. மகளின் திருமணத்துக்கோ, மகனின் படிப்பிற்கோ என்று நினைத்து, அரை வயிற்றைக் காலியாக்கிச் சேமிப்பது அது. முழுமையாகத் தானும் வாழ்ந்து, தன் பிள்ளைகளுக்கும் சேமிக்கும் நிலை வரவேண்டுமென்றால், தேவைக்கு அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும். இதுதான் நமது குறைந்தபட்சக் குறிக்கோளாகவும் ஆகியிருக்கிறது. சேமிப்பது தப்பல்ல. நிச்சயம் சேமிக்க வேண்டும். அப்படியென்றால், சேமிக்கும் பணத்தை எப்படிப் பாதுகாப்பது? பணம் வந்து சேரச்சேர ஒரு குடும்பத்தின் வாழ்க்கையின் தரத்தில் வித்தியாசம் தோன்ற ஆரம்பிக்கும். மெல்ல மெல்ல வீட்டின் வளம் செழிக்கத் தொடங்கும். சிறு வீடு பெருவீடாகும். ஆடை அணிகலன்களின் மாற்றம் வரும். சொந்த வாகனம் வீட்டின் முன்னே காத்திருக்கும். இவையெல்லாம் அண்மையில் வாழும் அனைவருக்கும் மெல்லத் தெரியத் தொடங்கும். தெரிவதற்காகவே ஆடம்பரமாக வாழவும் முயல்வோம். ஆனால் இதைத் திருடர்களும் தெரிந்து கொள்கிறார்கள். பலநாட்கள் கஷ்டப்பட்டு உழைத்தததை, எந்த வியர்வைத் துளியையும் சிந்தாமல், திருடர்கள் ஒரே நாளில் அள்ளிச் செல்கிறார்கள். சேமித்தால் மட்டும் போதுமா? அதைப் பாதுகாக்க வேண்டாமா? எப்படிப் பாதுகாப்பது? அந்த நேரத்தில்தான், “நான் பாதுகாத்துத் தருகிறேன் வா!” ஒரு குரல் எழும்பும். நிமிர்ந்து பார்த்தால் ‘வங்கி’ என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அங்கு ஒருவர் நின்று கொண்டிருப்பார். “அட! இது நல்லாயிருக்கே!” என்று வங்கியில் பணத்தைப் பாதுகாப்பாகச் சேமிக்கத் தொடங்குவோம். ஆனால், அங்கு நாங்கள் செய்வது சேமிப்பேயல்ல, அது இன்னுமொரு மாபெரும் வியாபாரத்திற்கான முதலீடு. இதை நாம் கடைசி வரை அறிந்து கொள்வதேயில்லை.ஒரு மாபெரும் வியாபாரத்துக்கான முதலீட்டைச் செய்த பங்குதாரர்கள் போல நீங்கள் இருந்தாலும், அதற்கென ஒரு சதவிகிதம் கூட வருமானமாக உங்களுக்குக் கிடைக்காது. மாறாக நீங்கள் கொடுத்த பணத்திற்கு சேமிப்புக் கூலியாக சிறிய தொகையையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். உங்கள் பணத்தையும் கொடுத்து, அதைப் பாதுகாப்பதற்குச் சிறு தொகையையும் வங்கிகளில் நீங்கள் கொடுத்தால், அந்தப் பணம் அங்குதானே பாதுகாப்பாக இருக்க வேண்டும்? ஆனால், இருக்காது. அது இன்னுமொரு கோடீஸ்வரவின் கைகளுக்குச் சென்றுவிடும்.

உங்கள் பணத்தை வங்கிகளிடம் கொடுத்ததும், அட்டையொன்று உங்கள் கைகளில் தரப்படும். அந்த அட்டை உங்கள் இரத்தத்தைச் சுவைக்கப் போகும் உயிரற்ற அட்டையென்று அப்போது நீங்கள் அறிந்திருக்கப் போவதில்லை.

(தொடரும்…)

அத்தியாயம் 2