இரத்தம் சுவைக்கும் அட்டைகள் – அத்தியாயம் – 2

தொடர்: ஆதாரன்

நம் நாடுகளில், காலனியாதிக்கவாதி பணப்பயிர்களை உருவாக்குவதன்மூலம் பெரும்தொகையைச் சம்பாதிக்க நினைத்தான். அதன் முதல் கட்டமாகத் தேயிலைச் செடிகளையும், புகையிலைச் செடிகளையும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பயிரிட்டான். அவற்றை உற்பத்தி செய்யத் தேவைப்பட்ட கூலிகள் அவனுக்குச் சுலபமாகவே கிடைத்தார்கள். கொத்தடிமைத்தனம் நம்மக்களிடையே உருவாவதற்குக் காரணமே, இந்தக் காலனியாதிக்கக் கலாச்சாரத்தின் உள்நுழைவுதான். நல்ல கூலி கொடுப்பதாக நம்பவைத்து, ஆட்டு மந்தைக் கூட்டங்களாக எஸ்டேட்டுகளுக்கு மக்கள் அள்ளியெடுத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களின் மூலம் தேயிலையும், புகையிலையும் செழித்து வளர ஆரம்பித்தன. தான் உற்பத்தி செய்ததை, முதலில் நம்மிடமே விற்பனை செய்யவேண்டிய முக்கிய தேவையும் அவனுக்கு இருந்தது. உள்நாட்டில் மொத்தமாகச் சுரண்டிய பின்னர்தானே, அயல்நாட்டில் சுரண்ட வேண்டும். ஆனால், தேனீரையும், சிகரெட்டையும் நம் மக்கள் தெரிந்திருக்கவில்லை. இவர்களுக்கு இவற்றை எப்படிப் பழக்கப்படுத்துவது என சிந்தித்துப் பார்த்தான். அப்போதுதான் அவனுக்கு ஒரு தந்திரம் தோன்றியது. ‘சிகரெட்டையும், தேனீரையும் முதலில் இவர்களுக்குப் பழக்கப்படுத்த  வேண்டும், அதன் பின்னர் அந்தப் பழக்கமே இவர்களை அழிவுப் பாதையை நோக்கி வழிநடத்திச் செல்லும்’ என்று கணக்குப் போட்டான். ஒவ்வொரு ஊரின் பிரதான சந்திகளிலும் இலவசமாகத் தேனீரும், சிகரெட்டும் மக்களுக்கு வழங்கப்பட்டது. அவற்றினால் விளையக்கூடிய நன்மைகளை வரிசையாகச் சொல்லப்பட்டு, பயன்படுத்தும் விதங்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களும் மெல்ல அவற்றைப் பழகிக் கொண்டார்கள். மெல்ல மெல்ல அவற்றின் ருசி மக்களைத் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. பழக்கம் என்பதே ஒரு போதைதானே!     தினமும் இலவசமாகக் கிடைக்கும் அவற்றின் ருசிக்கு அடிமைப்பட்ட நம்மவர்கள், அவை இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கும் தள்ளப்பட்டார்கள். சில நாட்களுக்கு பின்னர், இலவசமாகக் கொடுப்பது ரத்து செய்யப்பட்டது. என்ன செய்வார்கள் மக்கள்? அவை இல்லாமல் இனி இருக்க முடியாதே! பணம் கொடுத்தாவது அவற்றை வாங்கி ருசிக்க வேண்டும் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். கையிலிருக்கும் பணத்தைக் கொடுத்து அவற்றைக் கொள்வனவு செய்ய ஆரம்பித்தார்கள். காலனியாதிக்கவாதியின் புத்திசாலித்தனம் வென்றது. இன்று இந்தியாவில், தேனீர் குடிக்காமலும், சிகரெட் புகைக்காமலும் இருக்கக் கூடியவர்கள் வெகு சில பேர்தான். ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று இவற்றிற்கு அடிமையாகியிருக்கிறது.

தேனீரால் நன்மை ஏதும் இல்லையா? சிகரெட்டால் நன்மை ஏதும் இல்லையா? என்றால், தேனீரும் சிகரெட்டும் நமக்கு உற்சாகத்தை மட்டும் தருபவை என்பதுதான் நிஜம். ஆனால், அவற்றின் மூலம் அடையும் கேடுகள் அதிகமானவை. தேனீரும், சிகரெட்டும் பெரிய விலையெல்லாம் கிடையாது. சொற்பப் பணத்தில் அவற்றை வாங்கிவிடலாம். ஆனால், பெருந்தொகையான மக்கள் பயன்படுத்துவதால், தயாரிப்பவர்களுக்குக் கோடிகளை அள்ளிக் கொடுக்கின்றன. காலனியாதிக்கவாதிகள் செய்த தந்திரங்களைப் போலத்தான் தற்போது நம் மக்களிடையேயும் மோசமான தந்திரமொன்றும் மறைமுகமாக நடைமுறைப்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது. பணமாற்றம், வங்கிகளில் வரிசை, பணத்தட்டுப்பாடு, பிளாஸ்டிக் அட்டைகளென்று கழிந்துவரும் ஒவ்வொரு தினத்திலும் நாம் சோர்ந்து போகின்றோம். இந்த நிலையில், நாம் நினைக்காத ஏதோவொன்றை நம்மிடையே அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வதேயில்லை. மக்களின் மனநிலை, பணத்தின் பற்றாக்குறையிலேயே நிலைத்திருக்க, வேறொரு தந்திர வலைக்குள் மக்கள் மெல்லச் சிக்க வைக்கப்படுகிறார்கள்.

சாதாரணமாகத் தாம் வாழும் சுற்றுச் சூழலிலுள்ள கடைகளில்தான் தங்கள் அன்றாட வாழ்வியலுக்குத் தேவையான பொருட்களை மக்கள் நுகர்ந்து கொண்டிருப்பார்கள். பக்கத்தில் கடை வைத்திருக்கும் அண்ணாச்சியிடம் மளிகைகளையும், பாய் கடையில் பிரியாணியையும், சந்தி வீட்டு அண்ணாவிடம் பாலையும் வாங்கிக் கொள்வதுதான் அவர்களின் நடைமுறை. இவர்களெல்லாம் சிறு வணிகர்கள். பெருமளவு பணத்தை எதிர்பார்க்கமல், தன்னைச் சுற்றியிருக்கும் மக்களின் கொள்வனவினால் பெற்றுக்கொள்ளும் சிறு இலாபத்தின் மூலம், மாதம் மாதம் சிறு தொகையைப் பெற்றுக்கொண்டு மக்களோடு மக்களாக வாழும் இன்னுமொரு பிரதிநிதிகள் இவர்கள். இந்தச் சிறு வணிகர்களிடம் கொள்வனவு செய்யும் பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவை இல்லையென்றாலும், அன்றாடம் பயன்படுத்தி வாழப் பழகிய மக்களுக்கு அதுவே போதுமானது. கையிலிருக்கும் சில்லறைப் பணத்தைக் கொண்டு தினம் தினம் எதையெதையோ வாங்கி, உண்டு பழகிவிட்ட மக்கள்தான் நம்மில் அதிகம். எல்லாமே பழக்கம்தானே! இப்படியே மக்கள் நடந்து கொண்டிருந்தால் எப்படிக் கோடீஸ்வரன் மேலும் கோடீஸ்வரனாக முடியும்? தொழிலதிபன் வேறு தொழில்களை உருவாக்க முடியும்? கார்ப்பரேட் கம்பெனிகள் வளர்வது எவ்வாறு? இந்தச் சிறு வணிகர்களுக்கும், மக்களுக்கும் இருக்கும் உடைக்க முடியாமல் இருக்கும் உறவை உடைத்தால் மட்டுமே, இவர்கள் மேலே உயரலாம். அதை உடைப்பதிலிருந்துதான் அவர்களின் தந்திரம் ஆரம்பமாகிறது. மக்களிடம் கையிலிருக்கும் பணத்திற்குச் செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை முதலில் ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்குச் சொந்தமான பணம் வங்கிகளில் இருந்தாலும், அதை அவர்கள் எடுக்க முடியாத நிலைமையை உருவாக்க வேண்டும், “உனக்குப் பணம்தானே வேண்டும்? இந்தா பிடி பிளாஸ்டிக் அடையை. இது எங்கு பயன்பாட்டில் உள்ளதோ அங்கு போய் உனக்கான பொருட்களை வாங்கிக்கொள்” என்று சொல்லிப் பிளாஸ்டிக் அட்டையொன்றைக் கைகளில் திணிப்பார்கள். ‘இந்தப் பணத் தட்டுப்பாடு இன்னும் கொஞ்ச நாட்களுக்குத்தானே! அதுவரை சமாளித்துவிடலாம்’ என்று நினைக்கும் பொதுமகன், அண்ணாச்சி கடைக்கும், பாய் கடைக்கும் போவதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, காப்பரேட் முதலாளிகள் அமைத்து வைத்திருக்கும் வணிக வளாகங்களுக்கு செல்ல ஆரம்பிப்பான். அண்ணாச்சி கடையில் ஏது அட்டை உரசும் இயந்திரம்? அந்த இயந்திரத்தை அண்ணாச்சி போன்ற சிறுவணிகர்களும் சில நாட்களில் பெற்றுவிடலாம். ஆனால், அதற்கு அவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள அவகாசம் தேவையல்லவா? அந்த அவகாச நேரத்தில் நமது கொள்வனவுகள் கார்ப்பரேட்டட் முதலாளிகளின் கடைகளிலும், உலகளாவிய ரெஸ்டாரெண்டுகளிலும் நடைபெற ஆரம்பிக்கும். வழக்கமாக அண்ணாச்சி கடையில் பிஸ்கட் வாங்குவதானாலும், சாக்லேட் வாங்குவதானாலும், சில வகைகளிலேதான் அங்கு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், கார்ப்பரேட்டட் கடைகளுக்குப் போனால், பிஸ்கட்டுகளும், சாக்லேட்டுகளும், வகை வகையாக தொகை தொகையாக, அண்ணாச்சி கடையினளவு பெரிய இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எதை வாங்குவது, எதை விடுவது என்று தவித்துப் போவோம். விலைதான் கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும். “அட! இது என் குழந்தைக்குத்தானே வாங்கப் போகிறேன். இதில் காசு பார்க்கலாமா?” என்று நினைத்து, ஒன்றிரண்டு வகைகளை அதிகமாகவே வாங்கிவந்து பிள்ளைகளுக்குக் கொடுப்போம். அதைச் சாப்பிட்ட குழந்தை என்ன சொல்லும்? “அப்பா. இந்தச் சாக்லேட்டும், பிஸ்கெட்டும் நல்ல ருசியாக இருக்கு. இனி நீ எனக்கு இதைத்தான் வாங்கி வரவேண்டும்” என்று சொல்லிச் சிரிக்கும். அந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகதானே நான் சம்பாதிக்கிறேன் என்று நினைத்து, பெருவணிகக் கடைகளில் பொருள்களை வாங்குவதைப் பழக்கப்படுத்துவோம். சாக்லேட்டுகளுக்கும், பிஸ்கெட்டுகளுக்கும் நடந்ததே, வீட்டின் பாவனைப் பொருட்களுக்கும், சமையலுக்கான பொருட்களுக்கும் நடக்கும். பிஸ்கட்டுக்கு பிள்ளை சிரித்தால், பாவனைப் பொருட்களுக்கு மனைவி சிரிப்பார். மெல்ல மெல்லப் பெருவணிகக் கொள்வனவுக்கு மொத்தக் குடும்பமும் அடிமையாகும். பிராண்டுகள், சுகாதாரம், ருசி, உலகத்தரம் எனப்பல காரணங்கள் நம்மை அங்கேயே கட்டிப் போட்டுவிடும். 


     சிறிது காலத்திலேயே பணப்பிரச்சனை மெல்லக் குறைய ஆரம்பிக்கும். மொத்தமாகவே இல்லாமலும் போய்விடும். ஆனால், நாம் அனைவரும் பெரு வணிக அடிமைகளாக மாறியிருப்போம். மாதச் செலவுகள் அதிகரித்திருக்கும். “அதனாலென்ன, ஓவர்டைம் செய்து அதைச் சம்பாதித்து விடலாம்” என்று மனம் சொல்லும். அந்த ஓவர்டைம்கூட முதலாளிகளுக்கு நாம் செய்யப் போகும் பெரும் உதவி என்பதை அறியாமலே!

(தொடரும். . .)

அத்தியாயம் 1