நெஞ்சோடு கிளத்தல்

நெஞ்சோடு கிளத்தல்

கட்டுரை:- வி.தினேஷ் குமார்

இன்று காதல் எவ்வளவுக்கு எவ்வளவு எளிதாக கைகூடுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு பிரிதலும்சகஜமாகிவிட்டது. ஒன்று அதிகமான ஆண்- பெண் பழக்கங்கள், தண்ணீரில் விடப்பட்ட காகித கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதி, கூடி, விலகுவது போல காதல்களைத் தருகிறது. ஆனால், இந்த இலகுத்தன்மை PATRIARCHY நிரம்பிய நம் சமூகத்தில் சாத்தியப்படவில்லை என்பதே பெருகிவரும்காதல் சார்ந்த சிக்கல்கள் நமக்கு உணர்த்துபவை. புறத்தோற்றத்தில் மேற்கத்திய பாவனைகள் கொண்டு உள்ளுக்குள் பழமை ஊறிய நம் சமூகம், இந்த TURMOIL படலத்தை எப்படி கையாள்வது??

பூக்கள் பூக்கும் தருணங்கள்

சென்ற தலைமுறைகளில் ஆண், பெண் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொள்ளும் வெளிகள் / வாய்ப்புகள் குறைவு. அதையும் தாண்டி சந்தித்துவிட்டால், காதல் “பூம்” என மலரும். குடும்ப ஆண்களைத் தாண்டி வேறு ஆண்களைப் பார்க்காத பெண்களுக்கு வெளி ஆணின் அறிமுகமே கிளர்ச்சி உண்டாக்கும் முகிழ்ப்பானது. தத்தி, தத்தி வளரும் காதல் குடும்பத்தால் கூறு போடப்படாத பட்சத்தில்மாலை சூடிக் கொள்ளும். ஆக, பிரச்சினைகள் என்றால் வெளியில்இருந்து வருபவை என்றும், காதலிக்கும் பெண்ணும் அபலைகள் என்றும், காதல் ஒரு புனித வேள்விஎன்னும் கருதுகோள்கள் ஆழமாக விதைக்கப்பட்டு இருந்தன. அதனாலே, காதலின் பிரிவுக்கு காதலன் தன் “சுயமழித்தலை” நாடினான். காதல் என்ற புனித பிம்பத்தின் முன் மண்டியிட்டு அழுதான். தனக்கு கைகூடாவிட்டால் கூட காதலியை நொந்துகொள்ளத் தோன்றாத காதலன், காதலைப் பருபொருளாக்கி, அதன் வெப்பத்தில் உருகினான்.

இன்று காதல்முகிழ்க்க முன்பை விட அதிக சந்தர்ப்பங்கள் உண்டு. ஒரு முகநூல் கணக்கு, ட்விட்டர் CONVO அதன் மூலம் பெறப்படும்WhatsAppநம்பர் மூலம் காதல் தன் கிளைகளை நுழைக்கிறது. ஒருவனுக்கு / ஒருத்திக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதல்கள் வாய்க்கும் என்பது நிறைய பேருக்கு புரிகிறது என்றாலும், காதலை ஒரு அந்தராத்ம பந்தம் எனகருதாத நிலை சாத்தியம் என்றாலும், மறுபுறம்காதல் சார்ந்த உணர்ச்சி செயல்பாடுகளும் அதிகரித்து உள்ளதையும் கணக்கில் கொள்ளவேண்டியிருக்கிறது. மனிதனின் மூளை என்னும் அமானுஷ்ய பிரதேசத்தில் நிகழும் விசித்திரக் கண்ணிகளின் கோர்வையின் முடிவே இச்செயல்பாடுகள்.

மூடுபனிக்குள்ளே நிகழ்பவை

காதல் தோல்வியை எப்படி சந்திப்பது என்ற பிரக்ஞை நம் சமூகத்தில் கற்றுத்தரப்படுவதில்லை. காதலின் மிகப்பெரிய சிக்கல்கள் “நினைவுகளை அழித்தல்”. ஒரு மரத்தை ரம்பம் கொண்டு அறுப்பது போல செயல்பட வேண்டிய தருணத்தை உடைந்த இதயம் கொண்டவன் தன் உடைந்த சில்லுகளைப் பொறுக்கியபடி நினைவுகளையும் அழிக்க ஒரு மனோதிடம் தேவை. ஆனால், சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் இளைஞர்களுக்கு கற்றுத் தருவது என்ன? ஒன்று அவளை விரட்டி விரட்டி காதலித்து, மீண்டும் ஒட்ட வைப்பது அல்லது “அடிடா அவள…ஒதடா அவள” வகை எதிர்வினைகளைத் தானே?

அந்த குறுகிய காலIMPULSE தான் பல குற்றங்களுக்கானத் தோற்றுவாயாக அமைகிறது. குறிப்பாக, காதலில் SELF EXPANSION சிலருக்கு அதிகமாக ஏற்படும். காதலியை தன் சுயத்தின் ஒரு பகுதியாகக் கருதி அவளது சுக துக்கங்களை தனதாக கொள்வது. இப்படிப்பட்ட ஆட்கள் காதல் முறிவின் போது அதீத உணர்ச்சிக்கு ஆளாகுபவர்கள். ஒன்று காதலியிடம் மீண்டும் மீண்டும் சென்று மன்றாடி சேர ஆசைபடுவார்கள். அல்லது அதீத கோபம் வெறியேறும் வேளையில், காதலித்தவர்களை சிதைக்க முற்படுகிறார்கள்.

காதலில் EMOTIONAL DEPENDENCY ஒரு புறம் சந்தோஷ மிகுதியை கொடுத்தாலும், மறு புறம் காதல் முறிவில் சீற்றத்தை விளைவிப்பவை. இதன் உட்கூறு தான் POSSESIVENESS. பெண்களுக்கு ஆண்களிடம் இது கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டுஆனந்திக்கும் வேளையில், அதன் பிடி இறுகினால் கோபமும், ஆற்றாமையும் வரும். ஆகையால் தான் இருவரும்ஒத்திசைவாக காதலிக்கும் SECURE வகை உறவுகள், ஒரு வேளை பிரிந்தால் கூடவன் உணர்வுகளை ஊக்குவிக்காத வகையில், மரத்தில் இருந்து இலை உதிர்வதைப் போல பிரிவுறும். ஆனால், PERSONALITY எனும் ஆளுமைத்திறன் ஆளுக்கு ஆள் வேறுபடும் ஒன்றல்லவா? குறிப்பாக சில வகை ஆளுமைக்குறைபாடுகளில், ஆண், காதல் உறவையோ, காதலியையோ விட்டு விலக மனம் இடம் கொடுக்காத பொழுதுகளில் நாம் கவலைப்படும் அளவிற்கு பின்விளைவுகள் நிகழ்ந்து விடுகின்றன.

காதல் என்பது பிரிவின் வலி தானோ?

LOVE REJECTION என்பது மற்ற ஸ்திரமில்லாத உறவுகளில் நடப்பது போல இயல்பாக நடப்பதேயானாலும் அது அதிகமாகவலிப்பது எதனால்? மனவியல் நிபுணர் விஜய் நாகஸ்வாமி, “காதல் போன்ற உறவுகளில் நாம் நமது உணர்ச்சிகள் (EMOTIONS), எதிர்பார்ப்புகள் (EXPECTATIONS), ஆற்றல் (ENERGY),நேரம்(TIME) ஆகியவற்றை முதலீடு செய்கிறோம். இந்த முதலீடுகளின்பால், நாம் நம்மை இன்னொரு நபரின் பார்வைகள் வழியாக பார்க்கிறோம். இது நம்மை இன்புற்று இருக்க வைக்கிறது. எதோ சில காரனங்களால் இந்த உறவு முறிய நேர்கையில், குறிப்பாக நாம் இன்னமும் மேற்சொன்ன முதலீடுகளை செலுத்தியபடி இருந்தால், அதுஒரு கத்தி போல நம்மைக் கிழிக்கும். காரணம், காதலால் உருவான புது சுய-பிம்பம் உடைந்து சிதறுவதே. இப்போது நம்மை கைவிட்ட நபரின் பார்வையில் பார்த்தால், அருவெறுப்பே எஞ்சும்”

நெருக்கமான உறவு முறிதலில் ஒருவரது எதிர்வினைகள் தன்னை லௌகீக இன்பங்களில் இருந்து விலக்குதல், சோகத்திலே உறைந்து போதல், காதல் பிரிவை மறுத்தல் என சுயமழித்தலாகவும் இருக்கலாம். அல்லது, காதலியிடம் முரண்டு பிடித்தல், அவளைத் துன்புறுத்துதல், தாக்குதல் என கைவிட்டவரை அழித்தலாகவும் இருக்கலாம்.

பிரிவின் எதிர்வினைகளைத் தீர்மானிக்கும்காரணிகள் என சொல்லப்படுபவை:

1. காதலின் காலஇடைவெளி

2. ஆணின் ஒட்டுதல் வகைப்பாடு(ATTACHMENT STYLE)

3. இருவருக்கான நெருக்கம் (INTIMACY) மற்றும் பொறுப்பு (COMMITMENT)

4. பிரிவின் காரணங்களை இருவரும்பேசிபுரிந்துக் கொள்ளல்

5. பிரிவை அந்த ஆண்முன்கூட்டியே கணித்தல்

6. அந்த ஆண் முன்சந்தித்த காதல்/இதர உறவு தோல்விகள்

7. ஆணின் சுய –அபிமானம் (SELF-WORTH)

குறிப்பாக தன் மீது சுய-அபிமானம் இல்லாதவர்கள், காதலில் முழுவதும் மூழ்கி, அவர்களது இதர உறவுகளைத் துண்டித்துக் கொள்வார்கள். காதல் கசந்து போகும் வேளையில், இதர உறவுகளும் இல்லாததால் ஏற்படும் வெறுமை மற்றும் அது சார்ந்த கழிவிரக்கம் சேர்ந்து உள்ளூர சின்னாபின்னமாக்கி விடும். ஆக, காதலில் விழுந்தால் கூட, இதர லௌகீக பிடிப்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுதல் அவசியம். அது இருந்தால், கவனத்தை திசை திருப்பி, எளிதில் மீண்டுவிடலாம்.

காதல் முறிந்தவுடன், ஏற்றுகொள்ள மறுப்போம், பின்னர் அது நம் மீதோ, கைவிட்ட காதலி மீதோவான கோபமாக மாறும். இது தான் ஊறு விளைவிக்கும் தருணம். பொதுவாக, இந்தத் தருணத்தில் சிலர் மறுபடி போய் கெஞ்சுவார்கள், “என்கிட்ட என்ன பிடிக்கல??” எனக் கதறுவார்கள். சிலர் இயல்பாக அடுத்த கட்டமான சுயகழிவிரக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள். பல காதல் சோகப்பாடல்கள் உருவானது இங்கே தான். ஆனால், இரண்டாம் படியிலேதங்குபவர்கள், குறிப்பாக முன்னாள் காதலியை சந்தித்துக் கொண்டே இருந்தால், மூர்க்கமாக மாறுவார்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா:

பிரிவு என்பது பொதுவானதுதான் என்றாலும் அதனை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். ஒரு சிலருக்கு தங்களைப் பற்றின நிலையான மனபிம்பம் (FIXED MINDSET) இருக்கும். இவர்கள் தோல்விக்குத் தன்னைப் பொறுப்பாக்கி வேதனைப்படுவார்கள். “நான் இதற்கு தகுதிஇல்லாதவன்”, “என் வாழ்க்கை அவ்வளவுதான்”, “நான் அழகாக இல்லை” என்றெல்லாம். இது சற்று ஆபத்தான மனநிலை. இதற்கு நேர்மாறாக சிலர் தங்களைப் பற்றி நெகிழ்த்தன்மைஉடைய பிம்பத்தை (GROWING MINDSET) உடையவர்கள். இவர்கள் “நான்எந்த புள்ளியில் தவறினேன்??”, “அளவுக்கு அதிகமாகக் கட்டுப்படுத்தினேனா?” என்பது போன்று. இது ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானது. அடுத்து கிடைக்கப்போகும் உறவுகளில் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள இது உதவும்.

இதனைப் போலவே, மற்றொருசிக்கலானது பிரிந்துபோனகாதலியைப் பற்றினதொடர் எண்ணங்கள். எண்ணப்பிடிப்புகள் (OBSESSIONS),இந்தப் பருவத்தில் ஆபத்தானது. காதலின் போது பலஇடங்களில் சுற்றி இருப்போம், அந்த இடங்களுடன்நினைவுகள் ஊறி இருக்கும். காதல் தோல்வி உற்றவர்கள், அந்தநினைவுகளை மீட்கொணரமுயலக் கூடாது. மெல்லமெல்ல அந்தஎண்ணப்பிடிப்புகளை அகற்ற அனைத்து வழிகளிலும் முயல வேண்டும். கிட்டத்தட்ட நூல்கண்டின் சிக்கலை விடுவிப்பது போல நினைவுகளை ஊடறுக்க வேண்டும். இவை முன்னாள் காதலியின் உடல் சார்ந்தும் / காமம் சார்ந்தும் இருந்தால் முதலில் தூக்கிஎறிதல் அவசியம். ஏனென்றால்,அது இன்னொருவரோடு தொடர்புபடுத்திபார்த்தால்விபரீதமான எண்ணங்களை விளைவிக்கும்.

ஒரு சிலருக்கு பிரிந்தவுடன், CRAVING எனப்படும் பிரிவாற்றாமை ஏற்படும். மறுபடி அவளைப் பார்க்க வேண்டும், பார்த்து முறையிட வேண்டும், சேரும் வாய்ப்பு ஏதேனும் இருந்தால், அதிர்ஷ்டம் இருந்தால் மறுபடி ஒன்றுபடலாம் என்று நினைப்பார்கள். ஆனால், சந்தித்தவுடன்தான்“ஏமாற்றப்பட்ட” உணர்வுகள் மேல் எழும்பி அப்படியே நசுக்கும். அந்த புள்ளியில் மனம் ஊசலாடினால், கூடவே அந்த பெண்ணும் பிடி கொடுக்காமல் பேசினால், “நமக்கு கிடைக்காத ஒன்று யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ண நீட்சிக்கூட துர்சம்பவங்களுக்கு வழி வகுக்கும். காதலி நம்மிடம் பிரிந்தவுடன் வேறொருவரை திருமணம் செய்யலம், அல்லது காதல் புரியலாம். இதைக் காண்கையில், “அவள் துரோகம்செய்துவிட்டாள். நான் காதலின் வெம்மையால் தவிக்கும் வேளையில், அவள் மாத்திரம் சந்தோஷம் கொள்ளலாமா?” என்ற எண்ணம் வளர விடக்கூடாத ஒன்று.

எல்லா இரவுகளும் விடியும்

காதல் தோல்விமற்றும் அதன் பின்னான மனநிலை மாற்றங்களைப் பற்றி அதன் நீள அகலங்களோடு பார்த்தோம். காதல் தோல்விகள், சராசரி மனிதனுக்கு சுமார் 10 வாரங்கள் கடும் கசப்பை நல்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் திண்ணம். இந்த இடைவெளியை கடக்கும் விதம் ஆளாளுக்கு மாறுபடும். சில Dos and Don’ts.

1. காதலியை சந்தித்து, மனம் மாற்றி, மிரட்டி வழிக்கு கொண்டு வரலாம் என்ற எண்ணத்தை வேரூன்ற விடக்கூடாது.

2. காதலியை பின்தொடர்ந்து கண்காணித்து, யாரோடு பழகுகிறாள் என ஆராயக்கூடாது

3. உசுப்பேற்றி விடும் நண்பர்களிடம் இருந்து தற்காலிகமாக விலகலாம். மந்தை புத்தி ஆணை மழுங்கடிக்கும் ஒன்று.

4. பழைய இடங்களுக்கு சென்று காதலை கற்பனாவாதமாக மீட்டுருவாக்கம் செய்யக்கூடாது

5. மதுவின் பிடியில் ஆளக் கூடாது. மதுவின் உச்சத்தில் முன்னாள் காதலியை சந்திக்கக் கூடாது.

6. புது காதலனை / கணவனைச் சந்தித்து, பழைய ஆதாரங்களைக் கொடுக்க முயலக் கூடாது.

7. தங்களைப் பற்றின மறைமுக எண்ணங்களை வளர விடக்கூடாது.

என்ன செய்யலாம்?

1. எங்கே தவறு நடந்தது என ஆராய்ந்து சீர்தூக்கி, ஒரு வேளை நம் பக்கத்தில் இருந்தால், களையலாம்.

2. புதிதாக ஏதேனும் hobbies வளர்க்கலாம். அது தரும் குறுகுறுப்பு இதற்கு உதவும்.

3. இது காதல் தோல்வி தான், நம்சுயதோல்வி அல்ல என உணர வேண்டும்.

4. வேலையில், ஆளுமையை செதுக்க நிறைய நேரம் ஒதுக்கிக் கொள்ளவேண்டும்.

5. சிறிது காலம், அணுகவியலா இடத்திற்கு சென்று வரலாம்.

6. பெற்றோர்கள்/உறவினர்களிடம் உறவை ஆழப்படுத்திக் கொள்ளலாம்

7. தேவைபட்டால், உளவியல் ஆலோசனை மேற்கொள்ளலாம்.

காதல் என்பது பூ மாதிரி எனக் கொண்டால் கூட, அடுத்த பூ மலர செடி ஆரோக்யமாக இருத்தல் அவசியம். அதற்கு தேவையெல்லாம், செடிக்கான உரம், ஊட்டமே தவிர. பூ மீதான கழிவிரக்கம் இல்லை.

ஆதலால், காதல் செய்யுங்கள் மானிடரே….காதலை முழுமையாக உணர்ந்த பின், உங்களுக்கு பிரியமான பொருளைக்கூட இழந்தாலும் உங்களை நேசிக்கும் துணிபுடன், நாம் விரும்புபவர்கள் எல்லாம் நம்மை விரும்பியாகவேண்டிய கட்டாயம் இல்லை என அறிந்த பின்.

LOVE CAN BE MENTALLY MENTAL BUT NOT LOVERS.