தொடர்கள்

நீலம் பச்சை சிவப்பு – 4 – கோலி சோடா

செளமியா ராமன்

“சின்ன பசங்க சார்!” என்று பள்ளி முடிக்கப் போகும் நேரத்தில்,கல்லூரி சேர்ந்த புதிதில் கேட்ட இந்த வார்த்தைகளை இப்போது கேட்க ஆவலாக இருக்கிறது. இப்போதெல்லாம் என்னையோ நண்பர்களையோ யாரும் ‘சின்ன பசங்க’ என்று சொல்வதில்லை.

தமிழ் சினிமாவில் எப்போதும் ஓயாத மதுரையை மையமாய் வைத்து வரும் படங்கள் பட்டைய கிளப்பிக் கொண்டிருந்த 2008, 2009ஆம் ஆண்டுகளில் ஒரு பக்கம் சசிகுமார் மறுபக்கம் சமுத்திரக்கனி ஹிட் அடித்துக் கொண்டிருந்த காலம். நாடோடிகளுக்கும் சுப்ரமணியபுரத்திற்கும் இடைப்பட்ட காலம் இந்த ‘குட்டி பசங்க படங்களின்’ ஆக்கிமிரப்பில் இருந்தது. பசங்க படத்தில் நடித்த சிறுவர்களின் முகங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லா பதிந்து கிடந்த காலம் எனலாம்.

இந்த பரிச்சிய முகங்களோடு எந்த பெரிய ஹீரோவின் துணையும் இல்லாமல் 2014-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளி வந்த படம் தான் இயக்குநர் விஜய்  மில்டனின்  ‘கோலி சோடா‘ எல்லாரையும் போல இப்போதும் நான் திரும்பிப் போக நினைக்கும் கல்லூரி காலம் அது. அந்த வருடம் பொங்கல் தடபுடலாக இருந்தது. அந்த வருடம் ரசிகர்களுக்கு தல-தளபதி பொங்கல். ஜில்லா, வீரம் என்று இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்திருக்க அந்த பொங்கலுக்கு வந்து  ஹிட் அடிச்ச படம் இந்த கோலி சோடா.

ஒரு படத்தைப் பற்றி பேசுகையில் அது வெளி வந்த சினிமா சூழலைப் பேசுவது அவசியமாய் இருக்கிறது. 90களில் இருந்தே சினிமாவில் ஒளிப்பதிவாளராய் இருக்கும் விஜய் மில்டன்’ அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ என்னும் படம் மூலம் ஒரு இயக்குநராக அறிமுகமானார். ஆனால் எல்லோரையும் இவரை  கவனிக்கச் செய்த வருடம் 2012, வழக்கு எண் 18/9 என்னும் படத்தின் ஒளிப்பதிவாளராய் அந்த கதைக்கு ஜஸ்டிஸ் கொடுத்திருப்பார். அந்த படத்தைப் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதலாம், இப்போ கோலி சோடா குடிப்போம்.

இத்தனை வருடம் சாமானியனாய் சினிமாவில் இருந்ததாலோ என்னவோ இவருக்கு சாமானியர்களின் கதையைச் சொல்ல பெரிய ஹீரோக்களின் பெயர் தேவையில்லை என தோன்றி இருக்கலாம். கோலி சோடாவின் உயிர் கொஞ்சமும் கலப்படம் இல்லாத அதன் காட்சிகளிலும், பாடல்களிலும் ஒளிந்திருக்கிறது.

ID கார்டு என்றால் நமக்கு தெரிந்ததெல்லாம் ஆபிஸுக்கு நிச்சயமாக எடுத்துச் செல்ல வேண்டும், எடுத்துட்டு போகலன்னா கல்லூரியில் பைன் கட்ட வேண்டும் என்பது தான் ஆனால் ID கார்டோ, ரேஷன் கார்டோ இல்லாத கூட்டத்துக்கு அது எவ்வளவு முக்கியமாய் இருக்கிறது என்று படத்தின் துவக்கத்திலேயே கதையின்  கருவை ‘ID கார்டெல்லாம்  கக்கூஸ்  வச்ச  வீட்டுல இருக்கவங்க மேட்டர் டா..’  என்ற வசனத்தின் மூலம் உடைத்திருக்கிறார் இயக்குநர்.

 கோயம்பேடு மார்க்கெட் அந்த காய்கறி மூட்டை, லாரி  போற  அழுக்கு  படிஞ்ச  ரோடு, கூட்டம், சத்தம் இதற்கு நடுவுல தவிர வேற ஒன்றுமே தெரியாத நாலு பசங்க. இவங்கள சின்ன பசங்கனு சொல்றதா ? பெரிய பசங்கனு சொல்றதா?  ரெண்டுக்கு இருக்க வித்தியாசத்தை சொல்றது தான் இந்த படம். Identity crisis அப்படிங்கற வார்த்தை இந்த படத்துக்கு முன்னாலும் இந்த தமிழ் கூறும் நல்லுலகத்தால் பேசுபொருளா எடுக்கப்பட்ட ஒன்று தான் ஆனா சின்ன வித்தியாசம், இது எதுவுமே இல்லாதவர்களுக்கான,’ அடிச்சு போட்ட கேட்க ஆள் இல்ல’ அப்படிங்கற வசனத்துக்குப் பின்னாடி இருக்க வலியை எந்த திணிப்பும் இல்லாமல் சொல்ற படம்.

இந்த படத்தை முதன் முதலில் பார்க்கும் போது சேட்டு, புள்ளி , சித்தப்பா, குட்டிமணி அப்படிங்கற நாலு பசங்க தான் முன்னாடி நின்னாங்க  அவங்க கதை  தான்  ஆனால்  இத்தனை வருடங்கள் கழித்து இப்போ படம் பார்க்கையில் இந்த  கதைக்கு வேறு ஒரு கண்ணோட்டம் கொடுத்தா நல்லா இருக்குமோ அப்படிங்கிற எண்ணம் எழுந்தது. படத்தில் மார்க்கெட்டின் சிங்கமாகவும், தாதாவாகவும் சித்தரிக்கப்படும் நாயுடுவை வச்சு கதையை பார்ப்போமே!

’உங்களுக்கெல்லாம் இப்போ இருக்க என்.கே.பி தான் தெரியும் ஆனா, எனக்கு இந்த மார்க்கெட் கொத்தவால் சாவடியா இருந்தப்போவே அவரைத் தெரியும்’ இந்த வசனம் தான்  என்னை இப்படிச் சிந்திக்க வச்சது. 1996க்கு முன்னாடி இந்த கோயம்பேடு மார்க்கெட் அங்க இல்ல, அப்போ அது வெறும் கொத்தவால் சாவடி . இந்த பக்கம் கூவம், அந்த பக்கம் ritchie street -ல எலக்ட்ரானிக் கடைகள் அப்படினு இருந்த இடம். இப்போ இங்க 14 வருஷமா யாருமே எதிர்த்து போட்டியிடாமல், தனிக்காட்டு ராஜாவா வாழற நாயுடு அப்போ பிக்பாக்கெட் ஆகவோ, இந்த நாலு சின்ன பசங்க மாதிரி தன்னோட அடையாளத்துக்கு போராடற ஆளாவோ இருக்கலாம். இதை எதுக்கு சொல்றேனு கேட்டீங்கனா, இந்த படம் வில்லன் அப்படிங்கிற கதாபாத்திரத்திற்கு கொடூரமான வசனங்களையோ, அவன் நூறு பேரை அடிக்கிற மாதிரியோ, அடிப்படையில் தப்பானகவோ சித்தரிக்கல, காரணம், வில்லனை பெருசா காட்டி அதன் மூலம் ஹீரோவை இன்னும் பெருசா காட்ட வேண்டிய கட்டாயம் இங்க இல்லாம போனது தான். படம் முழுக்க எல்லாம் இருக்கிறவன் தன் அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், எதுவுமே இல்லாதவன் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் எடுக்கிற முயற்சி என்று தான் சொல்லணும்.

தமிழ்ப்படங்களின் சட்டத்துக்குள் கோலி சோடா சிக்காமல் தப்பித்துக் கொண்டதிற்கு இன்னொரு காரணம் படத்தில் வந்த பெண்களின்  கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதம் தான். ‘அழகா பொறக்காதது என் தப்பா?’ என்பதில் துவங்கி  ‘என்ன நடந்ததுனு கேளுங்க ஆச்சி. நம்ம பசங்க தப்பு பண்ணி இருக்க  மாட்டாங்க’  அப்படின்னு பல இடங்களில் வான்மதி கதாபாத்திரம் செதுக்கப் பட்டிருக்கும். படத்தின் முகங்கள் எல்லாம் எந்த பூச்சும் இல்லாம அசலா இருந்தது இன்னொரு காரணம்.

படத்தின் பாடல்கள் எல்லாமே கேட்டதும் மனசுல நிற்கும் பாடல்கள். கதையில எந்த எடத்துல காட்சிகளைத் தாண்டி உணர்வுகளை கடத்தணுமோ அங்க தான்  இருக்கு  பிரியன் எழுதிய ‘ஜனனம் ஜனனம்’ பாடல் நிச்சயமா இந்த கட்டுரையை படிக்கற உங்களுக்கு இந்த பாட்டு ஞாபகத்துல இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனால், இது படத்தின் மிக முக்கியமான பாடல், அவ்வளவு அழகான வரிகள்.

தேங்கிடாதே திரும்பி நடக்காதே

தேய்ந்த போதும் திமிரை இழக்காதே

ஜனனம் ஜனனம் புயலின் புது ஜனனம்

எதிர்க்கும் எதையும் வீழ்த்தும் அதன் நடனம்

துணியும் வரைக்கும் வராது தருணம்

துணிந்து எதிர்த்தால் தூளாகும் சலனம்

விஜய் மில்டன் படத்தை முடித்திருக்கும் விதத்திற்காகவே இன்னொரு முறை பார்க்கலாம்.

கோலி சோடா – அடையாளம்!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


மேலே
Close