நெகிழன் கவிதைகள்

நெகிழன் கவிதைகள்

கவிதை:- நெகிழன்

நேற்றிரவு
நான் கொளுத்திய மெழுகுவர்த்தி
இரவெல்லாம் சுடர் விட்டு
சேவல் கூவும் சாமத்தில்
அரூபமாகி
தரையுடன் தரையாய்
அப்பிக் கிடந்தது.

தன் ஆயுளின்
கடைசி வினாடிகளை
எண்ணிக்கொண்டே
என்னை நோக்கி
ஏதோ சொல்ல முற்பட்டிருக்கிறது.

எனக்குதான்
அது சொல்லவருவதை கேட்கவோ,
அதன் துக்கம் விசாரிக்கவோ,
மாய்ந்த அதன் மென்மையான
சடலத்தைத் தடவி
இரங்கல் தெரிவிக்கவோ
நேரமில்லை.

இப்படித்தான்
ஒவ்வொரு நாளிலும்
ஒவ்வொரு மெழுகுவர்த்தியையும்
அலட்சியப்படுத்துவேன்.

இருப்பினும்
அவை என்போலில்லை
என்றாவது ஓர்நாள் நிகழும்
என் இரங்கல் கூட்டத்தில்
அவை கலந்துகொள்ளும் என்பதை
நானறிவேன்.
அவ்வளவு ஏன்
நீங்களும்கூட அறிவீர்கள்.