கவிதைகள்

நிலாகண்ணன் கவிதைகள்

நிலாகண்ணன்

ஆண்கள், பெண்கள்

பூவைத்திருக்கும் பெண்தலைக்கும்
மீசைவைத்திருக்கும் ஆண்தலைக்கும்
இடையில்
பசிவைத்திருக்கும்
ஒடுங்கியவயிற்றோடு அமர்ந்திருப்பேன்
வடித்து நிமிர்த்திய பொன்னியரிசி சாதமென
மஞ்சள்பூக்காத வெண்பளிங்கு
கழிவறைகள்தான் இப்பூவுலகில்
நான் வாழ்வதற்காக மல்லாக்க விழுந்த சோழிகள்
கடைசி பேருந்துக்குப்பிறகு
கதவோவியங்கள்
காமச்சித்திரங்கள்
இயங்க ஆரம்பிக்கும் நடுநிசியில்
மாண்டுவிட்ட என் மனையாட்டி
மல்லிகைப் பூச்சூடிவருவாள்
இரண்டு ரூபாய்ச சில்லறையாக
வாங்கிக்கொண்டு
தாழ்பாள் அற்ற கனவுக்குள் அனுமதிக்கிறேன் அனுதினம்
எனக்கு உங்கள் நினைவில் வராதமுகம்.
உரையாடல்களற்ற நம் உறவுக்கோ மூத்திரத்தின்நெடி.

வாத்து

என்னைக் கைவிட்டதற்கும்
விட்டுவிலகியதற்கும்
காரணம் சொல்லாத
மாஜி காதலி
தன் உயரமான கணவனோடு
எனக்கு முன் வரிசையில்லமலர்ந்து
மேஜிக்ஷோ காண்கிறாள்.

எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கும்
ஒரு தேவதூதனைப்போல
வெள்ளைக் கையுறையணிந்த கரங்களால்
எனை மேடைக்கழைத்தார் மேஜிஷியன்
பலத்த கரகோஷங்களுக்கு நடுவே
நான் வாத்தாக மாறிக்கொண்டிருந்தேன்
இரண்டாவது முறையாக.

——————

டைட்டன்வாட்ச்

உடைந்த துணுக்குகளை
அகாலத்திற்குள்ளே விட்டுவிட்டேன்
கடந்த பதினைந்து வருடங்களாக
எனது இடதுகையில் இப்படியொரு வெறுமையிருந்ததில்லை
பன்னிரண்டு கிலோமீட்டருக்கு நடுவே பஞ்சரான டயரின் நிமித்தம் நான்
ஆண்டிகிளாக்வைசில்
இயங்கியிருக்கக்கூடாது.
வெள்ளை நிற உள்ளடக்கத்தோடுகூடிய
ஒரு டைட்டன் வாட்ச் இப்போது
என்னவிலையிருக்கும்.!?

களவும் கற்றுமற

உன்னுடைய புகைப்பட அறைக்குள்
எல்லாம் குலைந்திருக்கக்கூடும் மன்னித்துவிடு நண்பா
நேற்றிரவு அதீதரசனை பீடித்து திருடவந்தவன் நான்தான்.
டார்ச்லைட் இன்றி திருடவந்த எனக்கு
விளக்கை கையிலேந்தி நின்றவள் உதவினாள்
சிறுவிளக்கொளியில் சிந்தாமல் சிதறாமல்
புகைப்படங்கள் யாவையும் திருடிக்கொண்டேன்
இடைஇடையே நண்பா உன் இருமல் வேறு

புதியதிருடனின் கைகள்
எப்படிநடுங்குகிறது தெரியுமா!?
நான் அபகரித்த படங்கள் யாவும் உலகிலேயே மிக அழகான புகைப்படங்கள்

இனி உன்னிடம் மிச்சமிருப்பது
உன் கண்களும் காமிராவும்தான்
பாவம் நீ


 

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


மேலே
Close