‘ஸ்ரீ தனலட்சுமி ஜோதிட நிலையம்’ என்று எழுதப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையை ஒரு கணம் மௌனப் பார்வை பார்த்துவிட்டு மனதில் எழுந்த பழைய நினைவொன்றின் சுமையைத் தாங்கியபடி உள்ளே நுழைந்தான் கவின்.
அவனைப் பார்த்ததும் மனதில் எழுந்த மெல்லிய பதற்றத்தைக் கடந்து பின் இயல்பான குரலில், “குமார் கூப்புட்டு சொன்னான் நீ வந்துருக்கேன்னு. நானே வீட்டுக்கு வந்து பார்க்கலாம்னுதான் இருந்தேன். அதுக்குள்ள நீயே வந்துட்ட. வா. உட்காரு” என்று சொல்லி கதிரவன் கவினை வரவேற்றான்.
அவனுக்கருகில் உட்கார்ந்திருந்து அலைபேசியில் தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்த பையனொருவன் கவினை ஏறிட்டு நோக்கி உதடு கோண புன்னகை செய்தான். கவினும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு கதிரவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டான்.
கதிரவன் தன் நெற்றியில் சந்தனப் பொட்டை நேர் கோடாக இழுத்து அப்பியிருந்தான். விரல்களில் மூன்று தங்க மோதிரங்கள். அதிலொன்றில் வெளிர் நீலநிறக் கல் பளபளவென மின்னிக் கொண்டிருந்தது. அவனுக்குப் பின் இருந்த சுவரில் அலங்கரிக்கப்பட்ட சாமி படங்கள் மாட்டப்பட்டிருந்தன. பெரும்பகுதி அதில் அம்மன் படங்கள். அதன் கீழே சந்தனத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டு அதனருகில் ‘தன லாபம்’ என்று எழுதப்பட்டிருந்தது.
“திருவிழான்னா மட்டும்தான் ஊர்பக்கம் வர்றது. இல்லனா எட்டி கூட பார்க்குறது இல்ல”என்றான் கதிரவன்.
“வேற எதுக்கு ஊருக்கு வரனும்? இங்க என்ன இருக்கு பார்க்க? ஒரே சினிமா தியேட்டரு, ஈஸ்வரன் கோயிலு, ஸ்கூலு, வாய்க்கா மேடு, பஸ் ஸ்டாண்டு. வேற என்ன இருக்கு? நின்ன இடத்துல சுத்துற மாதிரில இருக்குது” என்று சலிப்புடன் சொன்னான் கவின்.
“பின்ன பெங்களூர்லயே கெடக்க வேண்டியதுதான? இப்ப எதுக்கு வந்தயாக்கும்?” என்று கதிரவன் கேட்டான்.
“நானும் அதான் யோசிக்கிறேன். அப்பா அம்மாவையும் அங்கயே கூட்டிட்டு போயிரலாம்னு பார்க்குறேன். வருசத்துக்கு ஒருதடவ திருவிழாவப்ப மட்டும் வந்து தலைய காட்டிட்டு போயிடலாம்னு இருக்கேன்” என்றபடி இருக்கையில் உடலை நீட்டி நெளித்தான் கவின்.
“இப்ப மட்டும் என்னவாம்? வருசத்துக்கு ஒரு தடவதான வந்துட்டுப் போற!? கோவிட் வந்ததுனால ரெண்டு வருசம் அதுவும் கிடையாது.” என்றான் கதிரவன்.
“என்னத்த சொல்ல!? அந்த ரெண்டு வருசமும் எதோ திருவிழாவுல தொலஞ்சு போன குழந்த மாதிரிதான் இருந்தேன். பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்துது. எல்லாம் பழையபடி மாறிடும்னு நினைக்காத நாளில்ல. நேத்து ஊருக்குள்ள வர்றப்ப கேட்ட அந்த மைக்செட் சத்தம், அப்படியே அம்மாவோட புடவ தலப்பு முகத்துல உரசுற மாதிரி அவ்ளோ இதமா இருந்துச்சு. ‘இதோ இதுதான்! இங்கதான். இதுக்காகத்தான் வந்தேன்’ன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் கவின் சொன்னான்.
“எல்லாருக்கும் அதே ஏக்கம்தான். நம்மளால என்னைக்கும் தனியா இருந்துடவே முடியாது. ஆகாதவனக் கூட அடிக்கடி நேர்ல பார்த்தாதான் மனசுக்கு திருப்தி வரும். சாயந்தரம் தேர் இழுக்கும் போது பாரு! ஒருத்தன ஒருத்தன் உரசி மேலேறி விழுந்து புரண்டுதான் வடத்த புடிச்சு இழுப்பான். வடத்த புடிக்க முடியலன்னாலும் எவன் கை வடத்த புடிச்சுருக்கோ அவன் கைய இறுக்கிப் புடிச்சுக்குவான். மனுசனோட அதிகபட்ச ஆசையே சக மனுசன தொட்டுப் பார்க்குறதுதான். இல்ல?” என்றான் கதிரவன்.
“தேர் இழுக்குறதுக்கு கூட்டம் வந்துரும்ல?” என்று கவின் சற்று சந்தேகத்துடன் கேட்டான்.
“வீரக்குமாரசாமி வராத ஆளுகள கூட விழாவுக்கு வர வெச்சுடுவாரு. எல்லாரும் எப்படான்னு காத்துகிட்டு இருக்கானுங்க. ரெண்டு வருசமா பார்க்காத ஏக்கம், கிடைக்காத தரிசனம். வர்றாம இருந்துடுவாங்களா? கொரோனாவுக்கு முன்னாடி இருந்ததவிட இந்த தடவதான் அதிக கூட்டம் வரும். பார்த்துக்கோ.” என்று பதிலளித்தான் கதிரவன்.
பின், தன்னருகிலிருந்த பையனைச் சுட்டிக் காட்டி, “இவனத் தெரியும்ல.?” என்று கதிரவன் கேட்டான்.
“மச்சானா?” என்று கவின் கேட்டான்.
“ஆமா. காலேஜ் படிச்சுட்டு இருக்கான். திருவிழாவுக்காக வந்துருக்கான்” என்று கதிரவன் சொன்னான். கவின் ‘ஓஹோ’ என்பதுபோல அவனைப் பார்த்து தலையசைத்தான்.
“இவனும் நானும் க்ளாஸ்மேட். ஸ்கூலுக்கு ஒன்னாதான் சைக்கிள்ல போவோம். நமக்கு படிப்பு வராது. ஏதோ இவன் தயவாலதான் பன்னெண்டாவது பாஸ் ஆனேன்.” என்றான் கதிரவன். பின், “இப்ப இருக்க மாதிரி எட்டாங் க்ளாஸ் வர ஆல் பாஸ் எல்லாம் நாங்க படிக்குறப்போ இல்ல. ஃபெயிலுனா ஃபெயிலுதான். அழுது புரண்டாலும் அடுத்த க்ளாஸுக்குப் போக முடியாது. நம்ம குமாரு அஞ்சாங் க்ளாஸ் ரெண்டு தடவ படிச்சான்னா பார்த்துக்கோ. அவன பண்ணாத கேலி இல்ல. ஆனா, கொஞ்சங்கூட அவன் அசரவே மாட்டான். அவன பொறுத்த வரைக்கும் பொண்ணுங்க முன்னாடி அசிங்கப்பட்டுற கூடாது. அவ்வளவுதான்” என்று சொல்லி சிரித்தான் கதிரவன்.
“நீ இன்னைக்கு கூட விழாவுல பாரு. கூட படிச்ச பொண்ணு யாரையாவது பார்த்துட்டா அப்படியே பென்சில் முனையால செவுத்த கீறுனா உடம்பு கூசுற மாதிரி கூசி நிப்பான்” என்று கதிரவனின் மச்சானிடம் கவின் சொல்லி முடிப்பதற்குள் தன் கைகளின் ரோமங்கள் தலைநிமிர்ந்து தன்னைப் பார்ப்பதை உணர்ந்தான்.
“நீ மட்டும் என்ன பெரிய தைரியசாலியா? அந்த சேட்டு பொண்ணுகிட்ட ஒரு வார்த்த கூட நீ பேசுனது இல்ல. அவ பேரு என்ன? பிரேர்னானா..பார்த்த்னான்னா…சட்டுன்னு ஞாபகம் வரமாட்டேங்குது” என்று முகத்தைச் சுழித்து கதிரவன் யோசிப்பது போல கவினிடம் கேட்டான்.
“ப்ரார்த்தனா” என்று உணர்ச்சிகளற்ற முகத்துடன் கவின் சொன்னான்.
கதிரவன்,”ஹாங்..ப்ரார்த்தனா.” என்றபின் தன் மச்சானிடம், “குணா பட கமலஹாசன் மாதிரி ஏதோ கடவுளே கருவறைய விட்டு வெளிய வந்த மாதிரிதான் அவள பார்த்துட்டு இருப்பான்” என்றான்.
“எல்லா பசங்களும்தான் பார்த்தாங்க.” என்றான் கவின் இயல்பாக.
“வேண்டுறவனுங்க எல்லாத்துக்கும் சாமி அருள் தந்துடுமா? உன்ன போல மத்த பசங்களும்தான் அவ வீடு இருந்த தெருவுல போயிட்டு வந்துட்டு இருந்தானுங்க. ஆனா, நீ வரும்போது மட்டும்தான அவ கதவ திறந்து வெளிய வருவா?” என்று அழுத்தமாக கதிரவன் கேட்டான்.
“நட திறக்குற நேரத்துல கோயிலுக்கு போனாதான சாமிய பார்க்க முடியும்!? அந்த மாதிரிதான்” என்று கவின் தன் தரப்பு நியாயத்தைச் சொன்னான்.
“அதான் சொல்றேன். நீதான் உண்மையான பக்தன். மத்தவனெல்லாம் சாமி ஊர விட்டு போனதுக்கப்பறம் கோயில் இருந்த திசையையே மறந்துட்டானுங்க. இல்ல?” என்றான் கதிரவன்.
“அதுக்கப்பறம் அவங்க திரும்பி வரலயா?” என்று கதிரவனின் மச்சான் கேட்டான்.
“அவ அப்பா சேட்டு இங்கதான் கட வெச்சு வியாபாரம் பார்த்துட்டு இருந்தாரு. எவனோ களவாணிப் பய கடைல புகுந்து உண்டியல லவுட்டிட்டு போயிட்டான். அவரு விரக்தியாகி குடும்பத்தோட ஊரவிட்டுப் போயிட்டாரு” என்று கதிரவன் சொன்னான்.
”அதுக்கப்பறம் நீங்க அவங்கள பார்க்கவே இல்லையா?” என்று கதிரவனின் மச்சான் கேட்டான்.
”ம்ச்ச். இல்ல” என்றான் கவின். பின், “ஃபர்ஸ்ட் லவ் யாருக்குத்தான் கைகூடியிருக்கு? அந்த வயசுல அதுவொரு டிவைன் ஃபேண்டஸி. சாமி வந்து ஆடுறவங்கள பார்த்திருக்கில்ல!? அது மாதிரிதான். அதத்தாண்டி வேற ஒன்னும் இல்ல” என்று இயல்பாக கவின் சொன்னான்.
“மத்தவன்லாம் அப்போ ஃப்லேம்ஸ் போட்டு பார்த்துகிட்டு இருந்தப்போ, நாங்க ரொம்ப அட்வான்ஸா போயி அந்த பொண்ணுக்கும் இவனுக்கும் ஜாதகப் பொருத்தமே பார்த்துட்டோம். என்னோட முதல் கஸ்டமரே இவன்தான்” என்றான் கதிரவன் பெருமையாக.
”எப்படி பார்த்திங்க?” என்று அவன் மச்சான் கேட்டான்.
”ஆபிஸ் ஸ்டாஃப் ஒருத்தங்கள ஐஸ் வெச்சு பேசி அவளோட பெர்த் சர்ட்டிஃபிகேட் எடுத்து ஜெராக்ஸ் போட்டு, அப்பறம் சாவகாசமா வாய்க்கா மேட்டுல உட்கார்ந்து பார்த்தோம்.” என்றான் கதிரவன்.
“பார்த்தா, ’பத்துல நாலுதான் தேறுது. இது சரிபட்டு வராதுடா’ன்னுட்டான். நான் போடா மயிரா, இதெல்லாம் பொய் பித்தலாட்டம்டான்னு சொல்லி என் சைக்கிள எடுத்துட்டு விறுவிறுன்னு ஓடிட்டேன்” என்றான் கவின்.
“நான் விடலையே! இவன துரத்திப் போய் வழிமறிச்சு, ‘நம்புறவனுக்கு கடவுள் இருக்குற மாதிரிதான் இது. நம்பலைன்னா அது இல்லைன்னு அர்த்தம் இல்ல’ன்னு சொல்லிட்டேன். இருந்தும் விடலையே. என் லவ்வு ஜெயிக்கும்டான்னு சாமிய வேண்டிட்டு பொட்லி எல்லாம் போட்டான். கடைசில என்னாச்சு? நான் சொன்னதுதான நடந்துச்சு.” என்று சொல்லி மேசையை ஒரு தட்டு தட்டினான்.
கவின் ஏதும் சொல்லாமல் சற்று கேலியான புன்னகையை வெளிக்காட்டினான்.
கதிரவன் சீண்டப்பட்டவனாய், “ஆமா. இந்த மார்கழிக்குள்ள உனக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சிடும்னு உங்க அம்மாகிட்ட சொன்னேன். அது நடக்கல. எல்லாமே நான் சொன்னபடியே நடந்தா, அப்றம் கடவுள் இல்லைன்னுல அர்த்தமாயிடும்?” என்றான்.
“அப்றம் எதுக்கு மாமா இதெல்லாம் பார்த்துகிட்டு?” என்று கதிரவனின் மச்சான் கேட்டான்.
“இருட்டுல நடக்குறவனுக்கு கைல டார்ச் லைட் இருந்தா வழியில கிடக்குறது பாம்பா கயிறான்னு தெரிஞ்சுக்கலாம்ல. அதுமாதிரிதான். ஆனா, எதுவா இருந்தாலும் அத மிதிக்குறதும் மிதிக்காம கடந்து போறதும் அவன் தலவிதிய பொருத்தது” என்றான் கதிரவன்.
கவின் பெருமூச்சுவிட்ட பின், “சரி, நான் கிளம்புறேன். சாயந்தரம் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு எழுந்தான். கதிரவன் ‘சரி’ என்பதுபோல தலையசைத்தான்.
அவன் சென்றதும் சற்று இறுக்கமான முகத்துடன், ”ரொம்ப நாள் கழிச்சு அந்த பொண்ணு இவனத் தேடி இங்க வந்துச்சு. நாந்தான் அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு; பொண்டாட்டிய கூட்டிட்டு வெளியூர் போயிட்டான்னு சொல்லி அவள அனுப்புச்சு விட்டேன்” என்று கதிரவன் தன் மச்சானிடம் சொன்னான்.
அவன் அதிர்ச்சியடைந்து, “ஏன் அப்படி சொன்னிங்க மாமா?” என்று கேட்டான்.
”அவள கல்யாணம் பண்ணிருந்தா கை கால் முடமாகி வீட்ல கிடந்துருப்பான். அந்தப் பொண்ணுக்கும் நிம்மதி இருந்துருக்காது. ரெண்டு பேருக்கும் நல்லது பண்ணனும்னு நெனச்சேன். அவ்வளவுதான்”
”அவரு சொன்னதுதான் கரெக்ட். இதெல்லாம் வெறும் பொய் பித்தலாட்டம். இந்தக் காலத்துலயும் இதெல்லாம் நம்புறது மூடத்தனம்”
”எந்தக் காலமானாலும் ஒரு சிலது மாறாது. இதுவும் அப்படித்தான். உனக்கு இப்ப புரியாது. நான் அவ்வளவுதான் சொல்லுவேன்” என்று கதிரவன் தீர்க்கமாகச் சொல்லி முடித்தான்.
அன்று மாலையில் வெள்ளக்கோயிலில் தேரோட்டம் நிகழ்ந்தது. மத்தைக் கொண்டு தயிரைக் கடைவது போன்று ஊர்மக்கள் ஒன்றாக இணைந்து வடத்தைப் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். கோயிலின் வெளிப்புற பிரகாரமாக அமைந்திருந்த மண் சாலையில் தேரானது நத்தை போல ஊர்ந்து சென்றது. ஆளுயர சகடங்கள் இரண்டும் அசையும் காதணிகள் போன்று இருந்தது.
தேர் நிலை சேர்ந்ததும் ஊர்மக்கள் எல்லோரும் ஆரவாரமாக கைதட்டி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். தீபாராதனை காண்பிக்கையில் கண்ணீருடன் அவர்கள் கைகூப்பினர். அப்போது மேற்கே மறைந்து கொண்டிருந்த சூரியனின் இறுதி ஒளி அடங்கும் கணத்தில் ஜனத்திரளின் நடுவே நின்றிருந்த ப்ரார்த்தனாவை கவின் பார்த்தான்.
அவள் இடுப்பில் குழந்தை ஒன்று இருந்தது. அதன் பெரிய கன்னக்கதுப்புகளில் தேர்ச்சக்கரத்தின் மையப்புள்ளி போன்று இரண்டு பொட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
மாபெரும் வியூகத்தின் மையத்தில் சிக்கிக் கொண்டவனைப் போல் அசையாது அவன் நின்றிருந்தான்.
பத்து ஆண்டுகளுக்கு முன் அதே கோயிலின் உட்பிரகாரத்தில் அவளுடன் நடந்து கொண்டிருக்கையில் பேசிய சொற்கள் நினைவின் ஆழத்தில் எதிரொலித்தன.
”இன்னைக்கு எதுக்கு கோயிலுக்கு வந்துருக்கோம்?”
“கவி! இன்னைக்குத்தான் என்னோட பிறந்தநாள்.”
”இன்னைக்கா?” என்று அவன் திகைப்புடன் கேட்டான்.
”ஆமா, இன்னைக்குத்தான்.” என்று அவள் சொன்னதும் அவளது நெற்றிப்பொட்டில் குங்குமத்தை அவன் எடுத்து வைத்தான்.
இருள் கவியத் தொடங்கியதும் கூட்டம் மெல்ல கலைந்து போகத் தொடங்கியது. ப்ரார்த்தனா அவன் பார்வையில் இருந்து விலகி ஜனத்திரளுக்குள் கரைந்து போய்விட்டாள்.
கவினை கண்டுகொண்டதும் அவனருகே வந்த கதிரவன், “இங்க என்னடா தனியா நின்னுட்டு இருக்க? தரிசனம் பார்த்தியா இல்லையா?” என்று கேட்டான்.
கவின் மெல்லிய புன்னகையுடன், “பார்த்துட்டேன்” என்றான்.