மரணமும் காமமும்
சாதனாவின் தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்புநிற பைபிள் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி ஆறாண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே இந்த நுனிப்புல் தொடரில் இந்நூலினை வைப்பது சரியாக இருக்குமா என்ற கேள்வியுடேனேயே இக்கட்டுரையை தொடங்குகிறேன். நூல் வெளியாகி இத்தனை வருடங்களானது மட்டும் என் தயக்கத்திற்கு காரணமில்லை. சாதனா இந்நூலினை 2018ல் வெளியிட்டிருக்கிறார். இத்தொகுப்பில் ஆறு கதைகள் மட்டுமே உள்ளன.( ஆனால் பின்னுரையில் ஏழு கதைகள் என்று குறிப்பிடிருக்கிறார்.) இக்கதைகளை ஆறு வருட இடைவெளியில் எழுதியதாக பின்னுரையில் குறிப்பிடுகிறார். ஆகவே சாதனாவின் இக்கதைத் தொகுதியை பிரசுர வாய்ப்புகள் பெருகிவிட்டதால் வெளியிடப்பட்ட ஒரு ‘கன்னி முயற்சி’ என்று எடுத்துக் கொள்ள முடியாது. அதோடு இலங்ககைத் தமிழரான சாதனா சிறுமி கக்தலோனா என்ற ஒரு கதை நீங்கலாக மற்றக் கதைகளில் எதிலும் இலங்கையை கதைக்களனாக எடுக்காததும் அவருடைய படைப்புச் செயல்பாடு குறித்த அவருடைய தீர்மானத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. எனினும் முதல் தொகுப்பு என்ற அடிப்படையிலும் இத்தொகுதிக்குப் பிறகு இன்னொரு நூலினை சாதனா வெளியிடாத காரணத்தாலும் இந்நூலினை இத்தொடரில் இணைக்கலாம் என்று எண்ணினேன்.
சாரு நிவேதிதா இந்நூலுக்கு முன்னுரை அளித்திருக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ளது போல இத்தொகுப்பில் பல்வேறு இடங்களில் மரணமும் காமமும் மீள மீள பேசப்படுகின்றன.
‘தமிழில் முதன் முதலாக மரணமும் பாலியலும் இணையும் ஒரு பிரதியை படிக்கிறேன்’ என்று சாரு நிவேதிதா முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் என் வாசிப்பில் இளம் எழுத்தாளர்களின் முதல் தொகுதியில் இவ்விரண்டு அம்சங்களும் வெளிப்படுவது இயல்பானது என்பதைக் கண்டிருக்கிறேன். காரணம் என்ன? இளம் வயதில் நம்மைச் சூழ்ந்து இவ்விரண்டும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருந்தால் மரணத்திற்கும் காமத்திற்கும் பின்னிருக்கும் கண்ணிகளை நாம் பொருட்படுத்துவதில்லை. மரணமும் காமமும் இரண்டு எல்லைகளாக மட்டுமே நம் கண்களுக்குப்படுகின்றன. பாலியல் தொழிலாளி, பிணவறையில் பணியாற்றுகிறவர்கள் என்று மரணத்தையும் காமத்தையும் தன்னுடைய அன்றாட வாழ்நிலையாக கொண்டவர்களை நம்மால் சற்று அதிர்ச்சியுடன்தான் நோக்க முடிகிறது. சாதனாவின் முதல் கதையில் பிரதான பாத்திரமான சிலோன்நாதன் ஒரு மருத்துவர். மரணத்தை அடிக்கடி கண்ணுற வாய்ப்புள்ள ஒருவர். அவருடைய தற்கொலை எண்ணங்களுடன் இக்கதை தொடங்குகிறது. நத்தை இக்கதையில் ஒரு வலுவான படிமமாக இடம்பெறுகிறது. சிலோன்நாதனின் பின்னணி, அவர் காலைப் பிடித்துக் கெஞ்சும் சிறுமி கத்தலோனா, அவர் நிஜத்திலோ கற்பனையிலோ சுகிக்கும் வேசி என்று ஒவ்வொரு பாத்திரமும் சிலோன்நாதனின் மன அவசத்தையே வெளிப்படுத்துகின்றன. கதைத்தருணம் பின்னுக்குத் தள்ளப்பட்டு சிலோன்நாதனின் அகவயமான அலைச்சலே கதை முடிவில் மனதை நெருடுவதாக அமைவது இக்கதையின் தனித்தன்மை.
அக்கா இத்தொகுப்பில் சற்று பலகீனமாகத் தெரியும் கதை. தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்புநிற பைபிள் என்ற கதை அடர்த்தியான மௌனங்களை தன்னுள் கொண்டுள்ளது. கரடியை சுடுவதற்கு முன் கதைசொல்லியின் உள்ளே நடக்கும் போராட்டத்தையும் போரில் ஈடுபட்டுத் திரும்பிய பின்பு அவன் முழுக்க வேறொரு ஆளாக மாறி நிற்கும் அக நகர்வையும் இக்கதைக்குள் கொண்டு வந்திருப்பது சாதனாவின் முக்கியமான வெற்றி என்று சொல்ல வேண்டும். சிறுமி கத்தலோனா போலவே மரணமும் காமமும் மாறி மாறி பேசப்படும் கதையாகவே இக்கதையும் உள்ளது. ஓ தாவீது ராஜாவே மற்றும் தாய் இரண்டும் வேறு வகையான கதைகள். இரண்டு கதைகளிலும் ஒரு கையறு நிலை பேசப்படுகிறது. இரண்டு கதைளிலும் முடிவில் வாசக மனதை ஒரு துயரம் நிறைக்கிறது. ஆனால் இரண்டு துயரங்களும் வெவ்வேறானாவை. தாவீது ராஜாவின் வெற்றிகரமாக வாழ்க்கையை கதையாகச் சொல்லப்பட்ட பிறகு அதே பெயருடன் சாப்பாட்டுக்குக்கூட வழியற்ற கிழவனின் வாழ்வும் பேசப்படுகிறது. தாய் கதையில் விளாடிமிர் ஏன் அந்த முடிவை எடுக்கிறான் என்பதை வாசக ஊகத்துக்கே விட்டிருப்பது சிறப்பான உத்தி.
கடைசிக் கதையான யூதாஸின் முத்தம் இத்தொகுப்புக்கு ஒரு ‘தொகுப்புரை’ போல அமைகிறது. இக்கதையை வாசித்து முடிக்கும்போது ஏசுவிற்கு யூதாஸ் செய்த துரோகம் ஒன்றும் அவ்வளவு பொருட்படுத்தத்தகுந்தது அல்ல என்ற எண்ணத்தை ஒவ்வொரு வாசகரும் அடைவார் என்றே ஊகிக்கிறேன்! இக்கதைய யூதாஸைப் பற்றிப் பேசுகிறது. யூதாஸ் ஏசுவை காட்டிக் கொடுக்க வேண்டிய ஒரு சூழலை சாதனா இக்கதையில் உருவாக்குகிறார். கதையின் தொடக்கத்திலேயே ஏசுவின் மற்ற சீடர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பதையும் சொல்லி விடுகிறார். யூதாஸிற்கு சாராவின் மீதிருக்கும் காமம்( காதல் என்பதைவிட உடலிச்சை என்று அவ்வுணர்வைச் சொல்வதே சரியாக இருக்கும்) ஏதோவொரு வகையில் யூதாஸின் செயலுக்கு காரணமாகிறது என்று இக்கதை சொல்கிறது. இப்பள்ளியில் நிறுத்தி இருந்தால் இது சாதாரணக் கதையாக மாறி இருக்கும். சாதனா இவ்விடத்தில் கீழே உள்ள வரிகளை எழுதுகிறார். ஒரு ஓநாய் அவனிடம் இதைச் சொல்கிறது.
/நீ நினைப்பது அவ்வளவு சுலபமில்லை. குற்றவுணர்ச்சி உன்னைத் துன்புறுத்துகின்றதென்பதை நான் அறிவேன். ஆனால் அதற்காக நீ சாகலாகாது. அது உன்னதமுமில்லை. உன்னைப் பற்றி யார் அறிவார். உலகம் முடியும்வரை நீ துரோகியாகவே இருக்கப்போகின்றாயா. அந்த வார்த்தையின் கொடூரத்தினை நீ விளங்கிக் கொள்வாயா. காயங்களோடு இறப்பதென்பது சுலபம். உன் உடலானது உக்கிப் போனவுடன் காயங்கள் மறைந்து போகின்றன. ஆனால் இது அப்படியல்ல. உடல் உக்கினாலும் நீ எடுத்த பெயர் உக்காது. ஓடாதே யூதாஸ், நீ துரோகியல்ல என்பதையும் உணர்ந்து கொள். காலம் உன்னை அவ்வாறு செய்யத் தூண்டியுள்ளது. கர்த்தருக்கு யாவும் தெரியும். நீ பதற்றமடையாதே. சாரா ஒரு சொர்க்கம். அவள் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். அவளின் மென்மையான கைகள் உன் தலைமுடியினைக் கோதத் தயாராக இருக்கின்றன. வாழ்க்கையின் சகல இன்பங்களையும் அவள் உனக்குத் தருவாள். விடாய்க்கும் போது நீ அவளையே அள்ளிப் பருகலாம். அதன் ருசியானது அற்புதமானதாக இருக்கும்./
இத்தொகுப்பில் ஊசலாடிக் கொண்டே இருந்த காமமும் மரணமும் என்ற கேள்வி உச்சம் பெறுவது இந்தப் புள்ளியில் தான். இந்த இடத்திலிருந்து ஏசு கிறிஸ்து தன்னுடைய முக்கியத்துவத்தை இக்கதையில் இழக்கத் தொடங்குகிறார். துரோகம், கையறு நிலை, வஞ்சம், வன்மம் என்று பல்வேறு உணர்வுகள் வழியே பயணித்துக் கொண்டிருக்கும் இக்கதைகளின் சிக்கல்கள் அனைத்தும் இந்த பத்தியின் வழியாக ஒருமுகப்படுகின்றன. இதன்பிறகு யூதாஸ் என்ன முடிவெடுத்தான் என்பது அவ்வளவு முக்கியமானதல்ல.
மரணம் காமம் இரண்டிற்குமான சாத்தியங்கள் கொண்ட தருணங்களை உருவாக்கி அதன் வழியே பயணித்திருப்பது இத்தொகுப்பின் முதன்மையான பலம். அதோடு சாதனாவின் படைப்பாளுமையையும் நமக்கு காட்டித் தருகிறது. தன்னுடைய அலைகழிப்புகளை கதைகளாக மாற்றுவதற்கு சாதனா காலத்தையும் வெளியையும் அந்நியமாக்கிக் கொள்வதுகூட புத்திசாலித்தனமான முடிவுதான். ஆனாலும் தன்னுடைய கேள்விகளை இன்னும் நேரடியாக எதிர்கொள்வதுதான் மேலும் காத்திரமான படைப்புகளை உருவாக்குவதற்கான வழியாக அமைய முடியும் என நினைக்கிறேன். பேஸ்புக்கில் தன்னுடைய கடந்தகாலத் துயரங்களை தன்னை எழுதவும் வாசிக்கவும் விடாமல் இம்சிப்பதாக சாதனா குறிப்பிட்டிருந்தார். அவற்றிலிருந்து மீண்டு அவர் தன் படைப்புலகை விரிவுபடுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.
தொடரும்…