ஒரு நாள் ஒரு கனவு (A Bittersweet Life/Korean)

ஒரு நாள் ஒரு கனவு (A Bittersweet Life/Korean)

கட்டுரை:- அருண் பிரசாந்த்

ஒரு நாள் மரத்தின் இலைகள் அசைந்து கொண்டிருப்பதை பார்க்கும் சீடன் ஒருவன், தன் குருவிடம், ‘அவை தானாக அசைகின்றனவா அல்லது காற்றினால் அசைகின்றனவா?,’ என்று கேட்கிறான். குருவோ அந்த மரத்தின் பக்கம் திரும்பிக் கூடப் பாராமல் மெல்லிய புன்னகையுடன் ‘அசைகின்றது இலைகளோ காற்றோ இல்லை; உன் மனமும் சிந்தையும் தான்’ என்கிறார்.

மேற்கோள் மறைய படம் விரிகிறது.

வாழ்க்கையை, ஒரு முறையேனும் காதலிக்காமல் கடந்து செல்பவர்கள் யாரும் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்கள் வெகு சொற்பமே. ஆனால் உங்களில் எத்தனை பேர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவரை நேசித்துள்ளீர்கள் என்று கேட்டால் முக்கால்வாசி பேர் இக்கூட்டத்தில் இருந்து ஓடிவிடுவீர். நீங்கள் காதலிக்கும் நபர் உங்களுக்கு கிடைக்க மாட்டார் என அறிந்தும் அவரை நேசித்ததுண்டா? அவர் உங்கள் வாழ்க்கையில் இல்லை என தெரிந்தும் அக்காதலைத் தூற்றாமல் பேணிப் பாதுகாத்ததுண்டா?

சரி, கேள்விகளை விட்டுவிட்டுப் படத்திற்கு வருவோம். நம் வாழ்க்கையில் பல்வேறு மனிதர்களைச் சந்திக்கிறோம். சிலர் நம்மோடு தொடர்புடையவர்கள். பலர் சம்பந்தம்இல்லாதவர்கள். அப்பலரில் சிலரைப் பார்த்து அவர்களின் தோற்றத்தினாலோ, செய்கைகளாலோ, குணத்தினாலோ வியந்திருக்கிறோம் அல்லவா? அப்படிப்பட்ட ஒருவன்தான் கிம்-சுன்-வூ. ஒரு கேங்க்ஸ்டர். கிம் தன்னுடைய பாஸ் Kang என்ன வேலை சொன்னாலும் மறுப்புத் தெரிவிக்காமல் செய்து முடிப்பவன். ‘ஏன், எதற்கு, எப்படி’ போன்ற கேள்விகளை எல்லாம் அறியாத பிராணி. Disciplined. Well mannered. கட்டுக்கோப்பான, பெண் வாசனையே அறியாத மாடர்ன் ஏஜ் துறவி போன்றவன்.

Kang, கிம் தன்மீது வைத்துள்ள விசுவாசத்தை நன்கு அறிந்தவன். அதனாலும் பெண்கள் துறையில் கிம் வைத்துள்ள ரெக்கார்டினாலும் (zero love, zero sex) அவனிடம் ஒரு peculiarஆன வேலையை செய்யச் சொல்லி கட்டளையிடுகிறான். தான் வெளியூர் செல்வதால் தன் இளம் காதலி ‘ஹீ–ஸூ’விற்கு வேண்டியவற்றை வாங்கிக்கொடுத்து பார்த்துக் கொள்ளச் சொல்கிறான். ஆனால் முக்கியமான காரணம் இன்னொன்று. ஹீ–ஸூவிற்கு ஒரு இளம் காதலன் உள்ளதாக Kang சந்தேகிக்கிறான். அதையொட்டி அவளை உளவு பார்ப்பதும் கிம்மின் வேலை.

கிம் இவ்வாறு Kangஇன் கட்டளையின் பேரில் அவளைச் சென்று சந்திக்கிறான், Kang அவளுக்குக் கொடுத்தனுப்பிய gift உடன். பார்த்ததும் அவளது அழகில் மனம் கொஞ்சமே கொஞ்சமெனத் தடுமாறுகிறது. பிறகு சிலநாட்கள் ஹீ–ஸூ அறியாதவண்ணம் அவளைப் பின்தொடர்கிறான். அப்போது அவள் தன் நண்பனாகிய ஒருவனுடன் casual ஆக பழகுவது தெரிகிறது. ஒரு முறை கிம் அவளை music classற்கு அழைத்துச் செல்கிறான். அங்கே அவள் தனது வயலினில் மீட்டும் இசையின் romantic தன்மையிலும் அவளது அழகிலும் வயலினை இசைக்கும் நளினத்திலும் நெகிழ்ந்து போகிறான். அவனது மனம் அசைந்துவிடுகிறது.

அன்று இரவு அவளை கண்காணிக்கும் போது அவளது நண்பன் எனப்படுபவன் உண்மையில் நண்பனே அல்ல; காதலன் எனத் தெரிந்து விடுகிறது. உடனே கிம் அவனை அடித்துத் துவைக்க ஹீ–ஸூ அவனது காலில் விழுந்து அழுகிறாள். தன் bossற்கு கிம் ஃபோன் செய்ய விழைய ஹீ–ஸூவின் மீதுள்ள காதலால் அப்படி செய்யாமல் அவர்களை எச்சரித்து அனுப்பி விடுகிறான். இது எப்படியோ kangற்கு தெரிந்துவிட கிம்மை கொல்ல முயல்கிறார். அதிலிருந்து தப்பிய கிம் பிறகு என்ன செய்கிறான்? இறுதியில் என்ன ஆனது? என்ற விறுவிறுப்பான இரண்டாம் பாதியை படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

‘இதுதான் காதல், இவ்வளவு தான் வாழ்க்கை’ என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு ஒரு safe zoneற்குள் அமர்ந்திருக்கிறோம் என்பதை செவுனியில் அறைவதுபோல் இப்படம் கேஷுவலாக காட்டிச் செல்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் இந்த safe zone எனப்படுகின்ற போர்வை நம் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களில் இருந்து நம்மை மறைத்து அதை சப்பையாக மாற்றுகிறது. அதனால்தான் இலக்கியங்களும் கதைகளும் திரைப்படங்களும் நம்மால் வாழ முடியாத வாழ்க்கைகளில் சிறிது நேரமேனும் நம்மை ஜீவிக்க விடுவதால் அவற்றின் பின்னால் மோகித்துத் திரிகிறோம். இதுவும் ஒருவிதமான fantasising தான்.

படத்தில் கிம்மின் உளமாற்றத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1.Gaining of Identity
2.Exposure of Emotional core

முதலில் Gaining of Identity.

இப்படத்தின் பிரதான கதாபாத்திரமான கிம் படத்தின் பெரும்பகுதி நேரம் ஒரு passive person ஆகவே ஜீவிக்கிறான். தனக்கென ஒரு முகமற்று அலைவது தெளிவாகத் தெரிகிறது. தன் boss செய்யச் சொன்னதை செய்கிறான். தன்னைச் சீண்டியவர்களை மட்டுமே காயப்படுத்துவதும், தன் உயிரைப் பறிக்க நினைக்கும் ஆட்களை மட்டுமே கொல்வதும் அதற்கு ஆதாரங்கள். இப்படிப்பட்ட வெறுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு ஏற்படுகின்ற காதல் அவனை activeஆக சிலவற்றை செய்ய வைக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் ஒரு சுயத்தை அடைகிறான். இந்த Identity gain என்கிற வஸ்து படத்தினுடைய முடிவின் தொடக்கத்தில், கிம் கண்ணாடியில் தன்னுடைய பிரதிபலிப்பைப் பார்த்து தன் முகத்தை முதல் முறை கவனிப்பது போல் உணர்வதில் தெரிகிறது.

இரண்டாவது Exposure of Emotional core.

வாழ்க்கை முழுக்கவும், கல்மனம் படைத்தவன் போல கொலை செய்யும்போதும் உணர்ச்சிகளைக் காட்டாத wooden faceஐ உடையவன் கிம். அவன் அக உணர்வுகளுடன் தொடர்பு கொள்வது இரண்டே இடங்களில். ஒன்று ஹீ–ஸூ வயலின் வாசிக்கையில் அந்த இசை உணர்த்தும் நெகிழ்ச்சியால் புன்னகைப்பது. அப்போது அவனுக்கு ஏற்படும் காதல் என்கிற apparently insignificant வஸ்து நேர்க்கோட்டில் சென்று கொண்டிருக்கும் அவனது வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது. இறுதியில் எல்லாவற்றையும் இழந்து தனிமையில் தவிக்கும்போது அவளுக்கு ஃபோன் செய்து அவளது குரலைக் கேட்கிறான் கிம். ‘இதற்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டம்? This is too harsh’ என்று அவன் மனமுடைந்து கண்ணீர் விட நம் மனமும் ஏனோ அசைந்து விடுகிறது. இதுவே இரண்டாவது இடம்.

படம் முழுக்கவும் நிறைந்திருக்கும் ஒரு மெல்லிய சோகம் படம் முடிந்தபின்னும் நம்மை வாட்டி வதைக்கிறது. அதன் ஊடே பயணிக்கும் அற்புதமான இசையும் படம் உணர்த்தும் விஷயங்களை நமக்கு அழுந்தச் சொல்கிறது. எந்த காட்சியை எந்த இடத்தில் வைத்தால் சாதாரண பார்வையாளனும் படத்தினால் பாதிக்கப்படுவான் என்பதன் Absoluteness இப்படத்தில் நன்றாகத் தெரிகிறது.

“Life is a suffering”, “Killing you is just an order. Nothing personal” என்பது போன்ற கொடூரமான வசனங்களுக்கு இடையில் தோன்றும் அழகான காதல் Contrastஆகத் தெரிகிறது, படத்தின் தலைப்பைப் போல.

கால ஓட்டத்தில் மறைந்து, மறந்து போன உணர்வுகளின் உன்னதத்தை ‘A Bittersweet Life’ நமக்கு நினைவூட்டிச் செல்கிறது. நிறைவேறாத காதலை Hatredஆக மாறாமல் தக்கவைத்துக் கொள்வதில் உள்ள இறைமையையும் காட்டுவதால் ஒருவித காவியத் தன்மையை இப்படம் பெறுகிறது. ஒரு விறுவிறுப்பான action படம் உணர்வுப் பூர்வமாகவும் கலைச்சாயலுடனும் philosophically profound ஆகவும் வந்திருப்பதால், Kim Jee-Woon எடுத்த இப்படம் உலகம் முழுக்க உள்ள ரசனையான சினிமா ஆர்வலர்களின் கவனத்தைப் பெறுகிறது.

Coffee shop காதலர்களும், Selfie டெர்ரரிஸ்டுகளும், commitment கலப்படவாதிகளும், சுவாரஸ்யமற்ற வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் இன்னபிறரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.

ஒருநாள் இரவு சிஷ்யன் திடீரென்று அழுதுகொண்டே தூக்கத்தில் இருந்து விழிக்கிறான். குருவும் “பேய்க்கனவு ஏதேனும் கண்டாயா?” எனக்கேட்கிறார். அவன் “இல்லை” என்கிறான். “சோகமான கனவு?”, அதற்கும் “இல்லை” என்பவன் தான் ஒரு சந்தோஷமான கனவு கண்டதாகக் கூறுகிறான். “அதற்குப்போய் ஏனடா அழுகிறாய்?” என்று அவர் கேட்கிறார். “ஏனெனில் நான் கண்ட கனவு என்றைக்கும் நிறைவேறாது” என்று அவன் கூறுவதோடு திரை இருள்கிறது.