ஒரு பனிக்காலம்

ஒரு பனிக்காலம்

சிறுகதை:- மாதவன் ஸ்ரீரங்கம்

குளிரில் அவன் பற்கள் கிட்டித்தன. எப்போதோ எங்கிருந்தோ எடுத்து அணிந்துகொண்ட அடி தேய்ந்த சப்பாத்துகளின் சல்லடைக் கண்கள் வழியே ஈரம் காலை நனைத்தது. கையுறைகளின் கிழிசல் பகுதிகளின் கைகள் சொரசொரத்தன. குருதி உறைந்துவிட்டதெனும் ஐயத்தில் அடிக்கடி மூக்கைச் சொறிந்துகொண்டான். உடைந்த கண்ணாடித்துண்டு ஒன்றில் முகம் பார்த்தான். பலதினங்களாகச் சவரம் செய்யப்படாத அவனது தாடியில் பழுப்பேறியிருந்தது. ஒன்றிரண்டு நரைமுடிகள்கூட தென்பட்டன.

வெகுகாலமாகப் புழங்காது பாழடைந்த பழைய கட்டிடத்தின் இடிபாட்டுக்குள்தான் அவன் வசிக்கின்றான். துணைக்கு ஒரு எலியும். அவன் அதிகம் யாரிடமும் பேசுவதில்லை. அவ்வப்போது வந்து கீச்சிட்டு விட்டுச்செல்லும் எலியிடமும்தான். அரையுறக்கத்தில் அவன்மீது ஏறியிறங்கி விளையாடும் எலியை அவன் எதுவும் சொல்வதில்லை.

அணிந்திருந்த நைந்த கோட்டின் உட்பகுதியில் கை நுழைத்து அடிவயிற்றை ஒருமுறை தடவிக்கொடுத்தான். குளிருக்கு இதமான அவன் வயிற்றுச்சூட்டில் கைகள் கொஞ்சம் உணர்ச்சி பெற்றன. அவனுக்கு எமிலியின் ஞாபகம் வந்துபோனது. நிரம்பக்காலம் முன்பு அவன் எமிலியோடு வாழ்ந்த வசந்த நினைவுகளில் பாதி பசிமயக்கத்தில் அழிந்திருந்தன. எமிலிக்கு அவனை நிரம்பப்பிடிக்கும். அவள் பிரிந்துசென்றதுகூட இம்மாதிரி ஒரு குளிர்காலத்தில் தான்.

மிதமிஞ்சிய போதையில் அவன் விட்டெறிந்த ஒயின் போத்தல் மோதி எமிலியின் நெற்றியில் ரத்தம் கொப்பளித்தது.

“ஓ நீ ஒரு நீசன்… உன்னால் என்னுடன் வாழமுடியாது நிக். ஏன் எவராலுமே உன்னுடன் வாழமுடியாது. நீ மிக மோசமான சுயநலக்காரன். நான் உன்னைவிட்டுப் பிரிகிறேன்”

அன்று நிக் எமிலியிடம் என்ன பதில் கூறினான் என்பதெல்லாம் இப்போது நினைவிலில்லை. நிக்கின் ஒரேயொரு உறவான அவன் சகோதரன் கரோல் எத்தனையோ சொல்லிப்பார்த்தான். நிக் கேட்கவேயில்லை. எமிலி சென்றபின் கால்களின் பாதையில் பயணித்து இந்த நகரத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்.

சிறுவயதின் வாழ்வை நினைவுறுத்தும் இந்த பாழடைந்த கட்டிடம் அவனுக்கு பிடித்திருந்தது. இங்கிருந்து அவனை யாரும் விரட்டவில்லை. கடைவீதியில் ஒரு சுற்று சுற்றிவந்தால் கிடைக்கக்கூடிய சில நாணயங்கள் அவன் பசியைத் தள்ளிவைக்கப் போதுமானதாக இருக்கிறது. மதுவிற்கான அவன் தாகத்தை தணிக்கத்தான் அவன் நிரம்ப மெனக்கெடவேண்டியிருந்தது.

கனவான்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வந்தால் நிக்கின் பாடும் கொண்டாட்டம்தான். இறைச்சிகளும் மது எஞ்சிய போத்தல்களும் நிறைந்துகிடக்கும் மாளிகையின் குப்பைத்தொட்டியில். அவற்றின் சேகரம் ஒருவாரம் வரை சமாளிக்கும்படியிருக்கும். எமிலிக்கு அதன்மீதான அருவெறுப்பில்தான் அவனைப்பிரிவது குறித்த நிர்ப்பந்தம் எழுந்திருக்குமென்று பிறகு தோன்றியது அவனுக்கு.

நிக் எழுந்துகொண்டபோது தலை மிகுந்த பாரமாக இருந்தது. சுவர்மூலை விரிசலிலிருந்து தலைநீட்டிவிட்டு மறைந்தது எலி. இன்று நகர மேயரின் பிரிவுபச்சார கொண்டாட்டம் என்பதை நேற்றே தெரிந்துவைத்திருந்தான். மேயர் மாளிகை விளக்கொளியால் நிறைந்திருந்தது. வண்ணவண்ணக் கார்களில் வந்திறங்கி உள்ளே நுழைந்துகொண்டிருந்தனர் மேட்டுக்குடியினர். நிக் தனது கோட்டினை மெல்ல உதறிக்கொண்டான்.

வயிற்றின் உஷ்ணம் அதிகரித்தது. மெல்ல மாளிகையின் பின்புறத்தில் சென்று காத்திருந்தான். உடல் பருத்த பணிப்பெண் பெரிய பாலித்தீன் மூட்டையை சுமக்கமாட்டாமல் சுமந்துவந்து தொட்டியில் இட்டாள். அவள் தலை மறைந்ததும் நிக் அதைக்கிளறினான். மதுப்போத்தல்களில் நிறைய மதுவுடன் கிடைத்ததில் அவன் முகம் பிரகாசமானது. இறைச்சிகளின் சதைப்பகுதியை ஆர்வத்துடன் பற்களால் கடித்து மென்றான்.

முடிந்தமட்டும் அள்ளி கோட்டுக்குள் திணித்தபடி வசிப்பிடம் வந்துசேர்ந்தான். வானில் நட்சத்திரங்கள் பார்வைக்குத் தெரியாதபடி பனி மறைத்திருந்தது. கட்டிடத்திற்குள் நுழைந்ததும் புதிய வாசனையை கண்டுகொண்டது அவன் மூக்கு. கிழக்குப்பகுதி மூலையில் சுருண்டுகிடந்தது ஒரு உருவம். அவன் மகிழ்ச்சியை யாரோ பிடுங்கிக்கொண்டதுபோலிருந்தது. தோரணையாக அந்த உருவத்தை நெருங்கினான்.

அது நடுங்கிக்கொண்டிருந்தது.

“யாரது”? என்றான் அதிகாரமாக.

அவள் மெல்ல எழுந்து உட்கார்ந்துகொண்டாள். அவளது சிவந்தமுகம் நிறைய கரும்புள்ளிகளாக சட்டென்று பார்த்ததுமே அருவருக்கும்படியாக இருந்தது. மிகமெலிதான அவள் உடல் குளிரில் நடனமாடின. அவன் பழைய பொருட்கள் கொண்டு அமைத்திருந்த தனது படுக்கையில் அமர்ந்துகொண்டான். அவள் அவன் கையிலிருந்த இறைச்சியையே இமைக்காமல் பார்த்ததை வைத்து அவள் பசியைப் புரிந்துகொண்டான். கோட்டுக்குள் கைவிட்டு சுமாரான சதைகள் கொண்ட இறைச்சி ஒன்றினை அவள் திசையில் எறிந்தான். குறைவான மது எஞ்சிய போத்தலை உருட்டிவிட்டான்.

காத்திருந்ததுபோல அவற்றை உண்ணத்தொடங்கினாள். பிறகு கேட்டாள்.

“நீங்கதான் இந்த இடத்தோட எஜமானரா”?

நிக் இதைக்கேட்டு இடிஇடிப்பதுபோல வெடித்துச்சிரித்தான்.

“என்ன கேட்டாய் எஜமானனா ? ஹஹ்ஹ்ஹ்ஹா ஆமாம் நாலு வருசமா இங்க நா மட்டுந்தான் இருக்கேன். ஓ மறந்துட்டேன். அதோ அந்த மூலைல இருக்கே ஒரு துளை. அதில் என் எலி நண்பனும் இருக்கான்”

அவள் புன்னகைத்தபடியே உண்பதில் சிரத்தையாக இருந்தாள். நிக் தனது படுக்கையின் அடியிலிருந்து அணைத்துவைக்கப்பட்ட சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டான். அவள் அதையும் ஆர்வமுடன் பார்க்க அவளுக்கும் ஒன்றினை வீசினான். அவளும் புகை வழியவிட்டபடி விட்டத்தைப் பார்த்தாள்.

“நான் இங்கேயே தங்கிக்கலாமா”?

“இல்ல அது நிரம்ப சிரமம். எனக்கு மனுசங்கன்னா அலர்ஜி. தனியா இருக்கத்தான் புடிச்சிருக்கு எனக்கு”

“ஆனா மனுசங்களால எப்புடி தனியா இருக்கமுடியும்”?

அவன் முகம் புன்னகையிழந்து இறுகியது.

“நாம தனியாத்தான் வாழுறோம். அதுதான் நெசம். அதான் நல்லதும் கூட. ஏன்னா தனியா இருக்கும்போது மட்டுந்தான் மனுசன் நடிக்கிறதில்ல”

அவள் சுருட்டை ஒருமுறை ஆழமாக இழுத்துவிட்டுச் சொன்னாள்.

“ரொம்ப அதிசயமா பேசுறீங்க”

“இங்க அதிசயம்னு எல்லாம் எதுவுமேயில்ல. நடைமுறைக்கு வரவரை அப்படித்தோனும் அவ்வளவுதான்”

“உங்க வாழ்க்கைல நிறைய அனுபவிச்சிட்டீங்க போல. எதுமேலயுமே நம்பிக்கையில்லாம பேசுறீங்க”

நிக் அமைதியாக ஒரு மூலையைப் பார்த்தபடி உதடுகளில் புகையை வழியவிட்டான். அவள் எழுந்துகொண்டபோது வலதுகாலின் ஆடுதசையில் பாதியை புண் அரித்துப் புரையோடியிருந்தது. மிகுந்த சிரமத்துடன் சாய்வாக நகர்ந்தாள்.

“எங்க கெளம்பிட்ட”?

“நீங்கதான் தனிமை விரும்பின்னு சொல்லிட்டிங்களே”

“ஆனா நா ஒன்னும் கொடுமைக்காரன் இல்ல. இந்த பனி ராத்திரில, எங்கபோயி தங்குவ ? நாளைக்கு பகல்ல வேற எடம் பார்த்துட்டு போயிக்க”

அவள் சற்றுக்குழம்பிவிட்டு மறுபடி பழைய இடத்தில் உட்கார்ந்துகொண்டாள். அவள் புண்ணில் ஈக்கள் மொய்த்தன. நிக் விட்டெறிந்த‌ ரொட்டியை கவ்விக்கொண்டு துளைக்குள் ஒளிந்துகொண்டது எலி.

நிக் கேட்டான்,

“சரி சொல்லு என்ன உன் கதை. நீ எப்புடி இந்தமாதிரி ஆன ? சொந்தக்காரங்க யாருமில்லயா ஒனக்கு”?

அவள் முகத்தில் விசித்திரமான பாவனை தோன்றியது.

“அதெல்லாம் என்னத்துக்கு ? அநாதையா சுத்துற எல்லாத்துக்குந்தான் ஏதாவது கதையிருக்கும். இப்புடி ஆயிட்டோம் அவளோதான்”

அவன் ஏளனமான குரலில் சொன்னான்.

“நீ கூட ரொம்ப விரக்தியாத்தான் பேசுற”

அவள் இந்தப்பேச்சை விரும்பவில்லை என்பதுபோல முகத்தை வைத்துக்கொண்டாள். பிறகு சொன்னாள்,

“இந்த இடம் ரொம்ப நல்லாயிருக்கு இல்லையா”?

“ஆமா… நா ரொம்பநாள் ரயில்வே ஸ்டேஷன்லதான் தங்கிருந்தேன். அங்க போலீஸ்காரங்க தொல்லை அதிகம். அதோட எப்பவும் மனுசங்க நடமாடிட்டே இருப்பாங்க. இங்க வந்தப்பறம்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு”

“நம்மளோட சொந்தமான வீட்டுல இருக்கிறது மாதிரி. இல்லையா”?

“சரியா சொன்ன” என்றபடி மற்றொரு துண்டு சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டான்.

“ஆனா இத்தனை அழகான வீடு எப்புடி இப்புடி பாழாயிருக்கும்”?

“எனக்கும் தெரியல. உனக்கும் எனக்கும் இருக்கிறமாதிரி இந்த வீட்டுக்கும் ஏதாவது கதை இருக்கலாம். வீட்டுக்கு என்ன வாயா இருக்கு சொல்லிப்புலம்ப”

இரவும் பனியின் அடர்த்தியும் நகர்ந்தபடியே இருந்தது. நிக் எழுந்துசென்று கனப்பு அடுப்பிற்குள் சில அட்டைகளைக் குவித்து எரியூட்டினான். இருவரும் சற்று நகர்ந்து அனலில் கைநனைத்துக்கொண்டார்கள்.

“ஏன் அட்டைகளை எரிக்கறீங்க ? மரக்கட்டைங்கன்னா நல்லா எரியுமே”?

“எனக்கு மரங்கள்னா ரொம்பப்பிரியம். என் அப்பா ஒரு தச்சர். எங்க வீடுமுழுக்க அவர் இழைத்த மரச்சுருள்கள் அலைஞ்சபடியே இருக்கும். சின்னப்பையன்ல எனக்கும் அதில ரொம்ப ஆர்வம் இருந்திச்சு. நிறைய பொம்மைகள் எல்லாம் மரத்தில செய்வேன். ஆனா பெரியவனாக ஆக மரங்களை அறுக்கிறது பெரிய பாவமா பட்டது எனக்கு. அந்தத்தொழில விட்டுட்டேன்”

அவள் அவனை விசித்திரமாக பார்த்தாள்.

“வித்தியாசமா இருக்கு நீங்க சொல்றது”

அவன் அனலில் கையசைப்பதில் தீவிரமாக இருந்தான். சிலவிநாடிகள் இரவின் ஓசைமட்டும் கசிந்தது அங்கே.

அவள் மவுனத்தை உடைத்தாள்.

“இந்த சுவத்துல இருக்கிற கிறுக்கல்களை வச்சுப்பார்த்தா இந்த வீட்டில நிறைய குழந்தைங்க இருந்திருக்கனும்”

“இருக்கலாம்”

எப்போது உறங்கினார்கள் என்று இருவருக்குமே தெரியவில்லை. காலையில் நிக்தான் முதலில் விழித்துக்கொண்டான். அவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. அன்றைய தனது நாள்பற்றி அவன் சிந்திக்கத்தொடங்கினான். இதற்குமுன்பு அவன் இப்படியெல்லாம் யோசித்தவனில்லை. அவள் வருகை தன்னில் ஒரு சிறிய சலனத்தை தோற்றுவித்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டான்.

மெல்ல அவளை எழுப்பினான். அவள் முனகியபடி திரும்பிக்கொண்டாள். யோசனையுடன் நகர்ந்தவனிடம் சொன்னாள்.

“எனக்கு ரொம்பப் பசிக்குது. சாப்பிட ஏதாவது கெடைக்குமா ப்ளீஸ்”?

சூரியனின் மங்கலான வெளிச்சம் மேற்கூரையின் துளைகள்வழியே விழுந்தபடியிருந்தது. நிக் வெளியேறி கடைத்தெருவருகே வந்தான். பெரிய டிஜிட்டல் பேனர்களில் அதிபர் சிரித்துக்கொண்டிருந்தார். உணவுவிடுதிகள் எதுவும் திறந்திருக்கவில்லை. திறந்திருந்தாலும் இவனிடமிருந்த சொற்ப நாணயங்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. அவன் விடுதியின் பின்புறம் சென்றான். ஒரு ஓரத்தில் குப்பைகள் எரிந்துகொண்டிருந்தன. விடுதிப் பணியாள் ஒருவன் நீண்ட தடிவைத்து நெருப்பை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தான். இவனைக்கண்டதும் அவன் முகம் சுருங்கியது.

“ஏய் இங்க எல்லாம் வரக்கூடாதுன்னு உனக்குத்தெரியாதா”?

“இல்ல சாப்பிட பழைய பிரட்டுகள் பழங்கள் ஏதாச்சும் கிடைக்குமான்னு”….

“அதெல்லாம் ஒங்கிட்ட குடுத்துட்டா நாங்க என்ன செய்யிறதாம் ? நீ வேற எங்கயாச்சும் போயி தேடு போ” என்றபடி மீண்டும் நெருப்பில் கவனம் செலுத்தினான்.

அங்கிருந்து நகர்ந்து செல்கையில் பாலத்தினடியில்  உறைந்துகிடந்த நதியில் சிறுவர்கள் சிலர் ஸ்கேட்டிங் பயின்று கொண்டிருந்தார்கள். வெளியூர் பிரயாணிகளிடம் கொத்துக்கொத்தாக கேரட்டுகள் விற்றுக்கொண்டிருந்தனர் சில இளைஞர்கள். தலையில் ஹெல்மெட்டுடன் சைக்கிளோட்டிய சிறுவனின் மோதலிலிருந்து தப்பித்து, குடியிருப்பு பகுதிக்குச் சென்றான்.

ஒரு வீட்டின் வாசலில் ஜன்னலை சுத்தியலால் தட்டிக்கொண்டிருந்தார் ஒரு கிழவர். இவன் அருகில் சென்று அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். திரும்பி இவனைப்பார்த்ததில் சுத்தியல் தவறி அவர் கைகளில் பட்டது. அவர் கையை உதறிக்கொண்டார்.

“நா வேனும்னா உதவட்டுமா பெரியவரே”?

“உனக்கு இந்த வேலை தெரியுமா”?

அவன் பதில்கூறாது அவரிடம் சுத்தியலைப்பிடுங்கி பணிபுரியத்துவங்கினான். பணி அதிகமில்லை. ஜன்னலின் கதவுகளை நிரந்தரமாக பலகை வைத்து அடைக்கவேண்டும் அவ்வளவுதான். பணி முடிந்ததும் பார்வையிட்டு திருப்தியடைந்த கிழவர் அவனை வீட்டின் பின்புறம் அழைத்துச்சென்றார். அங்கே பழைய குதிரை வண்டி கிடப்பிலிருந்தது.

“இதை உன்னால சரி செஞ்சு தரமுடியுமா”?

“முடியுங்க. ஆனா எதுக்கு ? இப்பத்தான் இதை ரோட்டில ஓட்ட சர்க்காரில் அனுமதியில்லையே”?

“அதைப்பத்தி உனக்கென்ன ? உன்னால முடியாட்டி சொல்லு”

“இல்லங்க. நா செஞ்சிடுவேன். ஆனா நாளைக்கு வரேன். இப்ப வீட்டுக்குப்போவனும்”

“சரி நாளை காலை வா” என்றபடி உள்ளே சென்று சில நாணயங்களை எடுத்துவந்து கொடுத்தார். அவன் மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டு திரும்பும் வழியில் விடுதி திறந்திருந்தது. ரொட்டிகளும் கிரீம் போத்தலும் வாங்கிக்கொண்டு வசிப்பிடம் நோக்கி நடந்தபோது கொஞ்சம்போல வெயில் இறங்கத்தொடங்கியிருந்தது.