இணைய இதழ்இணைய இதழ் 86சிறுகதைகள்

படிச்ச பொண்ணும் ஃபாரீன் மாப்பிள்ளையும் – இத்ரீஸ் யாக்கூப் 

சிறுகதை | வாசகசாலை

“நீ படிச்ச பொண்ணதான் கட்டிக்கணும்!” இப்படி தனது தந்தை வற்புறுத்துவது ஜமாலுக்கொன்றும் புதிதில்லை. இவன் கல்யாணப்பேச்சு வரும்போதெல்லாம், இந்த பல்லவியை எப்படியும் அவர் பாடிவிடுவார். ஆனால், அவனுக்குதான் அதில் அப்படியொன்றும் பெரிதாக நாட்டங்கள் இருந்ததில்லை. அவன் பட்டப்படிப்பெல்லாம் முடித்தவன் என்றாலும், வரும் மனைவி ப்ளஸ் டூ வரை படித்திருந்தால் போதும் என நினைத்தான். ஆனால், கண்டிப்பாக மார்க்க கல்வி பயின்றிருக்க வேண்டும், அதாவது குரான் ஓதி முடித்திருக்க வேண்டும், அதிலும் ஐவேளை தொழுகைகளைப் பேணுபவள் என்றால் அவனுக்கு இன்னும் திருப்தி!

 அவன் எண்ணவோட்டங்களெல்லாம் சராசரி எல்லா இஸ்லாமிய ஆண்களுக்கே உரிய எதிர்பார்ப்புகளே என்றாலும், படித்த பெண்ணை கட்டிக்கொண்டால் தனக்கு அடங்கிச் செல்ல மாட்டாள், திமிர் பிடித்தவளாகவும் இருக்கக் கூடும் என்ற பொதுப்புத்தியும் அதனோடுச் சேர்ந்து அவனைக் குழம்ப வைத்தது. 

 பொதுவாக பெற்றோர்கள், சகோதரிகள்தான் இதையெல்லாம் பற்றி அதிகம் யோசிப்பார்கள். அம்மாக்காரி கூட தனது ஒரகத்தியைப் போல், தனது தோழியைப் போல், தனது மகனுக்கும் ஒரு படித்த பெண்ணைத்தான் கட்டி வைக்க வேண்டும், அவர்களைப் போல தானும் மற்றவர்கள் முன் பெருமைகள் பேசி பூரிப்படைய வேண்டும் என கனவுகள் கண்டாள். அவனுடைய தந்தைதான் உண்மையாகவே தனது வீட்டிற்கு படித்த மருமகள்தான் வர வேண்டும் என உளமார ஆசை கொண்டது எல்லாம். 

 ஜமாலுக்கு இதிலெல்லாம் விருப்பங்கள் இல்லை என்றாலும், அவனுக்கும் ஒரு நெருக்கடி இருந்தது. புதிதாகச் சேர்ந்திருக்கும் நிறுவனத்தில் பணி புரியும் அனைவரும் படித்தவர்களையே திருமணம் செய்துகொண்டுள்ளனர். பொதுவாக விழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் அங்கே பஞ்சமிருக்காது. மாதத்தில் ஒன்றாவது வந்துவிடும். அதில் குடும்பங்களும் கலந்து கொள்ளும். அதற்கு படிக்காத பெண்ணைக் கூ ட்டிக் கொண்டுச் சென்றால் அனைவரும் இருக்கும் சபைகளில் சங்கடங்கள் ஏற்படலாம். 

 அதுவும் அங்கு பெரும்பாலானோர் வட இந்தியர்கள் வேறு. அவர்களது வீடுகளுக்குச் சென்றால் கூட ஆட்டமும் பாட்டமுமாய் அந்த இடமே களைகட்டும். ஆட வேண்டாம், பாட வேண்டாம், அதை இவனும் கூட விரும்ப மாட்டான். பேச வேண்டுமே! செல்லும் இடங்களில் நலம் விசாரித்தால் கூட ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ பதில் சொல்ல வேண்டுமே!

 இந்தியாவில் போல அங்கே வீட்டுக்குள்ளேயே போட்டு அடைத்து வைக்க முடியாது. ‘கெட் – டுகெதர்’களில் தனியாகச் சென்றாலும் சக ஊழியர்கள் கேலி செய்வார்கள். சமூக அந்தஸ்து என்று ஒன்று இருக்கிறதே! சரி, எல்லாவற்றிற்கும் படித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வோம் என ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தான். 

 இவனோடு பணிபுரிபவர்களை ஒப்பிட்டால், இது கொஞ்சம் தாமத முடிவு அல்லது திருமணம்தான். பார்ப்பவரெல்லாம் ரெண்டு வருடங்களாவே இவனைப்போட்டு நச்சரித்துக் கொண்டே வேறு இருக்கிறார்கள். இதில் அஸ்வின்னு, “என்ன மச்சான், உனக்கு பிரச்சனை ஏதும் இருக்கா? இருந்தா சொல்லு! நான் வேணா தெரிஞ்ச டாக்டர்ஸ் யாரையும் ரெக்கமென்ட் பண்ணவா?” என ஓட்ட ஆரம்பித்திருந்தான். எல்லாம் புது மாப்பிள்ளை என்கிற மிதப்பு என்று அவனை சலித்துக் கொண்டாலும், தனக்கு இவ்வளவு தாமதமும் ஆகியிருக்க வேண்டாம் என வருத்தங்கள் கொண்டான். 

 கமலேஷ் என்று இன்னொருத்தன், “துமாரே பாஸ் சப் டீக் ஹை? ஃபிர் க்யூ(ன்) இத்துனா டிலே ஹோ ரஹி ஹை பாய்? ஜல்தி ஸே ஷாதி கரோ! ஹமாரே ஜேய்ஸா ஆஷ் கரோ!” 

 எத்தனை பாஷையில பதில் சொல்வது? இவன்களைச் சமாளிக்கவாது நாமே கல்யாணத்தைப் பற்றி பேச்சு எடுக்க வேண்டுமென்று நினைத்தானே தவிர, வாய் திறக்கவில்லை! 

 சிறுவனாக இருந்தபோதெல்லாம், ‘எம் புள்ளைக்கு இருபது வயசு வந்த உடனே கல்யாணம் பண்ணி வச்சுருவேன்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு பெருமை பீத்திக்கொண்ட இவனுடைய அம்மா, இவனுக்குப் பிறகு பிறந்த பெண் மக்கள் வளர வளர, அவர்களை கரையேற்றி விட்டுவிட்டுதான், மூத்தவனுக்கு கல்யாணம் பண்ண வேண்டும் என பின்னர் விவரமாக யோசிக்க ஆரம்பித்தாள். அப்படியே இவனுக்கும் ஆகிவிட்டது இருபத்தி ஒன்பது வயசு! 

 ஊரில் கூட இவனையொத்தவர்கள் எல்லாம் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பத் தொடங்கிவிட்டதையடுத்து, தயங்கித் தயங்கி நண்பர்கள் மூலமாக அவ்வப்போது தூதுகளை விட்டுப்பார்க்க ஆரம்பித்தான். ஆனால், அவனது தாயின் ஏக சித்தத்தின் படி, தங்கைகளுக்கு நல்லது நடந்த பின்னரே, இதோ இவனுக்கு இப்போது இந்த பெண் தேடும் படலம் ஆரம்பமாகியுள்ளது. 

 இங்கே இன்னொரு சோதனை! காலா காலத்தில் பெண்பிள்ளைகளை படிக்க வைத்திருந்தால்தானே, படித்த பெண்ணும் கிடைப்பாள். அலசிப் பார்த்ததில் இரண்டே இரண்டு பெண்கள். அவர்களுக்கும் கல்யாணமாகிவிட்டது! இனி டவுன் பக்கம்தான் பார்க்க வேண்டும் என குடும்பத்திற்கு பழக்கம் இல்லையென்றாலும், புரோக்கரையெல்லாம் அணுகத் தொடங்கினார்கள். 

 ஒரு வாரத்தில் திருச்சியில் ஒரு பெண் இருப்பதாக உறவினர் வழியிலேயே ஒரு சம்பந்தம் அமைவது போல இருந்தது. தூரமாயிற்றே என்று ஜமாலுடைய தாய் யோசித்தாள். அவனுடைய அத்தா, ‘கல்யாணம் பண்ணி இங்கேயா வச்சு குடித்தனம் பண்ணப் போறான்? துபாய்க்குதானே கூட்டிப் போக போறான். முதல்ல பெண்ணைப் பார்ப்போம் நமக்கு பிடித்திருந்தால், அவனுக்கு ஃபோட்டோ அனுப்பி விருப்பம் கேட்போம்’ என்றார். சரி என்பதுபோல் அவளும் தலையாட்டினாள். 

 பெண்ணை எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஜமாலுடைய ஃபோட்டோவை பார்த்துவிட்டு அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். ஆனால், அங்கேதான் இன்னொரு பிரச்சினை. அந்தப் பெண் அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணிபுரிந்துக் கொண்டிருந்தாள். அது இவர்களுக்கும் பெருமையாக இருந்தாலும், முதல் கண்டிஷன் திருமணத்திற்கு பிறகும் பணியைத் தொடர்வாள். பணிமாற்றம் கிடைக்கும் வரை அவள் திருச்சிலேயேதான் இருப்பாள். வெளிநாடு எல்லாம் அனுப்ப முடியாது. மிகவும் சிரமப்பட்டு இந்த வேலையை வாங்கியுள்ளோம். அதனால் நிறுத்தவும் சம்மதிக்க மாட்டோம் என்றனர். 

 எல்லோருக்கும் கலவையான மனநிலை, தேனுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் என்ன செய்ய முடியும்? முக்கியமா ஜமாலுக்கு தனது படித்த மனைவியுடன் அலுவலக மற்றும் நண்பர்கள் சார்ந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மனைவியை ஊரில் வைக்க அவனுக்கு எண்ணமே இல்லை! அதனால் அந்த சம்பந்தம் அத்தோடு நின்றுப்போனது.

 புரோக்கர் மூலம் திண்டுக்கல்லிருந்து இரண்டாவது சம்பந்தம் வந்தது. ‘இவனுக்கு பெண் பார்க்க விட்டா டில்லி வரையும் போக வேண்டியிருக்கும் போலயே’ என்று ஜமாலுடைய தாய் மரியம் சலித்துக் கொண்டாள். பேசாமல் சுமாராகப் படித்த பெண்ணாக இருந்தாலும் சொந்தத்திலேயே ஏதாவது பேசி வைத்துவிடலாமா என்று யோசிக்கவும் ஆரம்பித்தாள். அச்சமயம் அவளுடைய தோழியும் ஓரகத்தியும் ஏன் அவள் நினைவிலிருந்து நீங்கிப் போனார்கள் என்று தெரியவில்லை. 

 “இப்படி ஒரு சம்பந்தத்துக்கே இப்படி சலிச்சிக்கிட்டா எப்படி? வா மரியம், ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்!” 

“நல்ல புள்ள, நல்ல அத்தா போங்க! ஏன் இப்படி படிச்ச பொண்ணு படிச்ச பொண்ணுனு அலையிறியளோ! ஊரு உலகத்துல இல்லாத புள்ளையா அங்கிட்டு இருக்கப்போவது!” அவளால் அவ்வளவு தூரப்பயணத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை. 

“எல்லாம் உன்ன போல உள்ள ஆளுங்களாலத்தான்! வயசுக்கு வந்துட்டா பள்ளிக்கூடம் அனுப்பாம வூட்டுலேயே பூட்டி வச்சிக்கிறது, அப்புறம் பெருமைக்கு மவனுக்கும் மட்டும் படிச்ச பொண்ணா வேணும்னு பேராசைப் படுறது!” என்று சொல்லிய கணவனை போலியாகக் கோபித்துக்கொண்டு, “வயசுக்கு வந்த குமருகளை வெளில அனுப்பிட்டு, அப்புறம் ஊரு ஏச்சுப்பேச்சுக்கு யாரு பதில் சொல்லி மாளுறதாம்! இப்ப அந்த ஆசயெல்லாம் இல்லைங்க, பொண்ணு கெடைக்கலைன்னா அவன் என்ன சம்மதிக்காமலா இருக்கப் போறான்?”. ஆனால், அவர் திண்டுக்கல்லுக்குச் செல்ல உறுதியாகவே இருந்தார். 

“இத மட்டும் போய் பார்த்துட்டு வருவோம்.. வா மரியம்!” என்று பக்கவாட்டில் அவளது தோள்களைப் பற்றி அவர் அணைக்கவும், வெட்கப்பட்டுக்கொண்டு அவளால் மறுப்பேதும் சொல்ல முடியவில்லை. 

 போய் பார்க்க, பெண் மூக்கும் முழியுமா நன்றாகத்தான் இருந்தாள். பி டெக் படித்திருக்கிறாளாம். பெண்ணுடைய தந்தை பேராசிரியராக இருந்ததினால், அவர் பேசியதில் இவர்களுக்குப் பாதி புரியவில்லை. அவர்களின் நாகரீகப்பேச்சும், தோற்றமும், தோரணைகளும் இவர்களை மலைக்க மலைக்கப் பார்க்க வைத்தது. பையன் எம் சி ஏ படித்துவிட்டு, துபாயில் நல்ல வருமானத்தில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே இவர்களும் அங்கே அழைப்பட்டிருந்தார்கள். கூடவே ஒரே பையன், வீடு, சொத்துப்பத்து என்று இவர்களுக்கிருக்கும் எல்லாவற்றையும் அக்குவேறு ஆணிவேறாக விசாரித்தது, இவர்களுக்கு என்னவோ போலிருந்தது. 

 பெண் பார்க்க நல்ல அம்சமாக இருந்ததால், தங்களது மகனுக்கும் நிச்சயம் பிடித்துவிடும் என்றாலும், கொஞ்சம் யோசித்து முடிவு செய்வது நல்லது எனப்பட்டது. இவ்வளவு விபரமாக இருப்பவர்கள் தன்னுடைய மகனை அப்படியே கொண்டு சென்றுவிட்டால் என்னாவது என்று மரியம் மிகவும் கவலை கொண்டாள். 

 ஆனால், அவர்கள் தரப்பிலிருந்தும் பிறகு சரியான தகவல் ஏதும் சொல்லவில்லை. சரி, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிட்டது என்று இனி வெளியூரில் எல்லாம் வேண்டாம், நமது தகுதிக்கு, ஊர் வழக்கத்திற்கு ஏற்றாற்போல பக்கத்திலேயே தேடுவோம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

 நெருங்கிய சொந்தத்திற்கு தெரிந்த குடும்பமொன்றில் ஒரு படித்த பெண் இருப்பது தெரிய வந்தது. ஆனால், அதுவும் மதுரையில்! பெண் அங்கில்லை, சென்னையில் ஐடி கம்பெனியொன்றில் இப்போதுதான் பணியில் சேர்ந்திருக்கிறாள் என்று சொன்னார்கள். மதுரையே தூரம்தான் எனும்போது மெட்றாஸா நான் வரலைன்னு மரியம் அழாத குறையாய் சொன்னாள். அப்போது பொங்கலும் நெருங்கிக் கொண்டிருந்ததால், விடுறைக்கு நிச்சயம் மதுரைக்கு வருவாள், உங்களுக்கு பிரியம் என்றால் போய் பாருங்கள் என்றனர். பொங்கலுக்குச் சரியாக ஒரு மாதமிருந்தது. சரி, இடையில் வேறு ஏதாவது பெண் அமைந்தால் பார்த்துக்கொள்ளலாம் என அரை மனதோடு மரியம் சரியென்றாள்.

 ஏதாவது தகவல் வருமா என்று துபாயில் காய்ந்துக் கிடந்தவனுக்கு, உருப்படியாக எந்த செய்தியும் அவன் காதை குளிர்விக்கவில்லை. எப்போதுதான் எனக்கு என்கேஜ்மெ ட் ஆகிவிட்டது என்று எல்லோரும் முன்பு சத்தமாக கூறலாம் என அந்த நாளுக்காக ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவித்தான். 

 ஃபோன் செய்யும் நேரங்களில் அவனுடைய அவஸ்தையும் புரிந்ததால், மரியம் மதுரை சம்பந்தத்தை தயங்கித் தயங்கி சொன்னாள். “அவள் என்ன படித்திருக்கிறாள்?” என்றதும், “எம்எஸ். ஐடி!” என்று அவனுடைய தந்தை பதில் சொன்னார். 

 ஏதோ இவன்தான் அவளுடைய புத்தகங்களையெல்லாம் சுமந்து திரிந்தவன் போல, அந்த படிப்பு அவனுக்கு கொஞ்சம் கனமாகத் தெரிந்தது. பெண் வேலை பார்க்கிறாள் என்ற தகவல் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

 “என்னது வேலைக்கு போவுதா?” சென்னையில் ஐடி என்றதும் வேண்டாம் என சொல்ல வாயெடுத்தான். ஆனால், இந்த வாய்ப்பை நழுவ விடவும் மனமில்லை. ஃபோட்டோ கூட பார்க்கவில்லை. ஆனாலும் யாரா இருந்தாலும், எப்படி இருந்தாலும், யாரையாவது இப்போது கல்யாணம் செய்துகொண்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு கிட்டத்தட்ட அவனது மனநிலை தள்ளப்பட்டிருந்தது.

 சில நொடிகள் எதுவும் பேசாமல் மௌனமானான். 

“ஏம்ப்பா உனக்கு பிடிக்கலையா? இஷ்டம் இல்லைன்னா சொல்லு, வேற சம்பந்தம் பாத்துக்கலாம்! நம்ம கதீஜா மக தங்கப்பொண்ணு கூட ப்ளஸ் டூ வர படிச்சிருக்கா! அது போதாதா? நல்லா படிச்சுக்கிட்டு இருந்த புள்ளதான், அங்க வந்தா எல்லாம் வந்துரும்!” என்று சொன்னபோது, முன்னாடியிருந்த மனநிலையில் இருந்திருந்தால் இவனுக்கு அதெல்லாம் ஓகே; ஆனால், மரியம் சொன்னது ஜமாலுக்கு இப்போது அவ்வளவு சரியாகப்படவில்லை; அதேநேரம் வேண்டாம் என்றும் சொல்லவில்லை. 

 தங்கப்பொண்ணை இவனுக்குத் தெரியும் என்றாலும், ஒரு வேளை மதுரை பொண்ணு அவளை விட அழகாக இருந்தால் அவளையேக் கட்டிக்கொள்ளலாம் என புது தைரியத்தை வரவழைத்துக் கொண்டான். அப்புறம் தங்கப்பொண்ணும் சுமாராகத்தான் இருப்பாள். 

 இடையில் வேறு எந்த சம்பந்தமும் வரவில்லை, மதுரைக்குத்தான் போக வேண்டியிருந்தது. இதுதான் வெளியூருக்கு அலையுற கடைசி ட்ரிப் என்று வழக்கமான சலிப்போடும், கண்டிப்புடனோடும் மரியம் பஸ் ஏறினாள். பெண் மிகவும் குடும்பப்பாங்காக, இவர்களைக் கண்டதும் ஸலாமெல்லாம் சொல்லி வரவேற்றாள். 

 அவளுடைய பேச்சும் சிரிப்பும் பண்பும் படிப்பை விட உயர்வானதாக மிளிர்ந்தன. அதுவும் அவள் மரியத்தைப் பார்த்து அவ்வப்போது சிரித்து சிரித்துப் பேசியது, அவளுக்கும் கண்களுக்கு நிரப்பமாக இருந்தது. 

 வீட்டாள்களும் நல்ல குணநலன்களோடு காணப்பட்டார்கள். முக்கியமாக வெளிநாட்டுக்கு அனுப்புவதைப் பற்றி எந்த தயக்கமும் காட்டவில்லை. சொல்லப்போனால் கல்யாணம் முடிந்த கையோடு கூட்டிச் சென்றாலும் சரி என்றார்கள். வசதி வாய்ப்புகளுக்கும் குறைவில்லாமல் தெரிந்தது. மரியம் விட்டால் இப்போதே என் மருமகளாக்கிக் கொள்கிறேன் என்ற மனநிலையில் அங்கேயே றெக்கை கட்டிக்கொண்டிருந்தாள். மொத்தத்தில் அந்த சம்பந்தம் இனிதே கைகூடி வந்தது. எல்லோரும் மகிழ்ச்சி பொங்க உண்டு கழித்து வீடு வந்து சேர்ந்தார்கள்.

 பெண் தரப்பிலிருந்து ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது, நிச்சயதார்த்தத்திற்கு முன் இருவரும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று. ஜமால் குடும்பத்திற்கு அதெல்லாம் வழக்கமில்லை என்றாலும், இதை வைத்து நின்றுவிட்டால், மறுபடியும் அலைய முடியாதென, மரியமே சரி என்று சொன்னாள். 

 ஸ்கைப் காலில் இருவரும் ஒருவரையொருவர் மகிழ்ச்சி பொங்க பார்த்துக் கொண்டனர். ஜமால் வழமைக்கு மீறிய நாகரீகத்தை கடைபிடித்தான். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினான். அதில் அவளும் வீழ்ந்து போனாள். அவளுடைய அந்த வெட்கமும், நளினமும், குழி விழும் கன்னங்களும், முக்கியமாக அவளது குரலும் அவனுக்குப் பிடித்துப் போயிற்று. அவள் கொஞ்சம் தயங்கிக் கொண்டே, ‘கொஞ்சம் எழுந்து நிற்க முடியுமா?’ என்றாள். குழம்பியவனாய் எழுந்து நின்றான். அவளுக்கு உயரமான ஆளைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஜமால் நல்ல உயரம் என்பதால் அதிலும் அவள் திருப்தி கொண்டாள். 

 அவள் இவன் கண்ணுக்கு ஒரு குழந்தையைப் போலத் தெரிந்தாள். ‘இவ்வளவு வெகுளியாக இருக்கிறாளே, இவள் எப்படி ஐடி கம்பெனியில் அதுவும் சென்னையில் தனியாக தங்கிக்கொண்டு வேலை செய்கிறாள்’ என்ற சிந்தனைக்குள் நுழையத் தொடங்கினான். அவ்வப்போது அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட ஐடி கம்பெனிகள் பற்றிய குற்றமும் பின்னணியும் போன்ற செய்திகளெல்லாம் தொகுப்பு தொகுப்பாய் அவன் கண்முன் விரிந்தன. மீண்டும் குழப்பமான மனநிலைக்கு ஆளானான். சொல்லப்போனால் தான் கட்டிக்கொள்ளவிருக்கும் பெண் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறாள் என்பதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவே அவனுக்குத் தயக்கமாக இருந்தது. 

 அவளை சந்தேகிக்க ஏதுமில்லை. ஆனால், அவள் பாதுகாப்பாக வேலை செய்கிறாளா என்ற கவலையும் பதற்றமும் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. தினமும் இரவு அவளிடம் ஆபிசில் நடந்த அத்தனையும் கேட்டு அறிந்து கொண்டால்தான் அவனுக்கு தூக்கமே வந்தது. அதிலும் இடையிடையே சந்தேகங்களும் வரும், அதைக் கேட்கப் போய் எங்கே கல்யாணம் நின்றுவிடுமோ என்ற பயமும் ஒரு பக்கமிருந்து. கூடவே அவளை நேசிக்கவும் ஆரம்பித்திருந்தான்.

 ஒரு நாள் எதேச்சேயாக, அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘வர வர என் டீம் லீடரின் போக்கு சரியாகத் தெரியலை’ என்று வாய் தவறி சொல்லிவிட்டாள் என்பதை விட அதை யாரிடமாவது சொல்லி ஆறுதலோ, ஆலோசனையோ பெற வேண்டித் தவித்துக்கொண்டிருந்தாள். கேட்டவன் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானான். இனி போக வேண்டாம் நின்று விடு என்றான். எப்படியாவது அவள் வேலைக்கு போவதை நிறுத்திவிட வேண்டும் என்று ஆழ் மனதில் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தவனுக்கு அந்த வாய்ப்பு பழம் நழுவி பாலில் விழுந்தது போலிருந்தது. 

 அவளும் இவனது பேச்சுக்கு மதிப்புக் கொடுத்தாள். ஆனால், வேறொரு நிறுவனத்திற்கு மாறப்போவதாக அவள் சொன்னது அவனை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வேண்டாம் என ஐடி நிறுவனம் பற்றிக் கேள்விப்பட்ட அத்தனை விஷயங்களையும், வதந்திகளையும் கூறி அவளை பயமுறுத்தினான். ஆனால், தான் வேலைக்கு போயே ஆக வேண்டும் என்றாள். இங்கு வந்ததும் நானே உனக்கு ஏற்பாடு செய்கிறேன். அதுவரை நீ எங்கும் போக வேண்டாம் என்றான். சம்மதித்தாள். 

 கல்யாணம் நெருங்க, இவனும் ஊருக்கு வந்து சேர்ந்தான். ஒருவரையொருவர் நேரடியாகப் பார்த்துக் கொண்டனர், கற்பனைகளில் மிதந்தனர். எல்லா இடங்களிலும் மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது. பத்திரிக்கைள் கொடுக்க ஆரம்பித்தனர். மரியம், ஜமாலை தனது தோழி வீட்டிற்குக் கூட்டிச் சென்றாள். வரப்போகும் மருமகளின் அருமை பெருமைகளை சபையில் சொல்லி, பேசி, சிரித்து மகிழ்ந்தாள். அப்போதுதான் அந்த பெரியவர் அங்கே நுழைந்தார்.

“வாங்கண்ணே! உங்களையும் பாத்துதான் சொல்லிட்டுப் போவக் காத்திருந்தோம்!” என்று மரியம் அவரைப் பார்த்துச் சொன்னாள். அவர் அவளுடைய தோழியின் அண்ணன் மட்டுமில்லாமல் தோழியின் சம்பந்தியும் கூட!

“சொல்லும்மா, என்ன விசேசம் ஜமாலுக்கு கல்யாணமா? கூப்பாட்டுக்கு வந்தியளா?” 

“ஆமாங்கண்ணே, வர்ற பிப்ரவரி பதினால்ல கல்யாணம்! ரெண்டு மாசத்துல சட்டு சட்டுன்னு எல்லாம் அமைஞ்சி போச்சுண்ணே!” 

“சந்தோசம்! பொண்ணு எங்க?” விபரங்கள் அனைத்தும் சொன்னார்கள். 

“ஓஹ் படிச்ச பொண்ணா?” ஜமால் சிரித்துக் கொண்டே, “ஆமாம் மாமா” என்றான். 

“எப்ப முடிச்சது? வேலைக்கு எதுவும் போவுதாடா மாப்ள?” 

“போச்சி மாமா, நான் வேணான்னு சொன்னதும், இப்ப நின்றுச்சி!” 

“அதானே, படிச்ச மாப்பிள்ளைக்கு படிச்ச பொண்ணு மட்டும் வேணும்! வேலைக்கு மட்டும் அனுப்ப மாட்டிய! இந்தா.. படிச்சிப்புட்டு இந்த ஊட்டுல எம்மவளும் சும்மாத்தானே கெடக்குது! எல்லாம் பெருமைக்குத்தான் போ!” என்று சலித்துக்கொண்டு தனது துண்டை ஆவேசமாக உதறினார். 

“நீங்க மட்டும் எதுக்கு படிக்க வச்சீங்க?” என்றதற்கு அவரிடம் பதிலில்லை.

********

idris.ghani@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button