இணைய இதழ்இணைய இதழ் 78தொடர்கள்

பல’சரக்கு’க் கடை – பகுதி 25 – பாலகணேஷ்

தொடர் | வாசகசாலை

‘வீர’பாண்டியன் நான்!

ன் அண்ணனின் பணியிடங்கள் அடிக்கடி மாறும். எனவே ஒவ்வொரு க்ளாசையும் ஒவ்வொரு ஊரில் படித்து வளர்ந்தவன் நான். 10ம் வகுப்பும் +2வும் மட்டும்தான் ஒரே பள்ளியில் படிக்கும்படி அமைந்தது. அப்போது நாங்கள் தேவகோட்டையில் இருந்தோம். அங்கிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருந்தது நான் சேர்க்கப்பட்டிருந்த டி ப்ரிட்டோ மேல்நிலைப் பள்ளி.

பத்தாம் வகுப்பில் எனக்குத் தமிழாசிரியராக அமைந்தவர் தாசரதி ஐயா. வகுப்புப் பையன்கள் அனைவரையும், ‘சொல்லுங்கய்யா’, ‘கேளுங்கய்யா’ என்று மரியாதை வார்த்தைகளாலேயே விளித்துப் பாடம் நடத்திய நல்ல ஆசிரியர். அப்படி அழைப்பதில் ஒரு வாஞ்சையும் மிளிரும். அதனாலேயே அவரை எல்லோருக்கும் பிடிக்கும்.

சொல்ல வந்தது நான் வேடமிட்டு நடித்ததை(?)ப் பற்றியில்லை..? அதற்கு வருகிறேன். பள்ளியின் ஆண்டு விழா (என்றுதான் நினைவு. வேறு ஏதாவது கலைவிழாவாகக் கூட இருக்கலாம்.) வந்தது. அதற்குச் சிறப்பான நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம். தாசரதி ஐயா அன்று வகுப்புக்கு வந்தவுடனேயே சொன்னார்: “தமிழ்ப்பிரிவு சார்பா ஒரு சின்னக் காட்சியமைப்பு நாடகம் நடத்தலாம்னு இருக்கேன்யா. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மாதிரி உங்கள்ல மூணு பேர் வேஷம் போட்டுட்டு உக்காந்திருக்கணும். மூன்று மன்னர்களின் புகழையும் பத்திப் பத்து நிமிஷ உரை ஒண்ணு உங்க பின்னால ஒலிக்கும். வர்றவங்களுக்குப் பாக்கறதே ஒரு தனி அனுபவமா இருக்கும். இதான்யா என்னோட யோசனை. செய்துடலாமா?”

சளசளவென்று பேச்சுக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தனவேயொழிய சம்மதம் என்று எவன் வாயிலிருந்தும் வரவில்லை. இரண்டு நிமிடம் பொறுத்துப் பார்த்த தமிழையா, மேஜையைத் தட்டி சத்தமெழுப்பி, “என்னய்யா இவ்ளவு யோசிக்கறீங்க? நாம செய்யறோம்..” என்றதும், “செய்யலாங்கய்யா” என்று நான் குரல் கொடுக்க, கோரஸாக மற்ற பயல்களும் கத்தினர். காசா, பணமா, ஓகேன்னு சொல்லிட்டாப் போச்சு, என்று நான் எண்ணியதற்காக உடனேயே வருந்தவேண்டி வந்தது.

“ஐயா, நீங்க சோழ மன்னரா நடிங்க.” என்று என்னைக் கை காண்பித்து விட்டு, பார்வையால் மற்ற மாணவர்களைத் துழாவ ஆரம்பித்தார். “ஐயா, நானா..? முடியாதுய்யா..” என்று நான் மறுத்தது அவர் செவிகளிலேயே ஏறவில்லை. வெங்கிட்டுவைப் பார்த்து, “நீங்க பாண்டிய மன்னர்”, ராமநாதனைப் பார்த்து, “நீங்க சேர மன்னர்” என்று தொடர்ந்து கைகாட்டி முடித்தார். வேறு வழியின்றி நான் எழுந்துநின்று கவனத்தை ஈர்த்தேன்.

“ஐயா, மன்னர்னா கம்பீரமா இருக்கணும். நான் அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டேங்கய்யா..”

“உங்களுக்குத் தெரியாதுய்யா, நீங்க நிமிர்ந்து அமர்ந்தா கம்பீரமாத்தான் இருக்கீங்க. பேசாம இருங்க.”

“இல்லீங்கய்யா. மன்னர்ன்னா உங்களை மாதிரி தூய தமிழ்ல பேசணும், ஐ மீன், உரையாடணும். எனக்கு அப்டி வராதுங்களேய்யா…”

“நீங்க மூணு பேருமே பேசப் போறதில்லயேய்யா. கூடிய மட்டும் கண் இமைக்காம நேர் பார்வையாப் பாத்துட்டு உக்காந்திருந்தாப் போதும். பின்னால குரல்தானே ஒலிக்கப் போகிறது? பேசாமல் அமருங்கள்.” என்று அடக்கிவிட்டு பாடத்தை நடத்தத் துவங்கி விட்டார்.

பக்கத்திலிருந்த வெங்கிட்டு காதைக் கடித்தான். “டேய், பங்ஷன் மூணு நாள் நடக்குதுடா. மூணு நாளும் நேரா உக்காந்துக்கிட்டு இமைக்காம இருக்கறது முடியுமான்னு தெரியல. செத்தோம்டா.” என் பீதியின் சதவீதம் அதிகமாயிற்று. ஏதாவது டூப்விட்டு லீவ் போட்டு விடலாமா என்பதற்கும் வழியில்லை. வீட்டிலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள், ஐயாவும் வீட்டுக்கே ஆளனுப்பித் தூக்கி வந்துவிடக் கூடியவர்.

விழா துவங்குகிற அந்த தினத்தில் பலியாடு போன்ற மனநிலையில் பள்ளிக்குப் போனேன். ஒரு மேக்கப் கலைஞரை வேறு வரவழைத்திருந்தார் ஐயா. நான் சென்ற சமயம் வெங்கிட்டுவுக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார்கள். முகத்தில் ரோஸ் பவுடரை அப்பி, லிப்ஸ்டிக் போட்டு, சகல மேக்கப்பும் முடித்து மீசை ஒட்டியபின் பார்த்தால் எனக்கே அவனை அடையாளம் தெரியவில்ல. யாரோ போலிருந்தான். சரி, நம்மையும் இப்படிக் கோரமாக்கி விடுவார்கள். தெரிந்தவர் யாரும் பார்த்தாலும் நம்மைக் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று சற்றே தெம்பு வந்தது. அடுத்தபடியாய் என்னை அமரவைத்து ‘அழகாக்க’ ஆரம்பித்தார் அந்த மே.க. தன் வாழ்நாளில் இன்றுவரை என்னை மறந்திருக்க வாய்ப்பில்லை. “அடடா… தலையை அசைக்காதீங்க தம்பி. இங்க நேரா என்னையப் பாருங்க, மேல பாக்காதீங்க..” என்று புலம்பியபடியே நான் படுத்திய பாடுகளைத் தாங்கிக் கொண்டு ஒரு வழியாக என்னை மன்னனாக்கினார் அவர்.

தமிழ் ஸ்டாலுக்கு அழைத்துச் சென்று அங்கே போட்டிருந்த மூன்று சிம்மாசனங்களைக் காட்டினார் தமிழய்யா. “அங்க போய் உக்காருங்கய்யா”. நடுவிலிருந்த ஆசனம் நிறைய குஷன் வைத்து, பார்க்கவும் அழகாயிருந்ததால் முந்திக் கொண்டு சென்று அங்கு அமர்ந்தேன். “அது பாண்டிய மன்னருக்கான இருக்கை ஐயா, நீங்கள் இடப்புறம் அமரணும்” என்றார் தாசரதி ஐயா. “மாட்டேங்கய்யா. இங்கதான் உக்காருவேன்” என்று அடம்பிடித்தேன். “சரி, வீரமே உங்ககிட்ட இல்லாட்டியும் வீரபாண்டியன்னு உங்களை அறிவிச்சிடறேன். ஐயா வெங்கிட்டு, நீங்க இடப்புறம் உக்காருங்க.” என்று என்னைக் காலைவாரி விட்டு, அவனைச் சோழனாக்கினார் ஐயா.

‘எப்டிறா மூணு நாள் இமைக்காம இருக்கறது?’ என்று புலம்பிய வெங்கிட்டுதான் கண்களை இமைக்காமல் வெறித்தபடி அமர்ந்திருந்தான். அக்கம்பக்கத்துக் கல்லூரி மாணவிகளெல்லாம் வந்து உற்றுப் பார்த்தால், அப்போதே சைட்டடிக்கிற பழக்கத்தை வைத்திருந்த அவன் வேறு என்ன செய்வானாம்? உண்மையான உண்மையாக அப்போது மிகவெள்ளந்தியாக இருந்த என்பாடுதான் கஷ்டமாயிற்று. எப்படியோ இரண்டு தினங்களை ஓட்டினோம் உட்கார்ந்து, முறைத்தவாறே.

இரண்டாம் நாள் மதியத்திலிருந்தே பார்வையாளர்கள் ஓரிரண்டு பேர்தான் என்பதால் ரிலாக்ஸாக இருக்க முடிந்தது. மூன்றாம் நாள் எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்பட்டது.

காலை வழக்கம்போல் வேஷமிட்டுக் கொண்டு அமர்ந்திருக்க, ஒருவரும் பார்க்க வரவில்லை. பதினொன்றரை மணியளவில் வந்த தாசரதி ஐயா, “அவ்ளவு தாங்கய்யா. எல்லாரும் மேக்கப்பக் கலைச்சிட்டுக் கௌம்புங்க. நாளைக்கு வழக்கம் போல க்ளாசுக்கு வந்துடுங்க.” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். மேக்கப்பைக் கலைத்துவிட்டு நாங்கள் ஐவரும்- சொல்ல மறந்து விட்டேனே, மூவேந்தருடன் குறுநில மன்னர்கள் பாரி, ஓரி என்று இன்னுமிருவரை அமர வைத்திருந்தார்- சாப்பிட்டபடியே அரட்டையடிக்க ஆரம்பித்தோம்.

“இப்ப என்னடா பண்றது..? இப்பவே வீட்டுக்குப் போனா போரடிக்கும்டா.”

“ஒண்ணு பண்ணலாமா? எல்லாருமா ஜாலியா மேட்னி ஷோ படம் பாத்துட்டு வீட்டுக்குப் போலாமா?”

வெங்கிட்டுவின் இந்த ஐடியா ஏகமனதாக வரவேற்கப்பட்டது. ஆனால், அந்தோ.. தேவகோட்டையில் இருந்த இரண்டு தியேட்டர்களிலும் ஓடுகிற படங்களை மூவர் பார்த்துவிட்டிருந்தனர். தவிர, அங்கே புதிய திரைப்படங்கள் ரிலீசாகாது. காரைக்குடியில்தான் புதிய படங்கள் ரிலீசாகும். என்ன செய்வது..?

“இதுல என்னடா யோசனை? அதான் ஆளுக்கொரு சைக்கிள் வச்சிருக்கோம்ல..? காரைக்குடிக்குப் போயிடலாம். இப்ப கௌம்பினா சரியாருக்கும்.” -ராமநாதன்.

“என்னது..? வெளையாட்றியாடா..? காரைக்குடி இங்கருந்து 12 கிலோமீட்டர் தூரம்டா. அவ்ளவுதூரம் எவன் சைக்கிள் மிதிக்கறது?” -இது நான். அப்போதெல்லாம் கேஸ் சிலிண்டரை நிற்க வைத்து அதற்குக் கை கால் ஒட்ட வைத்தது போல அத்தனை குண்டாக, உருண்டையாக இருந்தவன் என்பதால் வந்த பயம். மற்ற அனைவரும் ஒல்லிப் பிச்சான்கள் என்பதால் என் மனு ரிஜக்ட் செய்யப்பட்டது. 

சரி, படம் பார்க்கப் பணம்..? எல்லாரது பாக்கெட்டிலுமிருந்த சில்லறையைத் தேற்றியதில் ஐந்து டிக்கெட்டுக்குத் தாராளமாய்த் தேறியது. பிறகென்ன..? விடு ஜுட். அரட்டையடித்தபடியே காரைக்குடியை நோக்கிய சைக்கிள் பேரணி ஆரம்பமானது. போகிற வழியிலேயே டிஸ்கஷன்- என்ன படம் பார்ப்பது என்று? சினிமா பற்றி அப்போது என் அறிவு பூஜ்யம் என்பதால் சைலண்ட்டாக வந்தேன். இறுதியில் நடராஜா தியேட்டர் என்று முடிவானதும் சற்றே ரிலாக்ஸானேன். ஏனெனில் காரைக்குடியில் நுழைந்ததுமே நடராஜா தியேட்டர் வந்துவிடும். மற்ற தியேட்டரென்றால் கூடுதலாய் அரைக் கிலோமீட்டர் சைக்கிள் மிதிக்க வேண்டியிருக்கும்.

“நடராஜா தியேட்டர்ல என்னடா படம்..?” -இது நான்.

“யாரோ புதுப் பசங்கடா. கார்த்திக்கு, சுரேஷ்ன்னு. அவங்க நடிச்ச ‘இளஞ்ஜோடிகள்’ன்ற படம்.”

“டேய், வெங்கிட்டு பொய் சொல்றான்டா. ராதாவும், விஜய்சாந்தியும் நடிச்சதால பாக்கலாம்னுதான் எங்கிட்ட சொன்னான்.” போட்டு உடைத்தான் ராமநாதன். நான் வெங்கிட்டுவை முறைக்க, ஹி… ஹி… என்று அசடு வழிந்தான் அவன். எப்படியோ வந்து இரண்டே நாளாகியிருந்த அந்தப் படத்தை அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கிப் பார்த்துவிட்டு, வரும் வழியில் எஞ்சியிருந்த பணத்தில் ஆளுக்கொரு கரும்பு ஜுஸ் குடித்து, மாலையில் நல்ல பிள்ளைகளாய் பள்ளிக்குச் சென்று திரும்பியதாய் வீட்டுக்குச் சென்றோம். நாளது வரையில் எக்காரணம் பற்றியும் பொய் சொல்லவே, எந்தத் திருட்டுத்தனமும் வீட்டினரிடம் செய்யவோ துப்பில்லாமல் வாழ்ந்துவந்த எனக்கு ஏதோ பெரிய சாகசச் செயலைச் செய்து விட்டது போன்ற பெருமை.

அதன்பின், ப்ளஸ் ஒன்னில் காளிதாஸ் என்கிற தமிழாசிரியர் வந்து, என் இலக்கண அறிவை(?)ச் சோதித்து, தேமா தெரியாது, புளிமா என்றால் புளிப்பு மிட்டாய் என்கிற அளவில் இருந்த என் தமிழறிவைக் கண்டு அதிர்ந்து, வகுப்புகள் முடிந்தபின் எனக்காக மட்டும் இலவச ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்து என்னைத் தேற்றியது வரலாறு. அவர் மட்டும் அதைச் செய்திரா விட்டால் இன்று இங்கே நான் தொடர் கட்டுரை எழுதுகிற அளவுக்கு வந்திருக்கவே இயலாது.

இப்படியாகத்தானே ஆசிரியர்கள் என்றும் மறக்க முடியாதவர்களாக என் நினைவில் நிறைந்திருக்கிறார்கள். இன்றையப் பிள்ளைகளிடம் கேட்டால், ஆசிரியர்கள் பற்றிய இத்தகையதான இனிய நினைவுகளை அவர்களால் கூறமுடியுமா என்பதும் எனக்குள் ஐயமாகவே இருக்கிறது.

இத்தோடு என் ஆசிரியர் புராணத்தை முடித்துக் கொண்டு, அடுத்து வேறொரு விஷயத்திற்குள் நுழைகிறேன்.

மீண்டும் சந்திக்கிறேன்….

balaganessh32@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button