பரமேஸ்வரி கவிதைகள்

பரமேஸ்வரி கவிதைகள்

கவிதை:- தி. பரமேஸ்வரி

பழுதுபட்ட இதயத்தின் குழாய்களில் மிக மெதுவாய்ப் பயணிக்கிறது குருதி

முட்கள் பொதித்த சாட்டையால் தன்னைத்தானே லயத்துடன் அடிப்பவனின் சலங்கை இசை சற்றே பிசகுகிறது

வழியும் குருதியின் பேரோலத்தை அமுக்குகிறது மனையாளின் மேளம்

நெருப்பாய்த் தகிக்கிறது புல்லாங்குழல்

பிசகும் ஜதியின் கணக்கைத் தன் ஒற்றைக்காலால் சரிசெய்தபடி அந்தரக் கயிற்றில் நடக்கும் குழந்தையை உறுத்துப்

பார்க்கிறது கைக்கழையில்  அமர்ந்திருக்கும் சாத்தான்.

டால்ஸ்டாயின் அங்கியில் அமர்ந்தபடி உன்னைப் படித்தேன் அன்னா

மலர்களுடன் சில முட்களும் இடையீடிட்டன

சமூகத்தின் கடைவாய் ஒழுக்குக் குருதியில் நம்மிருவருடையதும் கலந்திருக்கிறது அன்னா

உனக்குள் மண்டியிருக்கும் கசடுகளை விடவும் எனது அதிகம்

விரான்ஸ்கி நல்லவன் தானா என்ற உன் சந்தேகம் போலவே எனக்கும்

ஏனோ முதல் மரணப்படுக்கை நம்மைக் கைவிட்டது

நீ நகரம்விட்டு நகரம் செல்ல

நானோ ஊர்விட்டு ஊர் மாறுதலோடு கரைந்துறைகிறேன்

நமக்கு என்ன தேவையென்றாவது நமக்குத் தெரியுமா?

எதைத்தான் தேடுகிறோம் நாம்?

உன் வாழ்வை மீண்டும் பரிசீலிக்கும்படி டால்ஸ்டாயிடம் மன்றாடினேன்

ஆனாலும் நம் குழந்தைகள் பாவம்தானே

விடைபெறுகிறேன் அன்னா

என்னுடைய ரயில் கிளம்பப் போகிறது.

புற்களைக் கழிக்கையிலெழும் பசுந்தழை வாசம் அவள் காமம்.

அணுக்களின் அணுக்கத்தையெல்லாம் தேக்கிய அழைப்பு அக்கண்களில்.

காலத்திலிருந்து அகாலத்துக்கு விரியும் கால்களினிடையில் கச்சிதப் பொருத்தமாய்ச் சென்றமர்கிறதொரு கெண்டை மீன்.

உள்ளெழுகிறது நாட்டியத்தின் மாய வித்தை.

தனித்துச் சிதறிய இசைத்துணுக்கென அவளது குரல்.

குளிர்மை நிரம்பிய அவ்வறைக்குள் மோகத்தின் ஓவியமென அம்முகம் தொல்நலம் அழிய

தணிந்த மோனத்தில் ஒளிர்ந்து மறைகிறது பிரபஞ்சத் தீ.

அவள் அநாதிகாலத்தின் தொல்பிரதிமை

மேனியெங்கும் படர்ந்திருக்கிறது பல்லாண்டாய்ப் புணர்ந்த மனித எச்சம்.

குறிப்பு 1: சிதைக்கப்பட்ட பருத்த முலை

குறிப்பு 2: தனித்ததொரு அழுக்குப் படிந்த அல்குல்

குறிப்பு 3: வக்கிரக் கிறுக்கல்கள் சுமந்த தொடை

ஒவ்வொரு நூற்றாண்டிலும் அவளுடைய உடை களைய எவரோவொருவர் முயல்கிறார்

இறைந்துகிடக்கும் பீர் பாட்டில்கள் தாங்கள் கடப்பாரையாய் உருமாறிய வித்தையை அறிவிக்கின்றன

திலமடைந்த சிலை பின்னிரவுகளில் கதறுவதாகவும் மூர்க்கமாய் அலறுவதாகவும் கதைகள் உலவத் தொடங்கின

பேய்ச்சி/மலைச்சியென அவளைத் தூற்றுவோர் எவரும் பார்க்கவில்லை தொடையிடுக்கில் உறைந்த குருதியை..