“சண்முகநாதன் குணசேகரன்!”
சத்தம் கேட்டு அரைமயக்கத் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்ததால் என் காதுகளில் பொருத்தியிருந்த ஹெட்ஃபோன் கீழே நழுவியது. ஜன்னல் வழியே மேகக் கூட்டங்களூடே மிதந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் ப்ளைட்டின் சரிந்த வலது இறக்கைப்பகுதி மங்கலாகத் தெரிந்தது. என் ஜன்னலோர இருக்கைக்கு முன்னிருந்த குட்டித் திரையில் டெர்மினேட்டர் 2 கிளைமாக்ஸ். ஹெட்போனில் வழிந்து கொண்டிருந்த அதன் இரைச்சலுக்கு எப்படித் தூங்கினேன் என்று தெரியவில்லை. ஏர்ஹோஸ்டஸ் தூக்கத்திலிருந்து என்னை எழுப்பியதற்கு மன்னிப்பு கோரியபடி இரவு உணவு ட்ரேயை நீட்டினாள். என்னை இதற்குமுன் இப்படி யாரேனும் முழுசாக சொல்லிக் கூப்பிட்டது எப்போது என்றே நினைவில்லை. வேறு ஒரு சூழ்நிலையில் என் பெயரை இவ்வளவு சரியாக உச்சரித்த அந்த விமானப் பணிப்பெண்ணை மிகவும் நெகிழ்ந்து பாராட்டியிருப்பேன். ஆனால், இன்று நான் அந்த மனநிலையில் இல்லை.
“நோ டின்னர் ப்ளீஸ்” என்றதும், நம்பமுடியாதது போல், “ஆர் யூ ஷ்யூர்?”
என்று கேட்டபின், “குடிப்பதற்கு வேறு ஏதாவது குளிர்பானம் கொண்டுவரட்டுமா?” என்று நிஜமான கரிசனம் காட்டினாள். வேண்டாம் என்று மறுத்து நன்றி சொன்னேன். சான் பிரான்சிஸ்கோவிலிருந்து துபாய் வந்த எமிரேட்ஸ் ப்ளைட்டில் இவ்வளவு களேபரம் இல்லை. அமைதியாகத் தூங்க முடிந்தது. கனெக்ஷன் ப்ளைட்டில் துபாயில் இருந்து சென்னை செல்ல ஏறிய சில பயணிகள் தாங்கள் கொடுத்த டிக்கெட் காசுக்கு முழுவசூல் செய்துவிட எண்ணி ஏர்ஹோஸ்டஸ்களிடம் பெட் ஸ்காட்ச் குப்பிகளை பலமுறை கேட்டுப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். போலிச்சிரிப்புடன் அவர்களுக்கு போக்கு காட்டிக் கொண்டு நழுவியபடி சில விமானப் பணிப்பெண்கள். இன்னும் சில மணி நேரங்களில், அதிகாலைக்கு முன்னர் இந்த விமானம் சென்னையில் தரையிரங்கி விடும். விமானநிலையத்தில் என்னை அழைத்துச் செல்ல யாரும் வந்திருக்க வாய்ப்பில்லை. விமானத்தின் வட்ட வடிவ ஜன்னல் இருட்டில் சிதறிக்கிடந்த மேகக் கூட்டங்கள் ஒவ்வொனறாக மிதந்து செல்வது போல் நினைவலைகள் என் நெஞ்சுக்குள் முட்டி மோதின.
கடந்தமுறை சென்னை வந்த என்னை அழைத்துச் செல்வதற்காக பரமு சித்தப்பா விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அன்று வெளியே கேட் அருகே காத்திருக்கும் நபர்களில் பளபளவென்று ரோஸ் பூப்போட்ட நீலநிற லுங்கி அணிந்திருந்த சித்தப்பா மட்டும் பளிச்சென்று தனியாகத் தெரிந்தார். அப்பாவின் சாவுக்கு நான் வந்திருக்கிறேன் என்ற சோகத்தையும் மீறி கொஞ்சம்கூட போலித்தனம் இல்லாமல் என்னைக் கண்ட மகிழ்ச்சியைச் சிரித்து வெளிப்படுத்தினார். என் கூச்சத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் என்னைக் கட்டியணைத்து வரவேற்று என் பைகளில் கனமான ஒன்றைத் தோளில் ஏற்றிக்கொண்டார். என் அப்பாவை விட என்னை அதிகம் சுமந்த தோள்கள் அவரது. எனக்கும் என் தங்கை ஈஸ்வரிக்கும் பதினோரு வயது வித்தியாசம். எங்களுக்கு இவர் ஒரே சித்தப்பாதான் என்றாலும் நாங்கள் அவரை ‘பரமு சித்தப்பா’ என்று அடைமொழியுடன்தான் அழைப்போம். அவர் பெயர் பரமேஸ்வரனா. பரமசிவமா என்று சட்டென்று கேட்டால் நிஜமாகவே எங்களுக்குக் குழம்பிவிடும். அப்பா குணசேகரன் ராயபுரம் மாநகராட்சிப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக இருந்தார்.
சித்தப்பா பள்ளிக்கூடப் படிப்பைத் தாண்டாதவர். அப்பா அவரை பரமு என்றுதான் அழைப்பார். அவர்களுக்குள் அதிகம் பேசி நான் பார்த்ததில்லை. அப்பா மீது அபரிமிதமான அன்பு வைத்திருந்தார். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அடுத்த உத்தரவிற்காகக் காத்திருப்பது போல் ஒரு பாவனையில் கைகட்டியபடி அப்பா எதிரே நிற்பார். முகத்தில் எப்போதும் புன்னகைக்கு அடுத்த நிலை சிரிப்பு ஒன்று ஒட்டியிருக்கும். எங்கள் குடும்பத்திற்கு ஆல் இன் ஆல் அழகுராஜா பரமு சித்தப்பாதான். எங்கள் வீட்டில் பரமு.. பரமு சித்தப்பா.. என்ற குரல்கள் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். ‘பரமு சித்தப்பா திருமணம் செய்து கொள்ளவில்லையா? ஏன் தனியாக இருக்கிறார்?’ இப்படி சிறுவயதில் எங்களுக்குள் அவரைப்ற்றி பதில் தெரியாத பற்பலக் கேள்விகள் இருந்தன. அதற்குப் பிறகு தெரிந்ததெல்லாம் அரசல் புரசலாகக் கேள்விப்பட்டதுதான். திருமணமான ஒரு வருடத்தில் நிறைமாத கர்ப்பிணியான அவர் மனைவி இறந்துவிட்ட பின்னர் அவர் மறுமணம் ஏதும் செய்து கொள்ளாமல் எங்களுடனேயே ஒண்டிக்கொண்டாராம்.
பரமு சித்தப்பாவுக்கு தெரியாத விஷயங்கள் இல்லை. அவர் செய்யாத வேலைகளும் இல்லை. காய்கறி விற்பது, லாரி ஓட்டுவது, கார் மெக்கானிக், ராமு ஆசாரி மரப்பட்டறையில் தச்சு வேலை, உடுப்பி ஶ்ரீவிலாஸில் தோசை மாஸ்டர், ரியல் எஸ்டேட் ஏஜென்ட். இப்படி பல்வேறு அவதாரங்கள் அவருக்கு உண்டு. அது மட்டுமல்லாமல் வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்கி வருவது. என்னையும் ஈஸ்வரியையும் ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வது, பள்ளிக்கு மதிய சாப்பாடு கொண்டு வருவது, அப்புறம் எங்களை அவ்வப்போது சினிமா பார்க்கக் கூட்டிப் போவது.. இப்படி எல்லாம் அவர்தான் பார்த்துக் கொண்டார். குணாளன், அப்பாவின் பள்ளியில் அட்டெண்டர். அவர்தான் எனக்கு போன் செய்து அப்பா இறந்த விவரம் தெரிவித்தார். அப்பா பள்ளிக்கூடத்தில் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று நெஞ்சு வலி வந்து சரிந்தபோது குணாளன் சொல்லி ஓடி வந்தாராம் பரமு சித்தப்பா. அப்படியே அப்பாவைக் கொத்தாக அள்ளித் தூக்கிக்கொண்டு ஒரு டாக்ஸி பிடித்து குணாளனுடன் அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். வழியில் அப்பா கடைவாயில் எச்சில் ஒழுக, ஒரு கையால் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு வலது கையை மட்டும் லேசாக உயர்த்தி ஏதோ சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட பரமு சித்தப்பா, “கவலைப்படாதீங்க அண்ணே, நான் இருக்கேன்” என்று சொல்ல, அப்படியே அவர் தோளில் சாய்ந்திருக்கிறார் அப்பா. “இப்படி ஆயிடுச்சே. எனக்கு உத்தரவு போட இனி யார் இருக்கா? அண்ணா இவ்வளவு பெரிய பொறுப்பை என் கிட்ட கொடுத்திட்டுப் போய்ட்டாரே” என்று அழுது புலம்பினாராம் சித்தப்பா.
தென்சென்னைக்கு முற்றிலும் நேர் எதிர்மறையான, சுட்டெரிக்கும் வெயில், உப்புக்காற்று, குடிதண்ணீர் தட்டுப்பாடு இவற்றுடன் எளிமை, ஏழ்மை மற்றும் மாசுபடிந்த வடசென்னையிலிருந்து பத்து வருடங்களுக்கு முன் அமெரிக்கா சென்றடைந்த மிகச் சொற்பமான இளைஞர்களில் நானும் ஒருவன். சென்னை வாழ்க்கையில் பெரும் பகுதியை நான் சித்தப்பாவோடு கழித்திருந்தாலும் அப்பாவின் இறுதிச் சடங்குக்காக வந்திருந்தபோது அவரோடு இருந்த இரண்டு வாரங்கள்தான் என்னை முற்றிலுமாகப் புரட்டிப் போட்ட நாட்கள். அவரை நான் சரிவரப் புரிந்து கொண்டதும் அந்த நாட்களில்தான். அப்பா இறந்த நான்காம் நாள் காலை ஜெராக்ஸ் எடுக்க நான்கு தெருக்கள் தாண்டி நான் வந்தபோது தங்கமணி பாத்திரக் கடைப்பக்கம் பெருங்கூட்டம். கடையோரம் சரிந்து கிடந்த சித்தப்பாவின் பழைய அட்லஸ் சைக்கிளைப் பார்த்ததும் நான் அங்கு தயங்கி நின்றேன். அவர் அருகில் எங்கும் தென்படவில்லை. தார்ச்சாலையில் அமர்ந்து இரண்டு பெண்கள் வாயிலும் மார்பிலும் அடித்துக் கதறிக்கொண்டிருந்தார்கள். என்ன விஷயம் என்று சற்று நெருங்கிப் பார்த்தேன். அங்கு சிதறியிருந்த கூட்டத்தில் எல்லோருடைய கண்களும் பயம் கலந்த பதற்றத்துடன் அந்த திறந்திருந்த சாக்கடைக்குழியையே பார்த்தபடி இருந்தன.
“சின்னக் குழந்த ஒண்ணு திறந்திருந்த சைபன்ல விழுந்துடுச்சாம். யாரோ ஒரு மகராசன் பதறிப்போய் உள்ளே குதிச்சிருக்கார்.. கடவுளே.. குழந்தய காப்பாத்துப்பா. உனக்கு பாலாபிஷேகம் பண்றேன்” என்றாள் ஒரு வயதான பெண்ணொருத்தி. “கடவுளா? அது தாம்மா குழந்தையை எடுக்கிறேன்னு உள்ள இறங்கியிருக்கு…” என்றார் கூட்டத்தில் இருந்த லுங்கி அணிந்த ஒரு நடுத்தர வயதுக்காரர். எப்போதும் பயம், பதற்றம். எதிர்பார்ப்பு கலந்த காத்திருப்புகள் நொடிகளைக் கூட யுகங்களாக்கி ஐன்ஸ்டீன் விதியை நிரூபணமாக்கிவிடும். சிறிது நேரத்தில், கோவில் உற்சவர் பல்லக்கில் ஆடியபடி உலா வருமே, அது போல குழந்தையின் உடல் மேலே எழுவது கொஞ்சமாகத் தெரிந்தது. உற்சவர் பொன்னிறத்தில் இருக்கும். இதுவோ கழிவுகளில் பொதிந்து கருமை படர்ந்த கற்சிலை போல… சுற்றியிருந்தவர்கள் ‘ஐயோ ஐயோ’ என்று கதறினார்கள். குழந்தை உயிரோடிக்க வேண்டுமே என்ற பதற்றம் அது. தலைக்கு மேல் குழந்தையைத் ஒரு கையால் தாங்கியபடி, உள்ளிருந்து சாக்கடைக்குழியின் விளிம்பைப் பற்றியவரிடமிருந்து யாரோ இருவர் குழந்தையைப் பறித்துக் கீழே கிடத்த, அது லேசாக அசைந்து தான் உயிரோடிருப்பதை ஊர்ஜிதம் செய்து முனகியது. சுற்றிலும் “ஹே” என்ற ஆரவாரமும் நிம்மதி பெருமூச்சுக் குரல்களும் இணைந்த இரைச்சல். குழந்தைக்கு முதலுதவி தந்து மருத்துவமனைக்கு அனுப்ப சிலர் முற்பட…இப்போது குழந்தையைக் காப்பாற்றிய அந்த நபர் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது. முகத்தில் அப்பியிருந்த மனிதக் கழிவுகளை இடது கைகளால் வழித்து கண்கள் மட்டும் தெரிய சுற்றிலும் அனிச்சையாகப் பார்த்த அந்த நபர் வேறு யாருமில்லை. சித்தப்பா..எங்கள் பரமு சித்தப்பாவே தான்.
அவரை மேலே ஏற்றிய சிலர் அவர் மீது பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் மொண்டு ஊற்றினார்கள். குழந்தையின் தாயும் தகப்பனுமாக அவர் கால்களைப் பற்றிக் கொண்டு, ‘அய்யா..எங்க குலசாமி..தெய்வமே..’ என்று அரற்றியபடி அழுதார்கள. ‘கடவுளுக்கு பாலாபிஷேகம் செய்வேன்’ என்று சொன்ன அந்தப் பெண்மணி’ தன் பங்குக்கு சித்தப்பா மீது இரண்டு வாளி தண்ணீரை ஊற்றிக் கையெடுத்துக் கும்பிட்டு தன் வேண்டுதல் பிரார்த்தனைக்கு முன்னோட்டம் பார்த்தாள். எல்லோரையும் கைகளால் விலக்கியபடி எதையும் பொருட்படுத்தாமல் அருகில் இருந்த வேஷ்டியை அவசரமாக உடம்பில் சுற்றியபடி சட்டையை மாட்டிக்கொண்டு தன் சைக்கிளில் ஏறி அங்கிருந்து விருட்டென்று கிளம்பினார் பரமு சித்தப்பா.
வீட்டுக்கு வந்த சித்தப்பாவிடம் மெதுவாகச் சென்று, “எப்படி சித்தப்பா, இது உன்னால முடிஞ்சது?” என்று தைரியத்தை வரவழைத்துக் கேட்டேன். “சண்முகம், நீ அங்க இருந்தத கவனிச்சேன். எப்படி என்னால குழந்தைய காப்பாத்த முடிஞ்சதுன்னு கேட்கிறியா.. சின்னவயசில ஸ்கூல் போகாம கட்டடிச்சு கம்மாயில மூச்சடக்கி குளிச்சுக் கும்மாளமடிச்சதுக்கு ஏதாச்சும் பிரயோசனம் வேண்டாமா? ஒரே வித்தியாசம் அந்த தண்ணியில இறங்குறப்ப அருவருப்பு கிடையாது, ஆனால், ரெண்டுத்துக்குமே மூச்சடக்குற வித்தை மட்டும் தான் பொது.
ஒருவேளை அந்த சாக்கடை நாத்தத்தை எப்படி சகிச்சிக்கிட்டு உள்ளே இறங்கினேன்றது உன் கேள்வியான்னு தெரியல.. அதுல முதமுறையா இறங்கின ஆளு, நான்தானா என்ன?.. இந்த மாதிரி சாக்கடையில இறங்கி அன்னாடம் வேலை செய்ற எத்த்னையோ பேர் இருக்காங்க. நாத்தம்.. கழிவு இதெல்லாம் நம்மள மாதிரி சொகுசான சனங்க உடம்புக்கும் மனசுக்கும் ரொம்ப சிரமந்தான்னு ஒத்துக்கிறேன். ஆனா, உடம்பு அழுக்கு, தண்ணி பட்டதும் சரியாயிடும். மனசும் கொஞ்ச நாள்ல அதை மறந்துடும். ஆனா, என்னால அந்தக் குழந்தையைக் காப்பாத்த முடியும்னு தெரிஞ்சும் அதற்கு ஒரு முயற்சி கூட பண்ணாம அங்கிருந்து கிளம்பி வந்துட்டா அந்த வலி வாழ்நாள் முழுக்க வடுவா மனசுல பதிஞ்சுடும்ல. ஒரு மரத்தை வெட்டினா, குருத்து ஒண்ணு நட்டுடனும்னு சொல்லுவாங்க. உங்க அப்பா என் மடியில மரம் போல சரிஞ்சு உயிர விட்டாரு. அதுக்கு ஈடா ஒரு இளம் குருத்தோட உயிரை மீட்டு எடுத்தாச்சு. அது போதும் எனக்கு”
ஆச்சரியம் என்னவென்றால் இவ்வளவு விஷயங்கள் முடிந்து ஒன்றும் நடக்காதது போல் வீட்டுக்கு வந்து சுடுதண்ணீரில் குளியல் போட்ட பரமு சித்தப்பா, காலை டிபன் பந்தியில் இட்லி மல்லிப்பூ மாதிரி மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும் என்று வீட்டுப் பெண்களுக்கு சமையல் குறிப்பு சொல்லிக் கொண்டிருந்தார்… “மாவு அரைக்கும் போது அத்தோடு கொஞ்சம் பழைய சோறு பதமா சேர்த்துடனும்…”. குழந்தையை காப்பாற்ற சாக்கடைக்குழியில் இறங்கிய பரமு சித்தப்பா அது குறித்து துளியும் கூச்சப்படவில்லை. அதே சமயம் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றி விட்டேன் என்று எவரிடமும் சொல்லி மார்தட்டிக் கொள்ளவுமில்லை. அப்படி ஒன்று நடந்ததே என்னைத் தவிர வீட்டில் வேறு யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது. அப்பாவின் காரியம் முடிந்தபின் அம்மா தந்த சாதத்தை காக்காவுக்கு வைக்க மொட்டைமாடிக்குச் சென்ற நான் ‘கா கா’ என்று அழைக்க ஒன்றையும் காணோம். சாங்கியப்படி அதற்குப பிறகுதான் மற்றவர்கள் சாப்பிட வேண்டுமாம். என்னைப் பின் தொடர்ந்து வந்திருந்த பரமு சித்தப்பா சிரித்தபடி என் கையில் இருந்து கிண்ணத்தை uகையில் வாங்கிக் கொண்டார்.
“சாப்பிட ஏதாச்சும் வெச்சு, பேர் சொல்லி கூப்பிட்டா உடனே பறந்து வர ஒரே ஜீவராசி காக்கா மட்டும்தான். ஆனா என்ன, அதோட பேரைக் கூச்சப்படாம நல்லா உரக்கக் கூப்பிடனும். அப்பதான் வரும். நீ கூப்பிடுறது மாதிரி கிடையாது” என்று சொல்லிவிட்டு அடித்தொண்டை கிழிவது போல், “கா..க்கா கா” என்று அவர் கத்தியதும் சட்டென்று இரண்டு மூன்று காகங்கள் வந்து சாதத்தைக் கிளறித் தின்றன. “நீ ஸ்கூல்ல படிக்கிற சமயத்துல சாயந்திரம் இரண்டு தெரு தள்ளி விளையாடப் போயிடுவ. அப்ப உங்கம்மா மொட்டை மாடியில இருந்து, ‘சண்முகம்..வந்து சாப்பிட்டுப் போடா’ன்னு கத்துவா. அவளும் உன்ன மாதிரி கூச்சப்பட்டு சன்னமாக் கூப்பிட்டிருந்தா நீ வந்துடுவியா என்ன?” என்று சொல்லிச் சிரித்தார் பரமு சித்தப்பா.
“சித்தப்பா, ஏன் இந்த பழைய சைக்கிளை வெச்சுக்கிட்டு அல்லாடறே. நான் உனக்கு ஒரு மொபெட் வாங்கித் தரட்டா?” என்றதற்கு, “பெட்ரோலுக்கு காசு வேஸ்ட். இதுக்கு வெறுமனே காத்து அடிச்சா போதும். சும்மாப் பறக்குமில்ல” என்பார்.
“செல்போன்?”
“போன் பேச ஏற்கனவே அப்பா வாங்கித் தந்த பட்டன் மொபைல் இருக்கே!”
“அமெரிக்காவில இருந்து உனக்கு வேற ஏதாச்சும் வாங்கி வரவா?” என்றால் “எனக்கு தேவையானது எதுவும் அங்கே கிடைக்காது சண்முகம்” என்று சலித்துக் கொண்டார் சித்தப்பா.
“என்னது?”
“காலைல தேவமிர்தமா பழைய சோறு. ரெண்டு வேளை உங்கம்மா கையால சமைச்ச சாப்பாடு, மதியம் கடலை மிட்டாய், ராத்திரி ஒரு பூவன் பழம், மாசத்துக்கு ஒருக்கா பாஷாபாய் கடைபிரியாணி, அஜீரணம்னா கோலி சோடா.”
நிஜமாகவே அவர் தேவைகள் அவ்வளவேதான். யாருக்கோ உதவி.. யாருக்கோ தேவை என்று தினமும் சைக்கிளை மிதித்தபடியே, சித்தப்பாவின் ஓட்டம் உறவுகளைக் கடந்து மற்றவர்களுக்காகவும் இருந்தது. கலைடாஸ்கோப்பை கையில் உருட்டும்போது ஒவ்வொரு முறையும் விதவிதமான நிறப்பிரிகைகளும் வடிவங்களும் தோன்றுமே, அதுபோல பரமு சித்தப்பா நான் அங்கிருந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் என் கண் முன்னே புதிய பரிணாமமெடுத்துக் கொண்டிருந்தார்.
எமிரேட்ஸ் விமானம் சென்னையை நெருங்கி விட்டதைச் சொல்லி சீட் பெல்ட்டை அணியும்படி மைக்கில் அறிவிப்பு. நான் வைத்திருந்த கேபின் ட்ராலி பேகை எடுத்துக்கொண்டு உபர் டாக்ஸி பிடிக்க வேண்டியது தான். இன்று நான் விமான நிலையத்தில் சித்தப்பாவை எதிர்பார்க்க முடியாது. நான்தான் அவரைப் போய் பார்க்க வேண்டும். எனக்காக வீட்டில் ஃப்ரீசர் பாக்ஸில் இரண்டு நாட்களாகக் காத்துக் கிடக்கிறார்.
“லீவு கிடைக்கலனா பரவாயில்லை, விடுடா.. சண்முகம். பன்னீர் மாமா பையன் கதிர்வேலுவை வெச்ச சடங்கெல்லாம் செஞ்சுடுவோம். நீ பொறுமையா வா” என்று அம்மா சொல்ல, “இல்லை, நான்தான் வந்து எல்லாம் செய்வேன்” என்று அடம் பிடித்து ‘லீவிங் ஃபார் எமர்ஜென்சி. பீரியட் ஆஃப் லீவ் இஸ் அபோட் எ வீக்ஸ் டைம்’ என்று என் உயர் அதிகாரிக்கு இமெயில் அனுப்பி விட்டு பதிலுக்கோ அனுமதிக்கோ காத்திராமல் கலிஃபோர்னியாவில் இருந்து எமிரேட்ஸில் கிளம்பினேன். பரமு சித்தப்பாவுக்கு மகன் ஸ்தானத்திலிருந்து ஈமச்சடங்குகள் அனைத்தையும் நானே முன்னிருந்து குறைவின்றி செய்து முடித்தேன்.
“காலையில் எழுந்துக்கிடல. என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டி ஈஸ்வரி உள்ள போய் பார்த்திருக்கா. மனுஷன் தூங்குற மாதிரி இருக்கிறார். ஆனால், போய் சேர்ந்துட்டாருன்னு அப்புறம் தான் தெரிஞ்சது” – சித்தப்பா எப்படி இறந்தார் என்று அம்மா என்னிடம் கதையாகச் சொல்லி விவரித்துக் கொண்டிருந்தாள். போன முறை அப்பா இறப்புக்கு வந்திருந்த போது என்னை ஆறுதல்படுத்த ஒருநாள் பரமு சித்தப்பா சொன்னது இது.
“சண்முகம், ராத்திரி நாம தூங்கப் போறோம், காலைல எழுந்துடுவோம் என்ற நம்பிக்கையில. ஆனால், தூங்குறதற்கும் காலையில எழுந்துகிறக்கும் இடையில் உள்ள நேரத்தில் தூங்குவதா நாம நம்புறோம். நினைக்கிறோம். காலைல எழுந்துக்கிட்டா, அது சரிதான், இல்லைன்னா? இறப்பும் அப்படித்தான். சாகிற வரை நம்ம மனசுக்கு திருப்தியா நாம வாழ்ந்துட்டாலே போதும். வேற எதுவும் வேண்டாம்.”
வசதியை மட்டுமே மையப்படுத்தி அடுத்த கட்டத்தை நோக்கி மெல்ல நகரும் ஓடைகளாய் இருந்தது எங்கள் வாழ்க்கை. இந்த ஓடைகளையெல்லாம் போகிற போக்கில் தனக்குள் இணைத்தபடி ஆர்ப்பரிக்கும் ஆறாகப் பாய்ந்தது பரமு சித்தப்பாவின் வாழ்க்கை.
“சண்முகம், சித்தப்பா ரூமுக்குள்ள இருந்து உனக்குத் தேவையான புத்தகங்கள் ஏதாவது இருந்தா எடுத்துக்கோடா” என்று அம்மா சொன்னாள். கொல்லைப்பக்கம் இருக்கும் பரமு சித்தப்பாவின் அறைக்குள் நாங்கள் யாரும் அவ்வளவாக நுழைந்தது கிடையாது. ஒற்றை அறை. அவருக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடும் என்று பெரும்பாலும் அதைத் தவிர்த்தோம். அவருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தது. அந்த அறையில் இருந்த அலமாரியில் கொஞ்சம் புத்தகங்கள் இருக்கும் என்றும் தெரியும். ஆனால், இப்போது பார்க்கும்போது அவையெல்லாம் ஆச்சரியப்படும் விதமாக ஒன்றுக்கொன்று முரணான புத்தகங்கள். மு.வ எழுதிய திருக்குறள் உரை, ரெக்ஸின் கவர் போட்ட பைபிள் புதிய ஏற்பாடு, சாண்டில்யனின் கடல்புறா, மாக்ஸிம் கார்க்கியின் தாய், தேவனின் துப்பறியும் சாம்பு, சா.கந்தசாமியின் சாயாவனம் என்று கலவையாக. அவர் கைப்பட குறிப்புகள் எழுதிய ஒரு சிவப்பு டைரி ஒன்று இருந்தது. டைரியின் முதல் பக்கத்தில் பேனாவால் சண்முகம் வளர்மதி என்று கொட்டை எழுத்தில் கேள்விக்குறியுடன் கிறுக்கியிருந்தார். வளர்மதி, தூரத்து சொந்தமான மாணிக்கம் மாமாவின் கடைசிப் பெண். டிகிரி முடித்து ஏதோ கம்பெனியில் வேலை செய்கிறாள். கடந்தமுறை நான் சென்னை வந்த போது அம்மா, “மாணிக்கம் கிட்ட வளர்மதிய உனக்காக பேசவா. அப்பாவோட ஆசையும் அதான்” என்று என்னிடம் கேட்க, நான் கோபப்பட்டு சத்தம் போட அன்று பெரிய பஞ்சாயத்து ஆகிவிட்டது. அப்பா இறப்பதற்குமுன் பரமு சித்தப்பாவிடம் என்ன சொல்லியிருப்பார் என்று இப்போது எனக்குத் துலங்கியது. சித்தப்பாவின் அறையிலிருந்து அவரது டைரியை மட்டும் எடுத்துக் கொண்டேன். வெளியே வந்ததும் திடுதிடுப்பென்று அம்மாவிடம் சென்று, “அம்மா, ஈஸ்வரி மேல படிக்கட்டும். எவ்வளவு செலவானாலும் கவலைப்படாதே. அப்புறம், எப்பவும் சாவுக்கு மட்டுமே வீட்டுக்கு வரேன்னு அழுதியே. அடுத்த முறை கல்யாணத்துக்கு வரேன்” என்றேன்.
“என்னடா சொல்ற?” அதிர்ச்சியானாள் அம்மா.
“வளர்மதிய கட்டிக்க எனக்கு சம்மதம்ன்னு மாணிக்கம் மாமா வீட்ல சொல்லிடுங்க”. அம்மா முகத்தில் சாமியையே நேரில் பார்த்தது போல பளிச்சென்று ஒரு சந்தோஷம். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், “சரி கண்ணு, சரிடா.. சண்முகம்” என்று விம்மினாள்.
பத்தாம் நாள் சித்தப்பாவின் காரிய சடங்கு முடிந்ததும் அம்மா என்னிடம், “சண்முகம், மொட்டை மாடில காக்காவுக்கு சாதம் வச்சிட்டு வாடா” என்றாள். கூட்டுசாதத்தை மொட்டைமாடி கைப்பிடிச் சுவர் மீது வைத்து விட்டு நகர்ந்து, கண்ணைப் பறிக்கும் உச்சி வெயிலை மறைக்கும்படியாக இடது கையை நெற்றியில் அரணாக வைத்தபடி ‘கா..கா’ என்று கத்த முற்பட்டபோது சத்தம் வராமல் தொண்டைக்குழியில் ஏதோ அடைத்தது போல் இருந்தது. துக்கம் தாளாமல் கீழே சரிந்து அமர்ந்து அடிவயிற்றிலிருந்து பெரும் சத்தமாக ‘பரமு சித்தப்பா!’ என்று உரக்கக் கதறினேன்.