இணைய இதழ் 101சிறுகதைகள்

உயிர்த்துடிப்பு – பரிவை சே.குமார்

சிறுகதை | வாசகசாலை

காலையில அம்மா சொன்ன, ‘சாலி அயித்தக்கி ரொம்ப முடியலடா’ என்ற வார்த்தைகள் மனசுக்குள் சுத்திச் சுத்தி வந்தன. சாலி அயித்தை அப்பாவின் அக்கா, உள்ளூரில் கட்டிக் கொடுக்கப்பட்டவள் அதனால் மற்ற அத்தைகளைவிட இவளிடம் மிகுந்த நெருக்கம்.

‘அதென்ன சாலின்னு கூப்பிடுறீங்க… அயித்தையோட பேரு சாவித்திரிதானே’ எனச் சின்ன வயதில் கேட்டபோது, ‘சின்ன வயசுல சாவித்திரின்னு நீட்டி முழங்காம சாலி… சாலின்னு கூப்பிட்டுப் பழகிட்டாங்க. அதுவே பேராயிருச்சு’ என அம்மா விளக்கமாய் சொன்ன போது, ‘சாவித்திரியைச் சுருக்கினா சாவின்னுதானே கூப்பிடணும், சாலின்னு ஏன் கூப்பிட்டாங்க?’ என எதிர்க்கேள்வி கேட்டபோது ‘நம்ம பாப்பாயா பேரு என்ன பாப்பாவா…? அது பேரு கோமதின்னு யாருக்காச்சும் தெரியுமா..? அப்படித்தான் இதுவும்… ரொம்ப யோசிக்காதே. இத்தன வருசமா சாலிதான்… போய் விளையாடு’ என விரட்டியிருக்கிறாள்.

அயித்தை கண்மண் தெரியாத பாசக்காரி… எதுக்கும் கோபப்படாது… அதுக்கு அஞ்சு பிள்ளைங்க… மூணு ஆண், ரெண்டு பெண். எல்லாம் எனக்கு மூப்புத்தான். நான் அம்மாவுக்கு கல்யாணமாகி ஏழு வருசத்துக்கு அப்புறந்தான் பிறந்தேன். எனக்குப் பின்னே ஒரு தம்பி, ரெண்டு தங்கச்சிங்க. எந்தம்பிக்கு வரமா வந்து பிறந்ததுன்னு என்னைய கீழ வீடாம தூக்கி இடுப்புல வச்சிக்கிட்டே வேலை பார்க்கும். எந்தம்பி, தங்கச்சியள அப்படி அது கொண்டாடி நான் பார்த்ததில்லை.

எப்ப நான் ஊருக்குப் போனாலும் அது வீட்டுல நாட்டுக் கோழி அதுவும் வெடக்கோழியா ரசம் வச்சி, சாப்பிடச் சொல்லும். பக்கத்தில் உட்கார்ந்து தெரக்கி வச்சிருக்கிற கோழிக்கறியில நல்ல கறியாகப் பார்த்து எடுத்து வைத்துச் ‘சாப்பிடு சாப்பிடு’ எனச் சொல்லிக் கொண்டே இருக்கும். ரசத்துக்குள் கிடக்கும் ஈரலையும் குட்டிக்குட்டி முட்டைகளையும் தேடி எடுத்து எனக்கு வைத்துச் ‘சாப்பிடு உடம்புக்கு நல்லது’ என்று சொல்லும்.

இப்போதெல்லாம் வாழ்க்கையின் போக்கில் பயணிக்க ஆரம்பித்து விட்டதால் ஊருக்குச் செல்வது அத்திபூத்தாற்போல் ஆகிவிட்டது. எல்லாரிடமும் போனில்தான் பேச்சு. அயித்தையிடமும் அப்பப்ப பேசுவேன். ரொம்பச் சந்தோசமாப் பேசும்.

அயித்தைக்கு எப்பவும் அப்பா மேல பாசத்துடன் மரியாதை இருக்கும். அவரு கோபப்பட்டுப் பேசுனாலும் அது எதுவும் பேசாது. அம்மா கூட ‘ஏந்தாச்சி அவரு உன்னய அக்கான்னு பாக்காம திட்டுறாரு. நீ என்னடான்னா பேசாம உக்காந்திருக்கே. இப்படி இருக்காதே’ன்னு சொல்லும். அப்பக் கூட அயித்தை, ‘எந்தம்பிதானே பேசுறான், விடு… இதுக்கு நா பதில் சொல்லப் போனா வளந்துக்கிட்டே போகும்’ எனச் சிரிக்கும். அப்பாவும் அன்னைக்கு சாயந்தரமோ அடுத்தநாள் காலையிலையோ கோபத்தை விட்டுட்டு அக்கான்னு அயித்தை வீட்டுக்குப் போயிருவாரு. தூரத்துல இருக்க அயித்தைங்க கூடல்லாம் அவ்வளவு ஒட்டு உறவு இல்லைன்னாலும் சாலி அயித்தை கூட மட்டும் எப்பவும் சண்டை சச்சரவு இருந்ததில்லை. அதுக்கு முக்கியக் காரணம் அயித்தையோட புரிதல்தான்.

கல்யாணத்துக்கு அப்புறம் ஊருக்குப் போகும் போதெல்லாம் கன்னத்தை கையால் வழித்து நெட்டி முறிக்கும். ‘எம்புள்ளக்கி எம்புட்டுத் திட்டி இருக்கு பாரு… ராத்திரிக்கி உப்பு, மிளகாய் வச்சி திட்டி சுத்தி முச்சந்தியில வச்சிக் கொளுத்தி விடு. மறந்துறாதே’ என அம்மாவிடம் ஒருமுறைக்கு இருமுறை சொல்லிட்டுத்தான் போகும். ‘ஏந்தே, நா என்ன சின்னப் பிள்ளையா’ எனச் சிரித்தால் ‘எங்களுக்கு நீ எப்பவும் சின்னப்புள்ளதான்’ எனப் பதில் சொல்லும்.

கோபுரக்கரை சேலை மட்டும்தான் கட்டும். அதுவும் காரைக்குடி லெட்சுமி ஆச்சி கடையில மட்டும்தான் வாங்கும். மற்ற சேலைகள் வாங்கிக் கொடுத்தால், ‘இதெல்லாம் நான் கட்டமாட்டேன். சரி புள்ள ஆசையா வாங்கியாந்துட்டே… இல்லாத யாருக்கிட்டயாச்சும் கொடுக்கலாம். அவ மனசு புள்ளய வாழ்த்துமுல்ல’ என ஓட்டைப் பல் தெரியச் சிரிக்கும். பின் கொசுவம் வச்சி நாட்டுக்கட்டுத்தான் கட்டும்.

வயல் வேலையில அதை மிஞ்ச ஆள் கிடையாது. ஆம்பளக் கணக்கா எல்லா வேலையும் பார்க்கும். எனக்குத் தெரிய எங்கூர்ல எரவா மரத்துல தண்ணி எறரச்ச ஒரே பொம்பள ஆளு அது மட்டுந்தான். அதுவும் எங்க மாமா கூட சரிக்குச் சமமா நின்னு ரெண்டு பிள்ளையார், மூணு பிள்ளையார் தண்ணி விடாம எறச்சி ஊத்தும். மாமாவும் அயித்தைதான் உலகம்ன்னு வாழ்ந்தார். யார் என்ன கேட்டாலும், ‘சாலி என்ன சொல்லுதோ அதுதான்’ என்று சொல்வதை வழக்கமாக வைத்திருந்து போய்ச் சேர்ந்து விட்டார்.

ரெண்டு வருசத்துக்கு முன்னால அதுக்கு முன்பக்கப் பல் ரெண்டு விழுந்திருச்சு. போன்ல வீடியோவுல பார்த்து ‘ஏந்தே… இந்தப் பல்லக் கட்டலாமுல்ல’ என்றதும். ‘ஆமா, இப்ப அதக் கட்டிக்கிட்டு எங்க சிங்காரிச்சிப் போப்போறோம் சொல்லு.’ எனச் சிரித்துவிட்டு ‘உங்கிட்ட படம் காட்டுறோம்… எல்லாருக்கிட்டயுமா காட்டுறோம். அது பாட்டுக்கு இருக்கட்டும்’ என மீண்டும் சிரித்தது. அதோட ஓட்டைப்பல் சிரிப்பைப் பார்ப்பதற்காகவே அது சிரிக்கும் விதமாக எதையாவது சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன்.

அந்த அத்தைக்குத்தான் உடல் நலமில்லை. அதுவும் ரொம்ப முடியலன்னு ஊர்ப்பக்கம் இருந்து சொன்னால் இறுதிக் கட்டத்தை நெருங்கியாச்சுன்னு அர்த்தம். அத்தையின் நினைவுகள் மனமெங்கும் நிரம்பி நின்றன. அலுவலகத்தில் இருக்கும் போதெல்லாம் வெடித்து அழ வேண்டும் போல இருந்தாலும் அடக்கிக் கொண்டேன்.

வீட்டுக்கு வந்து வேலைகளில் மூழ்கிப் போனேன். அம்மாதான் அழைத்தாள்.

‘உன்னயத்தான் நெனச்சிக்கிட்டே இருக்கும். சின்னப் புள்ளயில எருத் தூக்கிட்டுப் போனாலும் தண்ணி தூக்கப் போனாலும் இடுப்புல கங்காருக்குட்டி மாரி உன்னயத் தூக்கிக்கிட்டேதான் போவும்’ என்று உடைந்த குரலில் அம்மா சொன்னபோது, ‘எனக்குத் தெரியாதம்மா’ என்றேன் நானும் உடைந்த நிலையில்.

‘தெரியுதுல்ல… இன்னய்க்கா நாளய்க்கான்னு இருக்கு… ஜீவன்ல காத்து மட்டும் இருக்கு. யார் போய் கூப்பிட்டாலும் இமுக்குப் பொடுக்குன்னு எந்தச் சத்தமும் இல்லை. உசிரோட ஒரு தடவ வந்து பாத்துட்டுப் போ.’

‘அம்மா… எனக்கு அயித்தையப் பாக்கணுமின்னு ஆசைதான். எல்லாத்தயும் போட்டது போட்டபடி போட்டுட்டு ஓடியார முடியாதுல்ல. காலயில ஆறு மணிக்கெல்லாம் எல்லாரையும் கெளப்பி விடணும். நானில்லாம எப்படிம்மா… அதுபோக இப்ப ஆடிட்டிங் சமயம், ஆபீஸ்ல அவ்வளவு சீக்கிரம் லீவு கொடுத்திட மாட்டாங்க.’

‘எல்லாமே சொமயின்னு நெனச்சா சொமதான்… அதுக்காக நம்மமேல பாசமா இருந்தவங்களுக்கு ஒண்ணுன்னா அந்தச் சொமயத் தூக்கிப் போட்டுட்டு வரத்தான் வேணும். செத்ததுக்கு அப்புறம் எப்புடியும் வரத்தானே போறே. ஊரு ஒப்புக்கு ஒரு மாலயோ, சேலயோ வாங்காந்து போட்டு ரெண்டு சொட்டுக் கண்ணீர் வீட்டாப் போதுமா. அந்த லீவ இப்பப் போடு… போறதுக்கு முன்னால அந்த மனுசி உன்னையப் பாத்து கன்னத்த வருடிக் கொஞ்சாட்டியும் பக்கத்துல நிக்கிறப்போ உன்னோட வாசத்த நல்லா இழுத்துப்பாதானே’ அம்மா அழுதே விட்டாள்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியல. ‘சரி, காலயில கிளம்பி வர்றேன்’ என்று சொல்லிப் போனை வைத்துவிட்டு வாய்விட்டு அழுதேன்.

காலையில் எல்லாரையும் கிளப்பி விட்டுவிட்டு நானும் கிளம்பினேன்.

மதியம் போய் இறங்கியபோது பேருந்து நிலையத்துக்குத் தம்பி வந்திருந்தான்.

‘அயித்த எப்படிடா இருக்கு..?’ என்றதற்கு ‘இப்பவோ அப்பவோன்னு’ என்று சொன்னவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. என்னாலும் எதுவும் பேசமுடியவில்லை.

வீட்டுக்கு போனதும் அம்மா ஒப்பாரி வைத்தாள்.

‘அப்பா அங்கதான் பக்கத்துலயே உக்காந்திருக்கார். நாங்கூட இப்பத்தான் வந்தேன்’ என்றாள். தம்பி மனைவி சாப்பிடச் சொல்லி நிற்க, காபி மட்டும் போதும் என்றேன்.

‘அம்மா எல்லாரும் வந்துட்டாங்களா…?’ என்றேன்.

‘ம்… எல்லாரும் ராத்திரியே வந்துட்டாக… அந்த மனுசி திடீர்ன்னு விழுந்தா, யாருக்கு என்ன கெடுதல் செஞ்சா? உசுரு போவாம இப்புடி இழுத்துக்கிட்டுக் கெடக்கு’ என்று அம்மா சேலை முந்தானையில் மூக்கைச் சீந்தினாள்.

எனக்கும் அழுகை வந்தது. அழுகையை அடக்கியபடி ‘ராசு மச்சான் வந்துருச்சா..?’ எனக் கேட்டேன்.

அம்மா என்னையவே பார்த்துட்டு தலையைத் தாழ்த்திக் கொண்டே ‘ம் வந்துட்டான்’ என்றாள்.

நான் எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தேன்.

‘வா போவோம். நீ வர்றாயின்னு சொல்லிட்டுத்தான் வந்தேன்’ என எழுந்தாள்.

‘அயித்த செல்வ மாமா வீட்டுலதானே இருக்கு’ எழாமல் கேட்டேன்.

‘இல்ல அதோட ஆச ராசு வீட்டுலதான் கடேசியில கெடத்தணுமின்னு… அதான் முடியாம விழுந்ததும் அவமூட்டுக்குத் தூக்கிப் போயிட்டாவ. ஆமா, தெக்க ஒருத்தன் வடக்க ஒருத்தானாவா இருக்கானுவ. பக்கத்துப் பக்கத்து வீடுதானே எங்க கெடந்தா என்ன… ஆளுக பொலக்கம் ரெண்டு வீட்டுலயுந்தானே’

நான் பேசாமல் அமர்ந்திருந்தேன்.

‘வா’

‘நான் வரலம்மா… ராசு மச்சான் வீட்டுக்கு நான்…’ பேசத் தடுமாறினேன்.

‘பழசெல்லாம் இப்ப நெனச்சிக்கிட்டு… உன்னோட ஆசமாரி எல்லாருக்கும் ஆச இருக்கத்தான் செஞ்சிச்சி. ஆனா, அவன் படிக்கலன்னு உங்க அயித்ததானே வேணாமுன்னு நின்னுச்சு…’ அம்மா வார்த்தையை முழுங்கி முழுங்கிப் பேசினாள்.

‘நீங்கள்லாம் அடிச்சிப் பேசியிருந்தா அது மாறியிருக்கும். ஆனா, உங்க மனசுக்குள்ளயும் வேலை வெட்டி இல்லாம ஊர் சுத்துற ராசு மச்சான் வேணான்னுதானே இருந்தீய…’

‘இப்ப அதெல்லாம் எதுக்கு…?’

‘நாங்க விரும்புனோம்மா… எங்க விருப்பத்துக்கு கூட நீங்க யாரும் மனசு எறங்கல. எல்லாத்தயும் அயித்த மேல தூக்கிப் போட்டு அது எங்கிட்ட அதெல்லாம் வேண்டாம். உன்னோட வாழ்க்கை நல்லாயிருக்கணும்ன்னு சிரிச்சிக்கிட்டே சொல்லுச்சு. அதுக்கு நீங்கதானே காரணம். அந்த மனுசி வருத்தப்பட்டிருக்காதுன்னு நினைக்கிறீங்களா…?’

‘ஏன்டி, எப்ப இதெல்லாம் பேசுறே. இருவது வருசத்துக்கு அப்புறமா… எது விதியோ அதுதான் நடக்கும். நாம நெனச்சதெல்லாம் நடந்துருதா என்ன…’

‘உனக்குத் தெரியுந்தானே… அதுக்கு அப்புறம் ராசு மச்சானும் நானும் இதுவரைக்கும் நேருக்கு நேரா நின்னு பேசுனதில்ல. ஏன் பாத்துக்கிட்டது கூட இல்ல. ஏதோ சொல்லி வச்சமாரி நான் வர்றப்போல்லாம் அது வராது, அது வர்றப்போ நான் வரமாட்டேன். இப்ப எப்படி அது முன்னால.. என்னால முடியாதும்மா’

‘உனக்கு இப்ப ராசு முக்கியமா..? உங்க அயித்த முக்கியமா..? அந்த மனுசிய உயிரோட பாக்குறதுக்கு உனக்கு பழசெல்லாம் மனசுல வந்து போ வேணான்னு சொல்லுதுன்னா வராதே…’

‘பாழாப்போன மனசு ராசு மச்சான் மேல வச்சிருந்த அன்பை இன்னக்கி வரக்கிம் எனக்குள்ள அள்ளி வீசிக்கிட்டே இருக்கேம்மா… எப்ப மாலையில் யாரோ பாட்டைக் கேட்டாலும் என்னால ஒரு சொட்டு கண்ணீர் விடாம இன்னக்கி வரக்கிம் கேக்க முடியலயேம்மா. படிக்காத, ஊர் சுத்தி இன்னக்கி நல்லாத்தானேம்மா இருக்கு. ஏம்மா, அம்புட்டுப் பாசமா இருந்த ரெண்டு குடும்பமும் எங்க கல்யாணத்துக்கு மட்டும் எதிர்ப்பை வெளியில காட்டாம எதிர்த்தீங்க’

அம்மா பதில் சொல்லாமல் நின்றாள்.

நானும் பேசாமல் உட்கார்ந்திருந்தேன்.

‘சரி, நான் போறேன்’ எனக் கிளம்பினாள்.

‘அக்கா, பழசைப் பேசி இன்னக்கி என்னாகப் போவுது. உன்னைய தன்னோட மகளாட்டம் பாத்த மனுசி சாகக் கெடக்குறா… விழுகுறதுக்கு மொத நாள்தான் எனக்கு எம்புள்ளயப் பாக்கணும் போல இருக்குடா. அவள வந்து ஒரு எட்டு என்னயப் பாத்துட்டுப் போச் சொல்லுவேன்னு சொன்னுச்சு. வாக்கா போவோம்’ என்றான் தம்பி.

எழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டு அவனுடன் நடந்தேன்.

யாரையும் பார்க்காமல் தலை குனிந்தபடியே வீட்டுக்குள் போனேன்.

என்னைச் சீராட்டி வளர்த்த, எனக்கு ஊட்டி ஊட்டி வளர்த்த, ‘எம்மவன் உனக்கு வேணாம் நீ சீமை ராஜாத்தி ஒரு ராஜகுமாரன் உன்னயக் கட்ட வருவான்’னு மனசுல வருத்தமும் முகத்துல சிரிப்புமாச் சொன்ன மனுசி, வெட்டப்பட்ட மரம் போல கிடந்தாள். சுற்றிலும் மனிதர்கள்… அவள் முழிப்பாள் என்று காத்திருக்கிறார்களா…? இல்லை எப்போ போவாள் எனக் காத்திருக்கிறார்களா…? எதுக்கோ காத்திருக்கிறார்கள். அவளின் உயிர் கூட எதுக்கோதான் காத்திருந்தது. ஒருவேளை, ‘உன்னை என் மருமகளாக்கி இருக்க வேண்டும். தப்புப் பண்ணிட்டேன் மன்னிச்சுக்க’ எனச் சொல்லக் காத்திருப்பாளோ…? என நினைத்து அவளின் தலைக்கு அருகில் அமர்ந்து ‘அயித்தை’ என்றேன்.

எந்த உணர்ச்சியும் இல்லை…

சப்தம் இல்லை.

என்னைப் பார்த்ததும் எல்லாரும் அழுதார்கள்.

‘எதுக்கு அழுறீங்க. சுத்தி உக்காந்து அழுறதை நிறுத்துங்க. எங்க அயித்தக்கி அழுறது பிடிக்காது.’ எனக் கத்தினேன்.

ஒரே அமைதி. மயான அமைதி என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்தில் இந்த வார்த்தை எதற்கு…?

‘அயித்த…’

‘உன்னோட புள்ள வந்திருக்கேன்…’

‘எங்கே ஓட்டைப்பல் தெரிய சிரி பாப்போம்…’ என்றபடி அதோட வாயை இழுத்தேன்.

சீராக வந்து கொண்டிருந்த மூச்சுக் காற்று சற்று வேகமாக வருவது போல் தெரிந்தது.

ஹீனமான ஒரு சப்தம்.

கை விரல் துடித்தது.

அழுகையோடு பிடித்தேன்.

அயித்தை இழுத்து மூச்சு வாங்கினாள்.

அம்மா சொன்னது போல் என் வாசத்தை இழுத்துக் கொண்டாள் போலும்.

அதுவே போதுமென நினைத்தாள் போலும்.

‘அயித்த’ எனக் கத்தினேன்.

எல்லாரும் உள்ளே வந்தார்கள்.

அயித்தையின் கையை ஒருத்தர், கழுத்து நரம்பை ஒருத்தர், உள்ளங்காலை ஒருத்தர் எனப் பலர் தொட்டுப் பார்த்தார்கள்.

எனது காதருகே, ‘புவனா… உங்கயித்த நம்மள விட்டுப் பொயிட்டா’ என்ற குரல் கேட்டு… அந்தக் குரல்…. நான் ரசித்த குரல்… மயங்கினேன் சொல்லத் தயங்கினேனை எனக்காகப் பாடிய குரல்… எப்படி அதை மறப்பேன்… வேகமாகத் தலை தூக்கிப் பார்த்தேன்.

ராசு மச்சான் கண்ணீருடன்.

உடைந்து அழுதேன்…

அயித்தைக்காகவா… ராசு மச்சானுக்காகவா…?

அயித்தைக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். அவள் இதழில் புன்னகை ஓடியிருந்தது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button