எனது வேதனகளை
மொழிபெயர்த்து பகர்கிறது
அறையின் ஐந்தாவது சுவர்
வெறுமையின் கோரம் கடித்த
தனிமையின் மீது பீறிடுகிறது ரத்தம்
நிகழின் தூக்குமேடையில்
பிசுபிசுத்தபடி நிற்கிறது
நிர்வாணம் கலையாத நிழல்
காலைச் சுற்றி
கழுத்தைக் கௌவிய மௌனத்திக்கு
குரல்வளைக் குருதிக்கு முன்னேறுகிற அவசரம்
கடன் வாங்கியேனும் கழிக்க முனைந்து
மூளைக்குள் தடதடக்கும்
மகளின் கணிதப் பாட நேரலை
எங்கோவான நாயின் குரைத்தலில்
திரும்பிப் பார்த்த கண்களுக்கு
கொஞ்சம் காற்றிலசைகின்றன
சரக்கொன்றை மலர்கள்
***
மழையண்மை
————————-
எல்லா மழையும் அருட்கொடை தான்
மாறுதலாய்
காளானைப் பிரசவித்த
அண்மை மழையின் தாய்மை
நம்பிக்கையை கூட்டிற்று
குழந்தையின் இதழ்களை
பிறைநிலவாக்கிய கடவுள்
நட்சத்திரங்களை கண்களில் மினுக்கவிட்டதில்
தெரிகிறது பேதமின்மை
ஒன்றைவிட பெரிதில்லை
துளிகளில் ஒன்று
ஒன்றுக்காக
ஒன்று இல்லை
உறுதியில்லை ஒன்றுக்குமெனில்
ஒன்றில்லாமல் ஒன்றில்லை
ஒன்றும் ஒன்றும் ஒன்றி
சொல்லிக் கொண்டிருக்கிறது
ஒன்றை
உணருகையில்
இதமான சூடு ஒன்று
பரவசப்படுத்துகிறது
உள்ளுக்குள் பரவும் ஏகாந்தத்தை
தூரத்து மழை
இப்போது பெய்கிறது
என்னை நனைத்தபடி
***
கொட்டித் தீர்த்த மழையில்
ஒளிர்கிறது
வண்ணங்களின் வன்மம்
புயல்காற்றின் ஆதுல்ய சிரிப்பில்
அடையாளமாகியிருக்கிறது
இலைகளை இழந்த மரம்
நகங்களின் அதி தீவிரம்
கீறலிட்டிருக்கிறது குயிலின் குரலை
நாயின் குடலை பிதுக்கி
நடுச்சாலையில் சிதறடித்திருக்கிறது
தறிகெட்டு ஓடிய மஞ்சள்பேருந்து
வடநாட்டு வாகனங்கள் மலிந்த
மோசமான நிலப்பரப்பில்
தேவையாக இருக்கிறது மேலுமாக
வேகத்தடைகள்
கணநேரப் பாய்ச்சலில்
புதிய விண்கலம் தரையிரங்கிய காலத்தில்
கண்மறைக்கும்
வெளிச்சத்தின் ஜாலம்.
***