புல்லாங்குழல் தொண்டை

புல்லாங்குழல் தொண்டை

 

சேப்பாக்கம் ரயில் நிலையம்

வேளச்சேரி மார்க்கம் நோக்கி நான்.

இரண்டு மூன்று படிகளாகத் தாண்டி

வந்ததில் மூச்சுவாங்க

கடற்கரை மார்க்கத்தில் வந்தமருகிறான் அவன்.

கடைசி ரயில் வந்தபாடில்லை

புல்லாங்குழல்கள் முளைத்திருக்கும்

மரத்தை சாய்த்து வைத்துவிட்டு

கடற்கரையில் அலைந்த

அலுப்பில் கண்கள் சொருகினான்

புல்லாங்குழல்களின் தொண்டைகளோடு அவனது தொண்டையும் அசதியில்

அயர்ந்து விட்டது

யாருமற்ற ரயில் நிலையத்தில்

அவனது உறக்கத்தினுள்

நுழைந்த எனக்கு

அவனது குரல்வழிப் பாதை பெருநகரில் ஆட்கள்

புழக்கமற்ற சப்வேவாக

உருமாறித் தெரிகிறது

உறக்கம் கலையும் முன்

எல்லா புல்லாங்குழல்களையும்

விற்று அவனது சட்டைப்பையில்

சில்லரைகளை நிரப்பத் தயாராகிறேன்

கிராமத்திலிருந்து வந்து

சொறியாகிப் போன

நாயொன்று

முதன்முதலாக இந்த

சப்வேக்குள்தான் குட்டிகளை

ஈன்றிருக்கிறது

புல்லாங்குழல் மரத்தோடு சப்வேக்குள்

நுழைகையில்

சிறுத்த குரல்வளை சங்கில்

குட்டி நாய்கள் என்னைப் பார்த்து குரைக்கின்றன

விடிய விடிய வாசித்ததில்

சமாதி பார்க்க வந்த சனங்கள்

மனம் திருந்தி புல்லாங்குழல்கள்

வாங்க முன்வந்தனர்

திடீரென ஓங்கி ஓங்கி இருமி விழித்தான்

ரயிலும் அலறி வந்தது

சனங்களும் நாய்களும்

தெறித்து ஓடினர்

எல்லா புல்லாங்குழல்களையும்

அள்ளிக்கொண்டு

ரயிலேறி போய்விட்டான்…

 

71 E

 

தோளில் பையோடும்

கையில் உண்டியலோடும்

பச்சை வண்ண டீ-சர்ட் அணிந்தவர்

பேருந்தினுள் ஏறினார்

எல்லா இருக்கைகளும் நிரம்பி

ஒரு சிலர் மட்டுமே

நின்றிருந்தனர்

எல்லோரிடமும் பாலச்சந்திரன்

படம் போட்ட துண்டு பிரசுரத்தைத் தந்துவிட்டு

ஈழ இனப்படுகொலை நினைவேந்தலுக்கு வர

வேண்டுகிறார்

இந்தியாவைத் திட்டுகிறார்

ஆண்ட அரசுகள்

ஆளும் அரசுகளை

சாடுகிறார்

மோடியின் சர்வாதிகாரத்தை கிழிக்கிறார்

புதியக் கல்வி கொள்கை, நீட் தேர்வை எதிர்க்கச்

சொல்கிறார்

ஆதார் எண்ணை எவனுக்கும்

தராதே என்கிறார்

விவசாயத்தைக் காப்பாற்றுங்கள்

என்கிறார்

கல்விகள் காசாக்கப்பட்டு விட்டன என்று வருந்துகிறார்

கீழடி ஆய்வில் கிடைத்த நமது

பண்பாட்டு அடையாளங்கள்

மறைக்கப்படுவதாகச்

சொல்கிறார்

பணமில்லா பரிவர்த்தனையின்

பின்னாலிருக்கும் விஷத்தனத்தை

தெளிவாக எடுத்துரைத்து

ஆதங்கமாகிறார்

டிஜிட்டல்களின் வருங்கால

சதித்திட்டங்களை அம்பலப்படுத்துகிறார்

உங்கள் பிள்ளைகளை

பன்னாட்டு நிறுவனங்களிடம் கைக்கூலிகளாக

ஆக்கிவிடாதீர்களென

கெஞ்சுகிறார்

பயணிகள் ஏறியிறங்க

வழிவிட்டு நின்று பேசத் தொடங்குகிறார்

நாம் காயடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்

கேள்விகள் எழுப்புங்களென அவர் ஆவேசமாக தொடரும் போதே

“இன்னும் ஒலியளவு ஏற்றினால் உங்கள் செவிப்பறைகள் பாதிப்படையும்” என்ற

ஸ்மார்ட் போன்களின் எச்சரிக்கையையும் மீறி

இயர்போன்களுக்கு சத்தங்கள் கூட்டி வைக்கப்படுகிறது

நடத்துனருக்கும் ஓட்டுநருக்கும் அவருடனேயே போகவேண்டுமென்ற

ஆசைதான்

‘பணிமனையில் பேருந்தைத் தேடுவார்கள், வீட்டுமனையில் எங்களைத் தேடுவார்களென’ மாறிமாறி நினைத்துக் கொண்டே

கடைசி நிறுத்தத்தில் நிறுத்தினர்

71 E, TN 01 n 7628  என்ற

பேருந்து எண்ணைக் குறித்தக் கொண்ட பச்சை டீ-சர்ட்

அடுத்த முறை துண்டு பிரசுரங்கள் அதிகம் வேண்டுமென

போனில் பேசியவாறே

மக்களோடு மக்களாய்

ஆகிவிட்டார்…

 

**முத்துராசா குமார்**