இளமையின் ஆன்மா
அந்த வீட்டில்
அவள் இளமையின் ஆன்மா
நடமாடிக் கொண்டிருக்கிறது
இரட்டைப் பின்னல்
காதில் வளையம்
ஊறுகாய் மணம் வீசும்
தூக்குப் போனி
மருதாணி அப்பிய
உள்ளங்கை வாசனை
அந்த வீட்டின் மூலையில்
இப்போதும்
பாய் விரிக்காமல்
படுத்திருந்த தரையில்
அவள் கனவுகள்
புதைந்திருக்கின்றன
வீடு கட்டும்போது
ஒவ்வொரு செங்கலாக
தொட்டுத் தொட்டு
வளர்ந்தவள்
குடம் குடமாக நீருற்றி
அதைக் குளிர வைத்தவள்
குப்பை மேட்டில்
வளர்ந்திருந்த
தக்காளிச் செடிகளைப்
பிடுங்கி வந்து
நட்ட நாலடியை
தோட்டம் என்றவள்
பிச்சிப் பூ பதியம் போட்டு
பூ பறித்தவள்
மொட்டைமாடியில்
நட்சத்திரங்களை எண்ணி எண்ணி
கணக்கு வைத்தவள்
தானே முளைத்த வேப்பமரத்தில்
கூடு கட்டி
குஞ்சுகள் பறக்கும்போதெல்லாம்
படபடப்புடன்
கை அசைத்தவள்
வெளியில் நின்று
அந்த வீட்டை
அண்ணாந்து பார்க்கிறாள்
வாசலில்
விலையுயர்ந்த வெளிநாட்டு நாய்களின்
உறுமல்
இரும்பு கேட்டில் ஏறி நின்று
தெத்துப்பல் தெரிய
ஆடும் சிறுமி
கை அசைத்து அழைப்பது யாரை?
மெல்ல அவள் திரும்பிப் பார்க்கிறாள்
வீடுகளின் மதிப்பை
முத்திரை பதித்த பத்திரங்களில் சுமந்திருக்கும்
அந்த வீட்டில்
இனி…
அவள் இளமையின் ஆன்மா
தனியாக அலையாது.
•
அவள்களின் தேசம்
ரவிவர்மாவின் தூரிகை மாடத்தில்
அவள்கள் எட்டிப் பார்க்கிறார்கள்
பூரணபொற்குடத்தில் கால்கொலுசு சிணுங்குகிறது
ஹைபுன் விருட்சத்தில் மின்மினிப் பூக்கள்
நவீன படைப்புலக பிரம்மாக்களின் புத்திரிகள்
நீலியின் முகவரியில் வெளிவருகிறார்கள்
மணிப்பூரில் நிர்வாணப் பிரளயம்
அதிகாரப் பொந்துகளில் பதுங்கி இருக்கும்
பிரம்மாவின் ராட்சதக்குறியைச் சிதைக்கிறது
துப்பாக்கி ஏந்திய பூலன்தேவிகள்
இரவுகளில் விழித்திருக்கிறார்கள்
கவிதைப் பாம்புகள் சட்டைகளை உறிக்கின்றன
நதி நட்சத்திரம் நிலவு பூமி
பெயர் தெரியாத வனத்தின் பூக்கள்
எல்லாமும் பெண்ணாகப் பிறக்கும் தேசத்தில்
கண்களைக் கட்டிக்கொண்ட காந்தாரி
கெளரவப் புத்ரிகளைத் தேடுகிறாள்
செங்கோட்டையில் பறக்கும் மூவர்ணக்கொடி
வானத்தில் தலைகீழாகத் தொங்கும்
வீர்ர்களின் அணிவகுப்பு
பிரதமர்கள் கைகுலுக்கி கொள்கிறார்கள்
இந்திய வாசலின் கதவுகள் திறக்கின்றன
அக்னிச் சிறகுடன் உயிர்த்தெழுந்த சீதை
ராஜ்பவனில் மறைந்திருக்கும் திரெளபதி
மர்முவின் கைப்பிடித்து நடந்து வருகிறாள்
குடவோலையுடன் பவனி வரும் சுதந்திரத் தேர்
பறையிசை முழக்கத்தில் அவள்களின் நடனம்
அடங்கிப் போகிறது அயோத்தி
ஜனகண மனகதி… ஜெயஹே.
•
இருத்தலின் நாடகம்
நீ இல்லாமல் நானும், நானில்லாமால் நீயும்,
இருத்தலின் நாடகத்தில் இருக்கிறோம்
யாரோ எழுதிய வசனங்களுக்கு வாயசைக்கிறோம்
தினம் தினம் செத்துப் பிழைக்கும் சூரியன்
பூமி மண்டலத்தின் காலமா, கனவா, காதலா?
நினைவின் மறதியா?
பகலும் இரவும் மாறி மாறி
உன்னைப் போல வந்து செல்கின்றன
நீ வரைந்த தீர்க்கரேகைகள்
திசைமாறிச் செல்கின்றன
உடல் மீது நடத்தும் தீண்டாமை யுத்தத்தில்
கருக்கலைப்பு ஒப்பந்தங்கள்
காற்றின் கையெழுத்து.
சன்னலை இழுத்து மூடு
கருக்கலில் அரூபமாக விழித்தெழும் உன்னை
காமக்குழியில் புதைத்து எழ வேண்டும்
நிலவில்லாத வானத்தில்
சர்ப்பங்கள் தோலுரித்து ஆடட்டும்
நட்சத்திரங்களை நிர்வாணமாக அலையவிடு
தூக்கில் தொங்கியவள்
கிணற்றில் விழுந்தவள்
சிலிண்டர் வெடித்து சிதறிப்போனவள்களின்
ஆவிகள்
ஆகாயத்துண்டுகளைக் கிழித்து
தொங்கவிடும் வரை காத்திரு
கற்பதிகாரத்தை அவள்கள் வாசிக்கட்டும்
களவதிகாரத்தின் பக்கங்களை
விரல்களால் தடவித் தடவி
புணர்ந்தெழு
நடுங்கும் தேகத்தை நவீனத்தில் மூடு
கறுப்பு முகமூடியை எடுத்து அணிந்துகொள்
நீ யாராகவோ இருப்பதாக
பாவனை செய்
விருப்பங்கள் மட்டுமல்ல
தேவைகளும் மாறிவிட்டன
சவக்குழியிலும் பூக்கின்றன சில பூக்கள்
பிணம் ஏன் அசைகிறது?
எங்கிருந்து முளைக்கின்றன கனவுகள்?
ஆபத்து, வளரவிடாதே.
கனவுப்பொம்மையின் கை கால்களைப் பிடுங்கி எறி
அழுகிறதா… வாயை மூடு
ரத்தம் கசிய வலிக்கிறதா
வலிக்கட்டும்
வலிகளைச் சுருட்டி போர்வையாகப் போர்த்திக்கொள்.
செத்துச் செத்துப் பிழைத்தெழும் சூரியன்
எட்டிப் பார்க்கும்போது
இருத்தலின் நாடகத்தை மீண்டும் எழுது.
•