இணைய இதழ் 98கட்டுரைகள்

‘எமரால்ட்’ சிறுகதைத் தொகுப்பு வாசிப்பு அனுபவம் – இரா.மதிபாலா

கட்டுரை | வாசகசாலை

வாழ்வில் குணாம்சங்கள் ‌மற்றும் சூழலினால் விளையும் சில அரிதான ஆனால், உள்இயல்பான உணர்வுகளை செயல்களை சிறப்புற அச்சு அசலாக எழுத்திற்கு கொண்டுவந்து தரும் திறன் சிலருக்குதான் வாய்கிறது. அதிலும் “கவிதைகளில் வெளிப்படாக் களங்களும் கதைகளும் அனுபவங்களும் கோபங்களும் இறங்கிக்கொள்ளவென மிக விழிப்புடன் சிறுகதை வடிவத்தைத் தேர்ந்துகொண்டேன்.” என எமரால்ட் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் ஜார்ஜ் ஜோசப் தனது உரையில் சொல்வது சரியெனவே எனக்கும் தோன்றுகிறது. சொல்லியதை நிரூபணம் செய்யும் வகையில் அவரது பெரும்பாலான சிறுகதைகள் அமைந்துள்ளது.

அவ்வகையில், ‘எமரால்ட்’ நூலின் மீதான எனது வாசிப்பு அனுபவம் குறித்து சில வரிகள்:

செலீன்

………….

இலேசாய் அதிர்வு தந்த சிறுகதை. ஆனால், அந்த அதிர்வு உன் கால தலைமுறையின் நடிப்புடா சாமி ..என்றது மனசு.

முதலில் நிகழ் காலமாக தொடங்கி ,அடுத்த இரண்டு அத்தியாங்களுக்கு நாம் மனசாட்சியோடு இருந்தாதான் கதையில் பயணிக்க முடியும். இக்கதையின் நான்காம் அத்தியாயம் மீண்டும் நிகழ் காலத்திற்கு வருகிறது. சிறுபிராயத்தினருக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் இடையே விளையாட்டாய் தெரிந்ததும் தெரியாமாலும் காமத்தின் நுனிருசியை அறிந்துக் கொள்ளும் சில சூழல்களை நயமான (தவளைப் போல் போர்வைக்குள் கால்கள் அகண்டிருப்பதைப்போல் பட்டது.// கவுன் இடுப்புவரை சுருண்டிருந்தது//) ஆனால், உணரக்கூடிய வார்த்தைகளில் ஒரு நிகழ்வினை சொல்கிற பாணி இக்கதையின் உயிர்ப்பு .

கடைசி பத்தியில் “என் உள்ளங்கையில் மீதூறிய செலீனின் மணத்தை இரகசியமாய் முகர்ந்து பார்த்துக் கொண்டேன்.” என கேபா கதாபாத்திரம் சொன்னதில் ஆழ்அனுபவத்தின் விள்ளல் சுவை எப்போதும் மனநாக்கின் அடியில் தங்கி வாழத்தான் செய்கிறது என்று நானும் உணர்கிறேன்.

நூலகவாசிகள்

………………………..

டிராலி ஷாட்டில் தேவையான காட்சிகளில் ஜூம் செய்து எடுக்கப்பட்ட ஒரு கதைக்களம் திறன்மிகு எழுத்து நடையின் நுண்மையால் மனசில் நிற்கிறது.

ஒரு நூலகத்தில் ஒரு அரை நாள் பொழுதில் நடக்கும் காட்சிகளோடு தன் போக்கில் தன்னையும் தன் உள்ளத்தின் உணர்வு நிலைகளையும் சொல்லிக் கொண்டே வந்தததில் இரண்டு இடங்களில் ஆசிரியர் தம்மனத்தின் ஆழ்நிலையை அணுகி நம்மையும் உடன் பயணிக்க வைக்கிறார் .

நூலகத்தின் ஸ்டோர்ரூமுக்குள் நிகழ்ந்தாக சொல்லும் காட்சி விவரிப்பில் எழும் ஒரு மாய உலகு ஜார்ஜின் கவிதை மனத்தையும் தத்துவ அலைவினையும் நம் அருகே கொண்டு வருகிறது. இன்னொன்று, பெண் அங்கங்கள் மீதான மையலைச் சொன்ன விதம் கிறக்கம் தரும். கலவிக்கு முன் நிகழ்த்தும் கலையின் துய்ப்பின் ருசியை..

வியர்வைப் பிசுக்கில்

நனைந்திருந்த பின்னங்கழுத்தை

நக்கிச் சுவைக்கையில்

ஏக்கப் பேர்வழி

என்று தோன்றியதா?

எனும் இக்கவிதை மனசின் இரகசிய குறிப்பில் அச்சாகிறது. இக்கதையின் கடைசி பத்திகளுக்கு அணுக்கமாக ( பக்.48) தன்னுடைய அகத்தின் புறத்திலும் ஆழ் அகத்திலும் அவ்வப்போது நிகழும் அலைவுகள் குறித்தும் ஒரு எழுத்தாளனுக்கும் பெண்ணுக்கும் ஏற்படக் கூடிய காதல் உணர்வினை தொடர்ந்து எடுத்து செல்ல இயலாத தன் நிலையினை “அதுவரை யோசித்திராத உண்மைகளை தருவித்துக்கொண்டு பேசத் தொடங்கினேன்” எனச் சொல்லி விட்டு பேசியதன் சாரம் வியக்க வைக்கிறது. ‌அவன் பேசிய அனைத்தையும், ஒரிரு வரிகளில் வீழ்த்திவிடுகிறாள் காதலி. அவனுடைய காதலின் காலத்தையும் நீட்டிப்பினையும் பொருட்படுத்தாது “எனக்கு நீ வேண்டும். உன் உயிர் நீர் வழியே எனக்குள் வந்து சேர்” என்கிறாள்.

இக்கதையின் கடைசி பத்திகளில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தேன். ஆண்கள் சில சூழல்களில் தன்னில் விளையும் அழுத்தங்களை, அரிதாக ஏற்படும் சில எண்ணங்களை தங்கள் வார்த்தைகளின் வழியே உரியவர்களிடம் முழுமையாக வெளிப்படுத்துவது என்பது பெரும்பாலும் சற்றே திணறலான ஒன்று.‌ அதிலும், நெருங்கிய இரத்த பந்தங்களுடனான சில சிக்கல்களையும் அடைக்காத்த பாசத்தையும் சொல்வது சிரமம். இதனை “மம்மர்” கதையிலும் குறிப்பாக “சிற்றப்பா” கதையிலும் லவாகமாக வெளிப்படுத்தி வென்று இருக்கிறார்.

பேரன் (பெயர்த்தன்?) என்ற சொல் தமிழில் எத்தனை அழகானது. அறிவியல் பார்வையிலும் அது பொருளுடையது என்பதை மம்மர் கதை நிருபணம் செய்கிறது.‌ தாத்தாவின் மறைவினையொட்டி அவரது நண்பர்களை சந்தித்து அவரின் பரிசுப் பொருளை தருவது, தாத்தாவின் தோழருடன் நண்பருடன் பேசிக்கொண்டிருப்பது போன்றவற்றுடன் தாத்தா காலத்தின் சில வரலாற்று தெறிப்புகளையும் அக்காலத்தின் சில நினைவுகளையும் இடையிடையே கொணர்ந்து லயித்த விதம் சிறப்பு. இக்கதையில் அறிவியலின் பார்வையில் மரபணுக்களின் (DNA) கால கைப்பிடிப்பாக தொடர்ச்சியான நீந்துதலைப் பார்க்கிறேன். இப்போதுதான் தெரிகிறது தாத்தாக்களுக்கு பேரன்கள் எத்தனை ஸ்பெஷல் என்பதும், அதே போல பேரன்களுக்கும் தாத்தாக்கள் எத்தனை ஸ்பெஷல் என்பது.

தாயின் மீதான நேசிப்பு ஒரு புறமும், அவளுடைய மகனாக, மறைந்த தனது தந்தையின் இடத்தில் இன்னொருவரை தந்தையாக ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு கால அடர்த்தியின் மரபின் பிடியில் (உளவியலின் படியும் இருக்கலாம்) சிக்குண்ட இளைஞனின் மனப்பாங்கினை மிக துல்லியமாக காட்டியிருக்கார். பாராட்டுகள் ஜார்ஜ்.

இந்நூல் ஒருவனின் சிறுபிராயத்தின் உள்ள கிடக்கில் துவங்கி, வளரிளம் பருவம், வாலிபத்தின் வாசல் பருவம் வரையில் பல்வேறு உணர்வுகளை இன்றைய மொழிநடையில் தந்தது.

நிறைவாக, பழந்தமிழ் தீஞ்சுவையினையும் ‘அழல்’ சிறுகதை தந்துள்ளது. சிலப்பதிகாரத்திலிருந்து சில உயிர்ப்பான காட்சிகளை அந்த காலத் தமிழோடு தந்த வகையில், ஆசிரியரின் தமிழ் மொழியின் மீதான காதலையும் எந்தளவு அதனை அவர் சிறப்பாக கைக்கொள்ளவார் என்பதற்கு சான்றாக உள்ளது. இச்சிறுகதையை ஒரங்க நாடக வடிவத்திற்கு தர முயற்சிக்கலாம் என்பது என் எண்ணம்.

தனித்தொரு பாணியில் மொழிநடையில் மாத்திரமல்லாது எடுத்துக் கொண்ட கதைகளின் கருப்பொருட்களின் தன்மையிலும், நண்பர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள் சிறுகதைகள் களத்தில் கவனித்தக்கவராகிறார்.

‘எமரால்ட்’ நூலினை நேர்த்தியாக வாசகர்களுக்கு அளித்துள்ள ‘சீர்மை’ பதிப்பகத்தின் பணி சிறப்புக்குரியது‌. பாராட்டுகள்

ஜார்ஜ், நீங்கள் விரைவில் மற்ற சமூகம் சார்ந்த எழுத்துகளையும் தர வேண்டும் என விரும்புகிறேன்.  //

era.mathibala@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button