சிறுகதைகள்

நூற்றி முப்பத்தியோரு பங்கு – ரமேஷ் ரக்சன்

சிறுகதை | வாசகசாலை

ராணியிடமிருக்கும் ஒரே ரகசியம் தர்மன். பழனியிடம் இருக்கும் ஒரே ரகசியம் ராணி.

***
கோயிலுக்குத் தெற்குப் பக்கமாக கிழக்கு நோக்கி ராணி நடந்து வந்தாள். யாரோ கூப்பிட்டதற்குத் திரும்பிப் பார்ப்பதுபோல ஒருமுறை பக்கவாட்டில் பார்த்தாள். எந்த அலங்காரமும் இல்லாமல் தனியாக கருப்பு சதுரங்கக் குதிரை போலிருக்கும் சாமி சிலையின் தலையில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. அந்த நொடி சந்திப்பில் தீபத்திலும் அவள் முகத்திலும் எந்தச் சலனமும் இல்லை.

ராணியின் கண்கள் அலைந்து கொண்டே இருந்தன. ட்யூப் ஐசின் கவர்கள் அடிக்கொரு முறை பாதத்தில் தட்டுப்பட்டுக் கொண்டே இருந்தன. பஞ்சு மிட்டாய் தின்று தூக்கிப்போட்ட குச்சிகள் ஆங்காங்கே தென்பட்டன. கேசரி வாங்கித் தின்று தூக்கிப் போட்ட பூவரச இலைகள் வாடிக் கிடந்தன. உடைந்த ஆப்பிள் பாலூன்களின் துணுக்குகள் ஒன்றிரண்டு கண்ணில் பட்டது. சாமியாடி ஓய்ந்த வாசம் அந்த இடமெங்கும் அப்படியே பரவி இருந்தது. தோரணங்கள் பொலிவிழந்திருந்தன. வாழைக்குலை பழுக்கத் தொடங்கியிருந்தது. நெருங்க நெருங்க பச்சை இறைச்சி வாசம் நாசியில் ஏறியது. வெள்ளிக்கிழமை சுடலைமாடன் தொட்டாடிய தீப்பந்தம், அணைந்த சுருட்டு போல ஆனால் பெரிதாக இருந்தது. அது பீடத்தின் அருகே சாத்தி வைக்கப்பட்டிருந்தது.

தண்ணீர் வடியட்டுமென கொடியில் போட்ட துணிபோல வரிசையாக வெள்ளாட்டுத் தோல்கள் தொங்கிக் கொண்டிருந்தன. உரித்துப் போட்ட ஆட்டுத் தோல்கள் கருகருவென மிணுங்கிக் கொண்டிருந்தன.

ஆலமர வேரின் மேல் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி, நூற்றி முப்பத்தி இரண்டு வரிக்காரர்களின் பெயர்களையும் எழுதி வைத்திருக்கும் வரிநோட்டை வைத்திருந்த தங்கராசு, பின்னால் ஆள் நிற்பது நிழலாடவும் திரும்பிப் பார்த்தான். ராணியைக் கண்டதும் அவனை அறியாமலே பதற்றத்திற்கு உள்ளானான். அவன் கட்டியிருந்த பாலியிஸ்டர் சாரம் இடுப்பிலிருந்து நழுவுவதாகப் பட்டது. பதற்றத்தில் பிடித்துக் கொண்டே எழுந்தான். கோயில் பெரியவர்கள் / சாமியாடி யாராவது பக்கத்தில் நிற்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தான். “அவள் பங்குக் கறியை கொடுக்கலாமா? அவன் வந்திருந்தாலாவது நம்ம தல தப்பிச்சிருக்கும்”.

வரிப்பணம் தன்னுடைய சம்பாத்தியம் என்பதால் போன வருடமே தன் பெயரை முன்னே போட்டு, பிறகு புருசன் பெயரை சேர்த்துக் கொள்ள கேட்டிருந்தாள். ஊராரைப் பொறுத்த வரைக்கும் அவள் ஒரு லூசு. “அந்த வெங்கபய இருக்குறதும் ஒண்ணுதான் இல்லாம ஒழிஞ்சி போறதும் ஒண்ணுதான். சம்பாதிக்குற துட்ட சேத்து வச்சி வரி குடுக்க வக்கில்லாத தொட்டிப்பய பேரத் தூக்கிட்டு அலைதாணுவ…” வரி நோட்டில் பெயரைப் பார்த்ததும் திட்டத் தொடங்கினாள். தன் கையில் ஒன்றுமில்லை என்றான் தங்கராசு. அவனுக்கு ராணியை ஏதாவது சொல்ல வேண்டும் போலிருந்தது. “நல்லா தெம்பா சாப்பிடுங்க” என்று நக்கலாகவாவது சொல்லிவிட நினைத்து, விழுங்கிக் கொண்டான்.

சாமியாடிகள் வரி போட்ட நாளில் இருந்தே குடிப்பதையும், உதட்டிற்குள் புகையிலை அதக்குவதையும், அவரவர் மனைவிமாரோடு புழங்குவதையும் நிறுத்திக் கொள்வார்கள். புகைபிடிப்பவர்களுக்கு அதுமட்டும் விதிவிலக்கு. சம்சாரிகள் வெள்ளையடித்த நாளில் இருந்து அசைவ உணவிலிருந்து எதுவும் வைத்துக் கொள்வதில்லை. வாலிபர்கள் மிகவும் சிரமப்பட்டு, கொடை தொடங்க சரியாக ஒரு வாரம் இருக்கும்போது கையை வைத்துக் கொண்டு ‘சும்மா இருக்க’ போராடுவார்கள்.

கோயில் கொடை முடிந்த பிறகோ அல்லது ஆடி மாதம் இல்லாத வேறு ஒரு மாதமோ ராணி மாட்டியிருந்தால் இது ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. “இப்பதான் எல்லாவளும் எவன் கூடயாவது இருக்காளுவள?” என்று சமாதானம் சொல்லிக்கொள்ள விளையும் பெண்கள்கூட ராணி விஷயத்தில் முணுமுணுத்தார்கள். அவர்களெல்லாம் ஊரைப் பொறுத்த வரைக்கும் தேவடியாமார்கள்.

கொடை தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு நடந்த சம்பவம் என்பதாலேயே இத்தனை சலசலப்புகள். அவளும் கோயிலுக்கு வருவாள் என்பதால் இத்தனை பதைபதைப்பு. ஏதாவது அபசகுணம் அவளுக்கு நிகழ வேண்டுமென வேண்டிக் கொண்டார்கள்.

மொட்டை போட்டிருந்ததற்கு அடையாளமாக ராணி தலையில் துணி கட்டியிருந்தாள். தனக்கான பங்குக் கறியை வாங்குவதற்கு ஸ்டிக்கர் கிழிக்காத புது சில்வர் சட்டியோடு வந்து நின்றாள். ராணியோடு சேர்த்து இருபது பேர் தவிர மீதம் அனைவருமே கறியை எடுத்து அடுப்பு போட இடம் போட்டிருந்தனர். அதில் ஒருவர் மட்டும் வரிப்பணம் 1500ஐ கொடுக்காதவர். கொடுத்தால் அவர் பங்கு கறியும் கிடைக்கும். இல்லையென்றால் ஏலம் விடுவார்கள்.

ஆட்டுக் குடலை ஏலம் எடுத்தவர்கள் ஆற்றில் குடலைக் கழுவிக் கொண்டிருந்தனர். இரத்தத்தை ஏலம் எடுத்தவர்களின் இனிஷியல், ஆட்டின் கழுத்தை அறுக்கும்போது இரத்தம் ஏந்திய மண்சட்டியில் சாக்பீஸ் வைத்துக் குறிக்கப்பட்டு, பங்கு வைத்த இடத்திலேயே ஈ ஆடாமல் இருக்க வாழை இலையால் மூடி வைக்கப்பட்டிருந்தது. சரியாக ஒன்பது மணிக்கு நூற்றி முப்பத்தி இரண்டு வரிக்காரர்களுக்கும் ஒருகிலோ வீதம் காய்கறி கூறு வைப்பதுபோல கறியை தட்டியில் பங்கு வைத்து முடித்திருக்க வேண்டுமென்பது காலம் காலமாக பின்பற்றிவரும் எழுதப்படாத சட்டம். கறி எடுக்க ஆள்வர ஆள்வர தங்கராசு வரிநோட்டில் ‘டிக்’ அடித்துக் கொள்வான். ஆடிமாசக் காற்று மண்ணள்ளித் தட்டும். கறியை நாய் அண்ட விடாமல் மட்டுமே பாத்துக் கொள்ள முடியும்.

கோயிலுக்கு எதிரே சுடலை மாடனுக்குப் பின்புறம் நாலா பக்கமும் ஆட்கள் நின்று தென்னை ஓலை கொளுத்தி, சாமியாடுபவர்கள் மஞ்சப்பானை தொட்டு ஆடுவதற்கு வசதியாக இடைவெளியிட்டு ஒரேயொரு ஆலமரம் இருக்கும். அதுவும் மேற்கு நோக்கிக் கிளை விரித்து படர்ந்து கிடக்கும். கறி வைக்க வருபவர்கள் எல்லாம் மரத்திற்கு கிழக்குப் பக்கம்தான் அடுப்பு போடவேண்டும். சுறுசுறுவென மேலேறும் பத்துமணி வெயிலுக்கு பயந்து ஆலமரத்தடியருகே அடுப்புப் போட அவ்வளவு போட்டியாக இருக்கும்.

கிடா உறிக்கத் தொடங்கும் அதிகாலை வேளையிலேயே மனைவிகளால் கிளப்பிவிடப்பட்ட கணவன்மார்கள் அருகில் உள்ள செங்கல் சூளையிலிருந்து கல் எடுத்துவந்து, ஏதாவது அடையாளம் வைத்து இடம் பிடித்துப் போட்டுச் செல்வர். பின்னர் ஒன்பது மணி வாக்கில் அவரவர் பங்குக் கறியை வாங்கிவிட்டு, வாங்கிய கறியை ஆற்றில் கழுவி, முடிந்தால் பக்கத்திலோடி விறகு சேகரித்து, பிடித்துப் போட்ட இடத்தில் குழியெடுத்து அடுப்பு அமைத்து, மண்பானையில் இனிஷியலிட்டு முடிந்தால் பெயரெழுதி, இரண்டு பக்கமும் யார் குடும்பம் வருகிறது என்பதையெல்லாம் பார்த்துவிட்டு கணவன்மார்கள் வீடு திரும்புவது வழக்கம்.

அப்படி, அந்த நேரத்தில் அங்கு நின்றவர்களும் ராணியையே பார்த்துக் கொண்டிருந்தனர். ராணி முகத்தைப் பார்ப்பதே விரதம் கலைந்ததாகப்பட்டது.

அனைவரது அடுப்பின் வாயும் தெற்குப் பார்த்து இருந்தது. மொத்தம் ஐந்து வரிசையிருந்தது. ராணியும் அதையே பின்பற்றினாள். சமைக்க வரும்போது மேலேறும் வெயில் பற்றியும், தன்னை வேடிக்கை பார்த்து நிற்கிற ஆட்கள் பற்றியும் எந்தக் கவலையும் இல்லாமல், தனக்கொரு அடுப்பை போட்டுவிட்டு சில்வர் சட்டியில் கறியை வைத்து மூடிவிட்டு, கறிக்காவலுக்கு ஆள் இல்லை என்பது தெரிந்தும், தங்கராசு எதுவும் அவளிடம் கேட்காமலேயே சமைக்க வரும்போது மண்சட்டி எடுத்து வருவதாக அவனிடம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கி ராணி நடக்கத் தொடங்கினாள்.

***

ராணிக்கு அப்படியே தெருவில் நடந்துவர ஆசைதான். தலையில் முக்காடு போட்டு நடப்பதைத்தான் அவமானமாகக் கருதினாள். முந்தானையை தலையில் போர்த்துவதும், எடுத்து விடுவதுமாகவே நடந்தாள். அவள் கை நிலைகொள்ளாமல் இருந்தது. தருமன் விடிந்ததுமே வேலைக்குச் சென்றிருந்தான். அது அவளை உறுத்திக் கொண்டே இருந்தது. தெருவிளக்கு வெளிச்சத்தைத் தரையில் விழ விடாதவாறு சீரியல்செட் வெளிச்சமும், கம்பில் கட்டியிருந்த டியூப் லைட்டும் பிரகாசமாக இருந்தது. எந்த தெரு வழியாக நடந்து சலூன் கடைக்கு வந்தாலும் சீரியல் வெளிச்சத்தின் வரவேற்பைக் கடந்துதான் வரவேண்டும். பிசிறில்லாத அந்தத் துல்லிய வெளிச்சத்தை எதிர்கொள்ள ராணிக்குத் தடுமாற்றமாக இருந்தது. அந்த வெளிச்சம் தண்டனையாக, தர்மன் மனைவியின் சாபமாகப்பட்டது. அவள் மண்ணள்ளித் தட்டியதுதான் இப்படி வண்ண வண்ண விளக்குகளாக இருபக்கங்களிலும் தன்னை அலங்கரிக்கிறதோ என்றும் பட்டது. உடனே சிரித்தும் கொண்டாள்.

கொண்டி மட்டுமே போட்டிருந்த கதவைத் திறந்து ராணியை உள்ளே போகச் சொல்லி கதவைத் தாழிட்டான். முதன்முறையாக அப்படியொரு சூழலைப் பழனி எதிர் கொண்டான். உடலும் மனமும் சபலம் தட்டாமல் இருந்தது. ஆனால், உள்ளுக்குள் பயம் அவனுக்கு வியர்க்கச் செய்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் ‘க்ர்க் க்ர்க் க்ர்க்’ என ஓசையெழுப்பும் மின்விசிறியை வேறு வழியின்றி போட்டான்.

ஆண்களுக்கான இருக்கை ராணிக்கு அசூசையாக இருந்தது. ஒரேயொரு டியூப் லைட்டை மட்டும் பழனி எரிய விட்டான். பழனிக்கும் அந்த இருக்கையில் அவளை உட்காரச் சொல்ல விருப்பமில்லாமல் இருந்தது. இரவு கடை சாத்தும்முன், அன்று வெட்டிய முடிகளெல்லாம் ஒதுக்கப்பட்டு, சரிகை சாக்கில் அள்ளி வைக்கப்பட்டிருந்ததால் யோசனையின்றி தரையில் குத்த வைத்தாள். முடியெடுக்க வாகாக இருக்காதென, சப்பளங்கால் போட்டு அமரச் சொன்னான். கதவைச் சாத்தியதும் உள்பக்கத் திண்டில் பழனி அமர்ந்து கொண்டான். கடையினுள் விழும் வெளிச்சத்தைக் கதவிடுக்கின் வழியே பார்த்து யாராவது கதவைத் தட்டிவிடக் கூடாது. “இந்த ஓட்டவாய் வேற, பழனி கிட்டத்தான் மொட்டை போட்டேன்.” என வெளியில் சலம்பாமல் இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டான். பழனியின் குணவார்ப்பு ஊர் அறிந்ததுதான். இருந்தும் உள்ளுக்குள் பயம். விளையாட்டாகவாவது சேர்த்து வைத்துப் பேசிவிடக் கூடாது.

‘செட்காரன்’ உள்ளூர் என்பதால்தான் புதன் கிழமையே இரவு மிணுங்கியது. ராணிக்கும் அதனால்தான் வெளிச்சம் இவ்வளவு தொந்தரவாகிப் போனது. சாலையின் இரு பக்கமும் நடப்பட்டிருந்த கம்புகளை இணைக்கும் விதமாக வரிசையாக வண்ண வண்ண சீரியல் விளக்குகளும், ஒவ்வொரு கம்பிலும் டியூப் லைட்டும் கட்டப்பட்டிருந்தது. அது பழனியின் கடை முன்பும் கடந்து போனது வசதியாகிப் போனது. வெளியில் உள்ள வெளிச்சம் கடைக்குள் இருக்கும் வெளிச்சத்தை காட்டிக் கொடுக்காமலிருந்தது. இருந்தும் வெளிச்சம் தெரியுமோ என்கிற பயம்.

ராணியைப் பார்த்து, “யாரிடம் மொட்டை போட்டாள்?” என்றெல்லாம் கேட்டுவிட முடியாது. அவளோடு என்ன வேண்டுமானாலும் உரையாடலாம். ஆனால் அது கேள்வி கேட்கும் தொனியில் இருந்தால் பச்சையாக முகத்திற்கு நேராகவே கேட்பாள். யாரிடம் மொட்டை போட்டிருப்பாள் என்று பக்கத்திலோடி பேசிக் கொள்ளலாம். இருந்தும் பழனிக்குக் கொஞ்சம் பயம் இருந்தது. வாய்வரை வந்த பின்னும் அவனுடைய அலைபேசி எண்ணை யாரிடம் வாங்கினாள் என்று அவள் அழைத்த நொடியில் இருந்தே தொக்கி நின்ற கேள்வியைக் கேட்பதற்கு கூச்சமாக இருந்தது.

எந்தப் பக்கம் சீப்புப் போட்டு ஒதுக்கினாலும் அவன் இஷ்டத்திற்கு ஒத்துவராதபடிக்கு தலை கொத்தப்பட்டிருந்தது. தலையில் தண்ணீர் தெளித்துவிட்டு பிளேடை செட் செய்து கொண்டிருந்தான். ராணி தலை குனிந்து மடியில் கிடந்த டவலின் கட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

***

ராணி முன்கூட்டியே வரிப்பணத்தைக் கொடுத்திருந்ததால் கோயில் கொடையைப் புறக்கணித்து விடலாமா என்கிற யோசனையில் இருந்தாள். எதிரில் வருவது ஆணா பெண்ணா என்று தெரியும். ஆனால் ஆள் யாரென்று தெரியாத இருட்டில், ஆற்றுக்கு வடக்குப்பக்கம் திரவியம் போட்டிருந்த வாழைத் தோப்பிற்குள் இருந்து ஆள் வருவதைப் பார்க்கவும் திடுக்கிட்டாள். வழியை நோக்கி முன்னேறவும் அந்த நடை அவளுக்குத் தெரிந்த நடையாகப் பட்டது. சூளையில் கல் சுமக்கும்போது ஆற்றை நோக்கி நடப்பதைப் பார்த்திருக்கிறாள். சலூன் கடை பழனியின் அப்பா. ராணி வழி மறைத்தாள். தோப்பிற்குள் இருந்து பின்னாடியே பத்தடி தள்ளி வந்தவன், இருவரையும் கடக்கையில் யார் மகன் என்று கண்கள் இடுக்கிப் பார்த்துக் கொண்டாள். சுத்தி வளைக்காமல் தனக்கு மொட்டைப் போட்டுவிடச் சொல்லிக் கேட்டாள். யோசனையே இன்றி கை நடுங்குமென மறுத்தார். கடந்து போனவனின் அப்பா பெயரைச் சொல்லியழைத்து, “கை நடுங்குமாம் அறுத்துகிறுத்து விட்ற போறார். நீ பாட்டுக்கு வானத்த பாத்துட்டு நின்னுடாத.” என்று சத்தமாகச் சொன்னாள். அவன் பதறியடித்து ஓட்டம் பிடித்தான்.

பழனியின் அப்பாவிற்கு அவள் தலையைத் தொடுவதற்கு துளியும் விருப்பம் இல்லாதிருந்தது. சொல்லப்போனால் அருவெறுப்பாகவே பார்த்தார். “ஒண்ணு ரெண்டு வெட்டு விழுந்தா பரவால்ல. பண்ணி விடுங்க.” என்று ராணி மறுபடியும் கேட்டுப் பார்த்தாள். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. வாயைக் கொடுத்துப் புண்ணாக்க வேண்டாமென நினைத்தார். கோயில்கொடை கூட்டம் வேறு கடையில் இருக்கும். நிச்சயம் போன் எடுக்க மாட்டான் என்கிற நம்பிக்கையில், ஏற்கனவே புது நம்பரில் இருந்து அழைத்தால் போன் எடுக்காத பழக்கம் கொண்ட தன் மகனின் நம்பரைக் கொடுத்து, “அவங்கிட்ட போட்டுக்க” என்று விலகினார்.

ராணிக்கு அவர் இறைஞ்சுவதாகப்பட்டது. பழனியிடம் மொட்டை போடச் செல்வதில் இருக்கும் சிக்கலும் பிடிபட்டது. இருந்தும் சரி என்று இடது பக்கம் ஜாக்கெட்டிற்குள் இருந்த மொபைலை எடுத்து பழனி நம்பரை குறித்துக் கொண்டாள்.

“எங்க அய்யா என்னைக்கு ஊர்ல எவங்கிட்ட அடி வாங்கப் போறாரோ தெரியல. ஊர்ல உள்ள பயலுவளா பிடிச்சி வாழத்தோப்பு, நான் இல்லாத நேரத்துல எங்க வீடு, ஓடாத மோட்டார் ரூம்னு சக்கரைல முடி எடுத்து விடுதேன்னு கூட்டிட்டு அலையுதாரு. சுகம் கண்டவனுவ பிளேடு வாங்கிக் குடுத்துட்டு பின்னாடி அலையுதாணுவ. எங்க போய் முடியுமோ தெரியல. நீ தாம் அப்படியே அவருகிட்ட ஒருதரம் பேச்சுக் குடுத்து பாக்கறதுதான?”

“பொம்பள சுகத்துக்குப் போறவர்னா பாவடைக்குள்ள முடி எடுத்து விடுதேன்னுதான வந்துருக்கனும்? பயலுவக்குள்ளதலா சப்பிட்டு அலையுதாராம். செங்கமால் வரைக்கும் தான் கதை வருத!”

பழனி எந்த சஞ்சலும் இல்லாமல் பேச்சை நிறுத்திவிட்டு, முடியெடுக்கத் தொடங்கினான்.

***
ராணியின் வசீகரம் என்பது, முதலில் அவள் பேச்சில் விழுந்து பிறகு அவள் உடலுக்குத் தாவுவதாக இருந்தது. பார்த்தவுடன் ஆசை கொள்ள வைக்கும் தேக வார்ப்போ முக அமைப்போ ராணிக்குக் கிடையாது. பேசிக்கொண்டே இருப்பாள். ஆண் பெண் பேதம் இல்லாமல், யாரிடம் என்ன / எப்படிப் பேச வேண்டும் என்ற நிதானம் இல்லாமல், தோன்றுவதை அப்படியே சூளையில் கல் சுமக்கும்போது, கொத்தனாரிடம் கையாளாக நிற்கும்போது பேசுவாள். சபலத்தின் வாசலில் நிற்பவர்கள், இறங்கிப் பார்க்க விரும்புவது உண்டு. விளையாட்டாகப் பேசிக் கொண்டிருக்கையில் ஏதாவது கதை சொல்ல நேர்ந்தால், “அன்னைக்கு இப்டிதான் அவன் கூட போயிட்டு வரும் போது…” என்று தன்னோடு வந்தவன் பற்றிய யோசனை இல்லாமல் சொல்லி விடுவாள். ராணிக்கு ரகசியம் என்பது கேள்விக்குறி. அதற்காகவே பயந்துபோய் அவளை முயற்சிக்காத சபலக்காரர்களும் உண்டு. ராணியை உடல் இச்சை படுத்தியெடுப்பது இல்லை. இருந்தும் நெருங்குவது தெரிந்தால் அவளுக்கும் வேண்டுமென்று தோன்றினால் சில நேரம் அனுசரித்துக் கொள்வாள். அவளைப் பொறுத்தவரைக்கும் அவளுடைய உடலின் பங்கீடு ஒரு ஆணோடு என்ன என்பது பற்றி யோசிப்பவள் இல்லை. அவளின் தேகத் தேவை குறித்தும் வெளிப்படுத்துபவள் கிடையாது. அவள் ‘வழங்கும்’ இடத்தில் இருந்தாள். சிலரது மனைவியின் புத்தி தெரிந்து அவள்களை மனதில் கொண்டு “பாவம் அவன்” என இரக்கம் கொள்வாள். ராணியொரு கொடை. மேனிப் பராமரிப்பு உள்ளவள். வேலைக்குப் போய்விட்டு வருவது எந்த நேரமாக இருந்தாலும் தலைக்குக் குளித்து விடுவாள்.

***

தன்னிடம் எப்படி இருக்கிறான் என்பதை வைத்தும், இந்த வயசுக்குப் பிறகா சென்று விடப்போகிறான் என்று தன்னுடலில் வடிந்த இச்சையில் இருந்து யோசித்தும், அதுவும் தன் வீட்டிற்குள் வைத்துக்கொள்ளும் தைரியமெல்லாம் வாய்க்காது என்பதிலும் உறுதியாக இருந்தாள். வந்த வேலை முடிந்து ராணி திரும்பவும், தர்மனின் மனைவி ஐந்து மணிக்கு வளவு லைட்டைப் போடவும் சரியாக இருந்தது. “என்ன லைட்டப் போடாம வந்து நிக்கிய?” என்பதோடு தர்மனிடம் நிறுத்திக் கொண்டாள்.

தர்மனைக் காணும்போதெல்லாம் திரண்டு நின்றது. விசயத்தை வந்து சொன்னவளை மனதார சாபமிட்டாள். தெரியாமலே போயிருக்கலாம் என்று வருந்தினாள். அவளுக்கு முதலில் இதை எப்படி கையாள்வது என்றே தெரியாமல் இருந்தது. இந்தக் குழப்ப மனநிலையில் தூங்கவே நேரம் ஆகிவிடும். நான்கு மணிக்கு முழிப்பு வரக்கூடாது என்றும் வேண்டியிருக்கிறாள். தன் கண்ணால் பார்த்த பின்பும் அவளுக்கு நம்புவதற்கு யோசனையாக இருந்தது. கழுத்து மடிப்பில் வியர்த்து வியர்த்து அழுகையின் விளிம்பில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வாள். தர்மன் சகஜமாக தன் மனைவியை எதிர் கொண்டான். மதியம் சாப்பிட வீட்டிற்கு வரும்போது எதிரில் அமரும் போதெல்லாம் வாய்வரை வரும். கடைசியாக இருவரும் ஒன்றாகத் தூங்கி வருடங்கள் ஆகிவிட்டது. அதனாலயே என்னவோ இரவு குறித்து பயம் இல்லாமல் இருந்தாள். பிள்ளைகள் தர்மனிடம் பட்டும் படாமல் நடந்து கொண்டார்கள். அவள் முகம் காட்டிக்கொடுத்துக் கொண்டே இருந்தது. பிள்ளைகளின் கேள்வியே வஞ்சகமாக அவளுக்குள் உருவெடுத்தது. வாழ்வு கை மீறிப் போகாதென எங்கிருந்தோ ஒரு அசரீரி. துணிந்தாள்.

தர்மனின் அலைபேசியில் இருந்து செல்லும் அழைப்புகளை வைத்து அவனின் மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்து குறித்த நாள்தான் புதன் கிழமை.

பிள்ளைகளிடம், “ஒங்க அப்பா லட்சணத்தைப் பாருங்க.” என்று பந்தி வைத்ததற்காக நொந்து கொண்டாள். ராணி வரக்கூடாதென்ற வேண்டுதல் நின்றபாடில்லை. பிள்ளைகளும் உருண்டு கொண்டே படுத்திருந்தனர். மூச்சை இழுத்து நிதானமாக விடுவது அறையெங்கும் கேட்டது. தர்மனின் மனைவிக்குக் கருணை மலர்கள் மலர்ந்த வண்ணம் இருந்தன. உடலெங்கும் தீப்பிடித்து எரிந்தது போல இருந்தது. எழுந்தமர்ந்து குதிங்காலை தரையில் தேய்த்துப் பார்த்தாள். தர்மனின் மனைவியாகவும், பெண்ணாகவும் மாறி மாறி அவதாரம் எடுத்தாள். பிள்ளைகளோடு திட்டம் தீட்டியது முதலே அம்மா என்கிற ஸ்தானத்திலிருந்து விலகி அவர்களோடு அவளுக்குத் தெரிந்த நாளில் இருந்தே உரையாடியிருக்கிறாள். ராணியின் முகம் நினைவில் வரவே மறுத்தது. கோபம் எல்லாம் தணிந்திருந்தது. “சனியனுக போய்ட்டு போகட்டும்…” என்று ஒருமுறை முணுமுணுத்தும் கொண்டாள்.

அலாரமே வைக்காமல் சரியாக நான்கு மணிக்கு தர்மன் எழுந்ததும் எல்லாமே மாறிப்போனது.

தன் இரண்டு பெண் பிள்ளைகளோடு சேர்ந்து விளக்கைப்போட்டு கையும் களவுமாக பிடித்தனர். ராணியைத் தெருவுக்கு இழுத்து வந்து, தர்மனுக்கு விழ வேண்டிய அடியையும் அவளுக்கு சேர்த்துக் கொடுத்து, மூத்தவளை எடுத்து வரச் சொன்ன வாங்கரிவாளை வைத்து கொண்டையை அறுத்தனர். அப்படியே அனுப்பினால் எதுவுமே நடக்காதது போல விடிந்ததுமே வேலைக்குச் சென்று விடுவாளென யோசித்து, உச்சி மண்டையிலும், முன் பக்கத்திலும் முடியைக் கொத்து கொத்தாகப் பிடித்து அறுத்து ‘பங்கர கொத்துக்கொத்தி’ அனுப்பி விட்டனர்.

ராணியைக் கொண்டையைப் பிடித்து தெருவுக்கு இழுத்து வரும்போதே, யார் வீட்டிலோ சண்டை நடப்பது போல பாக்கெட்டில் போனை எடுத்துப் போட்டுக்கொண்டு தர்மன் பேச்சு கொடுக்காமல் வெளியேறியிருந்தான்.

***

ராணி சலூன் கடைக்கு சேலையில் தான் வந்திருந்தாள். அவளுக்கு நைட்டி உடுத்தும் பழக்கம் கிடையாது. போனில் பழனி கேட்டுக் கொண்டபடி வீட்டிலிருந்தே மடியில் விரிக்க ஒரு டவல் எடுத்து வந்திருந்தாள். அதை மடியில் விரித்துக் கொண்டாள். கம்மல் இடையூறாக இருப்பதாக சொல்லி கழட்டி முந்தானையில் பொதிந்து கொண்டாள். தங்கக்கம்மல். கடைக்குச் செல்ல முடியாதென ராணி சொல்லியிருந்ததால் சந்தனம் மட்டும் பழனி வாங்கி வைத்திருந்தான். மொட்டை போடத் தொடங்கும் முன்பாகவே அவள் கையில் கொடுத்திருந்தான்.

பழனி மழிக்க மழிக்க, வெட்கப்பட்டுப் பகலெல்லாம் வெளியே வராமல் வீட்டிற்குள் அடைந்து கிடந்ததற்காக வருத்தப்பட்டாள். பிள்ளைகளை தன் அம்மா வீட்டில் வைத்துப் படிக்க வைப்பதற்காக முதன்முறையாக சந்தோஷப்பட்டுக் கொண்டாள். ஊரில் நல்லது கெட்டது எதுவும் பிள்ளைகளுக்குத் தெரியாது. ராணிக்கு ஏனோ, தான் வாக்கப்பட்டு வந்த ஊரை சுத்தமாக பிடிக்கவில்லை. வியாழக்கிழமை கோயில் கோடை என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. அறுபட்டதை யாரும் பார்க்கவில்லை. ஆனால் எல்லோருக்கும் செய்தி சென்றிருக்கும். ராணியிடம் அது குறித்தெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. நான்கு மணிக்கே மொட்டை போட முடிந்திருந்தால் ஏதாவது ஒரு கோயில் பெயரைச் சொல்லியிருப்பாள். அறுத்த முடியை ராணி முகத்திலேயே வீசி, “கொண்டுட்டுப் போ” எனத் தூக்கி எறிந்ததை நினைத்துக் கொண்டாள். வெள்ளிக்கிழமை சாமி முன் ‘சுருள்’ ஏந்தி நிற்க வேண்டியதையும், சனிக்கிழமை கறி வைக்க வேண்டியதையும் நினைக்க நினைக்க மனம் இறுக்கமாக இருந்தது.

சுருள் தட்டை சாமியாடி கையில் வாங்கி, சாமிமுன் ஏந்தி பூசாரியிடம் கொடுப்பார். பூசாரி எடுக்க வேண்டியதையெல்லாம் எடுத்துவிட்டு, திருப்பி சாமியாடியிடம் கொடுப்பார். சாமியாடி தட்டில் திருநீறு போட்டு, நெற்றியில் பூசி அனுப்புவார். பின்னர் அடுத்த சுருள். சாமியாடிக்கு அருள் எவ்வளவு நேரம் இருக்கும் என்பதை அவர் வாயாலயே கேட்டிருக்கிறாள். வெள்ளிக்கிழமை மதிய சாமியாட்டில் நெற்றி தொடுவாரா என்பதே சந்தேகம்தான். சிரித்துக் கொண்டாள்.

“எங்க ஊருக்கு வாக்கப்பட்டு வந்து பத்து பதினைச்சி வருஷம் இருக்குமா? உங்க வீட்டுக்காரர் வயசு கணக்கு போட்டாலும் இப்ப உங்களுக்கு ஒரு நாப்பது வயசு பக்கம் இருக்காது? எங்க அம்மையும் இப்டி தான் உங்கள மாதிரி எளமையா இருப்பா. பாக்க அப்படி ஒண்ணும் தெரியாது. எனக்கு இருவது வயசு இருக்கும்போது பொசுக்குனு செத்துட்டா. அப்பதான் சொந்தமா தொழில் செய்வோம்னு இந்த கடைய எடுத்தேன். ஒரு வருஷம்கூட அவளுக்கு வீட்ல இருந்து சோறு திங்க குடுத்து வைக்கல. அஞ்சி வருஷம் ஆச்சு. எங்க அப்பாவ பாத்தா மட்டும் ஐம்பது வயசு ஆளுன்ணா சொல்ல முடியும்? எவன் கடைக்காவது டெய்லி சம்பளத்துக்கு வேலைக்கு போக வேண்டியது. அப்றம் இப்டி அலைய வேண்டியது. இனி என்னைக்காவது கண்டா பேச்சு குடுத்துப் பாருங்க. என்ன சொல்லுதாருன்னு பார்ப்போம்.”

பத்து மணிக்கு ஊரே அடங்கியிருந்தது. கோயில் கொடைக்கு அடையாளமாக தெருக்களும் வண்ணமாக மின்னியது. நாய் குறைப்பு கூட இல்லை. மழைக்கான அனத்தல் இருந்தது. வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு சந்தனத்தை பூசிக் கொள்ள வேண்டும். ராணி வெள்ளிக்கிழமை மத்தியான கொடையில் சுருள் வைப்பதை நினைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

***

ராணிக்கு எங்கு செல்வதென்றாலும் நடைதான். அவள் பாதங்களுக்கு ஓய்வு என்பதே இல்லை. விடிந்தால் வியாழன். வியாழன் சாயங்காலத்திலிருந்தே இரவும் விழித்திருக்க தொடங்கி விடும். கழிவறை இல்லாத அந்த வீட்டில், புதன் கிழமை மொட்டை போடும் முன்னர் வெளியில் வந்த போதும், வியாழக்கிழமை வெளியே வந்த போதும் யார் கண்ணிலும் அவள் படவேயில்லை. வீட்டினுள் அவர்களுக்குள் பேச்சு சத்தமும் வெளியே கேட்கவில்லை. வீட்டில் சமைப்பதற்கான அடையாளமாக விறகடுப்பில் புகை மூண்டது வெளியே தெரிந்தது. வெள்ளிக்கிழமை சந்தனம் தடவாத மொட்டைத் தலையோடு வாசலில் கோலம் போட்டாள். அந்தத் தெருவே அவளைப் பார்த்தது.

தர்மன் வீட்டில், தெரு வழியாக வந்தால், ராணி வீட்டைக் கடக்க வேண்டி வருமேயென, மெயின் ரோடு வழியாகவே கோயிலுக்கு கறி வைக்க வந்து சேர்ந்தனர்.

கடைசியாக ஒருமுறை ராணி கேட்டாள். “எவனாவது சிரிப்பான் நக்கலா ஏதும் சொல்லுவானுவ நான் வரல – எந்த வெங்கம்பயல உன்ன கேப்பான்?” ராணியும் ஊராரைப்போல, இடுப்பில் நீர் நிரப்பிய சில்வர்குடம். கையில் மண் சட்டி, வலது கையில் மளிகை சாமான் தாங்கிய புது சில்வர் குத்துச்சட்டி, தலையில் ஓலைக்கு நடுவே விறகு வைத்து ஒரு ஓலைக்கட்டு எனப் புது சேலையுடுத்தி தெருவில் நடக்கத் தொடங்கினாள். அவன் கதவைப் பூட்டிக் கொண்டான். புருசன், பிள்ளைகள் என்று நடந்தவர்களில் ராணி மட்டும் தனியொருத்தியாக கோயிலை நோக்கி நடந்தாள். அவளின் வெட்கமின்மையை வாய்விட்டு திட்ட முடியாமல், சிலர் வேண்டுமென்றே செருமி காறித் துப்பினர்.

குடல் எடுத்தவர்களும், இரத்தம் எடுத்தவர்களும் அடுத்தடுத்து அடுப்புப் போட்டு முன் கூட்டியே சமைத்துக் கொண்டிருந்தனர். தர்மனிடம் எக்காரணம் கொண்டும் கோயிலில் வைத்து, அவன் மனைவியோ ராணியோ சண்டை போடக் கூடாது என்று சொல்லித்தான் கறியை கொடுத்திருந்தனர். தர்மனின் குடும்பம் ராணிக்கு முன் இருந்த வரிசையில் அடுப்புப் பற்ற வைத்தது. வலது பக்கம் இரண்டு அடுப்பு தள்ளி கொஞ்சம் தலை திருப்பி பக்கவாட்டில் பார்த்தால் ராணி தெரிவாள். தலையிலடித்துக் கொண்டு, பிள்ளைகளையும் திரும்பிப் பார்க்க வேண்டாமென சொல்லியிருந்தாள். ராணி இருந்த வரிசை மட்டும் அமைதியாக இருப்பதாக தர்மனின் மனைவிக்குத் தோன்றியது. மேகமும் சூரியனும் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. சடசடவென மழையடித்தது. எல்லாம் பொட்டுத் துளிகள். சமைப்பதற்கு வழிவிட்டு மழை ஒதுங்கிக் கொண்டது.

இருபத்தியோரு வாதைகளையும் வில்லுப்பாட்டு மேடையில் குடமடித்து பாடிக் கொண்டிருந்தனர். பெண் வேடமிட்டு கணியான் ஆடுபவர்கள், மறைவில் சேலையோடு நின்று பீடி பற்ற வைத்திருந்தனர். ராணியை அடையாளம் கண்டு கதை பேசிக் கொண்டிருந்தனர். தப்படிப்பவர்கள் தீயில் சூடேற்றிக் கொண்டிருந்தனர். மத்தியான பூஜைக்கு முன்னதாக எல்லோரும் சமைத்து வில்லுப்பாட்டு மேடைக்கு மேல்பக்கம் வைக்க வேண்டும். வாழை இலை வைத்து, பானையின் வாயை மூடி, நார் வைத்துக் கட்டி அதற்குமேல் மண்சட்டியின் மூடியை வைத்து மூடிவிட்டு வந்துவிட வேண்டும். பானை வரிசையாக வந்து கொண்டே இருந்தது. சமைத்து முடித்தவர்கள் சாமியாட்டம் பார்க்க முன் வரிசையில் போட்டி போட்டு இடம் பிடித்து அமரத் தொடங்கியிருந்தனர். கவனமெல்லாம் ராணி பானையை தூக்கிக்கொண்டு வில்லுபாட்டு மேடைக்கு அந்தப் பக்கம் எங்கு வைக்கிறாள் என்று பார்ப்பதிலேயே குறியாக இருந்தது. சாமி அலங்காரம் அதை மறைத்தது.

மஞ்சப்பானை தொட்டு ஆடுவதற்கு தென்னம்பாளை எல்லாம் தயாராக இருந்தது. பத்தி வாசனையும் சாம்பிராணி வாசனையும் மத்தியான சாமியாட்டுக்கு நேரம் ஆகிவிட்டதை உணர்த்தியது. போன வருடம் வேண்டுதலில் வந்திருந்த தொப்பியும், நிறைய வேலைப்பாடுகளோடு, நெருக்கமாக மணி வைத்து தைத்து வாங்கிய டவுசரும், சாமியாடும்போது எடுத்து மாட்டுவதற்கு முதல் வரிசையில் வைக்கப்பட்டிருந்தது. தீபாராதனை காட்டும்போது மணியடிப்பதற்காக போட்டி போட்டு மணி தூண் அருகே கயிற்றை அவிழ்ப்பதற்கு தயாராக ‘கை’ சுத்தமான சிலர் நின்றிருந்தனர். திருநீறு கிண்ணம் இரண்டும் நிரம்பியிருந்தன. சாமியாடியால் தொப்பி மட்டும் மாற்றிக் கொள்ள முடியும். சாமியாட்டத்தின் நடுவே அவரே தேடி அடிக்கடி தொப்பி மாற்றிக் கொள்வார்.

ராணி தலையில் கட்டியிருந்த சிகப்புத் துணியும், சுடலை ஆடும்போது, சுடலைக்குக் கட்டி விடும் சிகப்புத் துணியும் வித்தியாசமற்று இருந்தன. வீம்பிற்கு இப்படி வந்து அமர்ந்திருப்பதாகக் கூட்டத்திற்குள் சலசலப்பு உண்டானது. சரியாக பன்னிரண்டு மணிக்கு பூசாரி மணியடிக்கச் சொல்லி சாமியை அழைத்தார். இரண்டு மணி நேர சாமியாட்டு. மகுடமும், வில்லுபாட்டும் படாதபாடுபட்டுக் கொண்டிருந்தன. சுடலை பந்தத்தோடு கணியானைப் பாடச் சொல்லிக் கொண்டிருந்தார். வாதைக்கு வில்லுப்பாட்டு. பெருமாளுக்கு மேளம். ஒரு கட்டத்தில் பூசாரி மைக்கை அணைக்கச் சொல்லி கண்காட்டவும், மூன்று சாமியும் புழுதி பறக்க ஆடிக் கொண்டிருந்தனர். பந்தலுக்குள் இடி இறங்கியது போலிருந்தது. மழைக்கான அனத்தல் நெருக்கிப் பிடித்தது.

ஓலைக்கட்டுகள் வரிசையாக காலியாகிக் கொண்டிருந்தன. சுற்றி நின்றவர்கள் புகையால் எழும் கண்ணீரைத் துடைத்து நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தனர். வாலிபர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டை. பார்டர் மட்டும் நிறம் மாறிய வேட்டி. பொங்கும்போது பெண்களை குலவையிடச் சொல்லி கைகாட்ட ஒருவன் நின்றிருந்தான். பிரித்துக் கொடுத்த பாளையை நெஞ்சோடு அணைத்தபடி சாமியாடிகள் நின்றிருந்தனர். ராணி இதையெல்லாம் வேடிக்கைப் பார்க்க மனமின்றி அமர்ந்திருந்தாள். சாமியாடும் கால்கள் மட்டும் தெரிந்தன. அவளுக்கு கழுதைக் கணைப்பை ஒத்திருக்கும் ஐஸ்காரனின் பிரத்யேக பீப்பி ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

மூன்று சாமியாடிகளும் மஞ்சப்பானை தொட்டாடியதும், கொடை முடியும் விதமாக வரிசையாக திருநீறு கொடுக்கக் கொடுக்க சாமிக்குச் சமைத்து வைத்த மண் சட்டியை எடுக்க ஆயத்தமாகினர். ஆளைப்போல ராணியும் மூன்று சாமியாடிகளிடமும் திருநீறு வாங்கினாள். சட்டியெடுக்க திரும்பும் போதே தெரிந்தது. நடுவில் மூடி திறந்து ஒரு சட்டி மட்டும் வழித்து நக்கி காலியாக இருந்தது. சாட்சியாக நாய் வந்து போன கால் தடமும் இருந்தது.

“இவ்வளவு பேரோடதையும் தாண்டி நடுவுல இருக்குற அந்த ஒத்த சட்டிய மட்டும் நக்கிட்டு போயிருக்கு பாரேன்! அந்த முண்டயோட சட்டியாதான் இருக்கும். சாமி சும்மா வுடுமா? ஊர்ல இருக்க எல்லா தேவ்டியாமாரும் அப்பதான் அடங்கி கெடப்பாளுவ.” கோயிலென்றும் பாராமல் கெட்டவார்த்தை போட்டதற்கு மனதிற்குள் மன்னிப்பு கேட்டனர்.

கொஞ்ச நேரத்தில் யார் யார் எங்கு கறி சட்டியை வைத்தோம் என்பதையே மறந்து, இனிஷியல் போட்டதை, பிள்ளைகளிடம் போடச் சொன்னதை எல்லாம் யோசிக்கத் தொடங்கியிருந்தனர். சமைக்கும்போது கரிப்பிடித்து இனிஷியல் மறைந்திருக்குமே… அதற்குப் பிறகு இனிஷியல் போட்டோமா என்றெல்லாம் பயம் பீடிக்கத் தொடங்கியிருந்தது. நாய் நக்கிச் சென்ற அந்த மண் சட்டியில் யார் இனிஷியல் இருக்கக் கூடும் என்கிற பயம் இன்னும் புழுக்கமானது. கறிச்சட்டியை எடுக்கவே பயந்தனர். ஆண்கள் கூட்டம் பெண்களோடு முண்டியடித்து வேடிக்கைப் பார்த்து நின்றது.

எல்லோரும் ராணியைப் பார்த்தனர். தலையில் கட்டியிருந்த சிகப்புத் துணியை இடுப்பில் சொருகிவிட்டு இரண்டு வரிசை தள்ளியிருந்த, தன் பெயரெழுதிய சட்டியை ராணி எட்டி எடுத்தாள். தாங்கொண்ணா அமைதி. பழி இப்போது யார்மீது விழும் என்கிற அச்சம். என்னவாக பேசப்படுவோம் என்கிற பீதி. இதற்கு முன் இப்படி நடந்திருக்கிறதா என்று பக்கத்தில் நின்ற பாம்படம் போட்ட கிழவிகளிடம் கதை கேட்பு. ராணிக்கு யார் முகமும் தெரியவில்லை. யாரையும் மருந்துக்குக் கூட உரசாமல் கூட்டத்திலிருந்து வெளியேறினாள்.

கோயிலுக்குக் கொஞ்சம் தள்ளி அடித்துப்போட்டிருந்த செம்மண் சரலில் செருப்பைக் கழட்டிப் போட்டு, அதன்மேல் நின்று சாமியாட்டம் பார்த்த பழனி செருப்பைப் போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button