Revelations

Revelations

                                                                                                                        தி.குலசேகர் 

Revelations என்றொரு சுயாதீன திரைப்படம் சமீபத்தில் ‘வாசகசாலை’ கலையிலக்கிய அமைப்பால் டிஸ்கவரி புக் பேலஸில் திரையிடப்பட்டது. இந்த தகவலைச் சொன்னது எனது ஆசான்களில் ஒருவரான வஸந்த் சார் தான். நானும், அவரும் போயிருந்தோம். செம கூட்டம். புழுக்கத்தோடு தான் பார்த்தோம்.

ரெவலேஷன் என்றால் ரகசியத்தை வெளிப்படுத்துதல் என்று வைத்துக் கொள்ளலாம்.

கதையைத் துவக்கிய உத்தி அருமை. கதையின் நாயகனான சேத்தன் ஒரு சோபாவில் அமர்ந்திருக்கிறார். அவர் முடியெல்லாம் வெள்ளையாகி, களைத்து, ஒரு ஞானியைப் போல அமர்ந்திருக்கிறார். எதிரே சற்றே முந்தைய இளமை தோற்றத்தோடான சேத்தன் வந்து அங்கிருந்த கட்டிலில் அமர்கிறார். சிறிது நேரத்தில் அவருக்கு அழுகை மேலிடுகிறது. நடுவயது சேத்தன் அவர் அருகே போய் தோளில் ஆதரவாய் தட்டிக்கொடுத்து, அவரை ஆறுதல் படுத்த யத்தனிக்கிற இடம் அழகு.

கதை இவ்வளவு தான்.

சேத்தன் ஒரு முன்னாள் எழுத்தாளர். இவர் ஏற்றிருக்கிற கதாபாத்திரத்தின் பெயர் மனோகர். தன்னுடைய மனைவி மற்றொரு ஆணுடன் உறவு வைத்திருந்த காரணத்திற்காக உணர்ச்சிவசப்பட்டு, அறிவு மழுங்கிப்போன ஆவேச நிலையில் மிருகமாகி அவளை குத்திக் கொன்று விடுகிறார். பின்னர் பத்து வருட சிறைத்தண்டனை. திரும்ப அதே ஊரில் வாழப் பிடிக்காமல், எழுதுவதையும் விட்டுவிட்டு கொல்கத்தா நகரத்திற்குப் போய் ஒரு பழைய புத்தகக்கடை போட்டுக்கொண்டு, அங்கிருக்கிற ஒரு ஒண்டுக்குடித்தனத்தின் மாடியில் இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்க யத்தனிக்கிறார்.

அங்கே தரை தளத்தில் லட்சுமி ப்ரியா வசிச்கிறார். படத்தில் சொல்லிக் கொள்கிற விசயத்தில் இவரின் யதார்த்தமான நடிப்பு குறிப்பிட வேண்டிய விசயம். சோபா என்கிற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.

சேத்தன் பக்கவாதத்தில் படுத்தப்படுக்கையாய் இருக்கிற தன்னுடைய மாமியாரை தன்னுடனேயே வைத்திருக்கிறார். அவருக்கு அசந்தர்ப்பான தருணங்களில் லட்சுமி ப்ரியா மனிதத்தோடு வந்து உதவுகிறார்.

லட்சுமிப்ரியாவின் கணவர் சேகர் ஒரு பத்திரிகையாளர். அவருக்கும், அவரது உதவியாளராகப் புதிதாய் சேருகிற திவ்யாவிற்கும் இடையே நட்பிற்கும், காதலுக்கும் இடையேயான மெல்லிய கோடு ஒன்று ஓடுகிறது. திவ்யா சேகர் கொல்கத்தா பற்றிய கட்டுரை எழுதுவதற்கு ஃபீல்ட் ஸ்டடி செய்ய உதவுகிறாள். திவ்யா ஒரு நவநாகரீக மங்கை. அவளின் பொருளாதார நெருக்கடிக்கு சேகர் கடன் தந்து உதவுகிறான். அவள் தன்னுடைய தோழியோடு தனியாக வசிக்கிறாள்.

அங்கே சேகரும், திவ்யாவும் தனியாக சந்திக்கிற தருணங்களில் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.

அவர்களின் நட்பு நெருக்கமாகிறது.

சேத்தன் தனக்கு உதவியாக இருக்கிற ஹவுஸ்வொய்ப் சோபாவிற்கு அவருக்கு பிடித்த புத்தகங்களைப் படிக்கக் கொண்டு வந்து தருகிறார். நட்பு மலர்கிறது. ஒத்தாசையாய் லட்சுமிப்ரியா சமையல் கட்டில் உதவுகிற தருணங்களில் எதிர்பாராமல் படுகிற சிறுசிறு உரசல்களில் அவர்களுக்கு இடையேயான ஈர்ப்பு பரஸ்பரம் உணரப்படுகிறது.

திவ்யாவோடு, சேகருக்கு நடக்கிற நெருக்கமானவொரு தருணத்தின் போது ஒரு விசயம் வெளிப்படுத்துகிறான். சேகர் ஒரு மலடன்- அவனால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது என்கிற உண்மை தான் அது. கதையில் இம்பொட்டன்ட் என்கிறார்கள். அப்படியென்றால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதே தவிர, பாலுறவு வைத்துக்கொள்ள முடியாது என்று அர்த்தம் அல்ல. படத்தில் அதை தெளிவாக விளக்கவில்லை. நாம் சேகருக்கு உறவு கொள்கிற சக்தி இல்லை என்று எடுத்துக் கொள்வோம்.

திவ்யா மாடர்ன் கேர்ள். செக்ஸ் மட்டுமே வாழ்க்கையில்லை எனப் பக்குவமாகப் பேசி, சேகரை சாந்தப்படுத்துகிறாள்.

இந்த சூழ்நிலையில் லட்சுமிப்ரியா சேத்தன் மூலம் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாராகிறாள். அவர்களும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிற வரை செல்கிறார்கள். அதன் பிறகு சேத்தனுக்குள் ஏற்படுகிற குற்றவுணர்வு, அவரை அந்தக் கட்டத்தை தாண்டவிடாமல் தடுக்கிறது. உடனே ஒரு விலைமகளிடம் போய் லட்சுமிப்ரியாவை மனதில் நினைத்துக் கொண்டு உறவு கொள்கிறார்.

லட்சுமிப்ரியா, சேகர் விவாகரத்து பெற்றுக் கொள்கிறார்கள்.

சேத்தனின் மாமியார் மரிக்கிறார்.

திவ்யாவோடு லிவிங் டுகெதர் வாழ்க்கையைத் தொடர நினைத்திருக்கிற சேகர், திவ்யாவிற்கு தன் அறைத்தோழியோடான ஓரினச்சேர்க்கைத் தொடர்பு தெரிய வர, அது பிடிக்காமல் மீண்டும் தனித்துச் சென்றுவிடுகிறான். திவ்யா, சேகர் பிரிகிறார்கள்.

தன்னை ஏற்றுக் கொள்கிற துணிவோ, திராணியோ சேத்தனுக்கு ஏற்படாததால், லட்சுமிப்ரியா தன் சொந்த ஊரான சென்னைக்கே திரும்புகிறார்.

இந்த கதையில் சில கேள்விகள் எழுகிறது. ஓரினச்சேர்க்கையாளராக திவ்யா இருப்பதில் என்ன தவறை கண்டுவிடுகிறார் இந்த சேகர். அது ஒரு வகை ஆணாதிக்க மனோபாவமாகவே பதிவாகிறது.

இந்த கதையில் கவனித்திருக்க வேண்டிய விசயம் என்றால் நாயகன் சேத்தனின் குணவார்ப்புகள். அந்த கதாபாத்திரம் தான் செய்த கொலைக்காக எந்த தருணத்திலும் வருந்துவதாகவோ, உணர்ந்ததாகவோ தெரியவில்லை. அவன் ஒரு எழுத்தாளனுக்கான அடையாளங்களை எந்த தருணத்திலும் வெளிப்படுத்தக் காணோம். பொதுபுத்தியில் இருக்கிற ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகளோடே அவன் ஒத்திருக்கிறான்.

பெண் உடல் என்பது தனது உடமை என்கிற பழமையான அடையாளத்தின் காரணமாகவே, அவன் தன் மனைவியின் கூடுதல் பாலுறவை பொறுத்துக் கொள்ளமுடியாமல் கொலை வரை செல்கிறான். அவனுக்கு அந்த நிகழ்வில் உடன்பாடில்லாதபட்சம் அவளை விட்டு விலகியிருக்கலாம். அதை அவன் செய்யவில்லை. பின்னர் லட்சுமிப்ரியாவிடம் சேர்வதில் அவனுக்குள்ள முரண்பாடும் அவனின் மனநிலையைப் போல குழப்பமாகவே இருக்கிறது.

இயக்குநர் ஜெயபாலன் வித்தியாசமாய் ஒரு கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், இடையிலேயே தன்னையறியாமல் செய்து கொள்கிற சமரசம், கதையை வித்தியாசமாய் துவக்கி, சாதாரணமாய் முடித்து வைத்துவிடுகிறது.

சேத்தனும், லட்சுமிப்ரியாவும், திவ்யாவும், சேகரும் துணிச்சலாக, இயல்பாக முடிவெடுக்கத் தயங்குவதற்குப் பின்னால் பழமைக்குள் உழலும் மனநிலை போக்கே காரணமாக இருந்துவிடுகிறதாய் எடுத்துக் கொள்ளலாம்.

எல்லோரும் தங்கள் ரகசியங்களோடும், தாபங்களோடும், மகிழ்ச்சியைத் தொலைத்தபடியே வாழ்தலை இருத்தலாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற சேதியோடு கதை நிறைவற்ற வெளியில் நிறைவடைகிறது.