ரோஜாவின் பெயர் – உம்பர்டோ ஈக்கோ

ரோஜாவின் பெயர் – உம்பர்டோ ஈக்கோ

கட்டுரை:- அர்ஜுன்

ஒரு நாவல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறதெனில் அது வெறும் ஒரு கதையாக மட்டும் இல்லாமல் ஓர் இடத்தின், அங்கு வாழும் மக்களின் வாழ்முறையை, கலாச்சாரத்தை, குறைந்தபட்சம் சாதாரணத்துவமல்லாத விஷயங்களை எழுத்து வழியே கடத்துவதாக இருக்கும். பெரும்பாலும் இவ்வகை நாவல்கள் ஒரு கடல் பயணத்தைபோல சாகசமாகத் தோன்றினாலும், ஓர் அனுபவமாக, சுவாரஸ்யங்கள் சற்று குறைவாகத் தான் இருக்கும். இதில் குறையும் சுவாரஸ்யத்தை ஈடுகட்டுவது நாவலாசிரியரின் கதை சொல்லும் முறைதான்.

துப்பறியும் கதைகள் எப்போதுமே ஒரு ஆர்வத்தைத் தூண்டும் குணமுள்ளவை. வாசகனின் ஆர்வத்தை தூண்டிவிட்டு, துப்பறியும் விஷயத்தைக் குறித்த குறிப்புகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து வாசகனை ஒரு துப்பறிவாளனாக உணரச்செய்யும். ஒரு துப்பறியும் நாவலின் முடிவு நமக்கு பெரும்பாலும் ஒரு சாதித்த உணர்வு அல்லது ஒரு தெளிவைத் தரவல்லது. இலக்கியங்கள் இதற்கு சற்றே மாறானவை. அவை வாசிப்பில் ஒரு நிறைவையும் ஓர் அனுபவத்தையும் நமக்குத் தரும். நேம் ஆப் த ரோஸ் தொடங்குவது ஒரு துப்பறியும் நாவலாகத்தான். போகப்போக மேற்சொன்ன இருவகையிலான அனுபவங்களையும் வாசிப்பில் தரும் இந்த நாவல், இறுதியில் வழமையான ஒரு துப்பறியும் நாவலின் முடிவைப்போல ஒரு தெளிவைத் தராமல் உங்களை ஒரு வழியற்ற சூன்யத்தில், திசைகளற்ற பெருவெளியில் தள்ளி வந்த வழியை மறக்கடிக்கச் செய்யும்.

1968 ல் உம்பர்த்தோ ஈக்கோ ஒரு குறிப்பேட்டைக் கண்டெடுக்கிறார். 14-ம் நூற்றாண்டில் அட்ஸோ என்பவரால் எழுதப்பட்ட குறிப்பேடு அது. அதில் சில மாற்றங்களைச் செய்து, தன் வயதான காலத்தில் அட்ஸோவே தன் இளமைக்காலத்தில் தானொரு இளம் துறவியாக இருந்த போது வில்லியம் என்பவருடன் ஒரு மடாலயத்தில் கழித்த தினங்களைக் குறித்துக் கூறுவதாக இந்த நாவலை எழுதியிருக்கிறார்.

உம்பர்த்தோ ஈக்கோ ஒரு குறியியல்(Semiotics) அறிஞர். இந்த நாவலில் கட்டமைக்கப் பட்டிருக்கும் முக்கியமான கதாபாத்திரமான வில்லியம் ஆப் பாஸ்கர்வில்லே ஈக்கோவைப் பிரதிபலிக்கிறார். வில்லியமும் இளம் துறவியான அட்ஸோவும் ஒரு விவாதத்தில் கலந்து கொள்வதற்காக வட இத்தாலியில் இருக்கும் ஒரு மடாலயத்திற்கு வருகிறார்கள். அவர்களை வரவேற்கும் அந்த மடாலயத்தின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அபோ சமீபத்தில் அந்த மடாலயத்தில் வாழ்ந்த ஓர் இளம் துறவி தற்கொலை செய்து கொண்டதாகவும், ஒருவேளை அது கொலையாகக் கூட இருக்கலாமென்றும், அதைப்பற்றி வில்லியம் விசாரணை நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கிறார்.

இந்த நாவல் ஏழு நாட்களாகவும் ஒவ்வொரு நாளும் துறவிகள் அனுசரிக்கும் நேரக்கணக்கின்படி ஏழு பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டு கதை சொல்லப்படுகிறது. வில்லியத்தை சந்திக்கும் அபோ இளந்துறவியின் மரணத்தைக் குறித்துக் கூறியவுடன் அந்த மடாலயத்தைக் குறித்தும் அங்கிருக்கும் ஒரு வினோத நூலகத்தைக் குறித்தும் அங்கு செல்ல நூலகரைத் தவிர யாருக்கும் அனுமதி இல்லை என்பது குறித்தும் கூறுகிறார். பகலில் அந்த மடாலயத்தில் இருக்கும் வினோத மனிதர்களை சந்திக்கும் அட்ஸோவும் வில்லியமும் இரவு நேரங்களில் அந்த நூலகத்திற்குள் நுழையும் வழியையும் அதன் சூட்சுமங்களையும் ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கிறார்கள். நூலகம் ஒரு மாயவழிகளைக் கொண்ட கட்டிடமாக கட்டப்பட்டிருக்கிறது. எந்தெந்த புத்தகங்கள் எங்கெங்கு வைக்கப் பட்டிருக்கின்றன என்பது நூலகருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம்.

Labyrinth என்பதை எப்படி தமிழ்ப்படுத்துவது? அதன் அர்த்தப்படி அதனை சிக்கலான வழி எனலாம். ஆனால் வாழ்வில் நாம் சந்திக்கும் பல Labyrinth களும் மாயவழிகளாகத்தான் இருக்கின்றன. முன்செல்லவோ பின்வாங்கவோ முடியாமல் செய்யும் ஒரு முடிவிலி. இந்த நாவலில் வரும் நூலகம் ஒரு labyrinth . இந்த நாவலின் கதையமைப்பில் பெரும்பங்கு வகிப்பது நூலகமும் மடாலயத்தில் வசிக்கும் ஒவ்வொருத்தரின் கதாபாத்திர வடிவமைப்பும் தான். நாவலின் கதை நூலகத்தைப் பிரதிபலிக்கிறது. ஒரு மாய வழி. அட்ஸோவும் வில்லியமும் நூலகத்தின் மாயவழிகளைக் அணுகும் வழிகளோடே கதையின் அடுத்தடுத்த கொலைகளும் மர்மங்களும் விலகத் தொடங்குகின்றன. ஈக்கோவின் இந்த கதை சொல்லல் முறையே ஒரு labyrinth தான். அவர் ஒவ்வொரு குறியீடுகளையும் புத்தகங்ககளையும் மனிதர்களையும் வில்லியம் வழி அணுகும்போதும் ஒரு தெளிவுக்குப் பதிலாக மேலும் புதிர் போட்டு நகர்கிறார். நாவலின் அமைப்பு நூலகத்தின் சூட்சுமத்தை அவிழ்த்தல் என்பதாக இருக்கிறதென்றாலும், நூலகம் தொடர்பான ஒவ்வொரு முடிச்சு அவிழ்க்கப்படும்போதும் நாவல் சொல்ல வரும் விஷயம் அல்லது கதை நம்மை ஒரு சுவர்களற்ற மாயவழிகளுக்குள் தள்ளுகிறது. அதாவது Decoding a labyrinth leads to another labyrinth.

ஒரு மடாலயத்தில் நடக்கும் கொலைகளைத் துப்பறியும் ஒரு நாவலாக இது எழுதப்பட்டிருக்கிறது. கொலைகளுக்கான காரணிகளை ஒவ்வொன்றாக அவிழ்த்தல் என்பது நமக்கு வில்லியமும் அட்ஸோவும் நூலகத்திற்கான மாயவழிகளைக் கண்டறிதலாக வெளிப்படையாக சொல்லப்படுகிறது என்றாலும், அது மறைமுகமாக வெளிக்கொணர்வது அறிதலுக்கு எதிரான கிறிஸ்தவக் கொள்கைகளைத்தான். சில புத்தகங்களை வாசித்தல் என்பது வாசிப்பவரை இறை நம்பிக்கைக்கு எதிராக மாற்றி விடுமென்பதால் அவை வாசிப்பிற்கு தடை செய்யப்படுவதோடல்லாமல் மாய வழிகளைக் கொண்ட ஒரு நூலகத்திற்குள் மறைக்கப்பட்டிருந்தன.

நாவலில் மடாலயத்தின் விசித்திர சம்பவங்களின் ஊடாக சொல்லப்படும் இறை மற்றும் இறை மறுப்பு சம்மந்தமான மனிதர்களும் சம்பவங்களும் நாவலின் பிற்பாதி விசாரணையில் இணைந்து ஒரு குற்றவாளியைத் தோற்றுவிக்கின்றன. இதை நாவலின் முதல் அடுக்கு எனக்கொண்டால், அட்ஸோவும் வில்லியமும் மடாலயத்தின் மர்மங்களைத் தொடர்ந்து சென்று அதனைக் கண்டறிவது இரண்டாம் அடுக்கு. இவற்றிற்கெல்லாம் மேலாக நாவலின் முடிவு, கொலைகளுக்கான உண்மையான காரணம் சொல்லப்படும்போது இரண்டு அடுக்குகளையும் பொய்ப்பித்து ஒரு மூன்றாம் அடுக்கு நிறுவப்படுகிறது. இதனால் தான் இந்தக் கதை சொல்லல் முறையே ஒரு Labyrinth ஆக இருப்பதாகத் தோன்றுகிறது.

என் வாசிப்பில் முதல் நூறு – நூற்றி இருபது பக்கங்கள் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் கடினமாக இருந்தது. நூறு பக்கங்களைக் கடந்த பிறகும் அதுவரை வாசித்ததை சுருக்கிக் கூற எதுவுமில்லாததைப் போலிருந்தது. கடைசி நூறு பக்கங்கள் அதற்கு அப்படியே மாறாக. ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் ஒரு புது அறிதலையும் நாவலைக் குறித்த ஒரு புதிய பார்வையையும் தரும்.

உதவிய கட்டுரைகள்:
இந்த நாவலை வாசிப்பவர்கள் தங்கள் வாசிப்பை summarize செய்துகொள்ள இந்த சுட்டி உதவலாம். http://www.encyclopedia.com/article-1G2-3421500019/name-rose.html