NEVER NEVER

NEVER NEVER

– சாம் ராஜ்

60களின் நாயகன்

தொலைக்காட்சியில்

கறுப்பு வெள்ளையில்

பிரமாதமாக

புகைத்தபடி / குடித்தபடி

பாடிக் கொண்டிருக்கிறார்.

“புகை பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது”

வண்ண வாக்கியம் காட்சியின் மீது

அப்போதே சொல்லியிருந்தால் இன்னும்

கொஞ்சம் காலம் வாழ்ந்திருப்பார்.

“குடி குடியை கெடுக்கும்” எழுத்துக்களை

அவர் நெஞ்சின் மீது

ஒளிர்ந்தது

அவர் சிகரெட் சாம்பலை

அதன் மீது தட்டினார்.

 

2

இந்த வெக்கை பின்னிரவில்

இரும்புக் கம்பிகளின் குளிர்ச்சி

இதமாயிருக்கிறது

வெகுநேரமாகக் காத்திருக்கிறேன்

நீங்கள் வெளியே வந்தால்

சொல்லிவிட்டுப் புறப்படுவேன்

உங்கள் அறை அதிர்கிறது

சிரிப்பொலியில்.

 

எனக்கு மிகவும் பசிக்கிறது

கடைகளிலிருந்து கொட்டப்பட்ட

அன்றைய கழிவு நீரை

சாலைகள் உறிஞ்சிவிட்டன

திறந்த உங்கள் அறைக் கதவில்

தலை நுழைந்து

சொல்லிவிடலாம்தான்

அத்தருணம்

உங்கள் கண்களை மாத்திரமே

நான் கவனமாய் பார்த்தல் வேண்டும்

சற்றே தாழ்ந்து என் பார்வை

உங்கள் மதுவிலோ தின்பண்டங்களிலோ

சவைக்கப்பட்ட எலும்புக் குவியல்களிலோ

மோதுமெனில்

அம்மணமாய் உணர்வேன்

சகலமும் உங்களுக்கு

அறைக்குள்ளேயே தருவிக்கப்படுகிறது

வெகுநேரமாய் காத்திருக்கிறேன்

நீங்கள்

காறி உமிழவோ

கைபேசியில்

ஒரு யோனியை காத்திருக்கச் சொல்லவோ

வாயுவை சுதந்திரமாய் பிரித்துவிடவோ

வெளிவருவீர்களென

வெகு நேரமாய் காத்திருக்கிறேன்

தண்டவாளப் பாலத்தின்

கீழ்புறத்தில்

எப்பொழுதும்

குற்ற வாசனை

நதியை விட

ஆடு புலியோ

மூன்று சீட்டோ எப்போதும்

ஓடிக்கொண்டிருக்கிறது

உற்சாகமாக

எந்தச் சந்தடிக்கும் சலனப்படாமல்

உஷ்ணத்தோடு உஷ்ணமாக

உறங்குகின்றனர் சிலர்

தூணில் கட்டப்பட்ட மாடுகள்

மாலை வரை

மூத்திர சாணி வட்டத்தின் நடுவே

அவர்களைப் பார்த்தவண்ணம்

அசைபோடுகின்றன

வளைவுகளில்

எழுதப்பட்டிருக்கும்

கோபால் பல்பொடி

ஜம்போ சர்க்கஸ்

பாசிச அரசை வீழ்த்துவோம்

K.G. பெருங்காயம்

எதற்கும் எதனோடும்

யாதொரு பந்தமும் இல்லை.

ரயில் தடதடத்துக் கடக்கையில்

ஆடு புலியை நோக்கி

நகர்ந்து விடுவதாய்

அலுத்துக்கொள்கிறார்கள் அவர்கள்.