சீனா – விலகும் திரை

சீனா – விலகும் திரை

கட்டுரை:- கமலி பன்னீர்செல்வம்

பல்லவி ஐயர்-ன் எழுத்து நம்மை சீனாவிற்கு அழைத்து செல்கிறது. ஒரு பத்திரிக்கையாளராக, இந்திய உயர் நடுத்தர வர்க்கத்து பெண்ணின் பார்வையில் சீனாவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். சீனா என்றால் பாம்பு, தவளை எல்லாம் கூட சாப்பிடுறவங்க அப்படின்றத தாண்டி நாம் அறிந்து வைத்திருப்பது ரொம்ப கம்மி. ஆனால் இந்த புத்தகத்தை படிக்கும் போது , அந்நாட்டின் கலாச்சாரம், மக்களின் வாழ்க்கை முறை, கம்யுனிசத்தின் விளைவுகளும் , பாதிப்புகளையும் மிக அழகாக சொல்லி இருக்கிறார்.

தனது ஐரோப்பிய காதலனுக்காக சீனாவுக்கு மிகுந்த பயத்தோடும், தயக்கத்தோடும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுததரும் ஆசிரியராக சீனாவில் அடியெடுத்து வைக்கிற ஆசிரியரான பல்லவி ஐயரைசீனா எப்படி சுவீகரித்து கொள்கிறது. பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது அங்கு நடந்த அசரத்தனமான மாற்றங்களை ஒரு பார்வையாளராக மட்டுமல்லாமல் சீனா நாட்டில் வாழும் இந்திய பிரஜையாக சீன கலாச்சாரம் பழமைக்கும் புதுமைக்கும் இடையே நிகழ்த்திய சர்க்கஸ் மாற்றங்கள், அதனால் ஏற்பட்ட நன்மை, தீமைகள் அனைத்தையும் எந்த பாகுபாடும் இன்றி அலசுகிறார். தான் சிகரெட் பிடிப்பதை, மது அருந்துவதை, வெளி நாட்டுக்காரை காதலித்து மணந்ததை எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

சீனாவில் சீன மொழி இல்லாமல் காலம் தள்ள முடியாது என்று உணர்வதற்கு காரணமான அவரின் அனுபவங்கள் எல்லாம் மிகுந்த நகைச்சுவையணர்வுடன் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

1980-வரை வணிகமும் வெளியுலக வர்த்தகமும் இல்லாதிருந்த சீனா, குளோபலைசிங் என்ற உலக வர்த்தகத்தை மிக சரியாக உபயோகப்படுத்திக்கொண்டு இருபது ஆண்டுகளில் அசுரத்தனமான வளர்ச்சி கண்டிருப்பதுடன் அதன் பின் உள்ள நடைமுறை சிக்கல்களை சீனா கையாண்ட விதம் சர்வாதிகாரத்தனத்தின் மூலம் தான் என்பதை பல்லவி ஐயர் சொல்லியிருக்கும் விதத்தில் இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது மதிப்பு ஏற்படுகிறது என்றாலும், சீனாவின் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் அடித்தட்ட மக்களிடம் ஏற்படுத்திய மாற்றங்களும் சுவாரஸ்யத்துடன் ஏக்கத்தையும் தருகிறது என்றே சொல்லலாம்.

2008 ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிக்காக உலகத்தை கவர்வதற்காக சீனா தயாரான வேகத்தில், தன் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் பல சர்வதேச விளையாட்டு அரங்குகளையும், வெளி நாட்டவர் வசதியாக தங்குவதற்காக உள்ளூர் வாசிகளின் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள், புராதன கட்டிடங்கள், ஆகியவற்றை சீனா அப்புறப்படுத்திய வேகத்தை பல்லவி பதிவு செய்யும்போது கூடவே அம்மக்களின் வலியைச் சொல்கிறார். கண் முன்னே தகர்க்கப்படும் கட்டிடங்களின் மண் மேடுகளில் புதைந்து போன மனித உரிமை மீறல்களை விவரித்திருக்கும் விதம் மனதை அழுத்துகிறது.

சீன அரசியலின் , அதன் சர்வாதிகாரத்தின் கோரமுகத்தை காட்டியது சார்ஸ் என்று பல்லவி ஐயர் சாட்ஸ் பாதித்த கால கட்டத்தில் அவர் பார்த்த சீனாவை கூறிய போது தான் கம்யூனிஸம் மற்றும் சர்வாதிகாரத்தின் இன்னொரு முகம் பற்றி சிந்திக்க தூண்டுகிறது. லட்சகணக்கான மக்களை சாக விட்ட சீனா அரசாங்கம் இறுதி வரை அதை மூடி மறைக்க கையாண்ட யுத்திகள். அரசாங்கத்தை சந்தேகப்படாமல் மூளை சலவை செய்யப்பட்டது போன்று செயல்படுன் அந்நாட்டு இளைஞர்கள் அப்படி பயிற்றுவிக்கப்பட்டதில் இருக்கும் அரசியலை கூறி மாணவர்களை அடிமைகளாக உருவாக்கும் தொழிற்சாலைகளை தான் சீன அரசு செய்கிறது என்கிறார்.

மாணவர்களுக்கும் அவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எல்லாமே சீனாவின் அப்போதைய தலைமுறையினரின் வாழ்க்கையை , அவர்கள் சிந்தனை தளத்தை பிரதிபலிக்கிற கண்ணாடி என்றே சொல்லலாம்.

அமெரிக்காவை லட்சியமாக கொண்டு ஓட துவங்கிய அசுர பாய்ச்சலில் சீனா முழுவதும் நடந்த மாற்றங்கள் பார்த்து வாய் பிளக்கலாம்.. ஆனால் இதற்காக சீனர்கள் கொடுத்திருக்கும் விலை மிக அதிகம்.. மனித உரிமைகள் அத்தனையும் குழி தோண்டி புதைக்கப்பட்டு தான் அங்குள்ள வானளாவிய கட்டிடங்கள் பகட்டாக ஓளிவீசி நிற்கிறது.

அரசியல் மட்டுமல்லாமல் சீன மக்களின் வாழ்க்கை முறையை பல்லவி ஐயர் பதிவு செய்திருக்கும் விதத்தில் சீனாவுக்கு சென்று வசிக்கும் ஆசை துளிர்விடவே செய்தது. அதுவும் கலாச்சார ஆதிக்கத்தில் தப்பி பிழைத்திருக்கும் ஹூடாங் வீடுகளும் அங்கு வசிக்கும் மக்களின் உணர்வுகளையும் ஆசிரியர் விவரித்திருக்கும் விதத்தில் காட்சிகள் கண் முன் விரிகின்றன. அதுவும் பல்லவி ஐயரின் வீட்டு சொந்தக்காரராக வரும் சீனர் என்னை மிகவும் கவர்ந்தார்.

ஹு டாங் வீடுகளும் அங்கு வசிக்கும் மக்களின் கலாச்சாரமும் அவர்கள் ஒரு குழுவாக வாழ்வதை, ” தன்னை பற்றிய உணர்வே இன்றிக் கூட்டத்தில் கரைந்து போகும் நேரங்கள் ” என்று நம்மையும் அந்த வாழ்கையில் கரைய வைத்திருக்கிறார். நாத்திகத்தை முழு அளவில் அமல்படுத்தி வெற்றி கண்டு, மதங்களை மக்கள் மனதில் இருந்து கிட்டத்தட்ட பிடுங்கி ஏறிந்து, பணம் தான் பெரிது, தர்ம நியாயம் எல்லாம் பிறகு பார்த்து கொள்ளலாம் அன்று ஆகிவிட்ட போது சீனாவில் ஏற்பட்ட பூகம்பம், சமுதாயத்தை உலுக்கிய பல ஊழல்கள் , ஆளாளுக்கு லாபத்துக்கு அலைந்ததால் அப்பாவி உயிர்களுக்கு வந்த ஆபத்து, சீனாவின் தர்ம – நியாய உணர்வில் நட்ட நடுவில் ஏற்பட்ட ஒரு பெரிய கிழிசல், கிழிசலை தைக்க அவர்கள் தேடி பிடித்த ஊசி-நூல் – மதம்.. என்று அவரின் பார்வையில் சீனாவை அலசி இருக்கிறார்.

இந்தியாவுடன் சீனாவை ஒப்பிட்டு இருக்கும் விதத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் கூடுமானவரை உண்மையாக அவர் அங்கு வாழந்தபோது சந்தித்த சிந்தித்தவைகளை பதிவு செய்திருக்கிறார். பெண்களுக்கு அவ்வளவாக ஹாஸ்ய உணர்வு வராது என்பதை போகிற போக்கில் தனது எழுத்து நடையில் உடைத்து சென்றிருக்கிறார். வாசிக்கும் போது சீனாவை பற்றிய அனுபவம் கிடைப்பதுடன், சீன அரசியலின் மூலம் கம்யூனிசத்தின் மீது ஏற்படும் சந்தேகமும் தவிர்க்க முடிவயவில்லை.

இவர் முன்னுரையின் கடைசி வரியாக எழுதியிருக்கும் “ஏழையாக இருந்தால் சீனாவில் வசிக்கவே விரும்புவேன். கொஞ்சம் வசதிவாய்ப்புகள் இருந்தால் இந்தியாதான்” என்பது மிகப்பெரிய தாக்கத்தை நம் சிந்தனையில் ஏற்படுத்துவதுடன் இந்திய அரசியலைம்ப்பின் அவலத்தையும் கோடிட்டு காட்டுகிறது.