சங்கர் கவிதைகள்

சங்கர் கவிதைகள்

கவிதை:- சங்கர்

கொன்று விடுவதென்று
முடிவு செய்தபின்
என் காதலை
நிர்வாணமாக்கி
தலையிலிருந்து கால்வரை
ஆங்காங்கே கீறிவிட்டு
இவ் வனத்தின் நடுவில்
கிடத்திவிட்டு காத்திருக்கிறேன்
சிறிது நேரத்திற்குளெல்லாம்
என் காதலின் குறி
மெல்ல மேலெழுகிறது
இவ்விடத்தில் உன் காதல்
கொல்லப்படவேண்டியதே
என்று நீங்களும் அது
வாழத்துடிக்கின்றது
என்று நானும் விவாதிக்கலாம்
மாண்புடையோரே,
கல்லுக்குள் இருக்கும்
ஈரத்தால் எப்படி உங்கள்
தாகம் தணிப்பீர்கள்…?

தற்கொலை செய்துகொள்வது
என்று முடிவெடுத்தப் பின்
வழக்கமான வழிகளில்
நான் போக விரும்பவில்லை
தூக்கிட்டுக்கொள்வதோ
ஓடும் ரயிலின் முன் பாய்வதோ
எல்லோரும் செய்வது
நிச்சயமாய்
தீவைத்துக்கொள்ளக்கூடாது
மின்சார வயர்களை
எப்படிக் கடிப்பதென்று தெரியாது
ஆற்றில் குதிப்பதென்பது
வழக்கொழிந்துபோன முறை
ஒன்று செய்யலாம்
குறியை அறுத்துவிட்டு
அங்கு ஓர் கோட்டைக் கிழித்துக்கொண்டு
தெருவில் இறங்கி
நடந்து செல்லலாம்
மற்றவற்றை  வேட்டை
மிருகங்கள் பார்த்துக்கொள்ளும்..

தூக்கத்தில்
இறப்பவர்களைப் பார்த்து
பொறாமைப் படாதீர்கள்
அவர்கள்
ஒரு கனவின் பாதியில்
இறந்திருக்கக்கூடும்…!