சிறு’கதையாடிகள்

தொடர் : ‘சிறு’கதையாடிகள்
ஆசிரியர் : கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 1 : இவர்கள் பாவத்தின் பிரதிபிம்பங்கள்!

இது சிறுகதைகளின் நூற்றாண்டு என்பதை, கடந்த டிசம்பரில் எஸ்.ராமகிருஷ்ணனின் உரைவழி அறிந்தேன். அறிந்த தருணத்தில் என்னுள் ஏற்பட்ட உணர்வு குற்றவுணர்ச்சி மட்டுமே. தமிழிலக்கியம் எத்தனையோ முன்னோடிகளைக் கண்டு வந்துள்ளது. சமகாலத்தில் எழுத வரும் ஒருவர் அவரவனைவரின் முதுகிலும் ஏறி நின்று தங்களது கதைகளைக்கூறுகின்றனர். ஏறும் வழியில் கிடைக்கும் அனுபவங்களே அவரவர்களின் எழுத்தை மானசீகமாகச் செப்பனிடுகிறது. வாசிப்பு கொடுக்கும் பிரக்ஞை வாழ்க்கையைப் பரிசீலனை செய்ய பேருதவி புரிகிறது. அந்த பரிசீலனையிலிருந்தே கதைமாந்தர்களின் நியாயவாதங்கள் உருக்கொள்கின்றன. ஒவ்வொரு கதைகளும் ஏதோ ஒரு வகையில் எழுத்தாளனுடைய வாசிப்பின் வழி முன்னோர்களின் கைகளை பிடித்துக்கொள்கிறது. அந்தப் பிடிப்பு மரபுகளைக் கற்றுக் கொடுக்கிறது. அறத்தை போதிக்கிறது. கதைசொல்வதை ஊக்குவிக்கிறது. சிறுகதைகளின் நூற்றாண்டுக் கொண்டாட்டம் அவ்வகையான முன்னோடிகளை மீள்வாசிப்பு செய்து கதையாடுவதே ஆகும். அவ்வழி என்னுடன் கதையாடிய முன்னோடிகளையும்,அவர்களின் கதைகளை வாசிக்கும் போது கொண்டாடிய தருணங்களையும் இத்தொடரின் வழியே பகிரவிருக்கிறேன்.

***

பசித்த மானுடம் நாவலின் வழி வாசகர்களிடம் பெரிதாக கொண்டாடப்பட்டவர் கரிச்சான் குஞ்சு. கு.ப.ராஜகோபாலன் கரிச்சான் எனும் பெயரில் சில படைப்புகளை எழுதியிருக்கிறார். அவர் மீது கொண்டப் பற்றினால் கரிச்சான் குஞ்சு என தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். பசித்த மானுடத்தைத் தவிர்த்து சிறுகதைகள், கட்டுரைகள் என ஆழமான படைப்புகளையும் தமிழில் நல்கியிருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறேன். அவருடைய முழுத் தொகுப்புகள் அல்லது தனித்தனியே அவருடைய அனைத்து ஆக்கங்களும் பரவலாகக் கிடைப்பதில்லை. நாவல்களைத் தவிர்த்து காலச்சுவடில் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பொன்று கிடைக்கிறது. அரவிந்தன் கரிச்சான் குஞ்சுவின் 22 கதைகளை “எது நிற்கும் ?” எனும் தலைப்பில் தொகுத்திருக்கிறார்.

சிறுகதை முன்னோடிகளை வாசிக்கும் போது சமகாலத்தில் அவர்களின் தேவையை, எழுத்தளவிலும் வாழ்க்கையின் அளவிலும் உணர்ந்துகொள்ள முடிகிறது. எழுதிய காலத்திலிருந்து முன்னோக்கி வாழ்க்கையை அனுமானித்தவர்களாக அவர்களை அவர்களின் படைப்புகள் முன்னிருத்துகின்றன. மனித உணர்வுகளை வார்த்தைப்படுத்துவதிலும், அனுபவங்களை நெறிப்படுத்துவதிலும் அவர்களின் பார்வையை நம்மால் கற்றுக் கொள்ளமுடிகிறது. அது போன்று கரிச்சான் குஞ்சுவின் சிறுகதைகள் பல பாடங்களைக் கொடுக்கிறது. அவற்றில் முதன்மையானது மரபின் வேர்களை விட்டகலாமல் இருப்பது.
சமூக சீர்த்திருத்தம் சார்ந்த கருத்துகள் அனைத்துமே சுய விடுதலையிலிருந்து ஆரம்பம் கொள்கிறது. இந்த சுய விடுதலை சாதியை மதத்தை அதன் மரபுகளைத் துறந்து மனிதன் எனும் விஷயத்தில் மட்டும் நின்று பேசுவதாகும். பேசும் விஷயங்களும் மனிதத்தைப் போற்றக் கூடியதாக அமைகிறது. கரிச்சான் குஞ்சுவின் கதைகள் இவற்றில் சுய விடுதலையை, உலகம் போற்றும் கயமைகளிலிருந்தான மானுட விடுதலையை மற்றொரு பார்வையில் அணுகுகிறது. மரபுகளை விட்டு அகலாமல் மரபின் மீதான விமர்சனங்களை முன்வைக்கிறார். அந்த விமர்சனங்கள் மானுடத்தின் பிடியில் நின்று கர்ஜிக்கின்றன.

உதாரணம் கொண்டு விளக்கினால் கரிச்சான் குஞ்சுவின் எழுத்து மையத்தை சிறிது உணர்ந்து கொள்ளமுடியும். ‘குபேர தரிசனம்’ என்றொரு கதை. கதையின் நாயகன் கடவுள் பக்தி இல்லாதவன். ஆனால் தம்பியுடன் குபேர தரிசனத்தைக் காண கும்பகோணம் செல்ல தயாராகிறான். அது தீபாவளிக்கு மறுநாள். பேருந்துகள் குறைவாக இருந்த காலம். இரவு வரை பேருந்தே கிடைக்கவில்லை. இருளோடு உரையாடி கழிக்கின்றனர். விடியலில் கூட்டம் நிரம்பியதாக பேருந்து வருகிறது, தம்பி ஓடிச் சென்று ஏறிக் கொள்கிறான். அண்ணனால் ஏற முடியவில்லை. விளைவு அண்ணன் நடுவழியில் தனியாக விடப்படுகிறார். பயணத் தொகையும் தம்பியின் வசமே இருக்கிறது. திரும்பி தஞ்சாவூர் செல்ல வேண்டும் என்றாலும் அல்லது குபேர பூஜைக்காக கும்பகோணம் செல்வதாக இருந்தாலும் பணம் தேவை. ஆனால் உண்மையைக் கூறினாலும் ஊர்மக்கள் அவனை ஏமாற்றுக்காரனாகவே பார்க்கின்றனர். மனிதத்தை நம்பி அவர் ஊர் திரும்பி யதேச்சையாய் குபேர தரிசனத்தை ஒரு கடையிலும் பார்ப்பதாய் கதை முடிவை நோக்கி நகர்கிறது.

ஆன்மீகம் எனும் விஷயம் அகம் சார்ந்தது. அது ஓர் உணர்தல். கடவுளர்களின் பெயரால் அவற்றை வணிகமாக்கும் பொழுது அங்கே மனிதத்திற்கு இடமின்றி போய்விடுகிறது. மேற்கூறிய சிறுகதையிலும் இதே விஷயத்தைக் கதைமாந்தர்களின் இயல்பில் எழுதுகிறார். ஊர்செல்ல பணம் வேண்டி ஒரு வீட்டில் இருப்பவரிடம் விரிவாக தன் அனுபவத்தைப் பகிர்கிறார். முழுதாகக் கேட்டு ஏமாற்றுக்காரர் எனவும் அதுவும் கடவுளின் பெயரால் ஏமாற்றுபவர் என்றும் குறிப்பிடுகிறார். பணம் கேட்கும் கதாபாத்திரத்தின் மீதான நம்பிக்கை முன்கதையை அறிந்தமையால் வாசகனுக்குப்புலனாகிறது. ஆனால் யதார்த்தம் முன்கதைகளை நம்பத் தயாராய் இருப்பதில்லை. குபேரனின் பெயரால் வணிகமாக்கும் நிறுவனங்களை நம்பும் சமூகம் மனிதநேயத்தை என்றும் தராசிட்டே பார்க்கிறது.
இவ்வகையான சிறுகதைகள் தொகுப்பில் மேலும் சில உள்ளன. குசமேட்டுச் சோதி, படித்தவர்கள், இளவரசு முதலிய கதைகளையும் இவற்றையே பேசுகின்றன. குசமேட்டுச் சோதியில் நிறுவனங்களை கட்டமைக்கும் ஒற்றை ஆசாமியின் பின் செல்லும் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. நிறுவனமயமாதல் எத்தகைய ஆன்மிகத்தைப்போதிக்கிறது என்பதையும், அங்கு வரும் மனிதர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆன்மீகத்தையும் கூறுவதால் பகடிகளைத் தாண்டி இச்சிறுகதை உண்மையைப் பேசுகிறது.

படித்தவர்கள் சிறுகதையிலோ உடல் உபாதைகளின் பின்னே கட்டிவிடப்படும் தெய்வாம்சக் குற்றச்சாட்டுகளை அறிவியலின் துணைக்கொண்டு ஆசிரியர் பரிசீலனைச் செய்கிறார். முழுத் தொகுப்பிலும் சமூகம் கொண்டிருந்த அறிவியல் சார்ந்த வளர்ச்சியின் மீது கரிச்சான் குஞ்சுவிற்கு இருந்த ஈடுபாட்டினை உணர்ந்துகொள்ளமுடிகிறது. மனித மனத்தில் ஆன்மீகத்தின் பெயராலும், நிறுவனமான கடவுளர்களிடமிருந்துமான விடுதலை அறிவியலின் வழியே சாத்தியப்படும் என்பதை நம்பியிருக்கிறார். அதை எடுத்துரைக்க, புரியவைக்க எளிமையான உலகிலிருந்து குரல் எழுப்ப வேண்டும் எனும் தெளிவும் கதைகளில் காணப்படுகிறது.

இதிகாசக் கதைகளையும் வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்டும் சில சிறுகதைகளைப் புனைந்திருக்கிறார். அவற்றிலும் குறிப்பிட்ட மனிதர்களின் வாழ்வில் அவ்வரலாற்று காலத்தின் நிழலை உணரமுடிகிறது.
பொருளாதார அளவில் பின்னடைந்த மனிதர்களை கரிச்சான் குஞ்சுவின் கதைகளில் அதிகமாகக் காணமுடிகிறது. ‘மருந்து உண்டா ?’ சிறுகதையில் சீட்டாடி பணத்தை எல்லாம் இழக்கும் மனிதனின் குடும்பத்தையும் குடும்பத்தாரின் எதிர்பார்ப்புகளையும் விவரிக்கிறது. ‘எது நிற்கும் ?’ எனும் தலைப்பிலான சிறுகதை இரயில் நிலையத்தில் சீட்டு எடுப்பதற்காக கொஞ்சம் பணத்தை கையில் வைத்து காத்திருக்கும் மனிதனைப் பற்றியது. அவனது பார்வையில் விரியும் அந்த இரயில் நிலையம் சார்ந்த விவரிப்புகள் பொருளாதார ரீதியாக சமூகம் எப்படி மனிதனைப் பிரித்தாள்கிறது என்பதை நுண்மையாக ஆராய்கிறது. இந்தப் பிளவை சமன்செய்தால் பின் அரசு எனும் இயக்கத்திற்கு அதிகாரம் செய்ய இடமில்லாமல் போய்விடும் எனும் சமூக நகைமுரணை இயல்பாகச் சொல்லிச் செல்கிறார்.

இந்த வகைமையில் காலத்திற்கும் தன் பெயரை பதிக்கும் வகையில் அவர் எழுதியிருக்கும் சிறுகதை ரத்தச்சுவை. தஞ்சாவூர் சிறுகதைகள் என காவ்யா பதிப்பகம் சார்ந்து தொகுக்கப்பட்டதில் இந்தச் சிறுகதையும் இடம்பெற்றிருக்கிறது. கடன் கொடுத்து, பின் அதன்வட்டியை ஏற்றி, பின் வாங்கியவரை அசலைக் கூடக் கட்ட முடியாமல் செய்து, இருக்கும் சொத்துகளையும் பிடுங்கிக் கொள்பவர் கோபாலய்யர். அவரிடம் கடன் வாங்கி அனைத்தையும் இழப்பவன் ராமு. அவன் குரங்கோடு சேர்ந்து சுற்றுகிறான். அந்தக் குரங்கு ஊரில் ரௌடித்தனம் செய்து திரிகிறது. அவனுடைய வாழ்க்கையைப் பல்வேறுபட்ட சம்பவங்களின் வழியேவும் உரையாடல்களின் வழியேவும் சொல்வது தான் இந்தக் கதை. சிறுகதை முழுக்கவே குரங்கைப் பற்றியது தான். ஆனால் உள்ளீடாகச் சொல்லப்பட்டவை அனைத்தும் பொருள்முதல்வாத சுரண்டலைப் பற்றியது. சுரண்டுதல் சுரண்டப்படுபவருக்குத் தெரியாமல் இருப்பதே யுக்தி. சுரண்டுபவருக்கோ அதன் ருசி பழக்கமாகிவிடுகிறது. இந்தத் தன்மைகளை பல உண்மைகளைக் கொண்டு கட்டுரையாக்கலாம். ஆனால் இவ்விஷயங்கள் துளியும் தெரியாமல் குரங்கின் கதையாக மாற்றியிருப்பதே சிறுகதையின் உச்சமாகத் தெரிகிறது.
மனிதன் சமூகக் கயமைகளால் அந்நியப்படுகிறான். சமூகம் சார்ந்த மதிப்பீடுகளில் தன்னிடமிருந்து அறத்திற்கான விளக்கங்களை எடுத்துரைக்கிறான். அவற்றிற்கான சான்றுகள் மேற்கூறிய கதைகள் எனில் அவை கூறப்படும் பொழுது அவனது குடும்பத்தின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை வேறு கதைகள் பேசுகின்றன. சமூகம் சார்ந்த மதிப்பீடுகள் தனியேவும் சுய மதிப்பீடுகள் தனியேவும் எனக் கதைகளை நூலில் பிரிக்க முடிகிறது. குடும்பச் சிதைவு, காதம்பரி, உறவுமுள், இடம், வாயில்லாச் சீவன்கள் முதலிய கதைகள் குடும்பச் சிக்கல்களை பேசும் வகையில் சேர்கின்றன.

குடும்பச் சிதைவினை விளக்கும் வகையில் இவ்வகையிலான கரிச்சான் குஞ்சுவின் கதைகளின் பொதுத் தன்மையை விளங்கிக் கொள்ளமுடியும். மூன்று வெவ்வேறு வீட்டுச் சிறுவர்கள் அம்மா அப்பா விளையாட்டு விளையாடுகின்றனர். இக்கதையில் இவ்விளையாட்டானது ஓர் குடும்பத்தை அமைத்து அதன் ஒரு தினத்தை நடித்துக் கொள்வது. இதில் ஆள் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதற்காக சிறுவர்களிடையே நிகழும் சண்டை விரிவாக செல்கிறது. பின் வலுக்கட்டாயமாக மேலும் இருவர் சேர்க்கப்படுகின்றனர். பின் விளையாட்டின் சண்டை வழியே அவர்கள் உருவாக்க நினைத்த குடும்பம் முழுதாகச் சிதைகிறது. விளையாட்டு எனும் அளவில் மட்டுமே நிகழும் கதையானது குடும்பம் எனும் அமைப்பை நுண்மையாகக் கேலிசெய்கிறது. யதார்த்தத்தில் இருக்கும் குடும்பம் சார்ந்த வடிவம் விளையாட்டிலும் பிரதிபலிக்கிறது. கருத்து மோதல்களின் வழியே, அகந்தையின் வழியே, அதிகாரப் போட்டியின் வழியே குடும்பம் எனும் அமைப்பு எவ்வடிவத்தில் இருந்தாலும் சிதைவினை நோக்கிச் செல்கிறது என்பதை எள்ளலுடன் சொல்லிச் செல்கிறார்.

மொத்தத் தொகுப்பில் இரண்டு கதைகள் விடுபடல்களாக மீதக் கதைகளை மேற்கூறிய வகைமைகளுக்குள் பொருத்திப் பார்க்கலாம். விடுபட்ட இரண்டுக் கதைகளும் ஞானத்தைப் பேசுகின்றன. அவை தங்கக்கழுகு மற்றும் உயிராசை. தங்கக்கழுகில் அறம் பிசகாமல் இருக்கும் குருவினை திருடனோ என சீடன் சந்தேகப்படுகிறான். அதனை குரு எவ்வாறு எடுத்துக்கொள்கிறார், சீடன் திருட்டை எப்படி அவதானிக்கிறான் என்பதே கதை. இருசாராரின் குடும்பமும் அற்புதமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் குருவானவருக்கு அவரிடம் இருக்கும் வித்தையே பெருமதிப்பிற்குரியது. அதனை செல்வத்தால் விலைபேசிவிட முடியாது என்பதே வித்தையின் மீதான, ஞானத்தின் மீதான கர்வம். தன் மீது ஒரு களங்கம் ஏற்படுகிறது எனில் அது அந்த ஞானத்தின் மீதான களங்கம். அதைப் போக்குவது சாமான்ய விஷயமன்று. மாறாக வாழ்க்கையை மீண்டும் ஆரம்பத்திலிருந்து பயணிப்பதே ஆகும். ‘கற்றபின் நிற்க’ எனும் சொல்லாடலின் பின்னிருக்கக் கூடிய தரிசனத்தை இக்கதையில் அனைத்து வாசகராலும் எளிதில் உணர்ந்துகொள்ளமுடியும்.

இதற்கு நேரரெதிரில் பயணிக்கக்கூடிய மற்றொரு சிறுகதை உயிராசை. கற்கும் வித்தையை பயன்படுத்தக்கூடாது எனும் நிலை. இசையினை கற்கும் திறன் அதிகமாக இருக்கிறது. கற்றலின் வழியே கேட்பவரிடத்தில் பெரும் பெயரெடுக்கிறான். ஆனால் கற்ற இசையை பிரபலப்படுத்தினால் ஆயுள் குறைவு எனும் பயத்தால், தந்தையே தடையென இருக்கிறார். இவர்களின் தர்க்கம் எங்கு சென்று முடிகிறது என்பதே கதையாய் இருக்கிறது. கற்றலின் வழியே அறிவு கிடைக்கிறது. அதை பகுத்தறிவதன் வழி ஞானத்தை அடைகிறோம். இவ்விரண்டின் இடையில் இருக்கும் இடைவெளியையும், தடைகளையும் நுண்மையாக விளக்குகின்றது மேற்கூறிய இரண்டு சிறுகதைகள்.
முக்கால்வாசிக் கதைகளுக்கும் மேல் பிராமணீய சொல்லாடல்களும் அவர்களுக்குள்ளிருந்தே கதைசொல்லலும் நிகழ்கிறது. மானுட விடுதலை நோக்கிய பார்வையை, சாதி-மத கட்டுமானங்களால் பிளவு கொண்டிருக்கும் சமூகத்தை ஏதேனும் ஒரு நவீனம் சமன் செய்யும் எனும் எதிர்ப்பார்ப்பை, மரபார்ந்த விழுமியங்கள் காலத்திற்கேற்ப கொள்ளும் மாறுதல்களின் மீதான நம்பிக்கையை கரிச்சான் குஞ்சுவின் சிறுகதைகளில் காணமுடிகிறது. கதைகளில் ஊடாடும் மனிதர்கள் அனைவருமே மனிதத்தை மறத்தல் எனும் பாவத்தின் பிரதிபிம்பங்கள். மறந்தவர்களின் கதையையும், மனிதத்தை நோக்கி நகர்பவர்களின் பயணத்தையும் ‘எது நிற்கும்?’ சிறுகதைத் தொகுப்பின் சொற்கள் காலத்தைக் கடந்தும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

(தொடரும். . . )