‘சிறு’கதையாடிகள்

தொடர் : ‘சிறு’கதையாடிகள்
ஆசிரியர் : கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 2 : இருண்மையின் நகைப்பொலி!

இலக்கியம் என்பதன் அர்த்தத்திற்கு பல கூற்றுகள் பல்வேறு ஆசிரியர்களிடமிருந்து கதைகளாக வெளிப்படும். சிந்திக்கும் தருணத்தில் அனைத்துமே சரியாக அமைவதுமுண்டு. அவற்றில் பொதுவானவை சமூகம் தன்னிடமிருந்து விலக்கி வைத்திருக்கும் மனிதர்களின் கதைகளைப் பேசுவது என்பதாகும். அதை இரு வகையாக பேசலாம். ஒன்று அவர்களின் குரல்களாக கதைகளைப் புனைவது. இரண்டாவது கதைசொல்லி எனும் அம்சத்துடன் பார்வையாளர்களாக அவர்களின் வாழ்க்கையைப் பேசுவது. சில நேரங்களில் கதைகள் தான் பேசும் வாழ்க்கையின் ஆழத்தைப் பொறுத்தும் இவ்விரண்டு வகைமைகள் உருவாகின்றன. சிறுகதைகளில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை கதைசொல்லியின் நேர்மைக்கேற்ப படைத்த முன்னோடிகளில் ஒருவர் ஜி.நாகராஜன்

***


ஜி.நாகராஜனின் மொத்த படைப்புகளே குறைவான எண்ணிக்கையிலானவை. அவை முழுத் தொகுப்பகவே கிடைக்கின்றது. சிறுகதைகள் மட்டுமெனில் காலச்சுவடு பதிப்பகத்தில் சுரேஷ்குமார் இந்திரஜித் தேர்ந்தெடுத்த ஜி.நாகராஜனின் 17 சிறுகதைகள் “டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்” என்ற தலைப்பில் கிடைக்கிறது.

பண்பாடு அனைவருக்கும் பொதுவான ஒன்று. ஆனாலும் சிலரைப் பார்க்கும் பொழுது பண்பாடற்றவர் எனும் எண்ணம் இயல்பாக உருவாகிறது. மனம் பண்பாட்டை முகச்சாயலிலிருந்தும் அவரவர்கள் செய்யும் தொழிலிருந்தும் ஊகிக்கத் துவங்குகிறது. யதார்த்தமோ கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. அவரவர்களின் வாழ்வியலுக்கு ஏற்ப பண்பாடு மாறிக் கொள்கிறது. என் வீட்டின் விருந்தோம்பலுக்கும் பக்கத்து வீட்டின் விருந்தோம்பலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. விருந்தோம்பல் கலாச்சாரம் எனில் அதை இரு வகையாக செய்வது அவரவர்களின் பண்பாடாகும். நாம் அறியாத பல கலாச்சார உருவங்களை கதையாக்குபவர் ஜி.நாகராஜன். அவருடைய கதைகளில் அதிகம் தெரியக்கூடியது வேசிகளும் ரவுடிகளுமே ஆவர். நாம் மேட்டுக்குடி என்றும் நல்லவர்கள் என்றும் குறிப்பிடும் மனிதர்களைக் கூட ஜி.நாகராஜனின் கதைகளில் காணமுடிகிறது. அவருடைய எழுத்தில் அவர்கள் கொள்ளும் உருவமோ உள்ளத்தில் இருக்கும் நஞ்சின் உருவமாக இருக்கிறது. எதிர்மறை எண்ணங்களின், மனம் புதைத்து வைத்திருக்கும் தீமைகளின் உருவமாகவே ஜி.நாகராஜனின் கதாபாத்திரங்கள் கதைகளில் உலா வருகின்றனர்.

பூர்வாசிரமம், யாரோ முட்டாள் சொன்ன கதை, துக்க விசாரணை, டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் ஆகிய கதைகளில் வேசிகளின் கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. இவை வெறும் வேசித் தொழிலையும் அதனை நிகழ்த்தும் உடலுறவுகளையும் பேசவில்லை. மாறாக அவர்களின் பண்பாட்டுக்கூறுகளையும், வேசிகளின் உள்ளக்கிடக்கையும், வேசிகளின் மீது வாடிக்கையாளன் மனதால் கொள்ளக்கூடிய சில உணர்வுச் சிக்கலையும் தீர்க்கமாக பேசுகிறது.

பூர்வாசிரமம் சிறுகதை மேற்குறிப்பிட்ட அனைத்து தன்மைகளையும் ஒருங்கே பெற்றிருக்கிறது. நாயகனை வேசியின் வீட்டிற்கு ஒருவன் அழைத்து வருகிறான். வாடிக்கையாளன் கேட்டதற்கு ஏற்றதான சிறுமி அங்கு படித்துக் கொண்டிருக்கிறாள். வந்தவனுக்கு காசினைக் கொடுத்து அனுப்பிவிட்டு சிறுமியும் நாயகனும் அறைக்குள் செல்கின்றனர். உடலுறவு சார்ந்த வர்ணனைகள் எதுவும் இடம்பெறவில்லை. பின் மீண்டும் சிறுமி படிக்கச் சென்றவுடன் வெளியில் இருக்கும் பஞ்சவர்ணத்தம்மாளுடன் பேசிக் கொண்டிருக்கிறான். பின் அதே அறைக்குள் பஞ்சவர்ணத்தம்மாளுடன் செல்கிறான். இங்கும் உடலுறவு சார்ந்த வர்ணனைகள் எதுவும் இடம்பெறவில்லை. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வரும் பொழுது சிறுமிக்கு திருமணமாகியிருக்கிறது. பஞ்வர்ணத்தம்மாளுடன் பழைய கதைகளை மட்டும் பேசிவிட்டு கிளம்ப யத்தனிக்கிறான். அந்த அம்மாள் அவனை அழைத்துக் கொண்டு அதே அறைக்குள் செல்கிறாள். கிளம்பும் போது அடுத்தமுறை திருமணப் பத்திரிக்கையுடன் வர வேண்டும் என்று அனுப்பி வைக்கிறாள். இந்த இடத்தில் சிறுகதை முடிவடைகிறது.

வாசிப்பிற்கு பின் அவை ஏற்படுத்திய சலனங்கள் நூல் சார்ந்து எழுதும் இத்தருணத்திலும் என்னிலிருந்து ஓயவில்லை. கதையின் கடைசியில் அவள் செய்வது ஓர் விருந்தோம்பல். அந்த செய்கைக்கு அவள் பணம் பெறவில்லை. முதலில் ஏற்படும் உடலுறவிற்கும் பல ஆண்டுகளுக்கு பின் அதே அறையில் அதே பஞ்சவர்ணத்தம்மாளுடன் ஏற்படும் உறவிற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் மனதில் உருவாகிறது. அதை எளிமையாக சொல்லும் இடம் இரண்டொரு வார்த்தைகளால் கடந்து செல்கிறது. அவள் வைக்கும் வணக்கத்தை கவனிக்காமல் நாயகன் கடந்து செல்கிறான். தன் திருமணத்தை எதிர்நோக்குகிறாள் எனும் இடத்தில் அவளுடனான உறவு முறிந்துவிட்டது என்பதை முழுதாக உணர்கிறான். தன்னிடம் இருக்கும் வெறுமையை அவளால் எப்படி உணர முடிந்தது எனும் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவன் செல்லும் இடம் பஞ்சவர்ணத்தம்மாளின் வாழ்க்கையை உயர்த்திக் காட்டுகிறது. கதையின் முதல் பாதியில் பேசுவதற்கும் இரண்டாம் பாதியில் பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகளை உணர முடியும். முதல் பாதி முழுக்க வேசித் தொழிலை முன்வைத்து வாழ்க்கையை எவ்வாறு உயர்த்தலாம் எனும் முனைப்பில் இருக்கிறாள். இரண்டாவதிலோ தன் தொழில் மூலம் கிடைக்கும் வெற்றியை வாடிக்கையாளனுடன் கொண்டாடுகிறாள். எவ்வகையாய் இருப்பினும் அன்பு மாறாதது என்பதை ஜி.நாகராஜனின் பல கதைகளில் உணரமுடிகிறது.

அவருடைய கதைகளில் அறைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. முன்சொன்ன கதையில் மொத்தமாகவே ஐந்து வரிகளுக்குள் அறைகளின் விளக்கத்தை கொடுத்திருப்பார். ஆனால் அவற்றினுள் நிகழும் உடல் ரீதியான வணிகம் சமூகத்தின் பார்வையில் அபத்தம் சார்ந்தது. அதிகாரத்திற்கும் பணம் படைத்தவர்களுக்குமான கூடாரம். ஆனால் அவற்றினுள் இருக்கக்கூடிய விளிம்பு நிலை மனிதர்களின் ஏக்கத்தையும் நேர்மையாக பதிவு செய்கிறார். நூலின் தலைப்பிலான சிறுகதையில் தற்கொலை செய்யப்போகும் பெண்ணிடம் வாடிக்கையாளன் ஒருவன் வருகிறான். இருவரும் பேசுகின்றனர். அவளுக்கு தண்ணீர் தவிக்கிறது எனும் போது வாடிக்கையாளனே உதவி செய்கிறான். பின் காசினை கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறான். போலீஸ் ரெய்டு வரக்கூடும் என்று சொல்லிவிட்டு சென்ற அத்தான் வீடு திரும்பும்போது வந்து சென்றவனை பற்றி விசாரிக்கிறாள். அப்படி ஒருவன் இல்லை எனும் தர்க்கத்தில் கதை நீள்கிறது.

எது தன் அன்றாடத்தில் இல்லையோ அதுவே மனிதனின் லட்சியமாக மாறுகிறது. கனவுகளில் அத்தகைய உலகிலேயே திளைக்கிறான். மேற்கூறிய கதை முழுக்க அவளுடைய ஆசைகளே வாடிக்கையாளனின் உருவமாய் உருக்கொள்கிறது. அக்கதையில் அவள் ஏமாறும் தருணமே அவ்வாடிக்கையாளன் மீதான அவளுடைய பற்றை அதிகரிக்கிறது. கதை முழுக்க வாடிக்கையாளன் அவளைத் தொடாமலேயே இருக்கிறான். பேசுவதன் மீதான ஆர்வமும் நாணப்பட வைக்கும் பார்வையும் அவளை சுயம் மறக்க வைக்கிறது. தன் மீது பிற வாடிக்கையாளர்கள் தொடுக்கும் அதிகாரத்திலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் தப்பிக்க நினைக்கிறாள். அவள் எடுக்கும் தேர்வு தற்கொலையாக இருப்பினும் அன்பே வாழ்க்கையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது என்பதை உணர்கிறாள். அப்போது அவளுடைய தீர்வை மறுபரிசீலனை செய்யும் போது அதன் அபத்தத்தை முழுமையாக உணர்கிறாள். அதை விவரிக்கும் இடத்தில் சிறுகதை காலத்தைக் கடந்து நிற்கும் தன்மையை பெறுகிறது. வாடிக்கையாளன் கொடுத்த காசினை எடுத்து அத்தானிடம் காட்ட மாடியறைக்கு செல்கிறாள். அங்கு ஆசிரியர் பின்வருமாறு எழுதுகிறார்,

“அவள் அணைக்காது விட்டுப்போன மெர்குரி விளக்கு ஒளியில், அவள் பிரயாசைப்பட்டு இரும்பு வளையத்திலிருந்து தொங்கவிட்ட கயிறும், அதன் கீழ்நுனியை அலங்கரித்த வட்டமும் அவளைத் திகைக்க வைத்தன”

ஜி.நாகராஜன் முன்வைக்கும் கதைமாந்தர்களின் உலகம் அன்பின் அறியாமையால் நிரம்பியிருக்கிறது. இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கதையான ‘யாரோ முட்டாள் சொன்ன கதை’இல் கூட இப்படியான கதைமாந்தர்களே பெரிதும் இடம் வகிக்கிறார்கள். மணியும் பார்வதியும் தம்பதியர். அவ்வூரில் இருக்கும் ரவுடி பரமன். பரமனுக்கும் பார்வதிக்கும் இடையில் தொடர்பிருக்கிறது. இதை கணவன் அறிகிறான். அதன் பின்பான அவனுடைய செயல்கள் எவ்வாறு நிகழ்கின்றன எனும் விளைவுகளே இக்கதை. இது நெடுங்கதை. இக்கதையை சோதனை முயற்சி சார்ந்த கதை என்றும் சொல்லலாம். பரமனுக்கு அவர்களுடனான தொடர்பு ஏற்பட்டது முதல் பரமனின் மரணம் நிகழும் வரை தெளிவாக நீள்கிறது. இதில் சம்பவங்கள் நேர்க்கோட்டில் இல்லாமல் முன்பின்னாக அமைந்திருப்பது சிறிதும் பிசகில்லாமல் செப்பனிடப்பட்டிருக்கிறது. மேலும் கதையின் வழியே எழும்பும் பார்வதியின் குரல் உடல் போகப் பொருளாகவே இருப்பினும் அது உடலின் சம்மதத்தினால் மட்டுமே நிகழும். சமூகம் திணிக்கும் அறம் உடலுக்கு பொருந்தாது என கர்ஜிக்கிறது. அதற்கொப்ப உருவாகும் நிகழ்வுகள் சமூக அறத்திற்கும் தனி மனித அறத்திற்குமான போராகவே உருக்கொள்கிறது.

உளவியல் சிக்கலை ஆராயும் ஜி.நாகராஜன் சமூகத்தின் போக்கில் இருக்கும் விமர்சனங்களையும் சிறுகதைகளாக்கியிருக்கிறார். உலகமயமாதலின் மீதிருந்த பயத்தை ‘கிழவனின் வருகை’ எனும் கதையில் மாயாவாதக் கதையாக முயற்சி செய்திருக்கிறார். அறிவியலும் மாறும் கலாச்சாரமும் மக்களோடு புழங்கியிருந்த நம்பிக்கைகளை தகர்க்க வல்லவை எனும் பயத்தை அச்சிறுகதை முழுக்க காணமுடிகிறது. மேலும் ‘அசலும் போலியும்’ எனும் சிறுகதையில் பெண்களின் உள்ளாடையை வைத்து இரு தலைமுறைக்கு இடையே உருவாகியிருக்கும் நவீனமையத்தை நுண்மையான சித்திரமாக கையாண்டிருக்கிறார். பழைய தலைமுறைவாதிகளுக்கு நவீனம் சோதனைமுயற்சியின் களமாகவே இருக்கிறது என்பதை எள்ளலுடன் பதிவு செய்கிறார்.

இவ்வகையிலேயே ‘இலட்சியம்’ எனும் சிறுகதையும் அடங்கும். கற்பனாவாதச் சிறுகதையாக தோற்றம் கொண்டாலும் அவை தொடுக்கும் பகடி அனைத்து இலட்சியவாதங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. தீர்க்கமான கொள்கைகளுடன் ஆரம்பமாகும் இலட்சியங்கள் அனைத்தும் எப்படி கோஷம் போடும் கூட்டங்களாக மாறுகின்றன என்பதை திருவிழாவின் கதையாக மாற்றி கூறியிருக்கிறார். வாசிக்கும் போது திருவிழாவின் கதையாகவும் தேரின் கதையாகவும் தோற்றம் கொண்டாலும் அவை இந்திய சமூகத்தின் அனைத்து அரசியல் ரீதியான இலட்சியங்களையும், மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் எள்ளி நகையாடுகிறது.

ஜி.நாகராஜனின் கதைகளை வேறொரு வகையில் பிரிக்கலாம் எனில் அவை தனிமனித வாழ்க்கையில் இருக்கக்கூடிய முரண் உணர்வுகளை நேர்மையாக பதிவு செய்வதாகும். ‘தீராக்குறை’ எனும் கதையில் இறந்து போகவிருக்கும் அப்பா தனக்கு செய்யாததை எண்ணி கவலையுறும் அத்தனைப் பிள்ளைகளின் குரலையும் பதிவு செய்கிறார். அமைதியாக அனைத்துப் பிள்ளைகளுக்கும் சேவகம் செய்யும் மனைவியிடம் மட்டுமே அவர் மன்னிப்புக் கேட்கிறார். இதே போன்றதொரு மன்னிப்பை ‘ஜுரம்’ சிறுகதையில் வரும் கணவனும் கேட்க நேரிடுகிறது. ஆண் உடைமை மனோபாவத்தில் பெண்ணின் மீது திணிக்கக்கூடிய அதிகாரம் இயல்பென மாறுகிறது. அந்த அதிகாரத்தின் பிண்ணனியில் தான் அன்பு மறைந்திருக்கிறது. அன்பை வெளிப்படுத்த அதிகாரத்தை களைந்தே ஆக வேண்டும் எனும் நுண்மை இவ்விரு கதைகளிலும் மேலிடுகிறது.

வெளித்தோற்றத்தில் இருக்கும் கவர்ச்சியை ஜி.நாகராஜன் விரும்பாதவராகவே தென்படுகிறார். ‘எங்கள் ஊர்’ எனும் கதையில் ஊரின் இயற்கை விவரிப்புகளை கூறிய பின் உள்ளிருக்கும் அபத்தமான மனித வாழ்க்கையை விவரிக்கிறார். பின் மீண்டும் அதே வர்ணனைகளில் சிறுகதையை முடிக்கிறார். ஊர் எப்படியே மக்களும் அப்படியே என்பது போல வேறொரு கதையை எழுதுகிறார். அது ‘ஓடிய கால்கள்’. தப்பித்து செல்லும் சிறைவாசி மீண்டும் பிடிபடுகிறான். அதனால் மூவருக்கு வேலை போகும் நிலை ஏற்பட்டு தப்பிக்கின்றனர். அதில் இருவர் மீண்டும் திரும்பிய அவனை வெறி தீர அடிக்கின்றனர். கடைசியாக இருந்தவரை ஆசிரியர் டூ நாட் சிக்ஸ் என்றே குறிப்பிடுகிறார். அவரைப் பற்றிய வர்ணனையில் லஞ்சம் வாங்காத சாதுவான பேர்வழி என்கிறார். ஆனால் அவரும் சிறைவாசியின் மீது தொடுக்கும் வன்முறை மனிதனின் இயல்பை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அவருக்கு பெயரிடாமல் எண்ணையே கதாபாத்திரத்தின் பெயராக வைத்திருப்பது கோடானு கோடி மக்களின் ஒற்றை பிரதிநிதியாக பரிணமிக்க வைக்கிறது.

அன்பை உணர்ந்து கொள்வதற்கும் வன்முறையை பிரயோகிப்பதற்கும் சூழ்நிலைகளே வழிகோலுகின்றன. சமூக அமைப்பும் அவை விதிக்கும் அறமுமே ஒருவரை மற்றொருவரிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. சிலரை விளிம்பு நிலைக்கும் சிலரை மேட்டுக்குடிக்கும் ஏற்றி வைக்கிறது. ஊர் கூறும் மேட்டுக்குடியின் அபத்தங்கள் மேல் பொன்முலாம் பூசப்படுகிறது. விளிம்பு நிலை மக்களோ அபத்தங்களின் அர்த்தங்களாகின்றனர். சமூகம் உருவாக்கும் பேதங்களைக் களைந்து மனிதனுக்குள் பொதிந்திருக்கும் இருண்மைகளை வெளிக்கொணர்வதே ஜி.நாகராஜனின் சிறுகதைகளாக இருக்கின்றன. இவை கூறும் உண்மைகள் காலத்திற்கும் பொருந்தக் கூடியவை ஆகும். காலமும் கலாச்சாரமும் மாறிய போதும் இவ்வுண்மைகள் மாறாமல் இருப்பதே ஜி.நாகராஜனை முன்னோடியாக்குகிறது.

(தொடரும். . . )