‘சிறு’கதையாடிகள்- 3

நம்பிக்கையை தேடும் மனிதர்கள்!

கிருஷ்ணமூர்த்தி

பள்ளிக் காலத்திலிருந்து காந்தி ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, மஹாவீர ஜெயந்தி என்று விடுமுறைகளை கொண்டாடி வந்திருக்கிறேன். இதன் ஒப்புமையில் ஜெயந்தி எனும் சொல் பிறந்த தினத்தைக் குறிக்கக்கூடியது என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது. சட்டென்ரு மனதில் தோன்றிய கேள்வி எழுத்தாளர்களின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது ? எழுத்தாளர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட வேண்டியவையா எனும் கேள்விகளும் எழுந்தன.

மக்களை வகுப்புகளாக பிரித்தேகௌலகம் முழுக்க அரசியல் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அதிகாரத்தின் பக்கம் இருக்கும் அரசின் சார்பு நிலை சில மனிதர்களை விளிம்பு நிலைக்கும், சிலரை இரண்டும் கெட்ட நிலைக்கும் தள்ளியிருக்கிறது. ஒரு பகுதியின் வாழ்க்கையை பிறிதொரு பகுதியிலிருந்து பிரித்து வைத்திருப்பதே அரசியலின் மகத்தான வெற்றி. அவற்றைக் களைந்து ஒவ்வொரு மக்களின் குரலாக அவர்களின் வாழ்க்கையை எழுத்தாளனே பதிவு செய்கிறான். அவை மனித வாழ்க்கையின் சாரத்திலிருந்து பிசகாமல் உண்மையை பேசுகின்றன. மறைக்கப்பட்ட உண்மைகளை, சொல்லப்படாத வாழ்க்கையை எழுத்தாளனே வெளிக்கொணர்கிறான். பலதரப்பட்ட வாழ்க்கையின் குரலை பதிவு செய்யும் காரணகர்த்தா அவன். அவ்வகையில் எழுத்தாளன் கொண்டாடப்பட வேண்டியவனே. மேலும் தமிழ் சமூகத்தில் வாசிப்பே எழுத்தாளர்களுக்கு கொடுக்கும் முதல் அங்கீகாரம், வாசிப்பின் கொண்டாட்டம். செப்டம்பர் 22 அசோகமித்திரன் பிறந்தநாள். அதன் வகையில் இத்தொடரில் அவருடைய சிறுகதைகள் சார்ந்து எழுதுவதில் பேருவகை கொள்கிறேன்.

***

1959 முதல் அசோகமித்திரன் சிறுகதைகள் எழுதி வந்திருக்கிறார். தொடர்ந்து சிறுபத்திரிக்கைகளின் வழி எழுதி வந்த அவருடைய கதைகளின் முதல் தொகுப்பு 1971 இல் “வாழ்விலே ஒரு முறை” எனும் தலைப்பில் வெளிவருகிறது. தொகுப்பில் மொத்தம் இருபத்தைந்து கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அனைத்தும் 1959-1969 வரையில் எழுதப்பட்ட கதைகள். ஆரம்பகட்ட கதைகள் எனும் வரையரைக்குள் தொகுப்பு அடங்கியிருப்பினும் கதைகளில் தெரியும் செறிவு சமகால எழுத்தாளனுக்கும் சவால் விடுவதாய் அமைந்துள்ளது. சிறுகதை எனும் வடிவத்தினுள் எதைப் பேசப் போகிறோம், அதை எங்ஙணம் கையாளப் போகிரோம் எனும் நுண்மை ஆரம்பகாலக் கதைகளிலேயே தெரிகிறது. இதன்வழி அவருக்கான கதைப்பாணியை தொடக்கத்திலிருந்தே பயின்று வந்திருக்கிறார் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள முடிகிறது.

அசோகமித்திரனின் சிறுகதைகளை மூன்று பகுதிக்குள் அடக்க முடியும் என எண்ணுகிறேன். அவருடைய கதாபாத்திரங்கள் இயலாமையின் சட்டகத்தினுள் சிக்குண்டு கிடக்கிறார்கள். காலத்தின் வேகத்திற்கு ஏற்ப சமூகம் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு வருகிறது. நாயகனின் வாழ்க்கை கடந்த காலத்தின் சிடுக்குகளில் சிக்கிக் கொண்டுவிடுகிறது. அவனுடைய பார்வை சமகாலத்திற்கு வர மறுக்கிறது. இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் கடந்தகாலத்தினுள் தன்னை பதுக்கி வைத்துக்கொள்ளும் மனிதர்களே அவருடைய கதைகளின் நாயகனாக இருக்கிறார்கள்.

‘இனி வேண்டியதில்லை’ எனும் சிறுகதைக் கொண்டு விளக்கினால் நன்கு புரிந்துகொள்ள முடியும். சந்தரும் சுஜாதாவும் நாடகசபாவில் பணிபுரிகின்றனர். நாடகத்தின் காலகட்டம் முடிந்து திரைப்படம் நோக்கி காலம் நகரத் துவங்குகிறது. சந்தரின் தோற்றத்திற்கு திரைப்படத்தில் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் சுஜாதாவின் சித்தப்பா பிரகாஷ் ராவிடம் வாய்ப்பு தேடிச் செல்கின்றனர். சித்தப்பா ஸ்டூடியோ மேனேஜராக இருக்கிறார். அவர் சித்தார்த்தா எனும் இயக்குனரிடம் அழைத்து செல்கிறார். இடையில் சுஜாதாவிற்காக அவன் அதுவரை செய்த சின்னச் சின்ன பணிவிடைகளான புடவைக்கு இஸ்திரி போடுவது போன்றவற்றை விவரிக்கிறார். மேலும் நாடக சபாவில் பணிபுரிவதன் வழியே யாரோ பெயெரெடுப்பதற்கு நாம் உழைக்க வேண்டும் எனும் கலை-உழைப்பு சார்ந்த ஊழலையும் விவரித்திருப்பார். சந்தரின் மனம் அனைத்திலிருந்தும் நிம்மதியான வாழ்க்கையை தேடும் விரக்தி மனநிலையிலேயே கிடக்கும். மேலும் இயக்குனரிடம் செல்லும் வரை வாய்ப்பு கிடைக்கும் நம்பிக்கை அவன் வசமின்றியே உடன் வருகிறான். சித்தார்த்தாவை சந்தித்தவுடன் சற்றும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சுஜாதாவிற்கான திரைப்பட வாய்ப்புகள் பிரகாசமாகின்றன. சந்தருக்கு சுஜாதாவின் மீது உருவாகும் வெறுப்பு தன் இயலாமமையின் மீது வெளிச்சம் பாய்ச்சப்படுவதாய் உணர்கிறான். சுஜாதாவை வெறுப்பின் அடிப்படையில் தன்னிடமிருந்து பிரித்துக்கொள்வதில் இயலாமைக்கு தீனியும் கதைக்கான முடிவையும் ஆசிரியர் வைக்கிறார்.

கதை நாயகர்களின் இயலாமை அவர்கள் மட்டும் உணர்வதாக அமையாமல் அதை சமூகமும் அறிந்துவிடும் என்பதை சில நடைமுறை சம்பவங்களோடு விவரிக்க முயற்சிக்கிறார். மேற்கூறிய கதையிலேயே முதன்முறையாக பிரகாஷ் ராவை சுஜாதாவும் சந்தரும் சந்திக்க செல்லும் இடத்தை பின்வருமாறு விவரிக்கிறார் –

“சுஜாதா உட்கார்ந்த நாற்காலி பிரகாஷ் ராவ் திசை நோக்கிப் போடப்பட்டிருந்தது. சந்தர் அமர்ந்திருந்த நாற்காலி வெளிக் கதவைப் பார்த்த மாதிரி இருந்தது”

பெரும் கனவை இந்த வாழ்க்கை துரத்திச் செல்கிறது. வழியில் ஏற்படும் எண்ணற்ற தோல்விகள் அனேக பாடங்களைக் கற்றுத் தருகின்றன. அவற்றின் வழி வாழ்க்கைக்கான அர்த்தங்கள் புலனாகின்றன. புலனாகும் வரை இயலாமையே வாழ்க்கையாகிறது. அதை சின்னச் சின்ன வரிகளில் சொல்லிச் செல்வது வாழ்க்கை சார்ந்த பரிசீலனையை வாசகனுக்கு சாத்தியப்படுத்துகிறது.

மேற்கூறிய இயலாமையிலிருந்து விடுபடுவதற்கு ஏதேனும் ஒரு நம்பிக்கை தேவைப்படுவதாய் இருக்கிறது. அந்த நம்பிக்கையே அசோகமித்திரனின் கதைகளில் இரண்டாம் பகுதியாக நிலைகொண்டிருக்கிறது. நம்முடன் துளியும் சம்மந்தமில்லாத மனிதர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகள், அல்லது வாழ்வதற்கான நம்பிக்கையை கொடுக்கும் சொற்கள் மீண்டும் ஒருமுறை வாழ வாய்ப்பினை வழங்குகிறது.

‘திருப்பம்’ எனும் சிறுகதை இந்த நம்பிக்கைக்கான மிகச் சிறந்த உதாரணமாகும். ஒரு நாளில் நாயகன் கார் ஓட்டுநர் பள்ளிக்கு செல்வதே கதை. நாயகன் மற்றும் அவனுடைய நண்பனும் பயிற்சிக்கு செல்கிறார்கள். நாயகனுடைய வீட்டின் பின்புறம் சிறிதாக விவரிக்கப்படுகிறது. அண்ணன் கொடுக்கும் பணத்தில் ஓட்டுநருக்கான பயிற்சிக்கு செல்கிறான்.  அன்று வரை மைதானத்தில் மட்டுமே ஓட்டிப் பழகிய இருவருக்கும் முதன்முதலாக மையச் சாலையில் பயிற்சி தர முடிவெடுக்கிறார் ஆசிரியர். பயிற்சியின் போது இயல்பாக பயத்தில் எல்லோரும் செய்யும் சிறு சிறு தவறுகளை அவர்களும் செய்கின்றனர். ஆசிரியரிடம் திட்டும் சில நேரம் அடியும் வாங்குகிறார்கள். மேலும் சாலையில் அவர்களால ஏற்படும் போக்குவரத்துப் பிரச்சினைகளும் விளக்கப்படுகின்றன. இந்தத் தொடர் நிகழ்வில் ஆசிரியர் இனியும் தவறு செயுதால் கொன்றுவிடுவேன் என அதட்டுகிறார். நாயகனின் மனநிலை காலையிலிருந்து வீட்டின் நடுத்தர வர்க்க பொருளாதார நெருக்கடி, வாழ்க்கையில் துரத்தும் வெறுமை போன்றவற்றால் துவண்டிருக்கிறது. சட்டென்று ஆசிரியரின் சொற்களால் உணர்வெழுச்சிகள் மேலெழும்ப கற்றுத் தருபவரிடம்,

“கொன்னு போட்டுடுங்க சார். இங்கேயே கொன்னு போட்டுடு. அப்பா இல்லை, அம்மா இல்லை, யாரும் உன்னை கேக்க மாட்டாங்க”

என்று புலம்புகிறான். பின் அவர் குறைந்தபட்சம் போக்குவரத்திலாவது ஓடுநராக ஆகலாம் என ஆறுதலாய் சொல்கிறார். இதற்கு பின்னான கதை உரையாடல்களிலிருந்து விலகி வர்ணனைகளில் நகர்கிறது. அவன் இறங்க வேண்டிய இடம் வரை நிதானமாக, அதே நேரம் போக்குவரத்து அதிகாமாகிய இடத்தின் வழி சீராக ஓட்டிச் செல்கிறான். இறங்கிய பின்னும் அவனுடன் துணையென வருவது ஓட்டுநர் கூறிய சொல்லான போக்குவரத்தில் ஓட்டுனராகவாவது ஆக வேண்டும் என்பதாக இருக்கிறது.

நம்பிக்கைக்குரிய சொல்லை மனிதன் வாழ்நாள் முழுக்க சுமந்து செல்கிரான். அவை வாழ்தலை நெறிப்படுத்துகின்றன. இந்த நெறிப்படுத்துதலுக்கு ஒரு சொல் தேவைப்படுகிரது. அது எப்போதோ யாராலோ நிச்சயம் கிட்டும். அதே நேரம் இயலாமை துரத்திக்கொண்டே இருப்பது எனும் எச்சரிக்கையை அவருடைய கதைகள் மறக்காமல் கூறிக் கொண்டே இருக்கின்றன. ‘இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள ஆசை’ சிறுகதையில் அத்தன்மையை நன்கு உணர முடியும். இந்திராவிற்கு வீணை மீது வரும் ஆசையை இசைக் கச்சேரிகளின் வழி நுணுக்கமாக விவரிக்கிறார். வீட்டை விட்டு தனியாக பாட்டு கற்றுக்கொள்ளும் இடம் வரை செல்லும் இந்திராவிற்கு புதிதாக அறிமுகமாகும் ஆசிரியரிடம் இயற்கையிலேயே அவளுக்கு வாய்த்த சங்கீத ஞானம் சார்ந்த பாராட்டுகள் கிடைக்கின்றன. மீண்டும் வீடு திரும்பி தன் திறமையை வீட்டில் சொல்லி வீணை கற்க அனுமதி பெறுகிறாள். ஆனாலும் அசோகமித்திரன் கதையை முடிக்கும் விதம் வாழ்க்கையின் குரூர யதார்த்தத்தை தோலுரித்துக்காட்டுவதாய் அமைகிறது. அவ்வரிகள்-

“வெகுநேரமாகியும் இந்திராவுக்குத் தூக்கம் வரவில்லை. ஒருமுறை புரண்டு அம்மாவை அணைத்தவாறு படுத்தாள். அப்போது அம்மாவின் உடம்பு குலுங்கிக்கொண்டிருப்பதை அவள் உணர முடிந்தது. அழுதால்தான் உடம்பு அவ்வாறு குலுங்கும். அம்மா சப்தமே எழுப்பாமல் அழுவதற்கு எப்போது கற்றுக்கொண்டாள் என்று இந்திராவுக்கு புரியவில்லை”

வாழ்க்கையின் குரூர யதார்த்தத்தை பல சிறுகதைகள் உணர்த்துகின்றன. மகளிற்கு அமையாமல் தள்ளிச் சென்றுகொண்டே இருக்கும் வரன் தேடும் வயதான அப்பாவின் கதை “ஒரு ஞாயிற்றுக்கிழமை”. மகளிற்கு வரன் அமைந்துவிட்டால் தனக்கு அவள்வழி கிடைக்கும் சொற்ப செல்வம் குறைந்துவிடும் எனும் எண்ணத்தின் வழி வரன் அமையாததில் கொள்ளும் சுகம் யதார்த்தத்தைக் கண்டு அஞ்ச வைக்கிறது. தன் இயலாமையை உணர்ந்தும் அதிலிருந்து மீள வழித் தெரியாமல் அதற்குள்ளேயே தேங்கிக் கொள்ளும் மனிதராகவே அந்த அப்பா வாசிப்பில் தென்பட்டார்.

இயலாமைக்கும் நம்பிக்கை நோக்கி நகரும் தருணத்திற்கும் இடையில் ஒப்புமைகளே பேருதவி புரிகின்றன. தன் வாழ்க்கையை தன் புரிதலின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு சமாதானம் செய்துகொள்கின்றனர். இல்லையெனில் மேல்தட்டு வாழ்க்கையைக் கண்டு அதை நோக்கி பயணிக்க கற்பனை செய்துகொள்ள துவங்குகின்றனர். இவ்விரண்டு தன்மையிலேயே தங்களுடைய இயல்பை புரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்த தன்மை கிட்டதட்ட அனைத்து கதைகளிலும் தென்படுகின்றன.

‘வெறி’ சிறுகதையில் ஸ்டூடியோவில் பணிபுரியும் நாயகனுக்கு புகைப்படக்காரன் நண்பனாகிறான். அவனுடைய அன்றாட வாழ்க்கையும் புகைப்படத் தொழிலில் இருக்கும் சவால்களும் பிரமிப்படைய வைக்கின்றன. இந்நிலையில் அந்த ஸ்டூடியோவிற்கு வரும் பிரபல நடிகனை புகைப்படம் எடுக்க பலமுறை முயற்சிக்கிறான். அதற்காக கைவசம் வைத்திருக்கும் பணத்தையும்இ பலவாறாக செலவு செய்கிறான். ஆனாலும் எடுக்க முடியாமல் போகிறது. இதற்கிடையில் அந்தச் செலவின் காரணத்தால் புகைப்படக்காரனின் கைக்குழந்தையை காப்பாற்ற முடியாமல் போகிறது. இதை அறியும் நாயகன் பின்விளைவுகளை சந்திக்காமல் முன்னணி நடிகரை தாக்குகிறான். இந்த தாக்குதலில் ஆரம்பிக்கும் கதை புகைப்படக்காரனின் வாழ்க்கையை பேசுகிறது.

இருவேறு எல்லைகளில் இருக்கும் வாழ்க்கையை நாயகன் அறிந்தாலும் தன் வாழ்க்கை காட்டும் உண்மைக்கு அருகில் இருப்பவர்கள் பக்கமே அவனும் நிற்கிறான். கற்பனைகளும் ஒப்புமைகளும் சமாதானத்தை மனதளவில் கொடுத்தாலும் மனிதர்கள் உண்மையை விட்டு விலக அச்சம் கொள்கின்றனர். ‘ஐநூறு கோப்பைத் தட்டுகள்’ கதையில் வரும் சையதின் பொய்யான வாக்குறுதியும், ‘மஞ்சள் கயிறு’ சிறுகதையில் நாயகன் சொல்லும் பொய்யும் வாழ்தலுக்கான சாத்தியக்கூறை அதிகப்படுத்த முனையும் நம்பிக்கைகள் ஆகின்றன. காதலின் பித்தனிலைக்கும் வாழ்க்கையின் பொறுப்புணர்விற்கும் இடையில் இதுகாறும் கூறிய நம்பிக்கையும் இயலாமையும் ஒளிந்திருக்கின்றன என்பதை ‘கல்யாணம் முடிந்தவுடன்’ சிறுகதையில் உணர்ந்துகொள்ளமுடிகிறது. ‘கோலம்’ சிறுகதை தன் வாழ்க்கையின் நோக்கங்களும்க் செயல்களும் பிறரது பார்வையில் எங்ஙணம் உருமாற்றம் கொள்கிறது என்பதை உணர்த்துகிறது.

இவற்றிலிருந்தெல்லாம் மாறுப்பட்டு தொகுப்பில் தெரிவது “பிரயாணம்” சிறுகதை ஆகும். உடல்நலிவுற்ற குருவை சீடன் சுமந்து மலையிலிருந்து கீழிறங்குகிறான். வழியிலேயே இறக்கும் குருவை புதைக்கவாவது வேண்டும் எனும் எண்ணத்தில் சமனிலைப் பகுதி நோக்கி பயணிக்கிறான். வழியில் தென்படும் ஓநாய்களுடன் பெரும் போராட்டம் ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் விவரிப்பதன் வழியே குரு மற்றும் சீடன் எனும் இருவேறு வாழ்வியல் முறைகளை விவரிக்கிறார். சீடன் மற்றொரு குருவின் தேவையை உணர்கிறான். தன்னுள் இருக்கும் போதாமைகள் தன்னை குருவாக எண்ண முடியாமல் சீடனாகவே பாவித்துக்கொள்கிறது. மனமே அனைத்திற்குமான குரு என்பதை உணரும் இடம் சிறுகதையை காலம் கடந்து பேச வைக்கிறது.

‘வாழ்விலே ஒருமுறை’, ‘ரிக்‌ஷா’, ’கோலம்’, ‘விபத்து’, ‘மறுபடியும்’ ஆகிய சிறுகதைகள் குழந்தைகளின் உலகையும் அவர்களுக்கான பொறுப்புணர்ச்சியையும் அவரவர்களின் இடத்திலிருந்து பேசுகின்றன. பெரியவர்களின் உலகம் உதாசீனம் செய்யும் சிறுபிள்ளைத்தனம் தனக்குள் கொண்டிருக்கும் உண்மைகளை, வாழ்க்கையை பாசாங்கின்றி முன்வைக்கின்றன. ரிக்‌ஷா மற்றும் ரிஷ்கா ஆகிய சொற்பேதங்களின் வழி மட்டுமே குழந்தைகளின் உலகையும் அவை பிறிதொரு மனதை எவ்வளவு எளிமையாக மாற்றக்கூடும் என்பதையும் பதிவு செய்கிறார். அப்படியொரு கபடமற்ற மனதையே மனிதன் விரும்புகிறான்.

‘மூன்று ஜதை இருப்புப்பாதை’ சிறுகதையே தொகுப்பின் கடைசிக் கதையாக இருக்கிறது. மேலும் அவருடைய பொதுமையான கதைப்போக்கின் மையமகாவும் அக்கதை அமைந்திருக்கிறது. தற்கொலை செய்ய முயற்சிக்கும் ஒருவனின் கதை. கடைசி நேர உணர்வெழுச்சிகளை ஒவ்வொரு நிமிடமாக எழுதிச் செல்கிறார். கடைசி நொடியில் தவறான தண்டவாளத்தால் மரணத்தை நழுவவிடுகிறான். உணர்வெழுச்சிகளுக்கான தீர்வு புறவெளிப்பாடு  தானே ஒழிய மரணம் அன்று என பறைசாற்றும் தருணம் முன்வாசித்த அனைத்து கதைகளுக்கும் மகுடமாகத் திகழ்கிறது.

வாழ்க்கையே சவால் நிரம்பியது. அவற்றை தீர்க்க அன்றாடங்களை சுமந்து கொண்டு மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். சவாலைத் தீர்க்க தன்மீதே நம்பிக்கை தேவையாய் இருக்கிறது. அதைக் கொடுக்கவல்ல மனிதர்களை தேடுகிறான். வாழ்வின் போக்கில் கடந்து செல்லும் மனிதர்களில் ஒருவராய் அமைகின்றனர்.  அந்தத் தருணங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன அசோகமித்திரனின் சிறுகதைப் புனைவுகள்.

(தொடரும் . . .)

 

‘சிறு’கதையாடிகள் – 2

‘சிறு’கதையாடிகள் – 1