‘சிறு’கதையாடிகள்- 4

பித்தத்தின் சாயைகள்

கிருஷ்ணமூர்த்தி

இந்த அத்தியாயம் எழுதவதன் பிண்ணனியில் சில சுவாரஸ்யமான உளவியல் சம்பவங்கள் நிகழ்ந்தன. வெளியாகும் தேதிக்கு முன்னரே அத்தியாயத்தை அனுப்பும் பொறுப்புணர்ச்சி கொண்டவன் நான். ஆனாலும் இம்முறை தாமதமாகிவிட்டது. சில கதைகள் நினைவிலிருந்து மறையவும் செய்தன. கதைகள் என்னுள் ஏற்படுத்திய உணர்வெழுச்சிகள் மட்டுமே மீதமாய் இருந்தன. வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் இடையில் சில நூல்கள் வாசிப்பில் கடந்து சென்றன. வாசிப்பில் ஆர்வமும் எழுதுவதில் சோம்பேறித்தனமும் கூடிச் சென்ற பொழுதுகள்! ஆனாலும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் எனும் உந்துதல் மட்டுமே மீதமாய் கிடந்தது. அதற்கான காரணத்தை அறிய பிரயாசைக் கொண்டேன். உணர்வுகள் விவரிப்பினுள் அடங்க மறுக்கிறது. இருத்தலை உணர வாசிப்பே பேருதவி புரிகிறது. என் தோல்விகளை அளவிட, வெற்றிகளிலிருந்து நிலைத்தன்மையை பெற வாசிப்பு பெருந் தூணாய் துணைபுரிகிறது. அப்படியெனில் இந்த வாசிப்பை எந்த சொல்லின் வழி நிலைநிறுத்துவது ?

என்னை முழுதுணர பிற மனிதர்களின் வாழ்க்கையை அறிய வேண்டிய அவசியம் உண்டாகிறது. அவர்களின் வாழ்க்கையின் வழி பயணிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களின் தடத்தில் எனது வாழ்க்கை செப்பனிடப்படுகிறது. நான் அறியும் மனிதர்கள் போராளிகளாக இருக்கின்றனர். ஆன்மீகவாதிகளாக இருக்கின்றனர். பகுத்தறிவாதிகளாக, குடும்பஸ்தர்களாக, அறிந்திராத பல தொழில் புரியும் வல்லுனர்களாகவும் இருக்கின்றனர். பலர் தோல்வியுற்றவர்களாகவும் இருக்கின்றனர். வாழ்க்கை எதன் மீதோ நம்பிக்கையை வேறூன்ற வைக்கிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையின் அனுபவங்கள் எழுதப்படுகின்றன. அவற்றை தனிப்படுத்தி பார்க்கும் பட்சத்தில் ஆன்மீக விசாரங்களாகவும் உருவெடுக்கின்றன. அவ்வகையான மனிதர்களின் வாழ்க்கையை, அல்லது வாழ்க்கைக் கொள்ளும் அபரிமிதமான பற்றுதலை தனக்கான பாணியாக்கி சிறுகதைகளாக ஆக்கியிருக்கிறார் எம்.வி.வெங்கட்ராம். இந்த உணர்தலே என் நம்பிக்கை, மேல் பத்தியில் தொக்கி நிற்கும் கேள்விக்கான பதில். அவர்களின் வாழ்க்கை, என் போதம்.

***

எம்.வி.வெங்கட்ராமின் நாவல்கள் காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கின்றன. சிறுகதைகளைப் பொறுத்தமட்டில் மூழுத் தொகுப்பாக பிரபலமாகாத பதிப்பகமொன்றில்

கிடைக்கிறது.(பதிப்பகத்தின் பெயர் தெரியவில்லை. புத்தக கண்காட்சி சமயத்தில் தேடினால் எடுத்துவிடலாம்) ஆனால் காலச்சுவடில் எழுத்தாளர் பாவண்ணன் எம்.வி.வெங்கட்ராமின் பதினோரு சிறுகதைகளையும் இரண்டு குறுநாவல்களையும் தொகுத்திருக்கிறார். அந்நூலின் பெயர் “பனிமுடி மீது ஒரு கண்ணகி”.
இரண்டு குறுநாவல்களில் ‘குற்றமும் தண்டனையும்’ எனும் குறுநாவல் த்ரில்லர் வகை நாவல்களில் இலக்கியத்தை எங்ஙணம் கொணர முடியும் என்பதற்கு பெரும் எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கிறது. இரண்டு வேறு வேறு கதைகள் ஓரிடத்தில் சங்கமிக்கின்றன. ஒரு கதையில் காமம் பணத்தால் இடம்பெயர்கிறது. ஒன்றில் மிதமிஞ்சிய காமம் இடம்கொள்கிறது. இரண்டும் ஒரு கொலையில் சேர்கிறது. முடிவை நோக்கி வாசகனை எளிதாக பயணிக்க வைத்தாலும் உடல் எங்ஙணம் அரசியலாகிறது என்பதை நுண்மையாக பேசியிருப்பார். நித்யகன்னி நாவலிலும் காதுகள் நாவலிலும் கூட இப்படியான கதைக்கரு இருப்பதால் எம்.வி.வெயினுடைய கதையுலகின் மையப்புள்ளியாக உடலை வரையறுக்க முடிகிறது.
சிறுகதைகளை எடுத்துக்கொண்டால் அனைத்தும் பித்தனிலையில் மனிதன் செய்யக்கூடிய விஷயங்களை கதைகளாக்கியிருக்கிறார். இதில் கதைகள் இருவகையாக பிளவு கொள்கின்றன. ஒன்று அன்றாட வாழ்க்கைச் செயல்களின் பால் கொள்ளும் அதீதமான ஈர்ப்பு சுற்றியிருக்கும் உலகை மறக்கச் செய்கிறது. தொகுப்பு ஆரம்பிக்கும் ‘யாருக்கு பைத்தியம்’ எனும் கதையில் ஜரிகை வியாபாரம் செய்யும் ஒருவரை எழுத்தாளர் சந்திக்கிறார். அவர் தன் வியாபாரம் சார்ந்த கதையையும் அதன் வழி வாழ்க்கையில் ஏமாந்த கதையையும் விரிவாக எடுத்துரைக்கிறார். கதையின் இடையில் தன்னை பைத்தியமாக்கிய வேறு சில கதாபாத்திரங்களையும் கடைசியில் தாசியிடமும் கதையை முடிக்கிறார். விரிவாக செல்லும் இக்கதையில் கதைசொல்லல் முறையில் யாருக்கு பைத்தியம் எனும் தலைப்பின் கேள்வியை வாசகன் தொடர வேண்டிய ஆர்வம் எழுகிறது. ஆனால் சொல்லப்படும் கதைகளின் வழி மட்டுமே நம்பகத்தன்மை உருவாகிறது எனும் இடத்தில் சொல்பவர் அல்லது கேட்பவர் ஆகிய இரண்டில் யார் வேண்டுமெனினும் பைத்தியமாகலாம் எனும் நிலை உருவாகிறது. இந்த இடம் கதையின் மீது வாசகன் கொள்ளும் நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துகிறது. யாருடைய அனுபவங்களை உண்மை எனக் கொள்வது ? ஒவ்வொருவரிடமிருந்தும் கிடைக்கும் அனுபவங்களை எப்படி நெறிப்படுத்துவது ? நெறிப்படுத்துவதும் சுய வாழ்க்கையை அதன் வழி பரிசீலிப்பதும் தேவையா ? போன்ற கேள்விகளை இக்கதை எழுப்புகிறது.
இதே விஷயங்களை குழப்பங்களின்றி தெளிவாக எழுத்தாளரின் இடையீடுகளின்றி நிறையாவாக பேசுகிறது ‘வயிறு பேசுகிறது’ எனும் சிறுகதை. பல நாட்கள் கழித்து தன்னை சந்திக்க அழைத்த காதலியின் கடிதத்தை பார்த்த வண்ணம் நாளை துவக்குகிறான் நாயகன். அவனுக்கு வேலையில்லை. வீட்டிலும் வறுமை. சோற்றுக்கும் வழியில்லை. ஆனால் காதலியின் வீட்டில் சம்மதித்திருப்பார்கள் எனும் கற்பனையில் நாள் துவங்குகிறது. அம்மாவின் பசி உறுத்துகிறது. பணம் வைத்திருந்தும் கொடுக்க மனமில்லாத நண்பர்களை மனதுள் திட்டுகிறான். அவளை சந்திக்கும் பொழுது கூட அவள் மட்டுமே பேசுகிறாள். வீட்டில் சம்மதம் எப்படியும் கிடைத்துவிடும் என சொல்கிறாள். நாயகனோ அவள் கைகளில் இருக்கும் வைர மோதிரத்தை பார்த்த வண்ணம் இருக்கிறான். ஆசிரியர் பின்வருமாறு அச்சிறுகதையை முடிக்கிறார்,
“அம்மாவுக்கு ரொம்பப் பசி. . .இல்லை, சும்மா சொன்னேன்; அம்மாவும் நானும் தான் சாப்பிட்டோம். . . இல்லை, பொய் எனக்கும் ரொம்பப் பசி. . .”
அவனிடமிருந்து காதல் கலந்த வார்த்தைகளை எதிர்பார்த்திருந்த நாயகிக்கு கிடைக்கும் பதில் இவையாகவே மிஞ்சுகின்றன. எப்படியும் வேலை கிடைத்துவிடும் எனும் நம்பிக்கையில் இருக்கும் குடும்பத்திற்கு வயிறே பெரும் பாரமாக அமைகிறது. அதை நிரப்ப எப்படியாவது வழி கிடைக்குமா என ஏங்கும் தருணத்தில் அவளுடைய வீட்டில் கிடைக்கும் சம்மதம் அவளை உடைமையாக பார்க்கும் மனோபாவத்தை எழுப்பிவிடுகிறது. அவளே நம்பிக்கையாகிறாள். அவர்களின் வயிற்றிற்கும் அவளுடைய உடைமைகள் நம்பிக்கையாகிறது. வயிறு பிரதானமாகும் இடத்தில் நம்பிக்கைகள் தன்மானத்தைக் கடந்து மாறிக் கொண்டே இருக்கிறது. எந்த எல்லைக்கும் செல்ல வைக்கும் கருவியாக வயிறு மனிதனை மாற்றிவிடுகிறது. முன்சொன்ன கதையில் உட்கதையாக சொல்லப்படுவதே இக்கதையின் வயிறு!
ஒவ்வொரு கதைகளிலும் ஒருவரிடம் இருக்கும் இன்மை மற்றொருவரிடம் கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. தன்னிடம் இருக்கும் ஆர்வம் பிறரிடம் இல்லாமல் போகும் பட்சத்தில் உருவாகும் உணர்ச்சி ஆணவத்தின் வெளிப்பாடு. மறுபக்கத்திலிருந்து இதே விஷயத்தை அணுகும் போது தாழ்மையுணர்ச்சியே மிஞ்சி நிற்கிறது. இதை மேற்கூறிய கதையுடன் ஒப்பிட்டு நோக்க முடியும். மேலும் பிறர் உணர்வுகளுக்கு கொடுக்க மறுக்கும் மரியாதை தன்னுணர்வை அபத்தமாக்கிவிடுகிறது. இதை காதலுடன் கலந்து சொல்லியிருக்கும் கதை ‘வாழ வைத்தவன்’. சாகசங்களை விரும்பும் நாயகனும் சாகசங்கள் செய்வதைக் கண்டு அச்சமுறும் நாயகியும் மலையுச்சிக்கு பயணம் செய்கின்றனர். அவர்களின் காதல் நினைவுகளூடாக செல்லும் பயணம் முன்கூறிய விஷயத்தின் வழி வாழ்க்கையை விவரிக்கிறது.

இதே தன்மையில் ‘மழை’ எனும் சிறுகதையில் பல ஆண்டுகளுக்கு முன் காதலித்த நாயகியை மீண்டும் சந்திக்கிறான். அவளுடைய அப்போதைய வாழ்க்கையையும், காதலித்த பொழுது இருந்த கற்பனைகளையும் ஒப்புமை செய்து பார்க்கிறான். வாழ்க்கை சார்ந்த புரிதல் சிக்கலை ஏற்படுத்துகிறது. ‘மூக்குத்தி’ எனும் சிறுகதை கர்ண பரம்பரைக் கதையை ஒத்து இருக்கிறது. மூக்குத்திக்காக குடும்பத்துள் கிளைவிடும் விரிசலின் கதை. பாவம் செய்த பரம்பரை பாவத்தை வழக்கமாகவும் அது எப்படி ஒவ்வொரு தலைமுறையையும் பழிக்கிறது என்பதையும் விவரித்திருப்பார்.

இவ்வகைமையில் அற்புதமான சிறுகதை எனில் ‘மாளிகை வாசம்’ எனும் சிறுகதை. கணவனிடத்தில் பெண்மைக்கான குணம் நிறைய இருக்கிறது எனும் ரகசியத்தை மனைவி கண்டறிகிறாள். அவளுடைய தாம்பத்திய வாழ்க்கை முழுமையையும் அந்த ரகசியம் கேள்விக்குள்ளாக்குகிறது. பெண்ணாக வாழவிரும்பும் கணவனுடன் இயல்பாக எப்படி பழக முடியும், சமூகத்திடம் தலைநிமிர்ந்து எப்படி நடக்க முடியும் என்றெண்ணுகிறாள். கணவனை வெளிக்காட்டாமல் அங்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கையை வாழ முடிவு செய்கிறாள். ஆனாலும் கணவன் (அவன் அல்லது அவள் அல்லது அது) உடைய குணம் அவளை அகச்சிறையில் சிக்க வைத்திருக்கிறது. கொலை செய்துவிடலாம் என்றெண்ணி பாலில் விஷயத்தை கலக்கிறாள். பாலைக் கொடுப்பதற்கு முன் அவனுடைய உலகைக் கண்டுவிட்டு பின் கொடுக்கலாம் எனும் எண்ணத்தில் காத்திருக்கிறாள். கணவன் பிடிக்கும் அபிநயங்களை ரசிக்கிறாள். அவள் மீதிருக்கும் காதலில் தன் உலகை நிர்மலமாக காண்பிக்கிறான். இறுதியாக அவள் எடுக்கும் முடிவு எம்.வி.வெ கதைகளின் இரண்டு வகைமைகளையும் ஒன்றிணைக்கும் இடமாக உருவம் கொள்கிறது. தன் வாழ்க்கையில், தனக்கான உலகில் எப்படி சுதந்திரம் எதிர்பாக்கிறோமோ அதே போலத்தான் அவனுடைய வாழ்க்கையிலும் என்றேண்ணும் தருணத்தில் கொலைக்கான முடிவிலிருந்து விலகிவிடுகிறாள். அவனுடைய வாழ்க்கையில் இருந்தும் விலக்கி விடுகிறாள். இந்தத் தன்மையே அவருடைய அடுத்த வகைமையான அறத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிகோலாக அமைகிறது.
சக மனிதனின் சுதந்திரத்திற்கும் இருத்தலுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதே அடிப்படை அறம். அதை வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் தவறாமல் கடைபிடிப்பதும் உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களையும் சக மனிதர்களாக எண்ணுவதும் ஆன்மீகமாகிறது. முதல் வகைமைக் கதைகளில் வாழ்வதற்கான நம்பிக்கையை பௌதீக அளவில் நிர்மாணிக்கும் எம்.வி.வெங்கட்ராம் இரண்டாம் வகைமையில் அனைத்து பௌதீக விஷயங்களையும் தகர்த்தெரிகிறார். பொருள் மீது முதலில் வைக்கும் நம்பிக்கை பல அளவுகளை குடும்பமென உருவாக்குகிறது. அந்த குடும்பத்திற்காகவும் ஆடம்பரத்திற்காகவும் தொடர்ந்து பொருளீட்டலில் மனிதன் ஈடுபடுகிறான். அந்தத் தன்மை பிற மனிதன் மீதான அன்பை கேள்விக்குள்ளாக்குகிறது. அவனுக்கான பொருளாதாரப் பங்கை துச்சமெனக் கருதுகிறது. பிறர் மீது அதிகாரத்தை திணிக்கிறது. இதன் மீதிருக்கும் பற்றிலிருந்து ஆன்ம ரீதியான நம்பிக்கைக்கு கதை மாந்தர்களை சில கதைகளில் மடைமாற்றிவிடுகிறார். ‘சிறைச்சாலை என்ன செய்யும்’ எனும் சிறுகதை மேற்கூறியவற்றின் நுண்வடிவம். பண்டாரத்தின் கதையாக விரிவு கொண்டாலும் கதை எழுப்பும் சலனம் பதில்களின்றி உணர்வுகளை கொடுத்து செல்கிறது.

‘அழகி’ எனும் சிறுகதை அதே விஷயத்தை வேறு வடிவத்தில் பேசுகிறது. சாயாதேவியின் அழகிற்கு பலர் மயங்கிக் கிடக்கின்றனர். அவளிடம் அரவிந்தர் எனும் மகா ஞானியின் சீடர் வருகிறார். அவள் மீது கொண்ட மோகத்தால் செய்த தவத்தையெல்லாம் மறந்து ஆசிரியரின் ஆசியுடன் அங்கு வந்திருப்பதாகச் சொல்கிறான். பார்த்துவிட்டு வா என்று ஆசிரியர் சொன்னார் எனக் கூறியதால் சாயா தேவி பார்த்தவுடன் திரும்பிச் செல் என்கிறாள். கவலையுடன் திரும்பிச் சென்றுவிடுகிறான். அன்றைய மாலையே வேறொரு பெண் அவளைப் பார்க்க வருகிறாள். அவள் வந்து சென்ற மாணவரான மன்மதரின் காதலி என அறிமுகம் செய்துகொள்கிறாள். தான் அவரை காதலித்தாலும் அவர் சாயா தேவியையே காதலிக்கிறார். அவளுடைய அழகை ஒரு நாளேனும் பார்க்க வேண்டும் எனும் ஆவலிலேயே வந்தேன் என்கிறாள். மேலும் ஓரிரவிற்கு பணிப்பெண்ணாக இருந்துவிட்டு செல்வதை ஆசையாக சொல்கிறாள். சம்மதித்து மறுநாள் காலை பார்க்கும் பொழுது அறைக்குள் முந்தைய நாள் காலை வந்திருந்த மன்மதன் இருக்கிறான். எப்படி என விசாரிக்கும் பொழுது தானே பெண் வேடமிட்டு வந்திருந்ததாக உண்மையை சொல்கிறான். அனைவருக்கும் கோபம் வந்தாலும் சாயா தேவிக்கு மட்டும் வரவில்லை. அவருடைய காலைக் கழுவி ஞானம் பெறுகிறாள். அதுவரை கதையாக மட்டும் செல்லும் சிறுகதை ஒரு வரியில் அனுபவமாக மாற்றம் கொள்கிறது. தன்னைப் பயன்படுத்தி சீடருக்கு ஞானம் கொடுக்க முனைந்த ஆசிரியரின் கருணையை சொல்லி பூரிப்படைகிறாள். உடனிருக்கும் பணிப்பெண்ணுக்கு சாயாதேவியின் விளக்கம் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது.

அழகும் பௌதீகமானதே. அதன் மீதிருக்கும் பற்றுதல் உண்மையை மறைக்கவல்லது. இதை உணர்த்த கதை நகர்த்தப்பட்டாலும் இறுதியில் நிகழும் உரையாடல்கள் யாருக்கான கதை என்பதில் தர்க்கத்தை உண்டு செய்கிறது. அவரவர்களுக்கான நியாயப்பாடுகளிலிருந்து அவரவர்களுக்கான ஞானவாதங்கள் வெளிப்படுகின்றன. இந்த வெளிப்படையான திறப்பே எம்.வி.வெயின் கதைகளில் தெரியும் பொதுத் தன்மையாக இருக்கிறது.

எம்.வி.வெங்கட்ராமின் சிறந்த சிறுகதையாக அனைவராலும் பாராட்டப்பட்டது ‘பைத்தியக்காரப் பிள்ளை’ எனும் சிறுகதையாகும். அப்பா இறந்த பிறகு தன்னிலை தனித்து விடப்படுமோ எனும் உள்ளுணர்வில் கோபமே உருவாய் அமர்ந்திருக்கும் அம்மாவின் கதை. மகனின் ஒவ்வொரு செயல்களின் வழியேவும் குறைகளை கண்டுபிடித்து கோபத்தைக் கக்கி எரிச்சலடைய வைக்கிறாள். அவனுடைய காதலையும் துச்சமென கருதுகிறாள். மகனுடைய வளர்ச்சியைக் கண்டு தாயே பொறாமைப்படும் நிலையை அடைகிறாள். அவனுடைய வளர்ச்சியிலிருந்து ஒவ்வொன்றாக களைகிறாள். தன்னிடமிருந்து தனித்து செல்லும் மகனுடைய குணத்தை வெறுக்கிறாள். அம்மாவின் கதையாக நகர்வது கடைசியில் மகனின் கதையாக மாறுவதே காலத்தையும் கடந்து இக்கதையை பேச வைக்கிறது.

கதைசொல்லலாகவே பல கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கதைசொல்லல் எனும் அம்சம் சிறுகதைகளில் மையமாகும் பொழுது ஆசிரியரின் தனிக்கருத்துகள் பெருவாரியாக இடம் பிடிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். அவற்றை எளிமையாக களைந்து தானறிந்த மனிதர்களை மட்டுமே கதாபாத்திரமாக்கியிருப்பது சமகால எழுத்தாளர்களுக்கு பெரும் பாடமாக அமையக்கூடும். மேலும் கதை கோரும் அளவில் மட்டுமே கதாபாத்திரங்களின் விவரிப்பை கதைசொல்லி முன்வைப்பது ஒவ்வொரு கதையிலும் தனித்து தெரிகிறது.

குணங்கள் பொதுவானவை. அனைவரிடமும் முன்தீர்மானங்களின்றி ஒளிந்திருக்கிறது. தேவையை மீறி வெளிப்படுத்தும் பொழுது அல்லது வெளிப்படும் பொழுது அக்குணமே நமது அடையாளமாகிறது. பலருக்கு அக்குணமே எதிரியாகிறது. தீமையை விளைவிக்கிறது. மேலும் குணம் பரவக்கூடியது, அது நன்மையாகினும் சரி தீமையாகினும் சரி. அப்படி குணங்களால் அடையாளப்படுத்தப்படும் மனிதர்களை ஒவ்வொரு கதைகளிலும் பிரத்தியேக கதாபாத்திரமாக்கியிருக்கிறார். நமது குணங்களை பரிசீலனை செய்வதற்கும் பேருதவி புரிகிறது எம்.வி.வெயின் சிறுகதைகள்.

(தொடரும். . . )