இணைய இதழ் 98சிறார் இலக்கியம்

சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 8 – யுவா

சிறார் தொடர் | வாசகசாலை

தளபதியின் திட்டம்

‘’அந்தப் பாராட்டுரைகளும் முழக்கங்களும் இன்னும் என் செவிகளில் நாராசமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன’’

இப்படிச் சொன்னவாறு விரல்களைக் குவித்து மேஜை மீது கோபமாகக் குத்தினான் தளபதி கம்பீரன்.

அவனது மாளிகையில் அவனது அறையில் அவனுக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்திருந்த மந்திரி நிலாமதி சந்திரன் அமைதியாக ஏறிட்டார்.

‘’புதிய பாடசாலைகளாம்… அதற்கான பொறுப்பாளர்களில் ஒரு சிறு பெண்ணும் சில்வண்டு சிறுவனுமாம்… அத்தனை பேருக்கு முன்பாக அரசர் அறிவிக்கிறார். முதன்மை மந்திரியான நீர் வாயைப் பிளந்து பார்க்கிறீர்… சே!’’ என்று சீறினான் கம்பீரன்.

‘’எ… என்னை என்ன செய்யச் சொல்கிறாய் கம்பீரா?’’ என்று மெல்லிய குரலில் கேட்டார் மந்திரி.

‘’எதிர்க்க வேண்டுமய்யா… கத்துக்குட்டிகளுக்கு என்ன தெரியும்? அவர்களைப் பொறுப்பாளர்களாக நியமிக்கக் கூடாது. நம் அரண்மையிலேயே அதற்கான தகுதி வாய்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று அந்த மாங்காய் மண்டையன் தலைக்குள் உறைக்குமாறு எடுத்து சொல்லியிருக்க வேண்டும்’’ என்றான் கம்பீரன்.

‘’சரிதான்… அத்தனை பேருக்கு முன்பாக அரசரை எதிர்த்துப் பேசி… என் பதவிக்கும் தலைக்குமே பங்கம் வர வைத்துவிடுவாய் போலிருக்கிறதே’’ என்றார் நிலாமதி சந்திரன்.

‘’பின்னே… இப்போது மட்டும் உம் பதவி நிலைத்து இருக்கப் போவதாக நினைப்பா? அந்தப் பெண்ணும் பொடியனும் உள்ளே இருந்தால் நம் ஆட்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் முட்டுக்கட்டு போட்டு அரசரிடம் சொல்வார்கள். பாடசாலை விஷயத்தில் நாம் செப்புக் காசு கூட எடுக்க முடியாது. முதன்மை மந்திரியாக நீர் முதல் குரல் கொடுத்து இருந்தால் நானும் இன்னும் சிலரும் அப்போதே சேர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பி விஷயத்தை முடித்து இருக்கலாம்’’ என்றான் கம்பீரன்.

‘’சரி சரி… இப்போது மட்டும் என்ன? அந்த இரண்டு பேருக்கும் ஏதேனும் குடைச்சல் கொடுத்தவாறு இருப்போம். அவர்களே பொறுப்பை விட்டு ஓடும்படி செய்துவிடுவோம்’’ என்றார் மந்திரி.

‘’தும்பை விட்டு வாலைப் பிடிப்போம் என்கிறீர்… அத்தனை சுலபமாகப் போய்விடும் ஆட்களா அவர்கள்? அந்தப் பெண் யாரென்று தெரியுமல்லவா?’’

‘’ம்… சூர்யனின் தங்கை நட்சத்திரா…’’

‘’சாதாரண நட்சத்திரம் அல்ல… வால் நட்சத்திரம். ஏற்கெனவே அவளுக்கு அவளது தந்தை வகித்த தளபதி பதவியைத் தனது தமையன் பெற வேண்டும் என்று நினைப்பு. அதை தட்டிப் பறித்தவன் நான் என்கிற குரோதத்துடன் இருப்பவள். அப்புறம் அந்தப் பொடியன் மழலனோ குழலனோ… அவன் எப்போதும் அந்த உரைக்கல் உத்தமனின் வாலாகத் திரிபவன். இருவரும் சேர்ந்து புதிய பாடசாலைக்கான விஷயத்தை மட்டும் செய்ய மாட்டார்கள். ஏற்கனெவே இருந்த பாடசாலைகள் ஏன் மூடப்பட்டன… யாரெல்லாம் காரணம் என்று விஷயத்தைத் தோண்டியெடுத்து சிங்கமுகனிடம் சமர்பிப்பார்கள். அப்படி நடந்தால் நீரும் எங்கே இருப்பீர் என்று யோசியுங்கள்’’ என்று கோபம் குறையாமல் முழங்கினான் கம்பீரன்.

‘’பா… பாடசாலைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டதற்கு நாம்தான் காரணம் என்று கண்டுபிடித்துவிடுவார்களா?’’ என்று நடுக்கத்துடன் கேட்டார் நிலாமதி சந்திரன்.

‘’அதிலென்ன உமக்குச் சந்தேகம்? அந்த இடங்களை யார் யாருக்கெல்லாம் நாம் கொடுத்தோம். அதன் மூலம் நாம் பெற்ற பலன்கள்… சேர்த்திருக்கும் சொத்துகள் எல்லாம் வெளியே வந்துவிடும். அதைக் கூட ஏதேனும் பேசி சமாளித்துவிடலாம். அந்தப் பாடசாலைகளை எல்லாம் நாம் ஏன் மூடினோம்?’’ என்று கேட்டான் கம்பீரன்.

‘’ஏ… ஏன்?’’ என்று திருப்பிக் கேட்டார் மந்திரி.

‘’நீரெல்லாம் நாட்டின் மந்திரி… உமக்குப் பிறகு உமது மகன் மந்திரி ஆக வேண்டும். பிறகு பேரன் ஆக வேண்டும் என்றெல்லாம் ஆசை இருக்கிறதல்லவா?’’

‘’….’’

‘’பதில் சொல்லுமய்யா கிழவரே…’’

‘’ஆ… ஆமாம்… ஆமாம்…’’

‘’அதெல்லாம் எப்படி நடக்கும்? மந்திரிக்கான படிப்பும் அறிவும் நம்மிடம் மட்டும் இருந்தால்தானே? குப்பன், சுப்பன் மகன்கள் எல்லாம் பாடசாலைக்குச் சென்று அறிவு பெற்றுவிட்டால் நாளை போட்டிக்கு வந்து நிற்க மாட்டார்களா?’’

‘’ஆமாம்… ஆமாம்…’’

‘’அதனால்தான் பாடசாலைகளை மூடி கல்விக்கு முட்டுக்கட்டை போட்டோம். இப்படி தொலைநோக்குடன் செய்து வந்த காரியங்கள் இனி தொடராது என்றால் உம் மகன் எப்படி மந்திரி ஆவான்?’’ என்று சீறினான் தளபதி.

‘’இ… இப்போது என்ன செய்வது?’’

‘’அந்தப் பெண்ணும் பொடியனும் பொறுப்பில் இருக்கக் கூடாது’’ என்றான் கம்பீரன்.

‘’அவர்கள் மீது ஏதேனும் திருட்டுப் பழியைச் சுமத்தி… அரசரிடம் அவப்பெயரை ஏற்படுத்தி…’’

‘’அதெல்லாம் வேலைக்கு ஆகாது!’’

‘’அப்புறம் என்ன செய்வது?’’

‘’ஆட்களையே இல்லாமல் செய்ய வேண்டும்’’ என்று கம்பீரன் சொன்னதும் நிலாமதி சந்திரன் அதிர்ந்தார்.

‘’இ… இல்லாமல் என்றால்… உயிரை எ… எடுத்துவிட…’’

‘’ஆமாம்!’’

‘’திடீரென அப்படிச் செய்தால் அரசருக்கு நம் மீது சந்தேகம் வருமே’’ என்று நடுங்கினார் மந்திரி.

‘’நடுங்காதீர் கிழவரே… நம் மீது சந்தேகம் வராத விதமாய் ஒரு திட்டம் தீட்டலாம். பழியைச் சுரங்கக் கொள்ளையர் சுமப்பர்’’ என்றான் கம்பீரன்.

மந்திரிக்கு வியப்பு… ‘’எ… எப்படி?’’ என்று கேட்டார்.

தளபதி குரலைத் தாழ்த்திச் சொன்னான்… ‘’சுரங்கக் கொள்ளையைப் பற்றி அடிக்கடி எழுதிக் கொண்டிருப்பவன் உத்தமன். அதனால் அவன் மீது சுரங்கக் கொள்ளையர்களுக்குக் கோபம். அதனால், அவனது காதலியான அந்த நட்சத்திராவையும் அவனுடனே எப்போதும் சுற்றுகிற பொடியனையும் சந்தர்ப்பம் பார்த்து போட்டுத் தள்ளிவிட்டார்கள்.’’

‘’……’’

‘’இப்படி ஒன்றை அவர்களின் மரணத்துக்குப் பிறகு நாம் பரப்பிவிட வேண்டும். அதை அரசர் நம்பும் வகையில் அந்தக் கொலைகள் அமைய வேண்டும்’’ என்றான் கம்பீரன்.

‘’நல்ல திட்டம்தான்… ஆனால், எப்படி செயல்படுத்தப் போகிறோம்’’ என்று கேட்டார் நிலாமதி சந்திரன்.

‘’எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட முடியாது. நான் சொல்வதை மட்டும் ஒழுங்காகச் செய்யும். புரிந்ததா?’’ என்றான் கம்பீரன்.

‘’புரிந்தது கம்பீரா…’’ என்றார் மந்திரி.

‘’ம்… இப்போது உமது மாளிகைக்குக் கிளம்புங்கள். மற்றதைப் பிறகு பேசிக்கொள்வோம்’’ என்றபடி எழுந்தான் கம்பீரன்.

நிலாமதி சந்திரனும் எழுந்து திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

‘’மந்திரியாரே… உமக்குப் பிறகு உமது மகன், பேரன் மந்திரி போல… எனக்குப் பிறகு எனது மகன், பேரன்தான் தளபதி. நாம் செய்ய இருப்பது பல தலைமுறைக்கான விஷயம். அதை நினைவில் வைத்துக் காரியத்தில் கவனமாக இருங்கள்’’ என்று சொன்னான் கம்பீரன்.

******

‘’நட்சத்திரா… இன்னமுமா உணவு தயாராகவில்லை?’’ என்று கேட்டான் சூர்யன்.

‘’சற்றுப் பொறு அண்ணா’’ என்றாள் நட்சத்திரா.

‘’ஏன் இவ்வளவு தாமதம்? எனக்கு பணிக்குச் செல்ல நேரமாகிறது’’ என்று அவசரப்படுத்தினான் சூர்யன்.

‘’அருமை அண்ணாவே… நானும் சும்மா இல்லையே… எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் புதிய பொறுப்பு பற்றி தெரியும்தானே?’’ என்ற நட்சத்திரா குரலில் பெருமிதம்.

‘’நாடறிய சொன்னதை நானும் பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டுதானே இருந்தேன். இரு நாட்கள் முன்புதானே அரசர் சொன்னார். அதற்குள் என்ன வேலை செய்ய ஆரம்பித்துவிட்டாய்?’’ என்று அலட்சியமாகக் கேட்டான் அண்ணன்.

‘’அரசுப் பணிதானே மெத்தனமாகச் செய்வோம் என்று எல்லோரையும் போல என்னால் இருக்க முடியாது அண்ணா… நேற்று இரவே சில புள்ளிவிபரங்களை குறிப்பெடுத்தேன்’’ என்ற நட்சத்திரா சில ஓலைச்சுவடிகளைக் காண்பித்தாள்.

‘’ஓஹோ… இதைத்தான் இரவெல்லாம் அமர்ந்து எழுதிக்கொண்டு இருந்தாயா?’’

‘’ஆமாம்… அந்த அசதியில்தான் இன்று கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன். சற்றுப் பொறு… உணவு தயாராகிவிடும்.’’

‘’புதிய பதவி கிடைத்ததும் உனது வழக்கமான கடமைகளில் சுணக்கம் வந்துவிட்டது’’ என்றான் சூர்யன் கேலியாக.

‘’அதென்ன எனது வழக்கமான கடமை?’’

‘’சமைப்பதுதான்!’’

‘’அதென்ன, சமைப்பது எனக்கு மட்டுமேயான கடமையா? இனி மேற்கொண்டு நீயும் ஒரு பொழுது சமைக்க வேண்டும் அண்ணா’’ என்றாள் நட்சத்திரா.

‘’என்ன…? ஆண் மகன் சமைப்பதா?’’

‘’ஏன்… சமைத்தால் என்னவாம்? வருங்காலங்களில் ஆணும் பெண்ணும் பணிக்குச் செல்வது அதிகமாகும். அப்போது ஆணும் வீட்டு வேலைகளைச் செய்யவேண்டிய கட்டாயம் உண்டாகும். அதற்கு இப்போதே நாம் உதாரணமாக இருப்போம்’’ என்றாள் நட்சத்திரா.

‘’ஐயோ பாவம் உத்தமன்’’ என்று சிரித்தான் சூர்யன்.

நட்சத்திரா முறைத்து, ‘’அவர் மீது பரிதாபப்படுவது அப்புறம் இருக்கட்டும். இந்தா பிடி அண்ணா’’ என்று அந்தச் சட்டியை நீட்டினாள்.

அதை வாங்கியவாறு, ‘’எ… என்ன இது?’’ என்று கேட்டான்.

‘’கம்பங்கூழ் தயாரிக்க… இந்த தயிரைக் கொஞ்சம் கடையும் சகோதரனே’’ என்று சொல்லிவிட்டு அகன்றாள் நட்சத்திரா.

‘’ம்… வாள் ஏந்தும் கை… மத்து ஏந்தும் நிலை’’ என்றபடி தரையில் அமர்ந்தான் சூர்யன்.

‘’ஙிஙிஙி’’ என்று வாசலில் இருந்து சூறாவளியின் குரல்.

‘’என்னடா சிரிப்பு? உன்னை வந்து வைத்துக்கொள்கிறேன்’’ என்று அதட்டினான்.

அப்போது வாசலில் மற்றொரு புரவி வந்துநின்றது. அதிலிருந்து நல்லான் இறங்கினான். ‘’வணக்கம் சூர்யா’’ என்றான்.

‘’அடடே நல்லா… உள்ளே வாடா’’ என்று மகிழ்வுடன் வரவேற்றான் சூர்யன்.

‘’மன்னிக்கவும் சூர்யா… அரசு வேலையாக வந்துள்ளேன். தங்கை இல்லையா?’’ என்று கேட்டான் நல்லான்.

‘’இதோ இருக்கிறேன்’’ என்றவாறு வந்தாள் நட்சத்திரா.

‘’பாடசாலை குழு பொறுப்பாளருக்குப் பணிவான வணக்கம். இன்னும் சற்று நேரத்தில் புதிய பாடசாலைக்கான ஆலோசனைக் கூட்டம் மந்திரி தலைமையில் நடைபெற இருக்கிறது. அதில் பங்கேற்க வேண்டும் என்று நமது முதன்மை மந்திரி சொல்லி அனுப்பினார்’’ என்றான் நல்லான்.

‘’பரவாயில்லையே… இவ்வளவு ஜரூராக ஆரம்பித்துவிட்டார்களே. ஆலோசனைக் கூட்டம் எங்கே?’’

‘’பொன் மண்டபத்தில்’’ என்றான் நல்லான்.

சூர்யன் திகைப்புடன் நிமிர்ந்தான். ‘’மலையடிவாரச் சுரங்கம் அருகில் இருக்கும் மண்டபத்திலா?’’

‘’ஆமாம்!’’

‘’நாட்டுக்குள் எத்தனையோ இடங்கள் இருக்க ஏன் அவ்வளவு தூரத்தில் ஆலோசனைக் கூட்டத்தை வைக்க வேண்டும்?’’

‘’இதை நான் அந்த மந்திரியிடம் கேட்க முடியுமா சூர்யா? உத்தரவிட்டார்… வந்து சொல்லிவிட்டேன்’’ என்றான் நல்லான்.

‘’மதி கெட்ட மந்திரி என்பதை அந்த நிலாமதி சந்திரன் அவ்வப்போது நிரூபிக்கிறார்’’ என்று முணுமுணுத்தான் சூர்யன்.

‘’சரி… வந்துவிடு நட்சத்திரா. நான் சென்று அந்தப் பொடியன் குழலனுக்கும் சொல்ல வேண்டும்’’ என்றபடி நகர்ந்தான் நல்லான்.

‘’அண்ணா ஒரு நிமிடம்… குழலனைத் தயாராகி இங்கே வந்துவிடச் சொல்லுங்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து செல்கிறோம்’’ என்றாள் நட்சத்திரா.

‘’ஆகட்டும் சகோதரி’’ என்று சொல்லிவிட்டுச் சென்றான் நல்லான்.

‘’சுரங்கம் அருகே இருக்கும் பொன் மண்டபத்துக்குச் செல்ல ஒற்றையடிப் பாதையைக் கடந்து செல்ல வேண்டுமே… நீங்கள் தனியாகவா செல்கிறீர்கள்?’’ என்று கேட்டான் சூர்யன்.

‘’இருவர் எப்படி அண்ணா தனியாவோம்?’’

‘’பொடியன் எல்லாம் ஒரு கணக்கா?’’ என்று கேலியாகக் கேட்டான் சூர்யன்.

‘’அண்ணா… குழலனைச் சாதாரணமாக நினைத்துவிடாதீர். அறிவில் மட்டுமல்ல ஆற்றலிலும் சிறந்தவன். வருங்காலத்தில் மிகச் சிறந்த வீரன் என்றும் பெயர் எடுப்பான்’’ என்றாள் நட்சத்திரா.

‘’அடேங்கப்பா… அந்தப் பகுதியில்தான் சுரங்கக் கொள்ளையர் பதுங்கி இருப்பதாகப் பேச்சு உலாவுகிறது. அதற்காகச் சொன்னேன்’’ என்றான் சூர்யன்.

‘’என் கையில் சிலம்பு கம்பு இருக்கும். அதற்கு முன்பு எவனும் நிற்க முடியாது அண்ணா’’ என்றாள் நட்சத்திரா.

‘’அது சரி… எப்படிச் செல்வீர்கள்? சூறாவளியை விட்டுச் செல்லட்டுமா?’’ என்று கேட்டான் சூர்யன்.

‘’அவன் உன்னைத் தவிர வேறு யாரையும் ஏற விடமாட்டானே?’’

‘’கேட்டுப் பார்க்கிறேன் நட்சத்திரா’’ என்ற சூர்யன், ‘’சூறா… சூறா…’’ என்று குரல் கொடுத்தான்.

வாசலுக்குள் தலையை நுழைத்தான் சூறாவளி. ‘’ஙஙி’’

‘’நாங்கள் பேசிக்கொண்டதை கேட்டாயா?’’

‘’ங ங’’ (கேட்டேன்… கேட்டேன்)

‘’பொன் மண்டபத்துக்கு குழலனையும் இவளையும் அழைத்துச் செல்!’’

‘’ஙஙி ஙு ஙே’’ (பெண் பிள்ளையை என் முதுகில் ஏற்றுவதா?)

‘’அடேய் அகங்காரக் குதிரையே… மண்டையிலே போடுவேன்’’ என்று கையை ஓங்கினாள் நட்சத்திரா.

சூறாவளி சட்டென தலையை வெளியே இழுத்துக்கொண்டது.

‘’பொறு… பொறு… தங்கையே. அவன் சும்மா விளையாடுகிறான். உன் மீது அவனுக்கும் மிக்க ப்ரியம். அடேய் சூறா… அழைத்துச் செல்லடா’’ என்றான் சூர்யன்.

‘’ஙெ ஙெ’’ (சரி சரி) என்றது.

‘’அப்புறம் புறப்படும் நேரத்தில் ஏதாவது தகறாறு செய்தான் என்றால் நான் பொல்லாதவள் ஆகிவிடுவேன்’’ என்று இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு சொன்னாள் நட்சத்திரா.

‘’அப்படியெல்லாம் செய்ய மாட்டான். சரி… சீக்கிரம் உணவைத் தயாரிப்போம்’’ என்ற சூர்யன் சட்டியைக் கடைய ஆரம்பித்தான்.

சாப்பிட்டு முடித்து சூர்யன் கிளம்பும் நேரம் குழலன் வந்துசேர்ந்தான். ‘’மன்னரின் மெய்க்காப்பாளருக்கு வணக்கம்’’ என்றான்.

‘’வாடா பொடியா… நாடு போகிற போக்கே புரியவில்லை. சில்வண்டுகளை எல்லாம் அரசின் ஆலோசனைக் குழுவில் சேர்க்கிறார்கள்’’ என்று கிண்டலுடன் சொன்னான் சூர்யன்.

‘’உமது மன்னர் இப்போதுதான் உருப்படியான வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார். இனி நாடு நல்ல பாதையிலே போகும் அண்ணாவே’’ என்றான் குழலன்.

‘’நாடு அப்புறம் நல்ல பாதையில் போகட்டும். நீங்கள் இருவரும் பொன் மண்டபத்துக்குப் பார்த்துப் போய் வாருங்கள்.’’

‘’அது பற்றி நீங்கள் ஐயம் அடைய வேண்டாம் அண்ணாவே. பத்திரமாகச் சென்று திரும்புவோம்’’ என்றான் குழலன்.

வெளியே வந்த சூர்யன், சூறாவளியை நெருங்கி அதன் தலையைத் தடவிக் கொடுத்தான். ‘’சூறா… பார்த்துக்கொள்!’’

‘கவலைப்படாமல் போ… என் பொறுப்பு’ என்றது சூறாவளி.

தொடரும்…

iamraj77@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button