இணைய இதழ் 100சிறார் இலக்கியம்

சிரிப்பு ராஜா சிங்கமுகன் – 10

சிறார் தொடர் | வாசகசாலை

10. பள்ளத்தாக்கு போர்

‘’அக்கா… இந்த ஆலோசனைக் கூட்டம் ஒழுங்காக நடக்கும் என்று கருதுகிறீர்களா?’’ என்று கேட்டான் குழலன்.

ஒற்றையடிப் பாதையில் சூறாவளியைச் செலுத்திக்கொண்டு இருந்த நட்சத்திரா, ‘’ஒழுங்காக நடக்கும் வகையில் நாம் மாற்ற வேண்டும் குழலா’’ என்றாள்.

நட்சத்திராவுக்குப் பின்னால் அமர்ந்திருந்த குழலன், ‘’முதன்மை மந்திரி, அவருடன் ஊழலில் ஊறிப்போன சில அதிகாரிகளும் குழுவில் இருக்கிறார்கள். அவ்வளவு சுலபத்தில் புதிய பாடசாலைகளைக் கொண்டுவர விடமாட்டார்கள். அப்படியே சம்மதித்தாலும் திட்டத்துக்கான தேவைகளில் நிறைய குளறுபடிகளைச் செய்வார்கள்’’ என்றான்.

‘’செய்யட்டும் குழலா… அதை நாம் எதிர்ப்போம். நம் வழிக்கு வரவைப்போம். அரசரும் இவர்களது லட்சணத்தை மனதில் வைத்துதானே நம்மை குழுவில் சேர்த்துள்ளார்’’ என்று புன்னகைத்தாள் நட்சத்திரா.

‘’நிறைய சவால்கள் இருக்கும்!’’

‘’சவால் இல்லாத செயலைச் செய்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது? அங்கே கவனி… இப்போதே ஏதோ ஒரு சவால் வரப்போகிறது என்று நினைக்கிறேன்’’ என்றாள்.

குழலன் தலையை நீட்டிப் பார்த்தான். சற்றுத் தொலைவில் பள்ளத்தாக்கில் இருந்து புழுதி மேலெழும்புவது தெரிந்தது.

‘’கீழே இருந்து ஒரு சிறு கூட்டம் மேல் நோக்கி வருகிறார்கள் போல…’’ என்றான் குழலன்.

‘’ஆமாம்… நிச்சயமாக அவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வருபவர்கள் அல்ல. ஆனால், நம் விருந்தாளிகள்தான். அதில் சந்தேகம் இல்லை’’ என்று சிரித்தாள் நட்சத்திரா.

‘’ங ஙி ஙே ஙி’’ என்றபடி வேகம் குறைத்தது சூறாவளி. (என்ன செய்ய? திரும்பி விடட்டுமா?)

‘’அடடா… சூறா… முன்வைத்த கால்களைப் பின்வைக்கும் குதிரையா நீ?’’ என்று கேட்டாள் நட்சத்திரா.

‘கிண்டலா? உங்கள் இருவரையும் பாதுகாக்க வேண்டும் என்பது சூர்யன் எனக்குக் கொடுத்திருக்கும் முதன்மை கட்டளை. செய்வேன் என்று வாக்கு கொடுத்துள்ளேன்.’

‘’உன் வாக்குக்கு எந்தப் பங்கமும் வராது சூறா… கவலைப்படாமல் முன்நோக்கி செல்… நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்றாள் நட்சத்திரா.

இப்போது பள்ளத்தாக்கில் இருந்து எழும் புழுதி இன்னும் அதிகமானது. சில வாள் மற்றும் ஈட்டி முனைகள் தெரிய ஆரம்பித்தன.

‘’குழலா… தயாராக இரு’’ என்ற நட்சத்திரா தனது முதுகில் இருந்து அந்தச் சிலம்பு கம்பை ஒரு கையால் உருவி எடுத்தாள்.

குழலனும் தன் முதுகில் இருந்து ஒரு சிலம்பை உருவினான். மெல்ல எழுந்து சூறாவளி முதுகில் நின்றவாறு ஒரு கையை நட்சத்திரா தோளில் பிடித்துக்கொண்டான்.

‘’ங்ஙா ஙிஙீ’’ (பொடியா கவனம்… விழுந்து பள்ளத்தில் உருண்டுவிடாதே) என்றது சூறாவளி.

‘’நீ நன்றாக கால்களை வைத்து ஓடடா’’ என்றான் குழலன்.

‘அடேய்… நான் உன்னைவிட ஆறு நாட்கள் முன்னால் பிறந்தவனடா… மரியாதை… மரியாதை!’

‘’சூறா அண்ணே… பேச்சை நிறுத்தி சரியாகப் போங்க அண்ணே…’’ என்றான் குழலன்.

இப்போது ஒற்றையடிப் பாதையின் மையத்தில் சுகந்தனும் இன்னும் மூன்று பேரும் வந்திருந்தார்கள்.

‘’ஆஹா… ஆஹா… புரவி மேல் பாய்ந்துவரும் பூங்கொத்து… வா… வா… வாளை வீசவே யோசனையாக இருக்கிறது. கையாலே கொய்துவிடலாமா?’’ என்று உரக்கச் சொல்லிச் சிரித்தான் சுகந்தன்.

‘’அருகில் வந்ததும் தெரியுமடா பூங்கொத்தா புயலா என்று’’ என்று உரக்கச் சொல்லியவாறு ஒரு கையால் கம்பைச் சுழற்றினாள் நட்சத்திரா.

‘’வா… வா… பார்த்துவிடலாம்!’’

‘’ஐந்தே பேர்தானா? இன்னும் நான்கு பேருடனாவது வந்திருக்கலாம்’’ என்று கத்தினான் குழலன்.

‘’ஹா… ஹா… பொடியனுக்குப் பேச்சை பாருங்கடா’’ என்று சிரித்தவாறு வாளைச் சுழற்றினான் சுகந்தன்.

‘’ங்ங ஙஙி ஙிஙீ’’ என்றது சூறாவளி. (வசனம் பேசி செயலில் சரிந்திடாதீங்க)

சுகந்தனும் அவனது ஆட்களும் புலி பாய்ச்சலாக இவர்களை நோக்கி வர ஆரம்பித்தார்கள். நட்சத்திரா சட்டென புரவியில் இருந்து மின்னலாகத் தரைக்குத் தாவினாள். எதிரிகளுக்கு சில அடிகள் முன்பு நின்று சிலம்பை சுழற்ற ஆரம்பித்தாள்.

சூறாவளி லாவகமாக விலகி அவளைக் கடந்து அவர்களை நோக்கிச் சென்று முன்னங்கால்களை உயர்த்தி கனைத்தது.

இப்போது இரண்டு பேர் சூறாவளியைச் சுற்றிக்கொள்ள மூன்று பேர் சற்று பின்னால் நட்சத்திராவை வளைக்க முயன்றார்கள்.

‘விர்ர்.. விர்ர்…’ என்று அவளது கம்பு காற்றில் விளையாடி வாளுடன் முன்னால் வந்த ஒருவன் தாடையைத் தாக்கியது. அவன் தடுமாறி விழுந்தான்.

அடுத்தவன் அவளது வயிறை நோக்கி ஈட்டியை எறிந்தான். நட்சத்திரா அப்படியே மடங்கி தரையில் அமர்ந்தாள். ஈட்டி தலைக்கு மேலே காற்றில் சென்றது. சுகந்தன் அவளை நெருங்கிவிட்டான். தனது வாளை அவளது கழுத்தை நோக்கி சுழற்றினான்.

நட்சத்திரா தரையுடன் மல்லாந்து அதே வேகத்தில் வலது காலை வீசி சுகந்தனின் கால்களைக் கொக்கி போட முயன்றாள். அவன் சாதுர்யமாக தரையில் இருந்து சில அடிகள் மேலே பாய்ந்து மீண்டும் பூமிக்கு வந்தான்.

‘’சபாஷ்… நீ பூங்கொத்து அல்லதான்’’ என்று சிரித்தான்.

‘’ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட நீ சோப்ளாங்கி’’ என்றாள் நட்சத்திரா நக்கலுடன்.

சுகந்தன் கண்கள் சிவக்க வாளை மேலும் சுழற்றினான்.

அதேநேரம் சூறாவளியையும் குழலனையும் சுற்றிக்கொண்ட இருவர் வாளையும் ஈட்டியையும் பாய்ச்ச முயன்றனர். ஒருவன் புரவிக்கு குறி வைக்க… இன்னொருவன் அதன் மேலிருக்கும் சிறுவனுக்குக் குறி வைத்தான்.

சூறாவளி வேகமாகவும் அதே சமயம் மேலே நின்றிருக்கும் குழலன் விழுந்துவிடாதபடி லாவகமாகவும் வளைந்து நெளிந்து வாள் பாய்ச்சலில் இருந்து விலகியது.

மேலே நின்றிருந்த குழலன் தன்னை நோக்கி வந்துபோகும் ஈட்டியிடம் இருந்து அப்படியும் இப்படியுமாக விலகியவாறு கம்பை கீழே இருப்பவனின் மண்டையைத் தாக்க செலுத்தினான். ஆனால், கீழே இருப்பவனும் திறமைசாலிதான். வேகமாக விலகி மீண்டும் மீண்டும் ஈட்டியைச் செலுத்தினான்.

சூறாவளியின் முன்னங்கால்கள் வாள் வீசியவனின் மார்பை தாக்க… அவன் அலறியவாறு தரையில் விழுந்தான். அவன் எழும் முன்பு பெரும் கனைப்புடன் தனது கால்களை மேலும் உயர்த்தி உடலை பின்னோக்கிச் சரித்தது சூறாவளி.

அதில் பிடிப்பு இழந்த குழலன் பின்னால் உருண்டு தரையில் உருளும் முன்பு சமாளித்து நின்றான்.

கீழே கிடந்தவனின் மார்பில் தனது இரண்டு கால்களின் குளம்புகளையும் செலுத்திய சூறாவளி கழுத்தைத் திருப்பி குழலனைப் பார்த்து, ‘’ஙிஙொஙி’’ (மன்னிச்சுடுப்பா) என்றது.

‘’பரவாயில்லை… ஒருவன் ஒழிந்தான் அல்லவா?’’ என்றான் குழலன்.

மார்பு எலும்புகள் முறிந்த கீழே கிடந்தவன், ‘’அம்ம்மா…’’ என்று முனகியவாறு சட்டென வலது பக்க பள்ளத்தாக்கை நோக்கி சரிந்து காணாமல் போனான்.

இங்கே நட்சத்திராவை மூன்று பேர் நெருக்கமாகச் சுற்றிவளைத்தபோது… அவர்களுக்கு அருகே பள்ளத்தாக்கில் இருந்து சிறு புழுதி கிளம்பியது. அடுத்த நிமிடம் கையில் வாளுடன் அந்த உருவம் மேலே வந்தது.

உடல் முழுவதும் கறுப்பு உடையுடன் முகத்தையும் கறுப்பு துணியால் மூடியிருந்த அந்த உருவத்தின் கண்கள் மட்டும் தெரிந்தன.

‘’இ… இன்னொரு எதிரி’’ என்றாள் நட்சத்திரா.

‘’இன்னொரு எதிரி’’ என்று அந்த உருவம் பக்கம் திரும்பினான் சுகந்தன்.

‘’ங்ங ஙிஙோ’’ (யாருக்கு இவன் எதிரி?) என்று பார்த்தது சூறாவளி.

அந்த உருவம் பாய்ந்துவந்து சுகந்தனைத் தாக்க முயன்றது. நட்சத்திரா சட்டென திகைப்பில் இருந்து மீண்டாள். தன்னைப் போலவே திகைப்பில் இருக்கும் மற்ற இருவர் மீளும் முன்பு அவர்களை நோக்கி கம்பை சுழற்றினாள். அதில் ஒருவன் கழுத்து பலமாகத் தாக்குதலுக்கு உள்ளானது.

அவன் தடுமாறி தனது வாளை கை நழுவவிட்டான். அதே வேகத்தில் பள்ளத்தாக்கை நோக்கி பாய்ந்தான்.

‘’இப்போது மூன்று பேருக்கு மூன்று பேர்’’ என்று உற்சாகமாகக் கத்தினான் குழலன்.

அந்த உற்சாகத்தில் ஓரிரு நொடி கவனச் சிதறலில் தனது எதிரியைக் கவனிக்க மறந்தான் குழ்லன். எதிரியின் ஈட்டி முகத்தருகே வர நொடியில் விலகினான் குழலன். ஆனால், ஈட்டியின் முனை குழலனின் வலது தோளில் நுழைந்தது.

‘’குழலா…’’ என்று பதறினாள் நட்சத்திரா.

குழலன் இடது பக்க பள்ளத்தாக்கை நோக்கி சரிய ஆரம்பிக்க… அவனைத் தடுக்கும் முயற்சியில் நகர்ந்த சூறாவளியும் அவனுடன் சேர்ந்து பள்ளத்தாக்கு நோக்கி போக ஆரம்பித்தது.

அந்தக் கறுப்பு உருவமும் இதைக் கவனித்தது. ஆயினும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் சைகையாலே நட்சத்திராவிடம் அவளருகே நெருங்கும் எதிரி பற்றி எச்சரித்தது.

நட்சத்திரா சுதாரித்து எதிரியுடன் மோத ஆரம்பித்தாள். சுகந்தனுடன் மோதிய அந்த உருவம் அவனுக்குச் சரியான ஈடு கொடுத்து வீழ்த்தப் பார்த்து. அதே நேரம் ஒற்றையடிப் பாதையின் அந்த முனையில் ஒரு குதிரை வண்டியும் இரண்டு குதிரைகளில் வீரர்களும் வருவது தெரிந்தது.

‘’ஆலோசனைக் கூட்டத்துக்கான வேறு ஆட்கள் வருகிறார்கள்’’ என்று நட்சத்திரா அருகே இருந்தவன் கூச்சலிட்டான்.

‘’மடையா… மூடு வாயை’’ என்று சீறிய சுகந்தன், ‘’வந்து தொலையுங்கள்’’ என்றபடி வலது பக்க பள்ளத்தாக்கை நோக்கி பாய்ந்து மறைந்தான். அடுத்த நொடி… நட்சத்திராவை தாக்க முயன்ற இருவர் அதைக் கைவிட்டு அதேபோல பள்ளத்தாக்கில் பாய்ந்தார்கள்.

நட்சத்திரா ஓரிரு நிமிடம் தடுமாறி திகைத்தாள். பின்னர் இடது பக்க பள்ளத்தாக்கு முனைக்குப் பதற்றத்துடன் சென்று, ‘’குழலா.. சூறா… குழலா… சூறா’’ என்று கத்தினாள்.

அவளுக்குச் சற்றுத் தள்ளியிருந்த அந்தக் கறுப்பு ஆடை உருவம் அவளை சில நொடிகள் பார்த்தது. நட்சத்திராவும் அந்த உருவத்தின் கண்களைச் சந்தித்தாள். அடுத்த நொடி… அந்த உருவம் குழலன் சரிந்த இடது பக்க பள்ளத்தாக்கில் குதித்தது.

இதற்குள் ஒற்றையடிப் பாதையின் முனையில் இருந்த வண்டியும் குதிரை வீரர்களும் நெருங்கிவிட்டார்கள். குதிரை வீரர்கள் பாய்ந்து இறங்கினார்கள்.

‘’என்ன ஆயிற்று…? என்ன ஆயிற்று?’’

‘’குழலன்… குழலன்… தம்பி… பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டான்.’’

‘’கவனித்தோம்… குதிரையும் விழுந்ததல்லவா? மாறா… கயிறை எடு’’ என்றான் ஒரு வீரன்.

இன்னொரு வீரன் தனது குதிரையை நோக்கி ஓடினான். நட்சத்திரா பள்ளத்தாக்கின் முனையின் மண்டியிட்டு தலையைக் குனிந்துப் பார்த்து, ‘’குழலா… குழலா.. சூறா…’’ என்று பதறினாள்.

‘’பெண்ணே… பதற்றம் வேண்டாம். மீட்டுவிடலாம்’’ என்றான் ஒரு வீரன்.

‘’கு… குழலனுக்குத் தோளில் ஈட்டி பா… பாய்ந்துள்ளது’’ என்ற நட்சத்திரா கண்களில் நீர்த் துளிர்த்தது.

‘’ஒன்றும் ஆகாது… பார்த்துவிடுவோம்’’ என்றபடி கயிறுடன் வந்த வீரன் அதனைப் பள்ளத்தாக்கை நோக்கி வீசினான்.

‘’மாறா… நன்றாகப் பிடித்துக்கொள். நான் இறங்குகிறேன்’’ என்றான் ஒரு வீரன்.

‘’இரு… அங்கே கவனி…’’ என்று சுட்டிக்காட்டினான் மாறன்.

அந்த வீரன் எட்டிப் பார்த்தான். நட்சத்திராவும் கவனித்தாள்.

‘’கீழே இருக்கும் அந்தக் கறுப்பு உடை மனிதன் சிறுவனையும் குதிரையையும் கயிற்றின் முனையில் கட்டுகிறான் பார்… பொறு…’’ என்றான் மாறன்.

கீழே இருந்து சூறாவளியின் குரல் வந்தது. அந்த உருவமும் கையசைத்தது.

‘’தூக்கச் சொல்கிறான்…. ம்… இழு’’ என்றான் மாறன்.

அவர்கள் இருவரும் இழுக்க… அவர்களுடன் சேர்ந்து நட்சத்திராவும் இழுத்தாள்.

வண்டியோட்டியும் வந்து இணைந்தான். வண்டியில் இருந்து இறங்கியிருந்த அந்த அரசு அதிகாரி மட்டும் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு தள்ளிநின்று பார்த்தார்.

சற்று நேரப் போராட்டத்தில் சூறாவளியும் அதன்மீது படுக்க வைக்கப்பட்டிருந்த குழலனும் மேலே தூக்கப்பட்டார்கள். சூறாவளி தலையையும் உடலையும் உதறியபடி நகர்ந்தது. தரையில் கிடத்தப்பட்ட குழலன் அருகே சென்று மண்டியிட்டாள் நட்சத்திரா. ‘’குழலா… குழலா…’’ என்றாள்.

முகம் , உடம்பெல்லாம் மண்ணுடன் மெல்ல தலையசைத்த குழலன்… ‘’அ… அக்கா… ஒ…ஒன்றுமில்லை… கொ… ஞ்சம் குருதியை மண்ணில் சிந்தியுள்ளேன்’’ என்றான்.

*****

அரச சபை… அவசர கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

கம்பீரன், நிலாமதிசந்திரன், சூர்யன், நட்சத்திரா ஒரு பக்கமாக நின்றிருக்க வேகவேகமாக வந்தார் சிங்கமுகன். அனைவரும் வணங்கினார்கள்.

‘’என்னதான் நடக்கிறது? பெண்ணையும் சிறு பிள்ளையையும் தாக்கி கொல்லும் அளவுக்கு நாட்டில் சட்டம் சீர்குலைந்து கிடக்கிறதா? கம்பீரா… இதற்கு என்ன பதில்?’’ என்று சீறினார்.

‘’மன்னா… அவர்கள் அந்தச் சுரங்கக் கொள்ளையர்கள்தான்’’ என்றான் கம்பீரன்.

‘’அடடே.. மகா கண்டுபிடிப்பு… அதைத் தாண்டி இன்னும் வரவில்லையா?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’அரசே… இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்துவது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அப்படி இருக்க சரியாக இவர்கள் வரும் நேரத்தில் மடக்கப்பட்டு இருக்கிறார்கள். கொள்ளையர்களுக்கு இங்கிருந்தே தகவல் சென்றுள்ளது’’ என்றான் கம்பீரன்.

‘’இங்கிருந்து என்றால்?’’

‘’நான்தான் காலையிலேயே சொன்னேனே அரசே… நம் அரண்மனைக்குள் சில புல்லுருவிகள் இருக்கக் கூடும்’’ என்றார் நிலாமதிசந்திரன்.

‘’அரண்மனைக்குள் நான், ராணி, நீர், தளபதியும் கூடத்தான் இருக்கிறோம்’’ என்றார் சிங்கமுகன்.

‘’அ… அரசே… மந்திரி உங்களிடம் செய்தி சொல்ல வந்தபோது அந்த செவ்வந்தி இருந்தாளாம்’’ என்றான் கம்பீரன்.

‘’மடத்தனமாக உளறாதீர் தளபதி’’ என்றார் சிங்கமுகன்.

‘’விசாரிப்போமே அரசே… அவள் வீட்டுக்கும் சோதனையிட ஆட்களை அனுப்பி இருக்கிறேன். அதேபோல நட்சத்திராவுக்குச் செய்தி சொல்ல அனுப்பிய நல்லானையும் பிடித்து வரச் சொல்லியிருக்கிறேன்’’ என்றான் கம்பீரன்.

சூர்யன், நட்சத்திரா அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.

‘’சரி விசாரிப்போம்… குழலன் நிலை என்ன?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’ஆபத்தில்லை… வைத்தியர் பார்த்துக்கொண்டிருக்கிறார்’’ என்றார் நிலாமதிசந்திரன்.

அப்போது நல்லானை இரண்டு வீரர்கள் இழுத்து வந்தார்கள். அவன் முகமெல்லாம் பதற்றம்.

‘’அரசே… அரசே… நான் ஒன்றும் செய்யவில்லை’’ என்று கதறினான்.

‘’பொறுடா… விசாரித்தால் தெரியும்’’ என்று சீறினான் கம்பீரன்.

‘’தளபதியாரே… நீங்கள் சொன்னபடி இவன் வீட்டையும் சோதனையிட்டோம். இது அங்கிருந்த ஒரு பானை’’ என்று நீட்டினான் ஒரு வீரன்.

வாங்கிப் பார்த்த கம்பீரன்… ‘’அடேங்கப்பா… ஒரு சாதாரண வீரனின் வீட்டுப் பானையில் கம்பு, சோளத்துக்குப் பதில் கட்டிகள்… தங்கக் கட்டிகள்’’ என்றபடி அனைவருக்கும் காண்பித்தான்.

‘’அப்படியென்றால் செவ்வந்தி வீட்டுக்குச் சென்றிருக்கும் வீரன் என்ன கொண்டுவரப் போகிறானோ?’’ என்று கேட்டார் நிலாமதி சந்திரன்.

‘’அரண்மனையில் அரசிக்கு அருகில் இருப்பவள் அல்லவா? பானை பெரிதாக இருக்கலாம்’’ என்றான் கம்பீரன்.

சூர்யனும் நட்சத்திராவும் செய்வதறியாமல் கதறுகிற நல்லானையே பார்த்தவாறு இருந்தார்கள்.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button