இணைய இதழ் 103சிறார் இலக்கியம்தொடர்கள்

சிரிப்பு ராஜா சிங்கமுகன் 13; யுவா

சிறார் தொடர் | வாசகசாலை

13.உத்தமன் உரசல்

‘’உஷ்ஷ்ஷ்ஷ்….’’ என்று உதட்டில் விரல் வைத்துச் சொன்னான் சூர்யன்.

உச்சிவெயில் பொழுது… அந்த அகன்ற மரத்துக்குப் பின்னால் நின்றிருந்தான் சூர்யன். அவன் அருகே இருந்த சூறாவளி மெளனமாகத் தலையசைத்தது.

சூர்யன் மெல்ல தலையை நீட்டிப் பார்த்தான். பசுமையான வயல்வெளிக்கு மறுபக்கம் அந்த வீடு தெரிந்தது. வாசலில் ஒரு மாட்டுவண்டி இருந்தது.

உத்தமனின் வயலும் வீடும்தான் அது. சூர்யன் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே உத்தமன் வெளியே வந்தான். கதவை மூடுவதும் மாட்டுவண்டியை நெருங்கி ஏறிக்கொள்வதும் தெரிந்தது.

‘’சூறா… அந்தக் கறுப்பு ஆடை மர்ம மனிதன் யார் என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்’’ என்று மெல்லியக் குரலில் சொன்னான்.

‘’ஙிஙி’’ என்று மெல்ல கனைத்தது சூறாவளி.

மாட்டுவண்டி அந்த இடத்தை விட்டு அகன்றதும், ‘’நீ இங்கேயே இருந்து கவனி. ஏதாவது என்றால் குரல் கொடு’’ என்றான் சூர்யன்.

‘’ஙிஙி’’

சூர்யன், ‘விடுவிடு’ என்று வரப்பு மீது நடந்து வீட்டை நெருங்கினான். தன் இடையில் இருந்து அந்த இரும்புக் கம்பியை எடுத்தான். பூட்டின் உள்ளே நுழைத்து திருப்பினான். அது வாயைப் பிளந்தது. கதவைத் திறந்து, ‘விருட்’ என உள்ளே நுழைந்து மூடிக்கொண்டான்.

பின்னர் வீடு முழுவதும் பார்வையை வீசினான். அங்கும் இங்கும் சென்று அதையும் இதையும் திறந்துப் பார்த்தான். அப்படியும் இப்படியும் நகர்த்திப் பார்த்தான்.

‘’என்ன தேடுகிறாய் நண்பா?’’

திடீரென குரல் வர… திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். ஜன்னல் அருகே உத்தமன் முகம்.

‘’அ… அது… நேற்று நட்சத்திரா அவளது தோடு ஒன்றை இங்கே தவற விட்டு…’’ என்று திணறினான் சூர்யன்.

‘’பூட்டை உடைத்து உள்ளே போய்த் தேடும் அளவுக்கு அவ்வளவு அவசரமா?’’ என்று கேலியுடன் கேட்டான் உத்தமன்.

‘’வ… வந்து… மாலை ராணியாரின் பிறந்தநாள் நிகழ்வுக்குச் செல்ல வேண்டுமல்லவா?’’

‘’சரி… உள்தாழை திறக்கிறாயா? நானும் வந்து தேடுகிறேன்’’ என்றான் உத்தமன்.

சூர்யன் வாசல் கதவைத் திறந்தான். உத்தமன் உள்ளே நுழைய சூர்யன் பார்வை வெளியே சென்றது.

‘’என்ன பார்க்கிறாய்? சூறாவளி எச்சரிக்கை குரல் எழுப்பவில்லையே என்றா? நண்பா… அவனுக்கு நானும் தெரிந்தவன்தான். தவிர, மிருகங்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாது’’ என்று புன்னகைத்தான் உத்தமன்.

‘’நா… நான் என்ன பேசினேன்?’’ என்று கேட்டான் சூர்யன்.

‘’இப்போது மட்டுமா? சில நாட்களாகவே நீ என்னைப் பார்க்கும் பார்வையும் பேசும் வார்த்தைகளும் இருபொருள் படவே உள்ளதைக் கவனிக்கிறேன். எதுவாக இருந்தாலும் நேரிடையாக கேள் சூர்யா’’ என்றான் உத்தமன்.

‘’சரி கேட்கிறேன் உத்தமா… அந்தக் கறுப்பு ஆடை மர்ம மனிதன் யார்?’’ என்று கேட்டான் சூர்யன்.

‘’எனக்கு என்ன தெரியும்?’’

‘’அது நீதான் என்கிறேன் நான்.’’

‘’ஹா… ஹா… நல்ல நகைப்பு. நான் எதற்கு கத்தியைப் பிடித்துக்கொண்டு இரவிலும் பகலிலும் சுற்றப் போகிறேன். பகலில் பிடிக்க ஏர்கலப்பை இருக்கிறது. இரவில் பிடிக்க எழுத்தாணி உள்ளது’’ என்றான் உத்தமன்.

‘’அது வெளியே ஊருக்காக… உள்ளே?’’

‘’மடையன் போல பேசாதே சூர்யா… அப்படி வேடம் போடவேண்டிய அவசியம் எனக்கு என்ன?’’

‘’அதைக் கண்டறியவே வந்தேன்.’’

‘’கண்டறிந்தாயா?’’

‘’விரைவில் அறிவேன்.’’

‘’இல்லாத இடத்தில் தேடினால் என்ன கிடைக்கும் நண்பனே?’’

‘’அப்படியானால் இன்னொரு இடமும் உனக்கு இருக்கிறதா?’’ என்று கேட்டான் சூர்யன்.

‘’சூர்யா… ஒளித்து மறைத்து எதையும் செய்பவன் அல்ல நான். உரைகல் மூலம் அரசாங்கத்தையே வெளிப்படையாக எதிர்ப்பவன். நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதே. என் தன்மானத்தை தேவையின்றி சீண்டி கோபத்தைக் கிளப்பிவிடாதே… கிளம்பு’’ என்று குரலில் சீற்றம் சேர்த்தான் உத்தமன்.

சூர்யன் ஓரிரு நிமிடங்கள் உத்தமனைப் பார்த்துவிட்டு வீட்டிலிருந்து வெளியே வந்தான். பின்னாலே வந்த உத்தமன் கதவை இழுத்து மூடியபடி, ‘’மரியாதையாக உன் செலவில் ஒரு புதிய பூட்டை வாங்கிவந்து பூட்டிவிடு. உன்னைப் போல அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவனல்ல நான். உழுதால்தான் சோறும் செப்புக் காசுகளும்’’ என்றான்.

‘’உன் மேல் உள்ள அக்கறையில்தான் கேட்கிறேன் உத்தமா…’’ என்று சூர்யன் பேச…

மாட்டுவண்டியில் தாவி ஏறிய உத்தமன், ‘’உன் அக்கறைக்கு நன்றி நண்பா… இதற்கு மேலும் உனக்கு சந்தேகம் தொடர்ந்தால் நின்று நிதானமாக வீட்டைப் புரட்டிப் பார்த்துவிட்டுப் போ. அப்புறம்… இப்போது நான் எங்கே போகிறேன் என்றும் சொல்லிவிடுகிறேன். மிஸ்டர் கிங்விங்சன் சந்திக்க விரும்பினார். அங்கேதான் போகிறேன்’’ என்றான்.

சூர்யன் புருவங்களை உயர்த்தினான். ‘’ஏன்?’’

‘’தொழில் விஷயமாக… காகிதம் மூலமும் பத்திரிகை நடத்தலாமாம். தயாரிப்பதும் சுலபமாம். அது என்ன என்று பார்த்துவிட்டு வரச் செல்கிறேன். நண்பா… மறுபடியும் சொல்கிறேன். என் வாழ்க்கை திறந்த புத்தகம்’’ என்று புன்னகைத்த உத்தமன்…

‘’புத்தகம் என்றால் என்ன தெரியுமா? காகிதத்தில் தயாரிப்பது. அறிவை வளர்ப்பது. விரைவில் என் உரைகல்லும் அப்படி வரும். படித்து அறிவை வளர்த்துக்கொள்’’ என்று சொல்லிவிட்டு வண்டியை ஓட்டிச் சென்றான்.

போகிற நண்பனையே பார்த்தவாறு நின்றிருந்தான் சூர்யன். அவன் முதுகருகே வந்து, ‘’ங ஙிங’’ என்றது சூறாவளி.

‘’பேசாதேடா துரோகி…’’ என்று திரும்பிப் பார்க்காமலே திட்டினான் சூர்யன்.

*****

கிங்விங்சன் மாளிகை…

தன் கையில் இருந்த அந்தப் பெரிய புத்தகத்தை ஆர்வமுடன் புரட்டிக் கொண்டிருந்தான் உத்தமன். அதில் இருந்த ஓவியங்கள், புகைப்படங்கள் அவனது கண்களை அகல விரித்தபடி இருந்தன.

அவனுக்கு அருகே அமர்ந்திருந்த கிங்விங்சன் ஒவ்வொரு பக்கம் புரட்டப்படும்போடும் விளக்கம் சொன்னான்.

‘’மிஸ்டர் உத்மன்… இதுக்குப் பேருதான் பிரின்டிங் மிஷின். அதாவது… எழுத்துகளைக் காகிதத்தில் கொண்டுவருகிற… ம்… ம்…’’

‘’இயந்திரம்’’ என்றான் உத்தமன்.

‘’யா… இந்திரம்.. இந்திரம்… இந்த இடத்தில் எழுத்துகளை கோத்து வைப்பார்கள். இந்த பிளேட்… தட்டு மீது பேப்பரை வைப்பார்கள். அப்றம் இந்த லிவரை காலால் மிதித்தால் மேலே இருக்கும் பிளேட் கீழே இறங்கி காகிதத்தில் அச்சாகும். இப்படி மை தீரும் வரை எத்தனைக் காகிதத்தில் வேண்டுமானாலும் பிர்தி எடுக்கலாம்’’ என்றான் கிங்விங்சன்.

‘’அடேங்கப்பா… நாங்கள் நாட்கள் கணக்கில் அமர்ந்து எழுதுவதை இது ஒரு நாழிகையில் முடித்துவிடும் போலிருக்கிறதே…’’ என்று வியந்தான் உத்தமன்.

‘’யா… இன்னும் கொஞ்ச காலம் போனால் ஆட்டோமெட்டிக்… ம்… தானாக அச்சடிக்கும் இந்திரம் வந்துவிடும்’’ என்றான் கிங்விங்சன்.

‘’பிரமாதம்… ஆனால், இதெல்லாம் எங்கள் தேசத்துக்கு வருவதற்கு இன்னும் நூறாண்டு ஆகலாம்’’ என்றான் உத்தமன்.

‘’அப்டி இல்லை உத்மா… அதான் நாங்க வந்துட்டோமே… சீக்ரமே இந்த வசதிகளை இங்கே கொண்டுவருவோம்’’ என்று புன்னகைத்தான் கிங்விங்சன்.

‘’நல்ல விஷயம்…’’

‘’நீ சரியென்று சொல். உனக்கு கப்பலில் வரவைத்து தர்றோம்.’’

‘’இதையெல்லாம் வாங்கும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை வாணிபரே… தினச் சிங்கம் நடத்தும் வசந்தனிடம் சொல்லுங்கள். அவன்தான் அரசு புகழ்பாடி நிறைய சலுகைகள் பெற்று ஆஹா ஓஹோ என்று இருப்பவன்’’ என்றான் உத்தமன்.

கிங்விங்சன் சிரித்து, ‘’மிஸ்டர் உத்மன்… அந்த வசந்தனிடம் முன்பே பேசிவிட்டேன். வாங்கிக் கொடுக்கவும் போகிறேன்’’ என்றான்.

‘’ஓஹோ… எவ்வளவு விலை?’’

‘’விலைலாம் இல்லை.’’

‘’பின்னே?’’

‘’கிப்ட்… மீன்…’’

‘’அன்பளிப்பு’’ என்று அவனைப் பார்த்தான் உத்தமன்.

‘’அதே… அன்பின் பரிசு’’ என்று புன்னகைத்தான் கிங்விங்சன்.

‘’அதேபோல எனக்கும் பரிசு அளிக்க விரும்புகிறீர்கள் அல்லவா?’’

‘’யா…’’

‘’பதிலுக்கு நான் என்ன அன்பு செலுத்த வேண்டும்?’’

‘’ஹா.. ஹா… நேரா விஷயத்துக்கு வர்றே… சரி… நான் சொல்வது போல உன் உரைகல்லில் எழுதணும்.’’

‘’என் உரைகல் உண்மைகளை மட்டுமே எழுதும் மிஸ்டர் கிங்விங்சன். உரைகல் என்றால் உங்களுக்குப் பொருள்… அதாவது… மீன் தெரியுமா?’’

‘’மீனிங்’’

‘’யா’’ என்றான் உத்தமன்.

‘’சொல் உத்மா’’ என்றான் கிங்விங்சன்.

அப்போது ஒரு பணியாள் ஒரு மதுபாட்டில் இரண்டு கோப்பைகளுடன் வந்தான். கோப்பைகளில் மதுவை ஊற்றி நீட்டினான்.

‘’மன்னிக்கவும்… எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை’’ என்றான் உத்தமன்.

‘’எடுத்துக்க உத்மா… இது எங்கள் தேசத்தில் தயாரான மிக உயர்ந்த வகை மதுபானம்’’ என்றான் கிங்விங்சன்.

‘’மன்னிக்கவும்… தங்கத்தையே கரைத்து தயாரித்து இருந்தாலும் நான் அருந்துவதில்லை’’ என்றான் உத்தமன்.

‘’ஓகே… விர்ப்பம் இல்லாவிட்டால் விடு. சொல்… உரைகல் என்றால்…?’’ என்ற கிங்விங்சன் ஒரு கோப்பையை வாங்கி குடிக்க ஆரம்பித்தான்.

‘’உரைகல் என்றால் தங்கத்தை உரசிப் பார்த்து நிஜமா போலியா? எவ்வளவு தரம்? என்ன மதிப்பு என்றெல்லாம் அறியும் கல். போலிகளை அது ஏற்காது மிஸ்டர் கிங்விங்சன்’’ என்றவாறு எழுந்துகொண்டான் உத்தமன்.

‘’குட்… குட்… என் மாளிகைக்கு வந்ததுக்கு நன்றி’’ என்றான் கிங்விங்சன்.

‘’வரவேற்று உபசரித்ததுக்கு நன்றி. நான் கிளம்புகிறேன்’’ என்றான் உத்தமன்.

‘’வெல்கம்… நீ எப்போ வேணும்னாலும் மீண்டும் வரலாம் உத்மா’’ என்றான் கிங்விங்சன்.

சில அடிகள் சென்றுவிட்ட உத்தமன் திரும்பிப் பார்த்து, ‘’இனி வருகிற தேவை இருக்காது கிங்விங்சன்’’ என்றான்.

உத்தமன் சென்ற சில நிமிடங்கள் கழித்து அடுத்த அறைக்குள் இருந்து அந்த மனிதர் வெளிப்பட்டார்.

‘’நான்தான் சொன்னேனே மிஸ்டர் கிங்விங்சன்… பயல் நம் வலையில் சிக்க மாட்டான் என்று. உண்மைக்காக உயிரை விடும் இனம்’’ என்றார்.

கிங்விங்சன் புன்னகைத்து, ‘’யாருக்கு என்ன வீக்னஸ்… மீன்… பல்வீனம் என்று கண்டுபிடித்தால் வீழ்த்திவிடலாம். இப்போ உங்ளை வீழ்த்தியிருக்கேனே… உங்க வீக்னஸ் தங்கம்’’ என்றான்.

அவன் அருகே சென்று அமர்ந்த அவர், ‘’என் பலவீனம் தங்கம் மட்டுமல்ல. அரிமாபுரி நாடும் அந்த அரியணையும்’’ என்றார்.

பணியாளன் ஒரு கோப்பையை நீட்ட… வாங்கி பருக ஆரம்பித்த அவர்தான் வேங்கைபுரி மன்னர் புலிமுகன். பலமுறை அரிமாபுரி மீது போர் தொடுத்து கைப்பற்ற முயன்று தோற்றுப்போய் கைவிட்டவர். ஆனால், அரிமாபுரி அரியணையையும் அங்குள்ள தங்கச் சுரங்கத்தையும் மனதில் இருந்து நீங்க விடாதவர்.

‘’அது உங்களுக்கு கிடைக்கும் மிஸ்டர் புலிமுகன். இப்போதானே அரிமாபுரியின் மன்னனையும் ராணியையும் நெருங்கி இருக்கேன். நினைத்த நேரத்ல உள்ளே போய்வரும் அளவுக்கு நட்பாகி இருக்கேன்’’ என்றான் கிங்விங்சன்.

‘’ம்… இன்று கூட அந்த ராணியின் பிறந்தநாள் விழாவில் உங்களுக்கு சிறப்பு அழைப்பாமே?’’ என்று கேட்டார் புலிமுகன்.

‘’யா… புலிமுகன். நீங்ளும் எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.’’

‘’பின்னே… நேற்று வாணிபம் செய்ய வந்த நீங்களே இவ்வளவு தூரம் உள்ளே போயிருக்கும்போது பல ஆண்டுகளாக பக்கத்து நாடாக இருக்கும் நான் சும்மா இருப்பேனா? அங்கே பல ஆட்களை ரகசியமாக வைத்திருக்கிறேன்’’ என்றார் புலிமுகன்.

‘’குட்… குட்… நானும் உங்ளுக்கு உதவறேன். பதிலுக்கு நான் கேட்டிருப்பதை நீங்க செய்துகொடுங்க’’ என்றான் கிங்விங்சன்.

‘’நிச்சயமாக செய்கிறேன். சரி உங்க அடுத்த திட்டம் என்ன?’’ என்று கேட்டார் புலிமுகன்.

புன்னகைத்த கிங்விங்சன், ‘’இன்று பிறந்தநாள் விழாவில் அதற்கான… ம்… அது என்னமோ சொல்வீங்களே… ஆங்… அதற்கான அச்சாரம் போடப்போறேன்’’ என்றான்.

******

‘’என்ன தளபதியாரே… பிறந்தநாள் விழாவுக்குப் போக பெரிதாக அலங்காரமோ?’’

பின்னால் குரல் வர… திரும்பிப் பார்த்தான் கம்பீரன்.

அவனது அறையில் நிலவறை கதவைத் திறந்துக்கொண்டு தலையை உயர்த்திப் பார்த்தான் சுகந்தன்.

‘’பேசாதேடா… உன் மீது நான் கொலை வெறியில் இருக்கிறேன். ஒரு சின்னப் பெண்ணையும் சுண்டுவிரல் சிறுவனையும் வீழ்த்த துப்பில்லாமல் தோற்றுப் போயிருக்கிறீர்கள். வெட்கமாக இல்லை? இந்நேரம் நீ எந்த மரத்திலாவது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்?’’ என்றான் கம்பீரன்.

மேலே ஏறிவந்த சுகந்தன், ‘’நான் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? அந்தப் பெண்ணையும் சிறுவனையும் கொல்வது எங்கள் லட்சியமல்ல. நீங்கள் ஒரு வேலையைக் கொடுத்தீர்கள். முயன்றபோது சரியாக அமையவில்லை. அதற்கெல்லாம் நாங்கள் அசிங்கப்பட மாட்டோம். எங்கள் லட்சியம் அந்த தங்கச் சுரங்கம்… அதில் இருக்கும் தங்கக் கட்டிகள்தான்’’ என்றான் சுகந்தன்.

‘’ஆட்டு மூளையனே… அதற்காகத்தான் நானும் சில விஷயங்களைச் செய்யச் சொல்கிறேன். நான் சொன்னபடி செய்தால் சுரங்கத்துக்கே சொந்தக்காரனாக மாற்றுகிறேன் என்கிறேன். நீ பதுங்கி வந்து எடுக்கிறேன் என்கிறாய். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் என்பார்களே…’’ என்று வெறுப்புடன் சொன்னான் கம்பீரன்.

சுகந்தன் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக இருந்தான். ‘’மன்னிக்கவும்… நீங்கள் எங்களைப் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிடுவீர்களோ என்று…’’

‘’உன் கூட்டத்து நாய் ஏதாவது குழப்பியதா?’’

‘’……’’

‘’முட்டாள்கள்… இன்று வரை நீங்கள் பிடிபட்டு சிறைக்குச் செல்லாமல் இருப்பதற்கு காரணம் யார்?’’ என்று கேட்டான் கம்பீரன்.

‘’நீ… நீங்கள்தான்’’ என்றான் சுகந்தன்.

‘’பிறகென்ன? நான் நினைத்திருந்தால் என்றைக்கோ உங்கள் கூட்டத்தைப் பிடித்து சிறையில் அடைத்து சிங்கமுகனிடம் பாராட்டு வாங்கி இருக்க முடியாதா?’’

‘’ம்…’’

‘’என் லட்சியம் அந்தக் கோமாளி ராஜாவின் பாராட்டு அல்ல’’ என்று விஷமமாகப் புன்னகைத்தான் கம்பீரன்.

‘’புரிகிறது தளபதி… இனி நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டான் சுகந்தன்.

‘’சொல்கிறேன்… இப்போது வந்த வழியே போ… ராணியின் இன்றைய பிறந்தநாள் விழாவில் ஒரு காரியம் செய்யப் போகிறேன். பிறகு நீ தேவைப்படுவாய். அப்போது வா’’ என்றான் கம்பீரன்.

சுகந்தன் தலையாட்டிவிட்டு வந்த வழியே சென்றான்.

தொடரும்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button