பாடசாலை அவலம்
‘’பழுதான நிலையில் பாடசாலை… புனரமைக்கும் காலம் எப்போது? பழுதான நிலையில் பாடசாலை… புனரமைக்கும் காலம் எப்போது?’’
குழலனின் குரல் செவிகளுக்குள் நுழைய கண்களைத் திறந்தார் சிங்கமுகன்.
‘ம்… இந்த வாரத்தின் விடியலும் இவன் குரலில்தானா? போன வாரத்தின் பிரச்சனையே அப்படியே இருக்கிறது’ என்று நினைத்தவாறு எழுந்து அமர்ந்தார்.
அப்போது அறை வாசலில் வந்து நின்றான் காவலாளி நல்லான். அவனை ஏறிட்ட சிங்கமுகன், ‘’என்ன? நான் உன்னை அழைக்கவே இல்லியே’’ என்றார்.
‘’அந்தச் சிறுவனைப் பிடித்து வரட்டுமா அரசே?’’ என்று கேட்டான் நல்லான்.
‘’அதிகப்பிரசங்கி… நான் சொன்னேனா? இப்படியெல்லாம் சொல்லாமலே செய்தால் நான் மனம் குளிர்வேன் என நினைத்துவிட்டாயா? இந்த ஆண்டும் உனக்குப் பதவி உயர்வு கிடையாது. அதே கடைநிலை காவலாளிதான். ஊதிய உயர்வும் வழக்கம் போல அதேதான்’’ என்று கடுகடுத்தார் சிங்கமுகன்.
‘’அரசே… பதவி உயர்வுக்காகவோ, ஊதிய உயர்வுக்காகவோ வேலை செய்பவன் அல்ல இந்த நல்லான். உங்களின் விசுவாசி’’ என்றான்.
‘’ஆஹா… போதுமடா உங்கள் விசுவாசம் எல்லாம். போ… உனக்கு இன்னும் பத்து நிமிடத்தில் பணி நேரம் முடிகிறதல்லவா? இப்போதே போய் சீருடையை மாற்றிக்கொள். இல்லம் செல்ல நேரம் சரியாக இருக்கும்’’ என்று கடுகடுத்தார்.
‘’இல்லை அரசே… இன்று எனக்கு பகல் பணி. இப்போதுதான் வந்தேன்’’ என்றான் நல்லான்.
‘’நல்லது… போய் வேறு பணியைப் பார்’’ என்று கட்டிலை விட்டு இறங்கினார்.
சற்றுத் தள்ளியிருந்த மேசை மீது புதிய, ‘உரைகல்’ இருந்தது. நெருங்கி எடுத்தார். பார்வையை அதன் மீது ஓட்டினார்.
நாட்டில் இருக்கும் ஒரே ஒரு பாடசாலைக் கட்டடம் மிகவும் பழுதாகி இருக்கிறது என்றும்… படிக்கும் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அந்தச் செய்தி சொன்னது.
மேலும், இன்றைய அரசரின் தந்தை அரசராக இருந்த காலகட்டத்தில் பல இடங்களில் பாடசாலைகள் நிறுவப்பட்டன என்றும்… காலப்போக்கில் அவை அன்னச் சத்திரங்களாகவும் கேலிக்கை கூடங்களாகவும் சில அதிகாரிகளால் ஆக்ரமிக்கப்பட்டுவிட்டன என்றும் விவரித்தது.
இறுதியில், வீரசிங்கம் காலத்தில் அவர் அவ்வப்போது பாடசாலைகளை மேற்பார்வையிடச் செல்வார். அதனால், ஒழுங்காக நடந்துகொண்டு இருந்தது. இப்போதுள்ள மன்னருக்கு பாடசாலைகள் பக்கம் வரவே வழி மறந்துவிட்டது என்று வழக்கமான கேலியுடன் முடித்திருந்தான் உத்தமன்.
சிங்கமுகனுக்கு, ‘சுறுசுறு’ என்று கோபம் தலைக்கு ஏறியது. ‘’வாரம் தவறாமல் என் தலையை உருட்டுவதே இவனுடைய வேலையாகப் போயிற்று’’ என்று முணுமுணுத்தவாறு அந்த ஓலை இதழை வெறுப்புடன் வீசினார். பின்னர் விடுவிடு என்று அறையை விட்டு வெளியேறினார்.
*******
‘குடுகுடு’ என்று அரச சபைக்குள் நுழைந்த நிலாமதி சந்திரன் மூச்சு வாங்க நின்றார். அரியணையில் வீற்றிருக்கும் அரசரைப் பார்த்துப் பணிவுடன் வணங்கினார்.
‘’என்ன மந்திரியாரே… இன்றைய தாமதத்துக்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்? வீட்டில் வந்திருப்பது பேரனா பேத்தியா? அரண்மனையில் இருந்து ஓட்டிச் சென்றது ஆனையா புரவியா?’’ என்று கடுப்புடன் கேட்டார் சிங்கமுகன்.
‘’ஐயோ… அதெல்லாம் இல்லை மன்னா… என் மனைவிக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை’’ என்றார் மந்திரி.
‘’என்ன ஆயிற்று?’’
‘’அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்படுகிறாள். நம் வைத்தியர் எவ்வளவோ மருந்துகளைக் கொடுத்துப் பார்த்துவிட்டார். அவள் நோய் எதற்கும் மசியவில்லை’’ என்றார் நிலாமதி சந்திரன்.
‘’ஓஹோ…’’ என்று தாடையைத் தேய்த்த சிங்கமுகன், ‘’நம் கிழக்கிந்திய கிங்வின்சன் காதில் போட்டு வைக்கிறேன். அவர்கள் உடல்நலக் குறைவுக்கு ஏதோ வில்லைகளை விழுங்குகிறார்கள். உடனடியாக குணம் அடையலாம் என்கிறார்கள். நான்கு நாட்களுக்கு முன்பு கிளியோவுக்கு கடுமையான தலைவலி. வழக்கமாக வைத்தியர் கொடுக்கும் மருந்தைத் தடவினால் குணமாக ஒரு நாளாகும் அல்லவா? அந்த கிங்வின்சன் அந்த சமயம் வந்திருந்தார். அவர் கொடுத்த அந்த விலையைப் போட்ட அரை நாழிகையில் சரியாவிட்டதாம்’’ என்றார் சிங்கமுகன்.
‘’அப்படியா? ஆச்சர்யம்தான். மறக்காமல் அவரிடம் என் மனைவி பற்றி சொல்லுங்கள் அரசே’’ என்றார் மந்திரி.
அப்போது அவையில் இருந்த வயதான ஒருவர் எழுந்து, ‘’அரசே… குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும். நம் வைத்தியர் செய்யும் வைத்தியம் குணமாக நேரம் எடுத்தாலும் நம்மைச் சுற்றி கிடைக்கும் இயற்கையான மூலிகைகளில் தயாரிப்பவை. அந்த கிங்விங்சன் கொடுப்பதில் ஏதேதோ பொருட்களைச் சேர்க்கிறார்கள். அவை பிற்காலத்தில் பின்விளைவுகள் தரக்கூடும்’’ என்றார்.
‘’உமக்கு எப்படித் தெரியும்?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.
‘’எல்லாம் அறிந்த ஞானம்தான்’’ என்றார் அவர்.
‘’உமது ஞானத்தை உம்முடனே வைத்துக்கொள்ளும். இப்போது அமரும்’’ என்று சொன்னார் சிங்கமுகன்.
அவர் அமைதியாக அமர்ந்துவிட்டார். நிலாமதி சந்திரன் அவரைப் பார்த்து மெல்லச் சிரித்தார்.
‘’மந்திரி… அவரைப் பார்த்து சிரித்தது போதும். புறப்படுங்கள்’’ என்றபடி எழுந்துகொண்டார் சிங்கமுகன்.
‘’எ… எங்கே அரசே?’’ என்று கேட்டார் மந்திரி.
‘’நம் நாட்டின் பாடசாலைக்கு… அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்’’ என்றபடி படியில் இறங்க ஆரம்பித்தார்.
‘’பாடசாலையில் என்ன மன்னா நடக்கும்? பாடம்தான் நடக்கும்’’ என்றார் நிலாமதி சந்திரன்.
‘’அப்படியா…? நான் சமையல் நடக்கும் என்று நினைத்திருந்தேன்… கிளம்புமய்யா’’ என்று சீறினார் சிங்கமுகன்.
******
அந்த ஏரிக்கரையை ஒட்டி இருந்தது அரிமாபுரி மேல்நிலை பாடசாலை.
சிங்கமுகன், நிலாமதி சந்திரன், சூர்யன் மற்றும் சில வீரர்கள் புடைசூழ வாசலுக்கு வந்தார்கள். அதில் நல்லான் முன்னால் சென்று, ‘’ராஜாதி ராஜ… ராஜ கம்பீர… ராஜ குலத் திலக…’’ என்று ஆரம்பித்தான்.
வேகமாக வெளியே வந்த நட்சத்திரா… ‘’ச்சூ… ச்சூ… இதென்ன அரண்மனையா அந்தப்புரமா? பாடசாலை… பிள்ளைகள் தேர்வு எழுதுகிறார்கள். அமைதி’’ என்று அதட்டினாள்.
நல்லான், ‘கப்’ என்று வாயைப் பொத்திக்கொண்டான். குதிரை மீதிருந்து தாவி இறங்கிய சூர்யன் வேகமாக நட்சத்திராவை நெருங்கினான்.
‘’நட்சத்திரா… அரசர் பாடசாலையைப் பார்வையிட வந்துள்ளார்’’ என்று அடிக்குரலில் சொன்னான்.
‘’இருக்கட்டும்… அதற்காக இப்படிக் கத்த வேண்டுமா?’’ என்று கேட்டாள் நட்சத்திரா.
குதிரை மீதிருந்த சிங்கமுகன் காதருகே குனிந்த நிலாமதி சந்திரன், ‘’அரசே… அவள் சூர்யனின் தங்கை’’ என்றார்.
‘’அதை ஏனய்யா இவ்வளவு ரகசியமாகச் சொல்கிறீர்?’’ என்று கடுகடுத்தார் சிங்கமுகன்.
‘’அதில்லை மன்னா… அந்த உத்தமனின் காதலி… மகா கர்வி’’ என்றார் கிசுகிசுப்புடன்.
‘’ஓஹோ…’’ என்ற சிங்கமுகன் தனது புரவியில் இருந்து இறங்கினார்.
நட்சத்திராவை நெருங்கி பாடசாலையின் வாசற்படியில் தனது ஒரு காலைத் தூக்கி வைத்தார்.
‘’ம்… வணங்கு… வணங்கு…’’ என்று அடிக்குரலில் சொன்னான் சூர்யன்.
சிங்கமுகனை நேருக்கு நேராக ஏறிட்ட நட்சத்திரா, ‘’வணக்கம் அரசே… உங்கள் பாதங்கள் பாடசாலையில் முதன்முறையாகப் படுகிறது என்று நினைக்கிறேன். பாடசாலை பாக்யம் செய்துவிட்டது’’ என்றாள் குரலில் கேலியாக.
‘’உன் பெயரென்ன?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.
‘’நட்சத்திரா…’’
‘’சூர்யனின் தமக்கையோ?’’
‘’அல்ல… நட்சத்திராவின் தமையன் சூர்யன்’’
‘’இரண்டும் ஒன்றுதானே?’’
‘’அல்ல… வித்தியாசம் இருக்கிறது.’’
‘’புரியவில்லையே…’’
‘’முதன்முறையாகப் பாடசாலைக்குள் வருபவர்களுக்குப் புரியாது. போகப் போகப் புரியும்.’’
‘’ம்… நன்றாகப் பேசுகிறாய். நீதான் இந்தப் பாடசாலையின் ஆசிரியரோ?’’
‘’அரசு நியமிக்கவில்லை… நானாக ஏற்றுக்கொண்டேன்.’’
‘’ஏன்?’’
‘’இங்கே ஆசிரியராகப் பணிபுரிந்தவர்களுக்குப் பல மாதங்களாக ஊதியம் அளிக்கப்படவில்லை. அவர்கள் வேறு பிழைப்புக்குப் போய்விட்டார்கள். பிள்ளைகளின் படிப்பு பாழகிவிடுமே என்று நானாக வந்து கற்றுத் தருகிறேன்’’ என்றாள் நட்சத்திரா.
சிங்கமுகன் முகம் திருப்பி நிலாமதி சந்திரனைப் பார்த்தார்.
‘’அ… அரசே… ஊதியம் எல்லாம் ஒழுங்காகத்தான் சென்று கொண்டிருக்கிறது…’’ என்று இழுத்தார் மந்திரி.
‘’பிறகு ஏன் இவள் பொய் சொல்கிறாள்? ஆசிரியர்கள் எங்கே?’’
‘’அ… அது… வந்து…’’
‘’கையும் மெய்யுமாக அகப்பட்ட பிறகு சமாளிப்பு எதற்கு மந்திரி? இதற்கான விளக்கத்தை அரண்மனைக்குச் சென்று வைத்துக்கொள்வோம்’’ என்றார் சிங்கமுகன்.
‘’ஆ… ஆகட்டும் மன்னா’’ என்று தலை கவிழ்ந்தார் மந்திரி.
மீண்டும் நட்சத்திரா பக்கம் திரும்பிய சிங்கமுகன், ‘’பெண்னே… உனது நற்செயலுக்கு எனது பாராட்டுகள். உள்ளே பார்வையிடலாமா?’’ என்று கேட்டார்.
‘’சற்று நேரம் பொறுங்கள் அரசே… பிள்ளைகளின் தேர்வு முடிந்துவிடும். பிறகு உள்ளே வரலாம்’’ என்றாள் நட்சத்திரா.
சூர்யன் பதற்றத்துடன் நட்சத்திரா தோளைப் பிடித்து… ‘’நட்சத்திரா… என்ன இது?’’ என்று அதட்டினான்.
அவனைக் கையமர்த்திய சிங்கமுகன், ‘’விடு சூர்யா… நம்மால் பிள்ளைகளின் தேர்வு பாதிக்க வேண்டாம். பாடசாலையின் வெளியே சுற்றிப் பார்ப்போம்’’ என்றார்.
‘’ஆகட்டும் அரசே’’ என்று வணங்கினான் சூர்யன்.
சிங்கமுகன் அந்தக் கட்டடத்தை மெல்ல சுற்றிவர ஆரம்பித்தார். ஏறிட்டு சுவர்களைப் பார்த்தார். முற்றிலும் வர்ணம் இழந்து ஆங்காங்கே விரிசல்களுடன் இருந்தன. அவரைத் தொடர்ந்து மந்திரி, சூர்யன், வீரர்கள் வந்தார்கள்.
‘’மந்திரி…’’
‘’அரசே…’’
‘’உமது மாளிகைக்கு எப்போது வர்ணம் அடித்தீர்கள்?’’
‘’பொ… பொங்கல் திருநாளுக்கு அரசே…’’
‘’அதற்கு முன்பு எப்போது அடித்தீர்கள்?’’
‘’அ… அதற்கு மு… முந்தைய பொங்கலுக்கு…’’
‘’இந்தக் கட்டடத்துக்கு எப்போது இறுதியாக வர்ணம் அடிக்கப்பட்டது?’’
‘’அ… அரசே…’’
‘’தெரியவில்லை அல்லவா?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.
நிலாமதி சந்திரன் தலை கவிழ்ந்தார்.
‘’எல்லாவற்றுக்கும் ஒரே பதில்… நெருப்புக்கோழி போல தலையைக் கவிழ்த்துக்கொள்வது’’ என்று கடுகடுத்தார் சிங்கமுகன்.
இப்போது அவர்கள் கட்டடத்தின் பின்பக்கம் வந்திருந்தார்கள். செடிகொடிகளும் புதருமாக மண்டியிருந்தது. சற்றுத் தூரத்தில் ஏரியின் சலசலப்பு. அதன் மறுபக்கம் அடர்த்தியான உயர்ந்த மரங்கள்.
‘’சூர்யா…’’ என்று அழைத்தார் சிங்கமுகன்.
‘’அரசே…’’ என்றபடி முன்னால் வந்தான் சூர்யன்.
‘’நீயும் இந்தப் பாடசாலையில்தான் படித்தாயா?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.
‘’இ… இல்லை அரசே… நம் மாளிகை வீதியில் இருந்த பாடசாலையில்’’ என்றான் சூர்யன்.
‘’இருந்த என்றால் என்ன பொருள்?’’
சூர்யன் தயக்கத்துடன் நிலாமதி சந்திரனைப் பார்த்தான்.
‘’அங்கே என்ன பார்வை? அவரிடம் கேட்டால் முழுமையான உண்மைகள் வராது என்றுதான் உன்னைக் கேட்கிறேன் சொல்’’ என்று அதட்டினார் சிங்கமுகன்.
‘’இதற்கு நான் பதில் சொல்லலாமா அரசே?’’
குரல் கேட்டு தலையைத் திருப்பிப் பார்த்தார் சிங்கமுகன். கையில் நீர்க் கோப்பையுடன் குழலன்.
‘’அடேய் பொடியா… நீ இங்கு என்ன செய்கிறாய்?’’ என்று கேட்டார்.
‘’நானும் இங்குதான் படிக்கிறேன் அரசே… இந்தாருங்கள்…’’ என்று நீர்க் கோப்பையை நீட்டினான்.
அதைப் பெற்றுக்கொண்ட சிங்கமுகன், ‘’நீ தேர்வு எழுதவில்லையா?’’ என்று கேட்டார்.
‘’முடித்துவிட்டேன் மன்னா’’ என்றான் குழலன்.
‘’ஓஹோ… சரி சொல். அந்தப் பாடசாலை என்ன ஆயிற்று?’’
‘’பிரபுக்களும் மந்திரியும் தளபதியும் இன்னும் பிற உயர் அதிகாரிகளும் வசிக்கும் பகுதி அல்லவா அது? பிள்ளைகளின் சத்தம் இடையூறாக இருக்கிறதாம். அதனால் அங்கிருந்து இங்கே மாற்றப்பட்டது’’ என்றான் குழலன்.
நிலாமதி சந்திரன் ரகசியமாக குழலனை முறைத்தார். அவன் சற்றும் அலட்டிக்கொள்ளாமல் சிங்கமுகனையே பார்த்தான்.
‘’ஓஹோ… பிள்ளைகளின் படிப்பு பிரபுக்களுக்கு இடைஞ்சல். அப்படியென்றால் அவர்களின் பிள்ளைகள்…’’
‘’அவர்கள் இங்கே படிக்கவில்லை அரசே… அடுத்து இருக்கும் வேங்கைபுரியில் ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் பாடசாலையில் படிக்கிறார்கள்’’ என்றான் குழலன்.
‘’அடடே… நாடு கடந்து கல்வி… திரைகடல் ஓடியும் திரவியும் தேடல்… இதையும் நான் அரண்மனைக்குச் சென்று கேட்டுக்கொள்கிறேன். நீ மேலே சொல்’’ என்றார் சிங்கமுகன்.
‘’என்ன சொல்வது மன்னா… பல ஆண்டுகளுக்கு முன்பு நம் நாடு முழுவதும் தொடக்கப் பாடசாலை… நடுநிலைப் பாடசாலை என்று இருந்தன. எதற்கு தனித் தனியாகப் பாடசாலை என்று சொல்லி ‘ஒரே பள்ளி ஒரே கல்வி’ என்று மாற்றப்பட்டது. அந்தப் பாடசாலைகள் எல்லாம் கேளிக்கை கூடங்களாக மாறிவிட்டன’’ என்றான் குழலன்.
‘’க்கும்… க்கும்…’’ என்று இருமினார் நிலாமதி சந்திரன்.
‘’என்ன மந்திரியாரே… நா வறள ஆரம்பித்துவிட்டதா? இந்தாருங்கள்…’’ என்று தன்னிடம் கொடுக்கப்பட்ட நீர்க் கோப்பையை நீட்டினார் சிங்கமுகன்.
அதனை வாங்கிய மந்திரி தலையை அண்ணாந்து உயர்த்தி, ‘கட கட’ என்று வாய்க்குள் சாய்த்துக்கொண்டார்.
‘’கட்டடத்தின் வெளியேயே இந்த லட்சணத்தில் இருக்கிறது மன்னா… எனில், உள்ளே எப்படி இருக்கும் என்று வந்து பார்க்கிறீர்களா?’’ என்று கேட்டான் குழலன்.
‘’அதற்குத்தானே வந்தேன். எல்லோரும் தேர்வு முடித்துவிட்டார்களா?’’
‘’முடிந்திருக்கும் அரசே…’’
‘’சரி… முன்னால் நட…’’ என்றபடி திரும்பி நடக்க ஆரம்பித்தார் சிங்கமுகன்.
அப்போது… ‘விர்ர்ர்ர்ர்’ எனப் பாய்ந்து வந்த அம்பு ஒன்று அவரது காதருகே உரசிச் சென்றது.
சூர்யன் உட்பட அனைவரும் பதறி திரும்பிப் பார்த்தார்கள். ஏரிக்கு மறுபக்கம் அடர்ந்த மரங்கள் பகுதியில் இருந்துதான் அம்பு வந்துள்ளது என்று புரிந்தது.
‘’அரசே… உடனே உள்ளே சென்றுவிடுங்கள். வீரர்களே… பத்திரமாக அழைத்துச் செல்லுங்கள்’’ என்று உத்தரவிட்ட சூர்யன், ‘’சூறா… சூறா…’’ என்று ஓங்கி குரல் கொடுத்தான்.
கட்டடத்தின் முன்பக்கம் இருந்த சூறாவளி மின்னலாக மாறிப் பாய்ந்து வந்தது. அதன் மீது காற்றாகத் தாவிய சூர்யன், ‘’போ…’’ என்றான்.
சூறாவளி ஏரியை நோக்கி புழுதியைக் கிளப்பி ஓடியது. சூர்யன் பார்வை கூர்மையானது. அந்தப் பக்கம் ஒரு மரத்தில் இருந்து கறுப்பு ஆடையில் ஒருவன் வில்லுடன் குதிப்பது தெரிந்தது.
‘’ம்… சூறா… இன்னும் வேகம்… இன்னும் வேகம்’’ என்று வயிற்றில் எத்தினான்.
‘’ஙி ஙி ஙீ… ங ங…’’ (அட இருப்பா… காலடி முழுக்க கொடிகளாக இருக்கிறது)
சூறாவளி சமாளித்து ஓடி ஏரியை நெருங்கிய நொடியில் சூர்யன் அதன் முதுகில் இருந்து அம்பாக ஏரிக்குள் பாய்ந்தான். மறுகரையை நோக்கி சுறாவாக நீந்த ஆரம்பித்தான்.
தொடரும்…