சிறுகதை வாசிப்பனுபவம்

சிறுகதை வாசிப்பனுபவம்

கட்டுரை:- தென்றல் சிவக்குமார்

வாசிப்பு என்பதற்கான நேர அளவு முதற்கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இருந்த எனக்கு, கூட்டங்களில் கலந்து கொள்வது, வாசகசாலை ஏற்படுத்தித் தந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு விமர்சனம் செய்வது என்பதெல்லாம் இன்னமும் நம்பவியலாத கனவு போலத்தான்.

எது இலக்கியம் என்பதை எது இலக்கியம் இல்லை என்பதைக் கொண்டு புரிந்துகொள்ள நான் விரும்புகிறேன். இலக்கியம் நம்பக்கூடியதாய் இருக்கும் அதே நேரத்தில், நமக்குள் ஒரு சலனத்தைத் தோற்றுவித்துச் செம்மைப் படுத்தவேண்டும்.

ஒரு சிறுகதை பெரியதொரு வாழ்க்கைத் தத்துவத்தையோ, அன்றாட வாழ்வில் நினைவில் கொள்ள வேண்டிய அரும்பொருளையோ எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், வாசிப்புக்கும் நமக்குமான உறவு எது வந்து கலந்தாலும் அதை உள்வாங்கிக் கொண்டு, அதுவும் தானாகவே மாறக்கூடிய கடலுக்கும், பிறவற்றுக்குமான உறவைப் போலானது.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல இல்லாவிட்டாலும், இலக்கியம் எம் மேல் பொழியும் அட்சதைத் துளிகளில் ஒன்றாய் நான் வாசித்த கதைகளில் இருந்து ஒரு சிறுகதையுடனான எனது அனுபவத்தை இங்கே பகிரலாம் என விழைகிறேன்.

“தளம்” காலாண்டிதழில் வெளியான சர்வோத்தமனின் “உதவி” சிறுகதை.

25ஜி பேருந்தின் எதிரெதிர்த் திசைப் பயணங்களின் ஊடாக நகரும் கதை. திரைப்படத்துறையில் ஈடுபாடு கொண்ட வேங்கடன், சலிப்பைத் தரும் ஒரு வேலையில் சேரப் பயணிக்கிறான். பேருந்தில் சந்திக்கும், ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும், தௌபீக்குடன் நட்பாகிறான். இதைத் தொடர்ந்து வேங்கடனின் மனப்போக்கு கதையாய் விரிகிறது.

உதவி என்ற சொல்லின் சமூக இலக்கிய அந்தஸ்தை வேங்கடனின் மனவெளி வழியே அமைதியாக உடைத்துத் தருகிறது இந்தச் சிறுகதை.

தௌபீக் வேங்கடனுக்கு உதவியதை, உதவலாமென்று நினைப்பதை, உதவுகிறேன் என்று சொல்வதை எல்லாம் “உங்களை போன்றவர்களுக்கு உதவுவதன் மூலமே எங்களுக்கான நற்பலன்களை பெற முடியும்” என்ற வாக்கியத்தோடே அணுகும் தௌபீக்கின் தந்தை அற்புதமான பாத்திரப் படைப்பு. தனக்கு உரிமையற்ற இடத்தில் கிடைத்த உதவியை, உரிமையான முன்பணம் பெற்றுத் திரும்பச் செலுத்தும் வேங்கடனின் முடிவு, “சுபம்” என்ற வகையில் வராமலிருக்கலாம்… ஆனால், “கொள்ளேன்” என்று சொல்வதன் உயர்வு தரும் மகிழ்ச்சி அலாதியானது.

கதை முழுக்க சிறு சிறு மாற்றங்கள் அற்புதமாகக் கையாளப்பட்டுள்ளன. உதாரணமாக, “வெயில் தூய்மையாக இருந்தது” என்று தெளிவான மனநிலையில் தொடங்கும் ஒரு நாள், தௌபீக், அவன் நண்பர்கள், தந்தை என்று கலவையான, ஒவ்வாத, நம்பிக்கையைக் குறைக்கும் சந்திப்புகளுக்குப் பின், “.வெக்கையாக இருந்தது” என்றாகிறது. பின்னர், பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு நிறைவோடு திரும்புகையில், “தென்ன மரம் காற்றில் பலமாக அசைந்தது.காற்று வேர்வையில் பட்டு உடல் ஜில்லென்று ஆனது.” இப்படி மாறுவது அபாரம்.

இன்னும் சிலாகிக்கத் தகுந்த பல நுணுக்கங்கள் கதையில் நிரம்பியுள்ளன. நண்பர்கள் அவசியம் வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கதையைப் பற்றிப் பேசுவதற்கும், இப்போது எழுதுவதற்கும் வாய்ப்பளித்த வாசகசாலைக்கு நன்றிகள். வாழ்தல் இனிது நண்பர்களே, வாசித்தலும்!