சிதறல்கள் – அத்தியாயம் – 2

சிதறல்கள் – அத்தியாயம் – 2

தொடர்:- தீபலக்ஷ்மி

இந்த மாதத்தில் மொத்தம் மூன்று படங்கள் தனியாளாகவே போய்ப் பார்த்தேன். மூன்றும் இந்திப் படங்கள். முதலாவது பின்க். அது தந்த தைரியத்தில் பார்த்த மற்ற இரண்டும் சொதப்பல் ரகம்

‘ஏ தில் ஹே முஷ்கில்’ பற்றிப் பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை. கமர்ஷியல் மசாலா. எதிர்பார்ப்பு பெரிதாக இல்லாததால் பெரிதாக ஏமாற்றமும் இல்லை. பாடல்களும் வசனங்களும் மனதில் நிற்கும்படியே இருந்தன.

இன்று பார்த்த ‘டியர் ஜிந்தகி’, பெருத்த ஏமாற்றம். இளையராஜா இசையில் இந்தி மூன்றாம்பிறை (சத்மா)யில் வந்த அற்புதமான ஏ ஜிந்தகி பாடல் அதன் ட்ரெயிலரில் பயன்படுத்தப் பட்டிருந்தது. ஸ்ரீதேவியை வைத்து சூப்பர் ஹிட் படமான ‘இங்கிலிஷ் விங்க்லிஷ்’ எடுத்த கௌரி ஷிண்டே தான் இயக்குனர்.

(இவரது கணவர் இயக்குனர் பால்கி, தீவிரமான இளையராஜா ரசிகர் – இவர் இயக்கிய பா, சீனிகம் முதலிய திரைப்படங்களில் ராஜா தான் இசை; அது மட்டுமல்ல ஐடியா விளம்பரத்துக்கு இளையராஜா இசையில் பல்லவி அனுபல்லவி என்ற மணிரத்னத்தின் கன்னடப் படத்தில் இடம்பெற்ற நகுவா நயனா என்ற அற்புதமான மெலடியின் மெட்டைத் தான் பயன்படுத்தி இருப்பார், என்பதெல்லாம் குறிப்பிடத்தக்கவை என்று நம்புகிறேன்.)

துள்ளல் அழகுக்குப் பெயர் போன ஆலியா பட்டும், ஐம்பது வயதைக் கடந்த ஷாருக்கானும் ஜோடி அல்லாத வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று எதிர்பார்ப்பு கியரை எகிற வைத்தது படத்தின் ப்ரோமோ.

திரைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளம் காமிராக் கலைஞராக ஆலியா. தொடர் காதல் (குழப்பியடிக்கும் அந்தச் சொல் பயன்படுத்தப்படாமல் ரொமாண்டிக் உறவுகள் என்ற பிரயோகம் வரவேற்கத்தக்கது) தோல்விகளால் அவ்வப் போது மன உளைச்சலுக்கு ஆளாகிறார். தனியாக மும்பையில் வசிக்கும் பெண், நண்பர்களுக்கு இனியவள், வேலையில் கெட்டிக்காரி, புத்திசாலி, உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தாத முதிர்ச்சியான பெண் பாத்திரத்துக்கு நச்சென்ற நடிப்பால் அநாயசமாய் உயிர் கொடுக்கிறார்.

நினைவில் நின்ற சில அழகிய அம்சங்கள் உண்டு.

ஊறுகாய் பாட்டிலில் காதலனின் பெயரைக் கண்டு ஆலியா பரவசமடைவது, இறுதியில் ஆலியா புறப்பட்டவுடன் ஷாருக் நாற்காலியில் அமரும் போது தடுமாறுவது…இசைக்கலைஞனிடம் மனம் பறிகொடுத்தாலும் ஒரு கட்டத்தில் போரடித்துப் போய் இசையை நிறுத்தச் சொல்வது…இப்படி. ஆனாலும் நட்புக்கும் உறவுகளுக்கும் பெரிதும் முக்கியத்துவம் இருக்கக்கூடிய கதையில் ஆழமாய் மனதைத் தொடும் வகையில் அதற்கான இடம் அமையவில்லை! ரொம்பவும் எதிர்பார்த்த ஷாருக்கான் பாத்திரம் அழுத்தமாக இல்லை!

ஆனால் இது எல்லாவற்றையும் விட உறுத்துகிற விஷயம் என்னவென்றால், மனநலம், அது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் என்று வரவேற்கலாமென்றால் கூட, ஏன் பட இயக்குனர்கள் எப்போதும் பெரும்பணக்காரர்களாகவே தங்கள் நாயகர்களைக் காட்சிப்படுத்துகிறார்கள்?

இன்றைய காலகட்டத்தில் எண்ணற்ற இளைஞர்கள் (ஆண்களும் பெண்களும்) மீடியாத்துறையில் கண்கள் மின்னப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படத்தின் நாயகி சந்திக்கும் பிரச்னைகள் எல்லாம் அவர்களுக்கும் இருக்கக் கூடும். ஆனால் அவர்களைத் தேர்ந்தெடுக்காமல் வெளிநாட்டில் படிப்பு, மாளிகை போன்ற வீடு, மேல்தட்டு நாகரிகம் கொண்ட குடும்ப அமைப்பு என்றே காட்சிப்படுத்தப்படும் படங்களின் மீது எரிச்சல் தான் வருகிறது. பெருவாரியான மக்கள் மீது அபிமானமில்லாத படைப்பாகவே அது வெளிப்படுகையில் அங்கே கலை அல்ல, சமூகத்தின் மீதான அலட்சியமே மேலோங்குகிறது.

இதே தான் நோட்டுப் பிரச்னையிலும் நடக்கிறது. ஒரு நாள் கூட ஏடிஎம் க்யூவில் நிற்காதவர்கள், ஆண்ட்ராய்டு ஃபோன் முதல் அண்ட்ராயர் வரை ஆஃபர் ஆஃபர் என்று பறந்தடித்து ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் எல்லாம் டிமானடைசேஷன் குறித்துச் சாங்கோ பாங்கமாகக் கருத்து பகிர்ந்து கொண்டே இருப்பது தாங்க முடியாத அபத்தமாகிக் கொண்டிருக்கிறது.

என்ன கடுப்பென்றால், இந்த இக்கட்டான நேரத்திலும் கூட

உண்மையில் அக்கறையோடு பல விஷயங்களை ஆராய்ந்து ஒரு கட்டுரை பகிரப்பட்டால் அதைப் படிக்க எவருக்கும் வணங்குவதில்லை. வெற்று உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பகிரப்படும் ஜெய்ஹிந்த் மிமிக்களைத் திடீர் என்று பொங்கிப் பிரவகிக்கும் நாட்டுப் பற்றோடு பகிர்ந்து தள்ளுவதைப் பார்த்தால்….

முதலில் வாட்சப் க்ரூப்களைத் தடை செய்ய வேண்டும்.

அத்தியாயம் – 1