சிதறல்கள் – அத்தியாயம் – 3

சிதறல்கள் – அத்தியாயம் – 2

தொடர்:- தீபலக்ஷ்மி

”போர்வெல் போட்டும் நீர் வராததால் அதிர்ச்சியில் விவசாயி மயங்கி விழுந்து மரணம்.” – இன்றைய செய்தி.
“தமிழக விவசாயிகள் வறட்சி காரணமாய் தற்கொலை செய்து கொள்ளவில்லை. சொந்தப் பிர்ச்சினைகளாலேயே இறந்துள்ளனர் “– தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் பிரமாணம்
“மாடுகளுக்கு ஆதார் கார்டு. ஆதார் கார்டில்லாத குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க அரசு மறுப்பு”
”உலகம் பரந்து கிடக்க வேண்டாம். உயிர் வாழ்வதற்குப் போதிய வசதியுடன் எங்காவது ஒரு மூலையில் குறுகிக் கிடந்தாலே போதும்!” – வாழ்க்கை அழைக்கிறது, ஜெயகாந்தன்.
நம் நாடு பரந்து கிடக்கிறதோ குறுகிக் கிடக்கிறதோ, ஆனால் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாகிக் கொண்டே வருகிறதோ என்று தோன்றுகிறது.

எழுத்து

மீண்டும் வாசகசாலை வலைத்தளம் இயங்க ஆரம்பித்து விட்டது, எழுதுங்கள் என்று கேட்ட போது தோன்றியது: எழுத்து என்றால் என்ன? நான் ஏன் எழுதுகிறேன்? படிப்பவர்கள் அறியாத ஏதாவதைச் சொல்லும் தகுதி இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக வலைப்பூவில் கிறுக்க ஆரம்பித்த போது குழந்தை பிறந்து ஓராண்டு ஆகி இருந்தது. குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக வீட்டிலேயே இருந்த எனக்கு அது ஒரு அற்புதமான சாளரமாக அமைந்தது. ’சூப்பர் பதிவு தோழி’ என்ற பின்னூட்டங்கள் கொடுத்த ஊக்கத்தினால் மட்டுமல்ல. வேறெங்கும் போலவே பதிவுலகத்திலும் நீக்கமற நிறைந்து புரையோடிப் போயிருந்த பெண்வெறுப்பு, சாதி உணர்வு, எல்லாம் கண்டு கொள்ளச் சம்பவங்கள் அமைந்து எந்த அங்கீகாரத்தையும் நிராகரிப்பையும் நிதானத்துடன் அணுகும் மனோபாவம் இயற்கையில் இருந்ததோடு ஆழமாக வலுப்பெற்றது. ஆனாலும் எழுத்து பிடித்திருந்ததற்குக் காரணம், எழுத்தின் மூலம் நிகழும் வெளிப்பாடு.
பேசும் போது இல்லாத நிதானம், எழுதும் போது இல்லாமல் போகாது. இதுவரை எழுதிய எதற்குமே (கடிதங்கள் உட்பட) ”அட…மொக்கை மாதிரி எழுதி இருக்கோம்…இன்னும் நல்லா எழுதி இருக்கலாம்!” என்று வெட்கப்பட்டிருக்கிறேனே தவிர, ”அய்யோ, இதை எழுதி இருக்க வேண்டாமே” என்று வருத்தம் கொண்டதில்லை. கோபத்தில் பேசி விட்டு நூறு ’சாரி’ கேட்பவளுக்கு எழுத்து இதை விட என்ன பெரும்பயன் கொடுத்து விட முடியும்? அதனாலேயே எழுதுகிறேன்.

சிறுவயதில் அண்ணனின் கட்டுரைகள் வீட்டில் ஏகப் பிரபலம். குறும்பு புத்தி மிக்கவனான அவன் பள்ளிப் பருவத்தில் எழுதிய கட்டுரைகளில் நினைவிலிருப்பவற்றைப் பகிர நினைக்கிறேன்:
சிறுசேமிப்பு பற்றிய கட்டுரையில் பாடத்திலோ ஆசிரியர் வழக்கமாக எதிர்பார்க்கும்விஷயங்களோ ஒன்று கூட இல்லை.
”சிறுவர்கள் உண்டியலில் துட்டு சேர்க்கலாம்; பெரியவர்கள் வங்கியிலேயே வட்டி சேர்க்கலாம்”
”என் பக்கத்து விட்டுத் தாத்தா ஐந்து வயதில் உண்டியலில் ஐந்து பைசா சேர்க்கத் தொடங்கினார். இப்போது அது வங்கியில் போட்டு ஐந்து லட்சமானது என்று கேள்விப்பட்ட இன்ப அதிர்ச்சியில் கோமாவில் கிடக்கிறார்”
”மானமிருந்து ரோஷமிருந்து என்னபயன்? உண்டு
பயன் பணமிருந் தால்” என்று திருவள்ளுவரே சொல்லி இருக்கிறார்.
இந்த ரீதியில் சென்ற கட்டுரையை ஆசிரியர் படித்துச் சிரித்து பத்துக்கு ஆறு மதிப்பெண்களும் கொடுத்திருந்தார். அவன் எழுத்து என்பது அவனுடையது தான். தலை மீது வீழ்ந்த அடையாள ஒளிவட்டத்தின் அழுத்தம் எல்லாருக்கும் சாதகமாக அமைந்து விடுவதில்லை.
ஆனால் யாராயினும் எழுதும் எழுத்து மீது அன்பும் பொறுப்புணர்வும் வேண்டும். கோபத்தில் வீசும் வார்த்தைகளே நிதானமற்று இருந்தாலும், அள்ள வழியில்லாது போனாலும் அவை காற்றில் கரைந்து விடுவதில்லை.
எழுத்தை ஆள்பவர்கள் என்ன எழுதினாலும், எத்தகைய கருத்தாயினும் தொனியிலும் நடையிலும் நிதானமிழக்கலாகாது.
பெரும் இலக்கியவாதிகள் எழுதிய கடிதங்கள் கூட வரலாற்றுச் சிறப்பும் இலக்கியத்தில் உகந்த இடமும் பெற்றிருப்பது அவர்கள் அதை யாரோ ஒருவர் படிக்கும் கடிதம் என்றாலும் அதில் தங்கள் எழுத்தாளுமையினின்று சற்றும் வேறுபடாதவாறு எழுதியதால் தான்.
சர்ச்சை, கருத்து முரண் எல்லாம் இருந்தாலும் எழுத்தை விடத் தங்கள் ஆளுமையைப் பெரிதாக நினைக்கத் துவங்கினால் அங்கிருந்து ஆரம்பிக்கிறது அவர்களது ஆன்ம வீழ்ச்சி. எழுத்து நிற்கும். எல்லா எழுத்தும். வேறென்ன சொல்ல?
****
சில நாட்களுக்கு முன் முகநூலில் ஒரு பதிவை ஒட்டி மயிர் பிளக்கும் விவாதங்கள் நடந்தன. இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு அகற்ற முடியாமல் அப்பிக் கிடக்கப் போகிறதோ என்று சலித்துக் கொள்ளும் பெண்வெறுப்பு, அடக்கி வைத்துப் புளித்த ஏப்பமாய் வெளிப்பட்ட ஏதோ ஒரு பதிவு. சாரமென்று ஏதும் அதில் இல்லாவிட்டாலும் அதன் தொனி…35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் மனதுக்கென்று ஒரு வாழ்க்கை வாழ முகநூலில் திருட்டுத் தனமாகச் சாட்டிங் மற்றும் “கள்ளக் காதல்” செய்கிறார்களாம்.
சீண்டுவதற்காகவே எழுதப்பட்டிருந்த அந்தப் பதிவுக்கு எதிர்பார்த்தபடியே பலவிதங்களில் பலரும் பதிலடி கொடுத்திருந்தனர். ஆனால் பெண்கள் பொதுவாகப் பேசத் தயங்குவார்களோ என்ற ரீதியில் இன்னும் ஆண்கள் திருமணத்துக்குப் பின்னான காதல் உறவு, பலபேர்க்காதல் ஆகியவற்றுக்கு ஏகபோக உரிமை கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது என்பதற்கேற்ப வெகு சில பதிலடிகளே ’பொளேர்’ என்று செவிட்டில் அறைவது போலிருந்தன.
காரணம் நாம் கருத்தளவிலேயே இவ்வளவு முட்டிக் கொண்டிருக்கும் போது நடைமுறையில் பெண் சமத்துவம் அதலபாதாளத்தில் இருக்கிறது என்பது தான் கசக்கும் உண்மை.
தோழிகளின் பெண்ணியப் புரட்சிப் பதிவுகளை ஆரவாரமாக வரவேற்கும் ஆண்களின் இணையர்கள் பலரும் முகநூலில் பூப்படங்களும், பிள்ளைப் படங்களும் வைத்துப் பம்மிக் கொண்டிருப்பது இங்கே தொண்ணூறு சதவீத எதார்த்தம். ஆனால் ’பாலிஅமாரி’ (polyamory) என்கிற பலபேர்க்காதல் என்பது அவ்வளவு தூரம் மனிதநாகரிகத்திலும் இயல்பிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது தானா?
காதல் வயப்படுவது காதல் கொள்வது உணர்வு சம்பந்தப்பட்டது. உறவு என்பதே தொந்தரவான விஷயம் தான். காதலிக்கும் நபருடன் உறவு ஏற்படுத்திக் கொள்ளும் போது தனிப்பட்ட நம்பிக்கைகளும் அபிலாஷைகளும் சிக்கல்களுக்கும் கேள்விகளுக்கும் உட்படுத்தப்படுகின்றன. பொய்யும் சூழ்ச்சிகளும் கையாண்டாவது அங்கே உறவைக் காப்பாற்றுவது நியதியாகும் போது அங்கே மீண்டும் தனிப்பட்ட ஆளுமைகளின் ஆன்மா வீழ்ச்சி அடைகிறது. எந்த நியாயமும் நேசிப்பவர்களின் நம்பிக்கை மீதான துரோகத்தை நிகழ்த்துவதன் முன் பொடிப்பொடியாகி விடுகிறது.
மேலும், பெண்வெறுப்பு நீக்கமற நிறைந்திருக்கும் இந்த யுகத்தில், உலகெங்கிலும் குறைந்தபட்ச சமத்துவத்துக்கே பெண்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் அறிவுக்கு மிக உகந்தாலும் நடைமுறையில் யோசிக்கும் போது, choose your battles wisely, you can’t fight them all! என்கிற சொற்றொடர் தான் நினைவுக்கு வருகிறது.
”உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து”

அத்தியாயம் – 2