சிதறல்கள் – 3

சிதறல்கள்

தொடர்: தீபலக்ஷ்மி
அத்தியாயம் – 3
உறங்குவது போலும்…

கடந்த இரு நாட்களாக நம் எல்லோருடைய சிந்தனையையும் ஒட்டு மொத்தமாக ஆக்கிரமித்திருப்பது ஒரு மரணம். தமிழகத்தின் சக்திவாய்ந்த அதிகாரத்தில் இருந்த ஒரு நபரின் மரணம். ஒரு தலைவராக, அரசியல்வாதியாக அவரைக் குறித்து ஏராளமான விமர்சனங்கள் இருந்தாலும், சென்ற ஆண்டு இதே நேரம், இதே நாள், செம்பரம்பாக்கம் ஏரி முறைதவறி திறந்து விடப்பட்டு வெள்ளத்தில் மூழ்கி இருந்த அதே சென்னை மக்கள், இன்று தங்களை ஆளும் அதிகாரத்தில் இருந்த தலைவியின் உயிர் பிரிந்தமைக்காக அதைக் காட்டிலும் பெரிய சோகத்தில் மூழ்கியதைக் கண்டு வேதனை மிகுந்தது.

தனியொருத்தியாய், ஆணாதிக்கம் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழ்த் திரையுலகில் தாரகையாய் வலம் வந்து, அரசியல் வாழ்வை எட்டிப் பிடித்து அதிலும் வியத்தகு உயரம் கண்ட அந்த வைராக்கியம் மிகுந்த நெஞ்சத்துக்கு வணக்கங்கள்.

இறந்து போன அவரது உடலைச் சுற்றி நடந்த நாடகங்களும், நிலவிய குழப்பங்களும் சொல்லொணா வேதனையையும் ஊமைக் கோபத்தையும் கொண்டு வந்தன. ஜெயகாந்தன் எழுதிய ’உறங்குவது போலும்’ என்ற சிறுகதை தொடர்ச்சியாக நினைவில் எழுந்து கொண்டே இருக்கிறது.

கதை இது தான்: ஒரு மனிதன், அழகும், அதிர்ஷ்டமும், செல்வச் செழிப்பும், அன்பான மனைவி குழந்தையுடன் ஊரே பொறாமை கொள்ளும் வாழ்வு வாழ்ந்து

வரும் இளைஞனான அவன் திடீரென்று இறந்து விடுவான். அவனைச் சுடுகாட்டில் கொண்டு எரித்து விட்டு ஊரும் உறவும் திரும்பி வந்து அழுது கொண்டிருக்கும். ஆனால் அவன் உண்மையில் இறந்திருக்க மாட்டான்! இறந்ததாக நம்பப்பட்ட அவன் எரிதழலின் சூட்டிலோ அல்லது வேறெந்த காரணத்தாலோ உயிரூட்டப்பட்டு இடுகாட்டில் பாதி உடல் எரிந்த நிலையில் பெரும் பிரயத்தனத்துக்கிடையில் தனக்கு நேர்ந்து கொண்டிருப்பதை உணர்வான்!

பெரும் விபரீதம் நிகழ இருந்ததைப் புரிந்து கொண்ட அவன், மறுபிறப்பு கிடைக்கப் பெற்ற மகிழ்ச்சியுடன், தன்னை உற்றாரும் உறவினரும் கொண்டாடப் போவதை எண்ணி உள்ளூர மகிழ்ந்தபடி ஊருக்குள் நுழைவான்.

ஆனால்…

அவன் எதிர்பார்ப்பைச் சுக்குநூறாக உடைத்தெறியும்படி இருக்கும் வரவேற்பு. அவன் சாகவில்லை என்பதை யாருமே நம்பமாட்டார்கள். ஏதோ பேயோ பிசாசோ கொடும் நோயுற்றவனோ என்று நினைத்து அருவருத்து ஒதுக்குவார்கள். வீட்டுக்குப் போனால் அவன் பிரிவினால் அழுது கொண்டிருந்த மனைவி கூட தீ பாதி தின்ற அவன் கோரமான உருவத்தைக் காணவொட்டாமல் அலறி முகத்தைத் திருப்பிக் கொள்ளுவாள். இறுதியில் சுடுகாட்டுக்குப் போன பிணம் ஊருக்குள் வந்தால் ஊருக்கே பெருங்கேடு என்று அடித்து விரட்டிவிடுவார்கள்.

எல்லாமே பொய்யென்றுணர்ந்து திக்பிரமை பிடித்தது போல் அவன் திரும்பி நடக்கையில் அவன் வளர்த்த நாய் மட்டும் மிகுந்த வாஞ்சையுடன் அவனைக் கண்டு கொண்டு அவன் பின் நிழலாய் ஒட்டிக் கொண்டு செல்வதாய் முடியும் அந்தக் கதை.

இதே போல் இறந்ததாக நம்ப்பபடும் ஒவ்வொருவருக்கும் நேர்ந்தால்? மனிதம் மகத்தானது என்று ஒவ்வொரு மரணமும் நினைவூட்டுகிறது; வாழும் வரையில் மறதியும் அதை மறைத்துக் கொண்டே தான் இருக்கிறது.

****

மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளுக்கு எப்படியோ வகுத்தல் கணக்குகளின் மீது ஆர்வம் வரச்செய்தாகி விட்டது. இப்படித்தான் முன்பு பெருக்கலுக்கும் பாடுபட்டது. புரியும் வரை எட்டிக்காயாய்க் கசப்பது கணக்கு மட்டுமல்ல, சொல்லித் தரும் அம்மாவும் தான்! ஆதலால் எனக்கு இப்போது இரட்டிப்பு ஆசுவாசம். இந்த டிஜிட்டல் யுகத்தில் லேசாக பட்டன்களைத் தட்டினாலே விடை தெரிந்து விடும் கால்குலேட்டர் காலத்தில் இத்தனை கடினமான வழிமுறைகளைப் பின்பற்றி இந்தக் கணக்குகளைச் சொல்லித் தரத்தான் வேண்டுமா என்று சலிப்பு வந்தது. ஆனால் அடிப்படை நுணுக்கங்கள் தெரியாமல் கணிதத்தில் அடுத்தபடிக்குச் செல்வது எப்படி?

இதே காரணத்தினால் தான் முகநூலில் பெயருக்கு மட்டும் இருந்து கொண்டு அதிகம் அதில் நேரம் செலவழிக்காமல் இருக்கும் எனது சில தோழிகளின் மீது எப்போதுமே ஒரு பெருமிதம் உண்டெனக்கு. முகநூலில் அவர்கள் இயங்காத காரணத்தாலேயே பரஸ்பரம் நலம் விசாரிக்க நேரில் அவ்வப்போது சந்திப்புகளையும் தொலைபேசி உரையாடல்களையும் வழக்கமாக்கி வைத்திருக்கிறோம். ஒரு முகநூல் லைக்கும் கமெண்டுக்கும் ஆகும் நேரத்தையும் முயற்சியையும் விட இதற்கெல்லாம் அதிகம் தேவைப்படும் தான். ஆனால், உண்மையான நெருக்கம் குறையாமல் இருப்பதும் இதனால் தான். அலைபேசியில் சேமித்திருந்தாலும் அவசரத்துக்கு லேண்ட் லைனைப் பயன்படுத்தி அழைக்கும் எண்கள் நினைவில் நிற்பது போல்…

சேமிக்கும் நேரத்தை எல்லாம் எதற்குச் செலவழிக்கிறோம்?