நேர்காணல்கள்

”கில்நாஸ்டியாவாசியின் புனைவு மொழி” – சிவசங்கர் எஸ்.ஜேவுடனான நேர்காணல்.

நேர்கண்டவர் : கிருஷ்ணமூர்த்தி

சிவசங்கர் எஸ்.ஜே நாகர்கோவிலில் பிறந்தவர். மருந்தகத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தீராத் தேடலின் விளைவாய் வாசிப்பும் எழுத்தும் வாய்க்கப்பெற்றவர். “கடந்தைக் கூடும் கயாஸ் தியரியும்”, “சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை” ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளை எழுதியிருக்கிறார்.

சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை சிறுகதைத் தொகுப்பு 2017 ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்தில் வெளியானது. 21 கதைகளை உள்ளடக்கியது இத்தொகுப்பு. இத்தொகுப்பின் கதைகள் புனைவுத் தன்மையின் பன்மைத்துவத்தை சோதனை முயற்சியாக கையாண்டிருக்கின்றன. வெளிப்புறத்தில் சோதனை எனும் வார்த்தையில் கூற முடிந்தாலும் உள்ளீடாக இருக்கும் படிமங்கள் பெருந் தர்க்கத்திற்கு வாசகனை உள்ளிழுப்பவை. அப்படியான ஒரு படிமமே கில்நாஸ்டியாவாசி. நில்காஸ்டியா எனும் ஆங்கில சொல்லிற்கான அர்த்தம் சாதிகளற்ற உலகு. அதையே கில்நாஸ்டியாவாக தனது புனைவில் கதையாக்கியிருக்கிறார். அதன் தன்மை அனைத்து கதைகளிலும் வியாபித்து இருப்பதால் அதே தலைப்புடன் அவருடைய நேர்காணலை வெளியிட விரும்புகிறேன்.

இந்நூல் குறித்து சிவசங்கர் எஸ்.ஜேவுடனான நேர்காணல் இலக்கியத்தின் நவீன பாதையை அறிமுகப்படுத்துகிறது.

  • சிறுகதைகள் சார்ந்த உங்களது புனைவுலகம் உருவானதன் பின்னணி பற்றி சொல்ல முடியுமா ?

எல்லோரையும் போலவே கவிதைகளில் ஆரம்பித்ததுதான் எனது புனைவுலகமும். ஒரு கவிதை தொகுப்பைக்கூட இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் தொகுத்தேன். சூழலின் பெருக்கம், சோம்பேறித்தனம் எல்லாமாய் கவிதைத் தொகுப்பை வெளியிடவே இல்லை. பிறகு உரைநடைக்கு ஷிப்ட் ஆனபோது உரைநடையின் சவால் என்னை வெகுவாக ஈர்த்தது, கூடவே ஏற்கனவே எழுதப்பட்ட பிரதிகள் மீதான விமர்சனம்….. நான் சிறுகதை எழுத துவங்கினேன்.

  • சமகாலச் சிறுகதைகள் குறித்த பார்வை…

கதைவளம் இருப்பவர்களிடம் மொழிவளம் இல்லை, மொழிவளம் கொண்டவர்களிடம் கதைகள் இல்லை. இரண்டும் இருப்பவர்களிடம் தத்துவார்த்த தனித்துவமோ, பரிச்சயமோ இல்லை. இருப்பவர்கள் இப்போது எழுதுவதில்லை. எனினும் பாலசுப்ரமணியம் பொன்ராஜ், கார்த்திகை பாண்டியன், யதார்த்தன், செந்தூரன், எல்.ஜே.வயலெட் போன்றவர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். விமர்சனங்கள் இருந்தபோதும்…

  • சிறுகதைகளில் உங்களுக்கான முன்னோடியைப் பற்றி பகிர முடியுமா?

பிரேம் ரமேஷ்-ஐ குறிப்பிட வேண்டும். எம்.டி.எம் மற்றொருவர். விரித்து சொல்ல வேண்டுமென்றால் முதல் சிறுகதையாளர்களான வ.வே.சு ஐயர் மற்றும் பாரதியிலிருந்து இன்று எழுதும் தூயன் வரை முன்னோடிகள்தான்.

  • பின்-தலித்தியம் எனும் இலக்கிய வகைமையை அறிமுகப்படுத்துகிறீர்கள். அதன் சமகாலத் தேவையை உணர்த்த முடியுமா

தலித்திலக்கியம் துவக்கத்தில் புதிய மாற்று மொழியை, மாற்று குரலை முன்வைத்தது என்பதில் மறுப்பில்லை. ஆனால் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நாம் கடந்து வந்துள்ள அரசியல், தத்துவ, விஞ்ஞான மாற்றங்களை அது சரியாக உள்வாங்கியிருக்கிறதா என்பதில் தொடங்கியது பின் தலித்தியம். ஆஃப்ரோ-அமெரிக்கன் இலக்கியம் தொடக்க காலங்களில் எப்படி தங்களை முன்வைத்ததோ அதே நிலையில் பெரும்பாலான தலித் படைப்புகள் மொழி உள்ளடக்கக் கூறுகளில் இப்போதும் தொழில் படுகிறது. தங்கள் பண்பாட்டை, கலையை மற்றவர்களை பின்பற்ற செய்த கருப்பு இலக்கியத்தின் கலையின் தன்மையை உள்வாங்க வலியுறுத்துவது பின் தலித்தியம். பொதுவெளியின் இடங்களில் தங்களை விரித்துக் கொள்ள கழிவிரக்க மற்றும் வெற்றுக் கோப முன்வைப்புகளை தவிர்ப்பது பின் தலித்தியம். விரிவாக இன்னொரு கட்டுரையில் சொல்ல வேண்டிய விஷயம்.

  • பிற கலைகளிலும் பின்-தலித்தியத்தின் தாக்கம் உள்ளதா ?

நவீனத்தின், பின்-நவீனத்தின் அனேக கோட்பாடுகளை முதலில் உள்வாங்கியது ஓவியம். பின் தலித்தியம் ஓவியத்தில் இயல்பாக செயல்படுகிறது. பெயர் குறிப்பிட விரும்பாத தலித் ஓவியர்கள் கலை ஓர்மையோடு, அரசியலோடு செயல்படுகிறார்கள். சினிமாவில் பின் தலித்தியம் உருவாகி விட்டது. ஒருவேளை அதன் ஜனரஞ்சகத் தன்மை அல்லது பொது தன்மை சார்ந்ததாய் இருக்கலாம். இசை மற்றொமொரு கலை. அதிக சாத்தியப்பாடுகள் இசையில் நிகழ்ந்துள்ளன.

நம் சூழல், விளையாட்டை விட விளையாடுபவர்களை, அவர்கள் பின்னணியை யோசிக்கிறது.

  • உங்களது சிறுகதைகளில் கிறித்துவத்தின் நிழல் அதிகமாக கவிழ்கிறது. அதன் சித்தாந்த பின்புலத்தை அறிய முடியுமா?

விவிலியம், அதன் மொழி எனக்கு மிக அணுக்கமானது. பழைய மொழிபெயர்ப்பு பைபிள் ஐ அதன் இலக்கியத் தன்மைக்காகவே படிக்கிறேன். சில வேளைகளில், மொழி வறட்சி ஏற்படும் தருணங்களில் நான் சேர்வது விவிலியத்திடமே. சித்தாந்த ரீதியாக பல விமர்சனங்கள் உண்டு. அவற்றை கதைகளாக மாற்ற முயற்சித்திருக்கிறேன். பால் சக்காரியா, ஷோபா சக்தி, ஃபிரான்சிஸ் கிருபா இவர்களிடமிருந்து நான் வேறுபடும் புள்ளிகளும் உண்டு. அவற்றை வாசிப்பவர்களே சொல்ல முடியும். என் அம்மா ஒரு ‘‘நல்ல’’ கிறிஸ்தவர் என்பதும் ஒரு காரணம்.

  • குறுங்கதை வடிவத்தை சிறுகதைகளின் நவீன வடிவம் என கொள்ளலாமா ?

அது புதிய விஷயமே இல்லை. அளவு ஒரு அளவுகோல் இல்லை. மைக்ரோ என்பது நுண்ணியது, நுட்பமானது. Sudden fiction, Short fiction, Flash fiction, Speculative fiction, Micro fiction எல்லாவற்றிற்கும் ஆழமான பொருள் உண்டு. குமுதம் ஒரு பக்க கதைகளுக்கும் நுண் கதைகளுக்கும் வேறுபாடுகள் உண்டுதானே….

மிகப்பழைய வடிவம் இது. நவீன வடிவம் இது மட்டுமே என அறுதியிட முடியாது. ஒரு வகை அவ்வளவே.

  • “கடைசியில் ஆமையே வெல்லும்” மற்றும் “பறவைகளுக்குமானது வீடு” ஆகிய கதைகளில் folk tale ஐ மீட்டுருவாக்கம் செய்திருக்கிறீர்கள். மேலும் தங்களுடைய கதைகளின் கதைசொல்லிகள் பல தருணங்களில் folk tale தன்மைக்கு மாறுகிறார்கள். இந்த மாதிரியான கதை வடிவத்தையும், ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளை மீட்டுருவாக்கம் செய்வதன் தேவையையும் பகிர முடியுமா ?

நான் தேர்ந்தெடுக்கும் உள்ளடக்கததோடு தொடர்புடைய சில கதைகள் எனக்கு ஞாபகம் வரும்போது அதை என் கதைகளோடு இணைக்கிறேன். எழுதுபவனாக நான் செய்வது இதை மட்டும்தான். சில கதைகள் மறு எழுத்தாக்கம் போல் தென்படும். எனது நோக்கம் அதுவல்ல. நான் சொல்லும் கதைகளுக்கு அது ஒரு SUBTEXT அவ்வளவே. FOLK, AESOP, FAIRY TALE, PARABLE, ANECDOTES, LEGEND, MYTH எதுவானாலும் நான் என் கதைகளை அதோடு இணைக்கிறேன். எழுத்தாளனின் வேலை ASSOCIATE செய்வது என்பது எனது சமீப நம்பிக்கைகளில் ஒன்று. உண்மையில் பின் தலித்திய கோட்பாட்டை கதையாக மாற்ற நான் செய்த முயற்சி ஆமையும் முயலும் கதை. இட ஒதுக்கீடு, உளவியல் ஒடுக்கம் எல்லாவற்றையும் சொல்ல எனக்கு கிடைத்த படிமம் ஆமை. இயல்பாக ஈசாப் கதை, எல்லோருக்கும் தெரிந்த கதையில் .பின் தலித்தியம் எளிதாக இணைந்துவிட்டது. பறவைகளுக்குமானது வீடு கதை கனவை யதார்த்தமாகவும், யதார்த்தத்தை கனவாகவும் எழுதி பார்த்தது. அதில் folk elements இருக்கலாம்…

  • “பிராய்டின் நாட்குறிப்புக்கள்”, “சித்தார்த்தன்”, “சொர்க்கத்தின் எச்சில்” ஆகிய கதைகள் புராணீக அல்லது தொன்மக் கதைகளுக்கான மாற்று அர்த்தங்களை கொடுக்க முனைகிறது. கண்டறியப்பட்ட அர்த்தங்கள் காலம் பொருட்டு மாறக் கூடியதா அல்லது காலத்திற்குமானதா?

பிராய்டின் நாட்குறிப்புகள் எனக்கும் பிடித்த கதை. ஒன்றரை பக்க கதையில் Free masons, Greek mythology, Genesis, Psychology, Freud, Julia kristova, Laccan எல்லாவற்றையும் ஒன்றாக்கி புனைந்தது.

ப்ரக்ஞாபூர்வமாக மாற்று அர்த்தங்கள் கொடுக்க நினைப்பதில்லை. அதுவாக உருவாகுவதுதான். ஃபிராய்டின் டைரி குறிப்புகள் எதுவும் வெளியானதாக தெரியவில்லை. அதை கற்பனை செய்த போது உதித்த கதை. உள்ளார்ந்த அரசியல் இப்படி மாற்றி விட்டிருக்கலாம். மற்றபடி அதன் செய்திகளும் தகவல்களும். உண்மையானவை. சித்தார்த்தன் லௌகீகம் பற்றிய சாதரணகதைதான். எல்லோருக்கும் தெரிந்த தொன்மம் என்றே யசோதையை தேர்ந்தெடுத்தேன். நிஜத்தில் புத்தரின் வாழ்வில் அப்படி நடக்கவில்லை. யசோதாவை அவர் உதறிவிட்டு செல்லவில்லை. முரண்பாடுகள் இன்றி இயங்கியல் இல்லை – இதுதான் சொர்கத்தின் எச்சில் கதையின் ஒரு வரி. மற்றபடி எல்லாம் புனைவு. அர்த்தங்கள் மாறிக்கொண்டே இருப்பவை. ஒரே புனைவுக்குள் பல்வேறு சாத்தியங்களை சொல்ல முயல்வதே எனது முயற்சி.

  • உங்களது கதாபாத்திரங்கள் தங்களுக்குள்ளேயே சித்தாந்த ரீதியாக ஒடுங்குபவர்களாக இருக்கிறார்கள். இந்தத் தன்மையை சாதியக் கட்டுமானத்திலிருந்து எடுக்கிறீர்களா?

எனது முந்தைய தொகுப்பின் தன்மை என்பது நம்பிக்கை vs அறிவியல் என்பதாக அமைந்தது. இந்த தொகுப்பின் கதைகளை இப்போது யோசிக்கையில் கலா ரீதியாக, சித்தாந்த ரீதியாக ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கதைகளாக தெரிகிறது. அன்றாடம் என் எல்லா அடையாளங்களையும் மீறி என் சாதி அடையாளம் என் மீது நான் விரும்பாமலேயே திணிக்க படும்போது எழும் கோபம். அறிவுக்கோ கலைக்கோ கிடைக்காத அங்கீகாரம். . . ரெட்டை ஒடுக்குமறையாக இதை உணர்கிறேன். நீங்கள் கேட்டது உண்மைதான். மிகக் கூர்மையான பார்வை.

  • உங்களது கதைகளில் அறிவுசார் சமூகம் vs அனுபவங்களின் வலி நிறைந்த விளிம்பு நிலை மக்கள் என்ற இருமை நிறைந்து காணப்படுகிறது. (உதாரணம் : ஷேக்ஸ்பியரோடு ஒரு நாடகம், கட்டி, உண்டுகாட்டி). விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகளுக்கு அறிவுசார் சமூகத்தின் கோட்பாடுகள் துணைபுரியாது என இக்கதைகளின் பின்புலத்தை அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா ?

வரலாற்றால் மறக்கடிக்கப்பட்டவர்கள் எல்லா காலத்திலும் உண்டு. போலவே செவ்வியல் பிரபலங்களும். ஷேக்ஸ்பியர் என்பது இரண்டாமவர்களின் குறியீடு. எனது அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களின் அறிவு குறித்து. அவர்களின் திறன் பதிவின்றி போனது குறித்து.

  • கில்நாஸ்டியாவாசியை எப்படி கண்டறிந்தீர்கள் ?

கில்நாஸ்டியாவாசி முழுக்க கோட்பாடுகளால் ஆன கதை. பின் நவீனத்துவம் மரப் படிநிலைக்கு பதிலாக rhizomic (வேர்/கிழங்கு) வடிவை முன்னிறுத்துகிறது, பிரமிட் வடிவத்திற்கு எதிராகவும். தலைகீழாக்கம் செய்யும் கோட்பாடுகளைப் புனைவாக மாற்றும்போது அது ஒரு புது உலகாக மாறியது. ஆதியாகமம் ஏழு நாட்களில் உலகம் படைக்கப்பட்டதாக சொல்கிறது. எனவே ஏழு பகுதிகள். புது உலகுக்கு ஒரு பேர் வேண்டுமே. அங்கு புழங்கும் மொழியை ஸ்பூனரிஸ மொழியாக உருவகிக்க நில்காஸ்டியா (சாதிகள் அற்ற உலகு) கில்நாஸ்டியாவாக உருவாகியது.. தாமஸ் மூரின் உடோபியா போன்றதென்றாலும் அது எனக்கேயான என் உலகம்.

  • ஹெராக்ளிடஸின் நதி, பறவைகளுக்குமானது வீடு முதலிய கதைகளில் உலகமயமாக்கலின் வளர்ச்சி சார்ந்த விமர்சனப் பார்வை தென்படுகிறது. விமர்சனம் கடந்த மாற்றை ஏன் கதைகள் கூற மறுக்கின்றன ?

உலகமயமாக்கல் குறித்து முந்தைய தொகுப்பில் டேவிட் கூப்பரின் anti psychiatryயோடு வாலறுந்த பல்லிகள் என்ற கதையை எழுதியிருந்தேன். முதலாளித்துவத்தின் உச்சம் உலகமயம். இங்கு எல்லாம் பண்டம், மூலதனம். பண்பாட்டு உற்பத்திகள் கூட பண்டமாக்கபடும் காலமிது. இதோடு சாதியத்தையும் உலகமயம் உள்வாங்கிகொண்டது என்பது அதிர்ச்சி தரும் விஷயம். அடித்தள தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட எல்லோரும் இன்று பராசுர நிறுவனங்களுக்கும் எந்திரங்களுக்கும் முன்னால் விளிம்புக்கு தள்ளப்பட்டு திகைத்து நிற்கும் இடத்தில் என் கதைகள் முடிவடைந்து விடுகின்றன. தீர்வுகள் காலத்தின், வரலாற்றின் வேலை. கதைகளின் வேலை கதை சொல்லுவதன்றி வேறில்லை.

  • உண்டுகாட்டி கதையில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை வெவ்வேறு காலகட்டங்களில் கௌரவத்திற்குரிய பணியாகிவிடுகிறது. காலம் அம்மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லாமல், அவர்தம் பிரச்சினைகளை நவீனத்தின் பிடியில் கௌரவப்படுத்த முனைகிறதா ?

குலத்தொழில் தன்மையோ அல்லது மரபுவழி நிர்பந்தமோ, சமூகமும் விஞ்ஞானமும் எத்தனை வளர்ச்சி பெற்றிருந்தாலும் அடித்தள மக்கள் மட்டும் அதே நிலையில் இருப்பதை ஒரு விமர்சனமாய் சொல்ல முயன்ற கதைதான் ‘உண்டுகாட்டி’. குறிப்பிட்ட சாதியினரை அடித்தள மக்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் கதையாக அவர்கள் கதை சுவாரஸ்யமானது. செப்டிக் டேங்க் லாரிகளை இயக்குவது யார்? ரெயில்வே துறையில் கழிவுகளை சுத்தம் செய்வது யார் ? தொழில்கள் எத்தனை நவீனபடுத்தப் பட்டாலும் அதில் சாதி வாசனை கலந்தே இருக்கிறது.

  • வரலாறு, தொன்மம், புராணம் முதலியவற்றை விளிம்பு நிலையிலிருந்து மட்டுமே பார்ப்பது உங்கள் படைப்புகளை குறுகிய வட்டத்திற்குள் அடக்கிவிடாதா ?

வட்டங்கள் எப்போதும் பரவுபவை…

  • இனி வரும் காலங்களில் பின்-தலித்திய கோட்பாடுகள் புனைவிலக்கியத்தில் கோரி நிற்கும் விஷயங்களாக எதை உணர்கிறீர்கள்?

தலித் எழுத்து தன் எல்லைகளை விரித்துக் கொள்ள வேண்டும். குறுகிய பரப்புக்குள் நின்று விடாது பொது தளத்திற்கு நகர வேண்டும். இன்னும் பதிவு செய்யப் படாத தலித் குழுமங்களை தவிர்த்து மற்றவை புதிய தளங்களை, புனைவுகளை தமிழுக்கு தர வேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள் என்ற ஒர்மையிலிருந்தும் படிப்படியாக விடுபட வேண்டும். மாற்று வரலாறுகளை பிரக்ஞாபூர்வமாக முன்வைக்கவேண்டும்.

  • சிறுகதையாக்கத்தில் நீங்கள் சவாலாக நினைக்கும் பகுதி குறித்து

எழுத்து என்பதே சவாலானதுதான். மொழி வசப்பட்டுவிட்டாலும் இன்னும் செழுமை அடைய வேண்டும். ஆழமாக அதே நேரம் சலிப்பில்லாத pleasure of text என்பதின் உண்மையான அர்த்தத்தில் வாசிப்பவர்களுக்கு கண்டுபிடிக்க எழுத்தில் இடங்கள் இருக்க வேண்டும். இன்னும் புதிய முறைகளை அறிமுகம் செய்ய வேண்டும். சவாலாக நினைப்பதென்றால். யதார்த்த வகை எழுத்தைச் சொல்லலாம்.

  • அடுத்த படைப்பு குறித்து சிறிது வார்த்தைகள்

‘’புத்தன் ஒரு நாய்’’ என்கிற நாவல் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. “காக்கபொன்னு’’, “Eve=Mc’2”, “பூர்வத்தின் அபூர்வம்’’ ஆகிய கவிதைத் தொகுப்புகள், இரண்டு மொழிபெயர்ப்புகள், இரு கட்டுரைத் தொகுப்பு. ஒன்று புதிய கோட்பாடுகள், மற்றொன்று சினிமா, இரண்டு சொற்களஞ்சியங்கள். எல்லாவற்றையும் இந்த வருட இறுதிக்குள் முடிக்க வேண்டும்.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button