இயக்கங்களின் வீழ்ச்சியும் தனிமனித உரையாடல்களின் எழுச்சியும் -1

இயக்கங்களின் வீழ்ச்சியும் தனிமனித உரையாடல்களின் எழுச்சியும் – 1

சீனிவாசனுடன் ஓர் உரையாடல்

நேர்காணல்:- -மா.க. பாரதி

சீனிவாசன் நடராஜன் தமிழிலக்கிய உலகில் ஏற்கனவே நன்கு அறியப்பட்ட ஆளுமை. ஓவியராக, கோட்பாட்டாய்வாளராக, பேராசிரியராக, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ‘கணையாழி’ இதழின் இணையாசிரியாக தனது பங்களிப்பைச் செய்த இவர் ஒரு இலக்கியகர்த்தாவாக ‘விடம்பனம்’ என்ற தனது நாவலின் மூலம் தனது இருப்பை வலுவாக நிலைநிறுவியுள்ளார். பல தளங்களில் இயங்கும் இந்நாவல், கீழ்த்தஞ்சைப் பகுதியில் 1970-களுக்குப் பின்னான காலகட்டங்களில் நிகழும் மாற்றங்களை முதன்மைப்புள்ளியாகக் கொண்டு விரிந்து செல்கிறது. ஒரு காலகட்டத்தையும் களத்தையும் நாம் அணுகும்போது, அக்காலகட்டத்தில் பரவலாக இருந்த பண்பாட்டுக் கருதுகோள்கள், எண்ணவோட்டங்கள், வாழ்வியல் கூறுகள், நாம் வாழும் சூழலுடனான பொருத்தற்பாடு, அற விழுமியங்கள் எனப் பல கோணங்களிலும் அணுகும் வாய்ப்புகள் நம்முள் எழுந்த வண்ணம் இருக்கும். விடம்பனத்தின் முதன்மைப்புள்ளி, நிலைபெற்றிருந்த நிலவுடைமைக் காலகட்டத்துக் கருதுகோள்களும் விழுமியங்களும் மெல்லப் புறவய மாற்றத்தால் மாறுதலுக்குட்பட்ட காலம்.தீவிரமான பகடியும் தீர்க்கமான பார்வையுமாய்ப் பயணிக்கும் இப்படைப்பினை மேலும் புரிந்துகொள்ள நிகழ்ந்ததுதான் இவ்வுரையாடல்.
(சீனி – சீனிவாசன் நடராஜன்)

பா: கருத்துருவாக்கம் பற்றி இந்நாவல் பல இடங்களில் பல தளங்களில் பேசுகிறது. ஒரு கருத்து உருவாகி நிலைபெற்றுப் பின் தனக்கு எதிராகத் தானே திரும்புவது பற்றி.அது தனிநபர் சார்ந்ததாக இருந்தாலும் சரி இயக்கம் சார்ந்ததாக இருந்தாலும் சரி ஒருவிதத்தில் ஜனநாயக மாண்பை வெளிக்கொணர்வதாக நான் உணர்கிறேன்.நீங்கள் அந்த ஜனநாயக மாண்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சீனி:ஒரு இயக்கம் தனக்கான கொள்கைகளைக் கருத்தியல் அடிப்படையில் உருவாக்கி அதை மக்கள் மத்தியில் முன்வைத்து, மக்கள் பிரதிநிதிகள் மூலம் முன்னெடுக்கப்பட்டுமேயானால், அது சட்டமாக இயற்றப்படும் என்பதுதான் இயல்பு. கருத்தியலின் அடிப்படையிலேயே ஒரு அரசு கொள்கை முடிவை (Policy Decision) எடுக்கிறது.உதாரணத்திற்கு தமிழகத்தில் இனி பனை மரங்களையே வளர்க்கக்கூடாது என்பதை எளிமையாக ஒரு கொள்கை முடிவாக நிலைநிறுவி விடலாம்.ஆனால் அது கொள்கை முடிவாக மட்டுமே இருப்பதற்கும் சட்டமாக மாற்றப்படுவதற்கும் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு.கொள்கை முடிவுகள் மக்கள் மன்றத்துக்கு வந்தே தீர வேண்டும்.அம்மன்றம் இங்கே மக்கள் பிரதிநிதிகள் நிரம்பிய சட்டமன்றமாக இருக்கிறது.அங்கே இம்முடிவு விவாதத்திற்கு விடப்படும்.‘ஏன் இனி பனைமரங்களை வளர்க்கவே கூடாது?’ ‘அதை அழிப்பதால் அதனை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வருமான இழப்பிற்கு மாற்றுத் திட்டம் என்ன?’ என்று பல நிலைகளில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுப் பின்னரே சட்டமாக இயற்றப்படும். நடைமுறை யதார்த்தத்தைக் கணக்கில் கொண்டு அது அலுவலர்களால் நடைமுறைப்படுத்தப்படும்.இந்தச் செயல்பாடுகளுக்குக் குந்தகம் விளையும் வகையில் நடக்கும்போது அங்கே Judiciary இடைவருகிறது.இப்படி ஒவ்வொரு நிலையைக் கடக்கும் போதும் நான்காம் தூணான ஊடகங்கள் அவ்விஷயங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டு வருகின்றன. ஒரு கட்டத்தில் மக்கள் எழுச்சியின் மூலமாக அந்தப் பிரச்சனை அழுத்தம் கொடுக்கப்பட்டு, அமூலாக்கப்படும் போது ஆதரித்த அதே மக்கள் பிரதிநிதிகள் அதற்கு எதிராகக் கருத்திட்டு ரத்து செய்கின்றனர். இது நடைமுறை சார்ந்து செயல்படும் ஒரு வகையிலான ஜனநாயக மாண்பு. ஆனால் நடைமுறையிலிருந்து தனக்கான சாரத்தை எடுத்துக்கொண்டு, அதை அடியொற்றி எழும் கருத்துகளும், கருத்து முரண்பாடுகளும் ஒரு கட்டத்தில் நடைமுறை யதார்த்தத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கருத்துத் தளத்திலேயே செயல்படுகிறது. அக்கருத்து விவாதங்கள் ஒரு பிரச்சனையைப் பார்க்கும் பார்வையிலும் அதைப் புரிந்து கொள்ளும் முறையிலும் வேறுபடுவதால் நிகழ்கின்றன.அந்தக் கருத்து விவாதங்களில் ஏற்படும் பிளவுகள் தான் இயக்கங்களுக்கிடையேயான பிளவாகப் பார்க்கப்படுகிறது.இந்திய கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் என்று ஏன் பிரிகிறார்கள்?அவர்களது அடிப்படைத் தத்துவம் ஒன்றுதானே?ஆனால் கருத்துருவாக்கத்தின்போது ஏற்பட்ட கருத்து மோதல்களே அவர்களை இருவேறு அணிகளாக குழுக்களாக இயங்க அனுமதிக்கிறது.இனி ஒன்றுசேர முடியாத இடத்திற்கும் அவர்கள் வந்து சேர்கிறார்கள்.மீண்டும் இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும்.இத்தகைய கருத்துருவாக்கங்கள் நடைமுறையை அடியொற்றி வந்திருப்பதாலேயே அவை பெரும்பான்மை மக்களுடைய கருத்துகள் ஆகிவிடாது.இப்பின்புலத்தில்தான் நான் முதலில் சொன்னதுபோல இயக்கங்கள் கொள்கை முடிவுகள் எடுக்கின்றன.ஜனநாயகம் இந்தியாவில் இப்படித்தான் விலகிச் செயல்படுகிறது.இந்தியாவைப் பொருத்தவரை இதுதான் ஜனநாயக மாண்பு.

பா: ஆனால் இங்கே கருத்துருவாக்கத்துக்குப் புறம்பான பிம்ப அரசியல் தானே முழு வீச்சில் செயல்படுகிறது?அங்கே ஜனநாயகம் செயல்படாமல் தேங்கியல்லவா நிற்கிறது?ஜனநாயகத்துக்கு எதிரான அரசியலையல்லவா அது மேற்கொள்கிறது?

சீனி:பிம்ப அரசியல் பெருமளவில் செயல்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் பிம்ப அரசியலை முழு முற்றாகக் கறுப்பு மையிட்டு ஒதுக்கித் தள்ள முடியாது.பிம்ப அரசியல் வளர்வதற்கு கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மக்கள் மொழியில் பேசாமல் போனதுதான் காரணம்.ஒரு கட்டத்தில் கருத்தியல்களைத் தாண்டிய பிம்பங்களும் ஆளுமைகளும் நமக்குத் தேவைப்படுகிறார்கள்.காரணம் கருத்தியல்களின் மீதான அவநம்பிக்கை.ஒரு இயக்கம் பல காலமாக ஜல்லிக்கட்டை நிலப்பிரபுத்துவ விளையாட்டு என்று சொல்லி எதிர்த்து வந்துள்ளது.மக்கள் ஆதரிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக உடனடியான நிலைப்பாடு மாற்றத்தை அது மேற்கொண்டது.பிம்ப அரசியலும் ஒரே படித்தானதாக இருந்ததில்லை.அதுவும் மாற்றத்திற்கு உட்பட்டே வந்துள்ளது.கருத்தியல்கள் வன்முறையாக மாறி திணிக்கப்பட்ட பிறகு பிம்ப அரசியலே ஒருவகையில் அதை ஜனநாயகப்படுத்துகிறது என்றுதான் நான் பார்க்கிறேன்.கருத்தியல்கள் மீதான மக்களின் பயம், புரியாமல் போனதால் உண்டாகும் அசௌகரியம் என இவைதான் மக்களை பிம்ப அரசியலை நோக்கித் தள்ளுகிறது.இதில் எல்லாக் குழுக்களுக்கும் சமமான பங்கு இருக்கிறது.

பா: பிம்ப அரசியல் மற்றும் ஜனநாயகம் பற்றிய இந்தப் பார்வை நாவலிலும் செய்ல்படுவதை இப்போது உணர்கிறேன்.

சீனி: உண்மை. இந்த நாவலைப் பொருத்தவரையில் ’அவள்’ ஒரு பெரிய பிம்பக் கட்டுமானம்.பிற்பகுதியில் அவள்தான் எதிர்மறைக் கதாப்பாத்திரமாக உருமாற்றம் பெறுகிறாள்.மணிமொழி ஒன்றும் பெரிய பிம்பம் கிடையாது, சாதாரணமாகக் கையாளப்பட்ட ஒரு ஜனநாயகப் பிரதிநிதி.அவள்தான் நேர்மறை நிலையில் கடைசியில் உச்சம் பெறுகிறாள்.ஆடுதன் ராணி பொதுஜனம்.ஆடுதன் ராணி தன்னைச் சுதந்திரமாக வைத்துக் கொள்வதற்கு இந்த ‘அவளும்’ மணிமொழியும் தேவைப்படுகிறார்கள்.மணிமொழி எங்கேனும் மீறிச் செல்கையில் இவள் மணிமொழியைக் கட்டுப்படுத்துவாள்.அந்தப் பெயர் குறிப்பிடப்படாத ‘அவள்’ எங்கேனும் மீறிச் செல்கையில் மணிமொழி ‘அவளை’க் கட்டுப்படுத்துவாள்.இந்த Balance of Power யாருக்குப் பயன்படும்?இதுபோன்ற சமன்படுத்தப்பட்ட அதிகாரம் (Balance of Power) யாருக்குப் பயன்படுமென்றால் ஆடுதன் ராணி போன்ற சாதாரணமாக சுதந்திரமாக வாழ நினைக்கும் ஜனநாயகத்தின் மீதி அறிந்தோ அறியாமலோ நம்பிக்கை வைத்திருக்கும் பெரும்பான்மை மக்களுக்குப் பயன்படும்.இதுதான் இங்கே ஜனநாயகம்.

பா: மணிமொழியைப் பற்றிப் பேசுகையில் எனக்கு ஒரு முக்கியக் கேள்வி எழுகின்றது. மணிமொழியும் தமிழ்வாணனும் ஒரு பெரும் இலட்சியக் கனவைச் சுமந்தபடியே பயணிக்கின்றனர். சாதி, மதம், குடும்பம் போன்ற எந்த அமைப்புக்குள்ளும் எந்த அடையாளத்துக்குள்ளும் தாங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் அதிகப் பிரக்ஞையுள்ளவர்களாக இருக்கின்றனர். அதைச் செயல்படுத்துவதற்காகக் கடுமையாக உழைக்கவும் செய்கின்றனர்.பின்னர் மணிமொழிக்கு அரசாட்சிப் பணி கிடைக்கிறது.நாவலின் இறுதிப்பகுதியில் சில கணங்கள் ‘அவளுடன்’ மணிமொழி பேசுகிறாள்.அது எனக்கு மிகப் பெரும் முரணைச் சுட்டி முகத்தில் அறைந்தது.காரணம் ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் அடையாளங்களற்ற வாழ்வை அவர்கள் தேர்வு செய்கிறார்கள்.ஆனால் இறுதியில் ஒடுக்கும் அமைப்பின் ஓர் அங்கமாக மாறி அதையே தனது அன்றாடமாக மாற்றியமைத்துக் கொள்ளும் நிலைக்கு அவள் செல்கிறாள்.ஒரு விதத்தில் இது எனக்கு இலட்சியவாதத்தின் வீழ்ச்சியைச் சுட்டுவதாகவும் மிகப் பெரும் அவநம்பிக்கையை விளைவிப்பதாகவுமே உள்ளது.

சீனி:இந்த நாவல் 1967-ல் தொடங்கி 2016-ல் முடிவடைகிறது. சரியாக ஐம்பது ஆண்டுகள்.திராவிட இயக்கம் ஆட்சியில் இருந்த காலகட்டம் இது.சிவகாமி ஐஏஎஸ்-ஐ ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளலாம்.அவர் எப்படி உருவானார் என்பதும் எப்படி வீழ்ந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.சந்திரலேகா எவ்வளவு பெரிய டெரர்? இன்று என்னவாக ஆகிவிட்டார்கள்? இப்படி கிட்டத்தட்ட ஒரு 14 பெண் ஐஏஎஸ் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்த வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் மிகப்பெரும் இலட்சியக் கனவுகளுடன் இந்திய ஆட்சிப் பணிக்கு வந்து துகிலுரியப்பட்டு திரவம் வீசப்பட்டு ஒன்றுமற்று துடைத்தெரியப்பட்ட வரலாறை நாம் எல்லோரும் அறிவோம். எந்தவொரு சமூகத்தினுடைய ஜனநாயகப் பிரதிநிதிக்கும் இரண்டு மிகப் பெரும் கனவுகள் இருக்கும்.ஒன்று மக்கள் பிரதிநிதியாகி சமூக முன்னேற்றத்தை முன்னெடுப்பது.இரண்டு ஆட்சிப்பணியேற்று அதே முன்னேற்றத்தை முன்னெடுப்பது.இந்தியா போன்ற தேசத்தில் இதுபோன்ற கனவுகள் எழுவது இயல்பு.சுதந்திரத்துக்கு முன்பும்கூட ஒரு பாரிஸ்டர் பட்டத்துக்காகவும், ஒரு ஐசிஎஸ் பட்டத்துக்காகவும் இங்கிலாந்து சென்றவர்களாகத்தான் நமது தலைவர்கள் இருந்துவந்துள்ளனர்.இன்றுவரை அது தொடர்வதை நாம் பார்க்க முடியும்.குறிப்பாக, பெண்களிடம் இந்த வேட்கை அதிகமாக உள்ளது.காரணம் மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற பொறுப்பில் உள்ள அதிகாரம் தங்களால் சரியாகப் பயன்படுத்தப்படும் என்ற நம்பிக்கை.இன்றுவரையிலும்கூட ஆட்சித் தலைவர் நினைத்தால் அம்மாவட்டத்தில் முதலமைச்சர் வரவிடாமல் தடுக்கலாம்.ஒரு Parliamentarian-ஐ Disqualify பண்ணலாம்.
பிகாரில் லல்லு பிரசாத் யாதவ்வுடைய ஒரு சொந்தக்காரர் மக்களவைத் தேர்தலில் ஒரு எம்.பி.யாக வென்றார்.மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு சட்டப் பிரிவின்கீழ் அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்த மறுநாள், பார்லிமெண்ட்டிலிருந்து அந்த நபரை Disqualify செய்திருக்கிறார்கள்.இந்நிகழ்வுக்குப் பின்புதான் நிதீஷ் குமாரின் எழுச்சியே அங்கு சாத்தியப்படுகிறது.‘குற்றவாளிகளை ஒழிப்போம்’ என்பதுதான் அன்று பீகாரில் ஒரே கோஷமாக இருந்தது. அப்படியானால் ஜெயப்பிரகாஷ் நாராயணின் மாணவர் ஒருவருக்கு பீகாரை மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணமேகூட ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்பாடுதான் தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது.
இவ்விரண்டு கனவுகளோடு மூன்றாவதாக ஒரு கனவும் சேர்கிறது என்றால் அது நீதித்துறையாகவே இருக்கும்.இம்மூவரையும் வழிநடத்திச் செல்ல வேண்டியது யார்?அல்லது எது?கலையும் கலைஞர்களுமாகவே இருக்க முடியும்.இருக்க வேண்டும்.காரணம் கலாசார ரீதியாக அவர்களால் மட்டுமே மாற்றங்களை முன்னெடுக்க முடியும்.‘அனைத்தையும் கடந்து வா’ என்று மட்டும் ஒரு கலை சொல்லவில்லை.இந்நாவல் ‘கடந்து வா’ என்று சொன்னவர்களின் தோல்வியையும் பரிசீலிக்கிறது.அன்று முதல் இன்று வரை இக்கனவுகளைச் சுமந்து வந்தவர்களின் தோல்வியைத்தான் நான் கண்முன்பு காண்கிறேன்.இன்றுவரை ஒரு எழுச்சியை நான் பார்க்கவில்லை.எனக்கு இப்போது 45 வயது.இந்த நாவல் நான் பிறப்பதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது.இத்தனையாண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகத்தில் எவ்வளவு மாற்றங்கள் நியாயமாக நடந்தேறியிருக்க வேண்டும்.என்ன மாற்றம் நிகழ்ந்தது? இராமனுடைய படத்தைச் செருப்பால் அடித்து ஊர்வலம் சென்ற அதே ஈரோட்டில், பெரியார் பிறந்த மண்ணில் அறிவார்ந்த தளத்தில் இயங்கும் ஓர் எழுத்தாளனுக்கு எதிராக ஒரு நாள் கடையடைப்பு நடத்துகிறார்கள். பணம், அதிகார பலம், மக்கள் பிரதிநிதிகள் என அனைத்தும் இவ்வியக்கங்களிடம் இருந்தும் என்ன நேர்ந்தது?
இந்த ஐம்பது ஆண்டுகால ஆட்சியில் ஒரு கணிசமான காலம் அஇஅதிமுக ஆட்சி செய்தது.அது தன் தொண்டனை என்னவெல்லாம் நம்ப வைத்தது?பட்டாச்சாரியார் கண் பட்டால் கௌன்சிலர் பதவி.சிவன் கோவிலுக்குச் சென்றுவந்தால் எம்.எல்.ஏ பதவி.விஷ்ணு கோவிலுக்குப் பால்குடம் எடுத்தால் மந்திரி பதவி என்று.அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொல்லிச் செல்லும் அந்தக் கட்சி பெரியாரின் எத்தனை கொள்கைகளுக்கு நேரெதிர் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.ஜெயலலிதா செய்து வைத்த திருமணத்தில் எத்தனை சாதி மறுப்புத் திருமணங்கள்?ஒன்றுமே கிடையாது.
பா: அதிமுக போன்ற கட்சியிடமிருந்து எப்படிக் கொள்கைகளை எதிர்பார்ப்பது?

சீனி: சரி. அப்படியென்றால் திமுக பக்கம் வருவோம் வா.பெரியாரின் உண்மையான சீடர்கள் என்றுதானே தங்களை அவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள்.அண்ணா ஆட்சிக்கு வந்தபின் கையெழுத்திட்ட முதல் மசோதா சீர்திருத்தத் திருமணச் சட்டம்.அதன் பிறகு இன்றுவரை ஒரு முன்னேற்றம்கூட அதில் ஏற்படவில்லை.சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டவர்களும்கூட இறுதியில் ஒரு சாதிக்குள்தான் அடைக்கலம் தேடுகிறார்கள். தொடக்க காலத்தில் அதை ஊக்கப்படுத்துவதற்காக சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டால் பள்ளி ஆசிரியர் வேலைக்கு முன்னுரிமை என்று அறிவித்திருந்தால் பெரும்பாலோர் அன்று சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டிருப்பார்கள்.இன்று இருப்பதுபோல சாதிக் கட்டமைப்பு இறுகிக் காணப்பட்டிருக்குமா? மாறாக ஒவ்வொரு காலத்திலும் சாதி அரசியலை ஊக்கப்படுத்தி ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தலைவர் என எங்கு பார்த்தாலும் சாதிக் கட்சிகளும் சாதிக் குழுக்களும் இன்று தமிழகமெங்கும் காணப்படுகின்றது என்றால் அதற்கு இவ்விரு கட்சிகளுக்கும் இணையான பொறுப்பிருக்கிறது. மேலும் ஒரு புதிய பகுத்தறிவுப்பூர்வமான இயக்கம் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் இயக்கம் அதற்கான கலை வெளிப்பாடுகளை எந்த அளவு சரியாக முன்னெடுத்திருக்கிறது என்பதும் கேள்விதான். எனில் இத்தனை தளங்களில் எனக்கு ஏற்பட்ட அல்லது நான் கண்ட தோல்விகளைத்தான் நான் பதிவு செய்திருக்கிறேன்.அது உங்களுக்கு அவநம்பிக்கை தருவதாக இருக்கலாம்.ஆனால் நம்பிக்கையே அற்றுப்போய் இந்தப் படைப்பு உருவாகவில்லை.உண்மையில் நம்பிக்கையும் சரி அவநம்பிக்கையும் சரி ஒரு Isolation-ல் உருவாவது கிடையாது.எதிர்பார்ப்பு, நம்பிக்கை, அவநம்பிக்கை.இவை ஒரு சுழற்சி.நம்பிக்கையை விதைத்துதான் நான் ஒரு படைப்பை உருவாக்குகிறேன்.
பா: இந்நாவலில் ஒரு புதுமையான வடிவம் கையாளப்பட்டுள்ளது. இதை எப்படித் தெரிவு செய்தீர்கள்?

சீனி: நான் சொல்வதை கொஞ்சம் காட்சிப்படுத்திப் பார். ஒன்பது சதுரங்கள் இணைந்த ஒரு பெரும் சதுரம்.இடமிருந்து வலமாகவும் சரி, மேலிருந்து கீழாகவும் சரி மும்மூன்று சதுரங்கள் இருக்கின்றன.சதுரம் என்ற வடிவம் எனக்கு மிகவும் பிடித்த வடிவம்.ஒருவித அழகான சமன்பாடு அவ்வடிவத்தில் பயின்று வந்துள்ளது.கீழ்த்தஞ்சைப் பகுதியைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவ்வூர் அமைப்பு ஒரு Gridding Pattern-ஐக் கொண்டுள்ளது.ஃப்ரெஞ்சு தேசத்தை ஓரளவு ஒத்திருக்கும் வடிவ அமைப்பு அதில் உள்ளது.ஒரு செவ்வக வடிவிலான குளம், அதைச் சுற்றிக் கட்டுமானங்கள், பின் அதைத் தொடர்ந்து வாயில்கள், பின் தெருக்கள் என்று விரிந்து செல்லும்.இந்த 9 Square Pattern-ஐ மிக அருமையாகக் கையாண்டிருப்பது ஜெய்ப்பூரில்தான்.அந்நகரின் Architecture இதை அடியொற்றித்தான் இருக்கும்.Chandigarh-ஐ எடுத்துக் கொண்டால் Le Corbusier.இந்தியாவில் உருவாக்கப்பட்ட நவீன நகரங்களில் அற்புதமானது என்றால் நான் சண்டிகரைச் சொல்வேன்.ஃப்ரெஞ்சு தேசத்தவரான Le Corbusier-ஆல் உருவாக்கப்பட்ட நகரம் அது.அது ஒருபுறமிருக்கட்டும்.இப்படி ஒன்பது சதுரங்களை நேர்கோட்டில் அடுக்கிவிட்டு ஒரு சதுரத்தைத் திருப்பினால் வேறு ஒரு பகுதியில் இருக்கும் சதுரம் Tilt ஆகும்.முதல் சில பக்கங்களில் பாதிரிமாரால் பெயர் மட்டும் தான் மாறியிருக்கு என்று ஒருவன் புலம்புவான்.ஆனால் வேறு ஒரு பக்கத்தில் மணிமொழி கன்னியாஸ்திரிகளால் வளர்க்கப்பட்டாள். அவள் வரப்பின் மீது நடந்து வரும்போது அவளுடைய சிறிய கொண்டை, முக்கால் கை ஜாக்கெட் ஆகியவற்றைப் பார்க்கும்போது ஏனோ தெரியவில்லை ஒரு அபரிமிதமான மதிப்பை அவளிடம் உருவாக்கியது. எனில் முதல் சில பக்கங்களில் செய்யப்பட்ட பகடி ஒரு புதிய விடிவான மணிமொழியுடைய வளர்ப்பைப் பற்றிய சாவியை வழங்குகிறது.வடிவம் இப்படித்தான் கையாளப்பட்டுள்ளது.
மேலும் இந்த நாவல் தோல்வியை மட்டுமே சொல்லிச் செல்லவில்லை.இயக்கங்களின் தோல்வியை, மாற்றத்துக்குட்படாத கருத்துருக்களின் தோல்வியை பதிவு செய்கிறது.ஆனால் தனி மனித உரையாடல்களால் நிகழும் எழுச்சியையும் சேர்த்தே பதிவு செய்கிறது. மணிமொழியின் கருத்துருவின் தோல்வியைப் பதிவு செய்யும் இதே படைப்புதான் அவளது கலைவழிப்பட்ட தத்துவத்துக்குட்பட்ட அவளது வாழ்வின் எழுச்சியையும் வெற்றியையும் பதிவு செய்கிறது.

இந்த உரையாடலின் இரண்டாம் பகுதி பின்னர் வெளியிடப்படும்.