இயக்கங்களின் வீழ்ச்சியும் தனிமனித உரையாடல்களின் எழுச்சியும் -2

இயக்கங்களின் வீழ்ச்சியும் தனிமனித உரையாடல்களின் எழுச்சியும் – 2

சீனிவாசனுடன் ஓர் உரையாடல்

நேர்காணல்:- -மா.க. பாரதி

பா: இப்படைப்பில் இடையிடையே வரும் கட்டுரை போன்றப் பகுதிகள் ரசமானவை. அவற்றுள் சற்று நாடகீயமான இடங்களும் உள்ளன. எனக்குப் பிடித்த பகுதி இது:

’… அனுபவங்களைக் கடத்துவது மட்டுமே அனுபவஸ்தர்களின் வேலையாக இருந்தது போய், கடத்தப்படுவது எல்லாமே அனுபவமாகப் பார்க்கப்படும் கேலிக்குரிய காலகட்டம். எழுத்து வாசகனுக்கு அனுபவத்தைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஆதாரங்களையும் கொடுக்க ஆரம்பித்த தருணம்தான் ஆய்வுக்கும் புனைவுக்குமான உராய்வு.
தீவிர கலை கலாச்சார இலக்கியப் படைப்பு வெகுஜனப் படைப்புகளுக்கான மாற்றாக மெய்யாகவே இருந்த காலகட்டம் இருந்ததா அல்லது கட்டமைப்பின் மூலம் அடிப்படைவாதிகளின் கோட்பாட்டின்படி பிரிந்துநின்று செயலாற்றுகிறதா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
ஆய்வு, கோட்பாடுகளின் விதியில் அமையும்போது ஆதாரங்கள் முக்கியமாகப்படுகிறது. புனைவுகளுக்கான ஆய்வு அனுபவங்களுக்கானக் களமாகவும் வாசகனின் கற்பனைகளுக்கான எழுத்தாகவும் இருக்கும் பட்சத்தில் ஆதாரமும் புனைவாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களில் நான்கு பயணங்கள் வழி, ஐந்து படைப்பாளிகளைச் சந்தித்து, ஆறு கேள்விகளுக்கு ஒரே பதிலைச் சொல்ல முடிந்த எனக்கு, சொல்லப்பட்ட பதிலிலிருந்து கேட்கப்படும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்குப் படைப்பாளனாக இப்படித்தான் என் பதில் இருந்திருக்கிறது.
நீங்கள் உங்கள் வாழ்நாளில் எத்தனை நாள் சந்தோஷமாக இருந்திருக்கிறீர்கள்?
 க்ஷண நேரக் குறைவில்லாமல் எப்பொழுதுமே இப்பொழுதும்போல அம்மாஞ்சி’

என்றுமே எனக்கு ஒரு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இருமை எதிர்வுகளைக் கட்டமைத்து அதனடிப்படையில் சமூகத்தின் அசைவியக்கத்தை நாம் புரிந்துகொள்ள முனைகிறோம். சமூகத்தில் நிலவும் பல சிக்கல்களையும் சிடுக்குகளையும் அது எளிமைப்படுத்த உதவுகிறது என்ற ஒரு பார்வை செயல்பட்டாலும், நேர்மையாகப் பார்த்தால், அது ஒரு வகையில் சமூகத்தின் சிக்கல்களிடம் அண்டவிடாமல் நம்மைத் தடுக்கும் வேலையைச் செய்கிறது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்நிலையில் வெகுசன நுகர்வு தீவிரத்தன்மை போன்ற எதிர்வுகளைக் கட்டமைத்தல், ஆய்வு புனைவு என்பதை எதிரிடையாகப் பார்த்தல் போன்ற உங்கள் பார்வையை நான் எப்படி எடுத்துக் கொள்வது?

சீனி: முதலில் உங்கள் பார்வையை எடுத்துக் கொள்வோம். இதை நீங்கள் புனைவுக்கு இடையே வரும் கட்டுரைப் பகுதி என்கிறீர்கள். பின்னர் சற்றே நாடகீயமான உங்களுக்குப் பிடித்த பகுதி என்கிறீர்கள். எனில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்வதற்கு வகைமைப்படுத்திக் கொண்டு அந்த வகைமையையும் பிறகு பிரித்துப் பிரித்து உட்செல்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை அது புனைவுள் இயங்கும் இன்னொரு புனைவுதான். ஆனால் உங்கள் புரிதலுக்காக நீங்கள் வகைப்படுத்தும்போது அதனுள் இயல்பாகவே இருமை எழுந்து மேல் வருகிறது. இப்பகுதி பின்னால் வரப்போகும் பெருமாள்முருகன் பற்றியான அத்தியாயத்துக்கு ஒரு முன்னோட்டமாக அவர் ஆழமான பகடிக்குட்படுத்தப்படுகிறார். ’ஐ’ பட ஷங்கருக்கும் அவருக்கும் வித்தியாசமே இல்லை என்று இது சித்தரிக்கிறது. பின்னால் பெருமாள்முருகனுக்கான நியாயங்களை அடுக்கும் இதே புனைவுதான் இப்போது அவரைப் பகடிக்குட்படுத்துகிறது. நான் இப்போது கேட்கிறேன். பெருமாள்முருகனை நான் நியாயப்படுத்துகிறேனா அல்லது பகடி செய்கிறேனா?
 

பா: நியாயமாக நான் தானே கேள்வி கேட்க வேண்டும்?

சீனி: (புன்னகைத்தபடியே) இரண்டுமே ஒன்றுதான். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டும் எழுவது ஆழ்ந்த அன்பின், அக்கறையின் அடிப்படையில்தான். அது என்ன அக்கறையாக இருக்க முடியும்?
க்ஷண நேரக் குறைவில்லாமல் எப்பொழுதுமே மகிழ்வுடன் இருக்கும் என்னைப் போன்ற பல தனிமனிதர்கள் நிறைந்த சமூகம் உருவாக கலை பிரதானமாக இருக்க வேண்டும் என்ற அக்கறை. அப்படி கலை பிரதானமாக இருக்க வேண்டுமெனில் கலைஞன் கலைக்கு உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இல்லாது போகும் பட்சத்தில் அது பகடி செய்யப்படுகிறது. கலை எப்போதும் மேம்பட்டுக் கொண்டே புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி நிகழவேண்டுமெனில் அதற்கான ஊடகம் சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும். ஊடகம் என்பது மொழியாக இருக்கலாம்; ஒரு கருங்கல்லாக இருக்கலாம்; வண்ணக்கலவையாக இருக்கலாம்; உடல்மொழியாக இருக்கலாம். படைப்பாளன் அறியப்படாமல் படைப்பு மட்டுமே முன்னிறுத்தப்பட்டிருக்கலாமே. ஆய்வு நோக்கத்திற்குத்தான் தரவுகள் தேவை. புனைவுக்கு எதற்காகத் தரவுகளைத் தரவேண்டும்? எனில் அப்படைப்பின் நோக்கம் என்ன? நீ ஆய்வாளனா அல்லது புனைவெழுத்தாளனா? என்றக் கேள்விகளை இவ்விடம் முன்னிறுத்துகிறது. உண்மையில் இருமை என்று எதுவுமே கிடையாது. புரிந்துகொள்வதற்காகவும் மீண்டும் விவாதிக்கவும் விவாதித்துத் தெளியவும் பகுத்துக் கொண்டேயிருக்கிறோம். அப்படிப் பகுத்துப் பார்க்கும்போது இயல்பாகவே இருவேறு கோணங்கள் எதிர்ப்படுகின்றன. ஆனால் அவையும் முட்டிமோதி ஒருமையுள் வந்தடையும்.

பா: ’அனுபம் சுத்’ அவர்களின் ஓவியங்கள் இந்நாவலில் பல இடங்களில் காணக் கிடைக்கின்றன. யார் அவர்? அவரது ஓவியங்களை ஏன் பயன்படுத்தியுள்ளீர்கள்?

சீனி: அனுபம் சுத் Delhi School of Fine Arts-இன் Graphic Department-இல் ஒரு பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கிப் பின் அக்கல்வி நிறுவனத்தின் தலைமையாசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற பெண்மணி. இந்தியாவில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய பதிப்போவியர்களில் மிக முக்கியமானவர். பல நாடுகளுக்குச் சென்று பதிப்போவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களுக்கு அவருடைய Plates பொருந்திப் போவதால் அவ்வோவியங்களைப் பயன்படுத்தியுள்ளேன். அந்த ஓவியத்தின் தலைப்பு, அளவு, வெளியான வருடம் என அனைத்துத் தகவல்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வரிசை ஓவியங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவ்வோவியங்களில் ஒரு கட்டற்ற தன்மை பயின்று வந்துள்ளன. மேலும் புனிதப்படுத்துதலுக்கெதிரான ஒரு குரலாகவும் அவை இருக்கின்றன. ஆடையற்று நிர்வாணமாக அவ்வோவியங்கள் காட்சி தருகின்றன. அக்கட்டற்ற தன்மையும் என் புனைவுக்கான பொருத்தமும் இதில் காணப்பட்டதால் அவை இங்கே கையாளப்பட்டிருக்கின்றன. மேலும் இதை நான் ஒரு சாவியாக உருவகிக்கிறேன். சாத்தியங்களை விரிவுபடுத்தும் சாவிகள் இவை. இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் மும்மூன்று அடுக்குகளாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இப்படைப்பை ஓவியங்களிலிருந்தும் ஒருவன் வாசிக்கத் தொடங்கலாம். காட்சிகளாக உருமாறக்கூடிய வார்த்தைகளை அத்தியாயங்களில் ஒருவன் படித்தால், வார்த்தைகளாக உருமாறக்கூடிய காட்சிகளை இந்த ஓவியங்களில் காணலாம்.

 பா: இந்த ஓவியங்கள் பல சமயங்களில் அந்தப் பெயர் குறிப்பிடப்படாத ‘அவளு’டைய கட்டற்ற தன்மையை வெளிக்கொணர்வதாக உணர்கிறேன்.

சீனி: வார்த்தைகளை, வாக்கியங்களை, அத்தியாயங்களைப் படித்துவரக்கூடிய வாசகர்களுக்கு எல்லாவற்றிலும் கதையைத் தேடக்கூடிய ஒரு எண்ணம் வரும். அப்படிக் கதையைத் தேடக்கூடிய எண்ணத்தோடு படித்துக் கொண்டே வரும் ஒரு வாசகன், புனைவின் கதாப்பாத்திரங்களுடைய பிரதானத் தன்மையை இங்கே காட்சிப்படுத்தியிருப்பார்களோ என்ற யூகத்தின் அடிப்படையில் அதைக் காணத்தொடங்கி அவ்வெண்ணம் மேலும் மேலும் வலுப்பெற்று இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து சேர்கிறான். ஆனால் இவற்றை முற்றிலும் சுதந்திரமான, எல்லாக் கதாப்பாத்திரங்களிலிருந்தும் விடுபட்ட தனித்த அனுபவங்களைக் கடத்தும் புதிய அத்தியாயங்களாகவும் நீங்கள் காணலாமே.

பா: புரட்சி பற்றியான பல பார்வைகள் சமூகத்தில் பயின்று வருகின்றன. ’புரட்சி’ என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அதை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்?
சீனி: ’நான்’ என்று ஒருவன் உள்ளான். அந்த ‘நானு’க்குப் பார்வைகள் இருந்தே ஆகவேண்டும் என்றுதான் நீங்கள் கருதுகிறீர்கள். அந்த ‘நானு’க்கான பார்வைகள் எங்கிருந்து பெறப்படுகின்றன?

பா: Obviously சமூகத்திடமிருந்துதான்.

சீனி: சமூகம் என்பது என்னைப்போன்ற எந்தப் பார்வையும் இல்லாத எண்ணற்றவர்களால் நிறைந்திருக்கிறது. இங்கே ஒவ்வொருவருக்குமான பார்வை என்பது தனித்துவமாக உள்ளது. காரணம் அவரவர்களுக்கான வாய்ப்பு வசதிகள் சமூகப் பொருளாதாரப் பின்புலங்களால் தாக்குண்டு மேலும் அவரவர்க்கு ஏதுவான ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையில் உருக்கொள்கின்றன. இப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையில் என்று சொல்கிறபோதே அங்கு தனிமனித அறிவும் அதன் உயரமும்தான் அளவுகோலாகக் கொள்ளப்படுகின்றன. அறிவு என்பது நிலையான அல்லது Stagnant-ஆன ஒன்றா அல்லது மாற்றத்துக்குட்பட்டுக்கொண்டே இருக்கிறதா? மாறிக்கொண்டே இருப்பதுதான் அறிவு. எல்லாம் மாற்றத்துக்குட்பட்டுக்கொண்டே இருக்கிறது. உலகத்தின் இயங்குவிசை எவ்வளவோ முன்னேற்றத்துக்குட்பட்டுள்ளது. சொல்லப்போனால் Consistency-க்கு எந்தவிதமான மரியாதையும் கிடையாது. ஒற்றை வரியைக் கொள்கையாகக் கொள்வதும் அதையொற்றிய செயல்பாடுகளுமே புரட்சிக்கான வித்தாகப் பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில் எந்தச் செயல் நடந்தேறினாலும் அதைப் புரட்சி என்கிறோம். ஒன்றிணைவதையோ, ஒற்றைவரியைக் கொள்கையாகக் கொள்வதையோ, அதனடிப்படையிலான செயல்பாடுகளின் தொடர்ச்சியையோ, நிறைவேறிவிட்ட ஒரு கொள்கையின் வெற்றி முழக்கங்களையோ, நிறைவேறாத கனவுகளின் தோல்விபற்றிய தொடர் விசாரிப்புகளையோ, அவதானிப்புகளையோ சிந்தனை என்றோ புரட்சி என்றோ ஒப்புக்கொள்ளவே முடியாது.

பா: எதெல்லாம் புரட்சி இல்லை என்று சொன்னீர்கள். சரி. புரட்சி என்றால் என்ன?

சீனி: பல சொற்பிரயோகங்களை நீங்கள் கேட்டிருக்கலாம். அறிவியல் புரட்சி, தொழில்நுட்பப் புரட்சி, தொழிற்புரட்சி, பசுமைப் புரட்சி என்று. இப்படி வரலாற்றாசிரியர்கள் ஒரு காலகட்டத்தையோ நிகழ்வையோ வகைபிரித்துப் பார்ப்பதற்காகப் பயன்படுத்திய ஒரு சொற்பிரயோகத்தை அதன் சாரத்தைக் குலைத்துப் பல இடங்களில் மலிவான பிரயோகங்களால் நீர்த்துப் போகச் செய்திருக்கிறோம். இவ்வாறான சொற்களுக்கு இந்த 2017-இல் குறிப்பாகத் தமிழ் மொழி பேசும் மக்கள் மத்தியில் எந்தவிதமான பொருளோ கற்பிதமோ வலிமையோ இல்லை.

பா: பகடியை ஏன் உங்கள் படைப்பில் அதிகம் கையாண்டுள்ளீர்கள்? யதார்த்தத்திலிருந்து தப்பிப்பதற்காகவா? மாற்று யதார்த்தத்திற்கான தேடலினாலா?

சீனி: ஒருவன் உச்சகட்ட சாதிவெறியுடன் பேசுகிறான். அது Whatsapp, Facebook என சகல சமூக வலைத்தளங்களிலும் பகிரப்படுகிறது. அப்படிப் பகிரப்படும் செய்தியை நான் எழுதி என் படைப்பில் முன்வைத்தால் மட்டும் அது பகடியாகப் பார்க்கப்படுகிறது. உண்மையில் அது பகடியா அல்லது யதார்த்தமா?

பா: யதார்த்தம்தான்.

சீனி: எனில் இங்கு பகடியாகப் பார்க்கப்படுவது என்ன? நம்முடைய செயல்பாட்டைத்தானே. ஆனால் அதற்குப்பின் மிகப்பெரும் வேதனையும் பொதிந்துள்ளது. இதெல்லாம் என்று மாறும்? நம்முடைய செயல்பாடுகளெல்லாம் என்று திருத்தமடையும்? அது நம்மைத் தொந்தரவு செய்கிறது. இவையெல்லாம் மாறாது; அப்படியே மாறினாலும் நாம் அப்போது இருக்க மாட்டோம் என்றுதான் நமது அறிவு சொல்கிறது. எனவேதான் இந்தத் தொந்தரவுகளையெல்லாம் நாம் பகடியாக்கிக் கடந்துபோகிறோம். அந்தப் பகடியையும் மீறி நம்மைத் தொடர்ச்சியாக அது துன்புறுத்தவும் தொந்தரவு செய்யவும் செய்கிறது. எனில் அதை நாம் ஒரு கலைவடிவமாக விருப்பம் சார்ந்து வெளிப்படுத்துகிறோம். அந்த வெளிப்பாடு பகடியாகப் புரிந்து கொள்ளப்பட்டாலும் அதன்மூலம் நமக்கு உண்டான தொந்தரவைப் பிறருக்குக் கடத்த முற்படுகிறோம். அப்படிக் கடத்தப்படும் இவை ஏதாவது ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை வாசகனுக்கு உண்டு. ஆனால் கலைஞனுக்கு இல்லை.

பா: என்ன? கலைஞனுக்கு அந்த நம்பிக்கை இல்லையா?

சீனி: நிச்சயமாக இல்லை. மாறவேண்டும் என்றா கலைஞன் எண்ணுகிறான். அதற்காகவா அவன் கலைப்படைப்பை உருவாக்குகிறான். அவனை ஒன்று தொந்தரவு செய்கிறது. தாளமுடியாமல் அவன் அதை வெளியில் தள்ளுகிறான். அவன் தன்னுடைய மகிழ்வைப் பெரும்பாலும் வெளிக்கொணர்வதில்லை. அவனைத் தொந்தரவு செய்யும் காரணிகளையே அவன் ஊடகத்தின் வழியாக வெளித்தள்ளுகிறான். அந்நேரத்தில் இன்னார் இப்படி ஆவார் அன்னார் பாதிக்கப்படுவார் என்றெல்லாம் அவன் சிந்திக்க மாட்டான். அது வெளிக்கொணரப்பட்ட விதத்தில் மொழிபில் அது சென்றுசேரும் இடத்தில் அதன் இரசிகனுக்கு வேண்டுமானால் அது நம்பிக்கையைக் கொடுக்கலாம். ஒரு கலைஞன் பெரும்பாலும் எந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் இயங்குவதில்லை.

பா: ‘விடம்பனம்’ என்றால் தொந்தரவு என்று அர்த்தம். இந்த நாவலுக்கு ‘விடம்பனம்’ என்று பெயர் வைத்ததற்குக்கூட அதுதான் காரணமாக இருக்கமுடியுமோ?

சீனி: அதுவும் ஒரு காரணம். வாசகர்கள் அதை அவ்வாறு புரிந்துகொள்ள ஒரு படைப்பு அனுமதிக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தின் அனைத்து எழுத்தாளர்களும் கையாண்டுள்ள ஒரு சொல் அது. மேலும் தஞ்சையில் அதிகம் புழக்கத்தில் உள்ள பிரபலமான சொல்லும் கூட. ஜானகிராமன், எம்.வி.வி., கரிச்சான் குஞ்சு, தஞ்சை பிரகாஷ், கல்கி என எல்லோரும் பயன்படுத்திய ஒரு சொல்தான் அது. நமது பி.எஸ். ராமையாவை ஒரு பேட்டியில் இப்படிக் கேட்கிறார்கள்: ”நீங்கள் ஏன் ஒரு விடம்பன எழுத்தாளராக இருக்கிறீர்கள்?” என்று. கீழ்த்தஞ்சையில் தொடங்கி விரியும் இந்நாவலுக்கு இத்தலைப்பு பொருத்தமாக இருந்தது. அதற்குப் பல அர்த்தங்கள் உள்ளன. சற்று ஆழமாகப் பார்த்தால் அவை அனைத்தும் இப்படைப்புக்குப் பொருந்தி வரும்.

பா: வடிவ வகையில் தமிழுக்கு ‘விடம்பனம்’ மிகவும் புதியது. இதற்குமுன் தமிழில் கையாளப்படாத வடிவத்தைக் கொண்டுள்ளது. இந்த வடிவத்தைக் கையாளவேண்டிய தேவை என்ன?

சீனி: சிறந்த உள்ளீடுள்ள ஒரு படைப்பு நல்ல வடிவம் கொண்டுள்ளபோது அதன் ஆழம் பன்மடங்காக உயர்வதை நாம் பார்க்கிறோம். நியாயமாக நாலாயிரம் அல்லது ஐயாயிரம் பக்கங்கள் சென்றிருக்கவேண்டிய படைப்பு இது. இந்த வடிவத்தைக் கையாள்கிறபோது அந்த ஐயாயிரம் பக்கங்களில் சொல்லப்படவேண்டியவற்றை ஐநூறு பக்கங்களுக்குள் சொல்லி முடித்துவிடலாம். ஆனால் இது வாசகனது உழைப்பைக்கோரும் ஒரு படைப்பு. மீண்டும் மீண்டும் வாசிப்புக்குட்படுத்தும்போது அந்த ஐநூறு பக்கங்கள் ஐயாயிரம் பக்கங்களாக விரியும் மாயம் அவ்விடம் நிகழும்.

பா: இன்றைய நிலையில் ஒரு கலைஞன் எவ்விதம் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

சீனி: நிலையான கோட்பாடென்றெல்லாம் ஒன்றும் இல்லை. எதுவும் நிலைத்திருந்தால் அதில் பொருளிருக்காது. அதனுள் ஓர் அசைவு இருந்துகொண்டே இருக்கவேண்டும். நான் நம்புவது இதைத்தான். ஒரு கலைஞன் தான் உணர்ந்தவற்றை உணர்ந்தவாறே அதன் பார்வையாளனுக்கோ வாசகனுக்கோ கடத்த வேண்டும். இன்றைய நிலையில் அதுதான் சாத்தியமும்கூட.