சப்வே பொங்கல்

சப்வே பொங்கல்

கவிதை:- முத்துராசா குமார்

முப்பாலர்களில் எவர் இடித்துக் கொண்டு விழுந்தாலும்
எதுவும் சொல்லாமல் எழுந்து வேகமாய் நடக்கும்
பொங்கல் கால கும்பல்களிடையே
மின்சாரம் சட்டென்று ஒளிந்து கொண்டதால்
மெழுகுவர்த்திக்கு தீ வைத்துவிட்டு  வாட்டமாய்
கால் நீட்டி அமரப் பார்க்கிறேன்

நகரும் நெரிசல்கள் என்னையே
ரசித்துப் பார்ப்பதாய்  நினைத்து
தலைமுடியை  வகிடெடுத்து வாரிய சிரித்த முகம்
கொஞ்சாமாவது ஒட்டியிருக்குமே என்று
உடைந்த கண்ணாடித் துண்டின் ரசத்தை
பாழடைந்த நகங்களால் பிராண்டுகிறேன்

பாரபட்சம் பாராமல் சோத்தாங்கை நொட்டாங்கையை
மாறிமாறி நாசித்துவாரங்களில் வைத்து
கடைசியாய் சாப்பிட்ட சோற்றின்
வாடையை மூச்சிழுத்து மூச்சிழுத்து
ஏப்ப பசியாறுகிறேன்

பண்டிகைக்கால சிரிப்புகளுடன் உறவுகளாய்
நடந்து செல்பவர்களின் நடுவே
எனது வலது கையில் பச்சை குத்திய அவளது
அழகான  பெயரை  அழுக்குகள் அகற்றி
எங்கு இருக்கிறாளோ என இதமாய்
தடவிப் பார்க்கிறேன்

பாலீத்தீன் பைகளில் வண்ண வண்ணக்
கோலப்பொடிகளை அடைத்து
விற்பவளின் மடியில் மார்கழி குளிர் பொறுக்காமல்
சுருண்டு படுத்திருக்கும் சட்டையில்லா
மகனிடமிருந்து தாய் மடி
கதகதப்பை அடைகிறேன்

தகரத்தட்டில் கிடக்கும்
ஐந்தாறு சில்லரைகளிலுள்ள
ஆண்டுகளில் கடந்த கால
ஆனந்த பொழுதுகளை
உற்றுப் பார்க்கிறேன்

பிளாஸ்டிக் கப்பின் செஞ்சூட்டுத் தேநீரை
படுவேகமாய் அருந்தி விட்டு
இருக்கின்ற சில்லரைகளையே
திரும்ப திரும்ப எண்ணுகிறேன்

கஷ்டங்கள் குரல்வளை நெறித்தாலும்
பிச்சை போடுங்கள் என
உள்நாக்கு அலற மறுப்பதால் கைகளை மட்டும் நீட்டி
தலை குனிந்து பார்வையை ஓரமாய் குவிக்கையில்
கிழிந்த பையில் தெரியும் என் பூர்வீக ஊரின் பெயரையே
இமைகள் அசையாமல் பார்க்கிறேன்

கைப்பேசியில் பேசிக்கொண்டு
தடதடவென்று ஓடிக்கொண்டே
தானமிட்டவரின் ஐந்து ரூபாய்த்தாளில்
காந்தியின் கண்ணாடி உடைந்திருக்கிறதா இல்லையா என்று
திடீரென முகம் காட்டிய சுரங்கப்பாதை மின் விளக்கு முன்
தூக்கிப் பிடித்துப் பார்க்கிறேன்

நாள் முழுக்க நின்று நான்கு கைகளை நீட்டி காசு கேட்கும்
கண் தெரியாத தம்பதிகளின் கருப்பு கண்ணாடிகளையும்
கண்ணாடிகளுக்குள் இருக்கும் இருளையும்
வெளிச்சத்திலிருந்து வெறிக்கிறேன்

கைகள் நடுங்க கருப்பட்டிகள் விற்பவள்
கட்டணக் கழிவறைக்குச் செல்ல சில்லரைகள் இல்லாததால்
செல்லுபடி  சில்லரைகள் கொடுத்தனுப்பிவிட்டு
கொஞ்சநேரம் பொங்கல் குரலெடுத்து வியாபாரம்
பார்க்கிறேன்

நேற்று வரை பீங்கான் பாத்திரங்கள் விற்று இன்று
மண்பானைகள் விற்கும் மதுரைக்காரனுக்கும்
மணிப்பர்சுகள் விற்பவனுக்கும்
மாளாத மனக்கசப்புகள்

நேற்று வரை மிளகாய்பொடியிட்ட நெல்லிகள் விற்று
இன்று கூறுப்போட்டு துண்டுக்கரும்புகள் விற்கும்
புகையிலைவாய்க்காரிக்கும்
சாமந்திப்பூ விற்பவருக்கும்
வாய்த்தகராறுகள்

நேற்று வரை காகிதத்தட்டுகள் விற்று
இன்று வாழை இலைகள் விற்கும்
வாய்பேச முடியாத தமிழரசனுக்கும்
மின்விளக்கு பூக்கள் விற்கும்
வடநாட்டுக்காரனுக்கும்
மல்லுக்கட்டுகள்

நேற்று வரை கைக்குட்டைகள் பொம்மைகள் விற்று
இன்று புத்தாடைகள் விற்கும் முச்சக்கர வாலிபனுக்கும்
அடர் நிற குங்குமங்கள் மஞ்சள் கிழங்குகள் விற்கும்
தாலி அறுக்கப்பட்டவளுக்கும்
பழைய காதல் பிரிவுகள்

நேற்று வரை செருப்புகள் தைத்துவிட்டு இன்று
சமோசா பார்ப்கான் விற்கும் கிழவனது புண்களில்
ஈக்கள் விரட்டும் கிழவிக்கும்
எடை காட்டும் இயந்திரம் முன்
உடல் மெலிய அமர்ந்திருக்கும் திருநங்கைக்கும்
தீராத வாக்குவாதங்கள்

எரிந்து எரிந்து இறக்கப் போகும் மெழுகினை
ஊதி அணைத்துவிட்டு
கழட்டிய கட்டை காலினை
மார்போடு கிடத்தி கைகளால் இறுக்கி
சுவரின் பான்பராக் கறையினை
ஒற்றைக்கால் கட்டைவிரலால் சுரண்டிக் கொண்டே
பெருமூச்சு விட்டு யோசிக்கிறேன்

இவர்களையெல்லாம் ஒன்னு கூட்டி
எப்படி பொங்கலை
கொண்டாடுவதென!