தமிழ் சினிமாவில் அழகியல்

தொடர் : ‘தமிழ் சினிமாவில் அழகியல்
ஆசிரியர் : நிலவழகன் சுப்பையா
அத்தியாயம் 1 :தமிழ் குறும்படங்களில் கற்பழிக்கப்படும் திரைமொழி

 

Whale Valley – A case study

இந்த பதிவைப்படிக்கும் முன், கீழே உள்ள குறும்படத்தை பார்த்துவிட்டு வரவும். இந்த படம் இங்கு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இன்னொரு tabல் இதை திறந்து வைத்துக் கொள்ளவும். பல இடங்களை திரும்பச் சென்று பார்க்கவேண்டியது வரும்.

https://vimeo.com/61350155

தமிழ் சினிமாவில்தான் நம்மை நன்றாக வைத்து செய்துகொண்டிருக்கிறார்கள் என்று முகநூல் பக்கம் ஒதுங்கினால், இங்கே குறும்படங்களை வைத்து ஓட ஓட விட்டுச் சாத்துகிறார்கள்.பெரும்பாலும் இந்த குறும்படங்களைக் கண்டாலே தெறித்துவிடுவேன் என்றாலும், சில நேரம் மிகவும் மதிப்பிற்குரிய நண்பர்கள் WoW..! Awesome..!! என்றெல்லாம் சிலாகித்து ஒரு குறும்படத்தை share செய்யும் பொழுது நானும் நம்பிப்பார்த்து நொந்துபோவதுண்டு. Short film என்கிறீர்களே shortஆ இருக்கு சரி. Film எங்கடா? என்று புலம்பிகொண்டிருப்பேன்.

 

நீங்கள் பார்த்த இந்த “Icelandic” குறும்படம் கடந்த வருடம் Cannes ல் திரையிடப்பட்டது. ஒருவேளை இந்தக்குறும்படத்தைக் கூர்ந்து ஆய்வதன் மூலம் நம் தமிழ் குறும்படங்களில் என்னென்ன சிக்கல்கள் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முயல்வோம். ஒவ்வொரு உருவாக்க நுட்பங்களின் வழியாக உங்களுக்கு இந்தப் படத்தை அறிமுகப்படுத்தி, “இது ஏன் ஒரு காவியம்?”என்று விவரிக்க முயல்கிறேன்.

 

Editing:
நம் படங்களில் சுத்தமாகப் புரிதல் இல்லாமல் செய்யப்படுவது எடிட்டிங் தான். நான் பார்த்த வரை காட்சிகளை சம்பந்தம் இல்லாமல் ஒட்டி கதையை நகர்த்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே தெரியும். அதற்கு பின்னால் எந்த காரண காரியமும் இருப்பது தென்படாது. இந்தப் படத்தில் ஒவ்வொரு கட் கொடுக்கப்பட்ட இடங்களுமே, முன்னரே முடிவு செய்யப்பட்டு அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. முன்னரே நீங்கள் முடிவுசெய்யவில்லை என்றால் தேவையான shots கிடைக்காது. பிறகு edit செய்து கொள்ளலாம் என்ற அலட்சியாமான போக்குதான் உங்களின் முதல் தவறு.

1.45ல் கவனியுங்கள் அந்த long shotல் அண்ணன் Arnar தம்பி Ivar ஐ துரத்துகிறான் அவனைப்பிடித்து விழும் அந்த motion னிலேயே shot close-up-ற்கு கட் செய்யப்படுகிறது. என்ன அருமை! “சினிமாவில் எப்போது close-up ல் செல்வது? எப்படிச் செல்வது? என்பது ஒரு பெரிய சூட்சுமம்” என்று, பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் சொல்லக்கேட்டிருப்பீர்கள்.எவ்வளவு அருமையாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறான் பாருங்கள்.

5.44ல் ஒரு அருமையான continuity editing-ற்கு உதாரணம். அந்த கார் ஒரு மலையின் வழிப்பாதையில் சென்றுகொண்டிருப்பதைக் கேமரா wide angleல் அவதானிக்கிறது, இப்போது அது வாகன ஓட்டியான தந்தைக்கு close upல் கட் செய்யப்பட்டும்போது நகர்ந்து கொண்டு இருக்கும் அந்த காரில்தான் அவர் இருக்கிறார் என்று தெளிவாக புரிந்து கொள்வீர்கள். அவர் மெதுவாகப் பின் திரும்பி தன் மகன் என்ன செய்கிறான் என்று பார்க்கிறார். அவர் கதவைத் திறந்த உடன் அது Ivarரின் close upல் போய் நிற்கிறது. இங்கு அவரின் பார்வை செல்லும் திசைதான் அடுத்த கட்டிற்கு motivation. Ivar தன் கேசம் காற்றில் பறக்க அந்தப் பயணத்தை இசையோடு சேர்த்து அனுபவித்து மகிழ்கிறான்.

தன் தலையைத் திருப்பித் தன் அண்ணன் என்ன செய்கிறான் என்று பார்கிறான்.அவன் கண்களின் வழியாக shot இப்போது Arnarன் பின்தலையைக் காட்டுகிறது. அவன் சோகமாக வேடிக்கை பார்த்துகொண்டு வருகிறான்.இங்கே space எவ்வாறு அழகாக படிப்படியாக நகர்த்தப்பட்டு, shotன் அளவும் அது செல்லும் பாதையும் தெளிவு படுத்தப்படுகிறது பாருங்கள்.

9.06ல் Ivar சோகமாக தனிமையில் ஆழ்ந்திருக்கும் அந்த நேரத்தில் அந்த குதிரைகள் ஒரு தேவ தூதுவர்கள் போல வந்து சேர்கின்றன. காட்சி இப்போது wide shotல் உள்ளது. Ivar மெதுவாக எழுந்து குதிரைகளிடம் செல்கிறான். அவன் நடக்கும் போதே motionல் அவன் முகத்திற்க்கு mid close upல் கட் செய்யப்படுகிறது. 180° விதி மீறப்பட்டாலும் முன்னரே wide angleல் களம் establish செய்யப்பட்டு விட்டதால், திசையை குழப்பம் இல்லாமல் புரிந்து கொள்கிறீர்கள். இப்போது, என்ன செய்யபோகிறான்?என்ற ஆவல் தொற்றிக்கொள்கிறது. கைய வீசிக் கத்துகிறான். அந்த கையின் அசைவில் காட்சி wide angleல் இருந்த இடத்திற்கே வந்து சேர்க்கிறது.”There was a beginning, middle and an end”. அவன் குதிரைகளின் அண்டுதலைக்கூட விரும்பவில்லை என்னும் அவன் மனநிலை மூன்றே shotகளில் சொல்லப்பட்டுவிட்டது. இதுதான் நேர்த்தியான திரைமொழி. இப்படி ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு காரணமோ, அழகியலோ உணர்வுகளின் நோக்கமோ இல்லாமல்,ஒரு கட் கூட செய்யப்படவில்லை.

இன்னொரு இடத்தில் உயிரை உறைய வைக்கும் ஒரு கட். 10.45 Ivar தூக்கில் தொங்குவது போல அண்ணனை ஏமாற்ற நினைக்கிறான். இந்த காட்சி close up ல் ஆரம்பிக்க ஒரு காரணம் உண்டு. இப்போது அண்ணன் கிட்டே வருவதற்கு முன்னரே சற்றும் எதிர்பாராமல் மரப்பெட்டி வழுக்கி கயிறு இறுக்குகிறது. மரப்பெட்டி உடைந்து வழுக்கும் அந்தத் தருணம் அவன் கால் தரையில் படாமல் தொங்குவதை mid range shotற்கு படக்கென்று கட் செய்யப்படும்போது நீங்கள் பதறிப்போய் இருப்பீர்கள். இதை வேறு எப்படிச் செய்திருந்தாலும் அந்தப் பதற்றம் வராது. இதைத்தான்யா நான் கூப்பாடு போட்டு “சினிமா சினிமா” என்று கதறுகிறேன்.

இப்படி இந்த படத்தில் ஒவ்வொரு காட்சித்துண்டுகளுமே முன்னரே முடிவு செய்யப்பட்டு நேர்த்தியாக அழகாகக்கப்பட்டு இருக்கும்.கூர்ந்து கவனியுங்கள். நிறைய காட்சிகளில் Ivarனுடைய முகத்திலேயே படம் இருக்கும்.அவன் முகத்தில் செலவழிக்கப்பட்ட நேரம்தான் இந்தப்படத்தின் ஆன்மா.எந்த கதாபாத்திரத்தோடு உங்களை ஒன்ற வைக்க வேண்டுமோ அந்த கதாபாத்திரத்தின் reaction shotsஐ தேவையான அளவு வெட்டுவதன் மூலம் வார்த்தைகளில் சொல்லாமலேயே உணர்வுகளைக் கடத்த முடியும். ஒரு படத்தை இப்படி பார்த்துப் பார்த்து சிற்பம் போல செதுக்க வேண்டும்.

 

Camera :
படம் முதற்காட்சியில் pan செய்து ஆரம்பித்த போது, நான் கூட என்னடா இந்த காலத்தில் pan செய்து கொண்டு இருக்கான் மாங்கா மடையனாக இருப்பான் போலயே என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, செம்மையாக கொண்டு போய் நிறுத்தினான் பாருங்கள் தூக்கு கயிற்றில்…அரண்டு விட்டேன் !! ஒரு சுழற்சியில் establish செய்து அந்த காட்சிக்கு ஒரு கச்சிதமான முடிவும் கொடுக்கிறான். இதைத்தான் ஒரு செம்ம படம்ன்றது. இங்கு ஒரே கல்லில் அவன் ஒரு குலை மாங்காய் அடித்திருக்கிறான்.

Ivar 11.42ல் கயிற்றில் இறுக்கிப் போராடும் அந்தக் காட்சியை நாம் என்ன செய்வோம். கழுத்தையும் மூஞ்சியையும் காமித்து உணர்வுகளைப் பிழி பிழி என்று பிழிவோம். ஆனால் இங்கு கேமரா பின்தலையில் உள்ளது. அவன் கயிற்றை அவிழ்த்து இறக்கும் வரை இந்தக் கோணம் ஒரு இனம் புரியாத பதற்றத்தை ஏற்படுத்துகிறது. கோணம் சினிமாவில் எவ்வளவு முக்கியமான கருவி என்று காட்சிக்குக் காட்சி இந்தப் படம் நிருபிக்கின்றது. இந்தக் கோணத்தின் வாயிலாக அந்தச் சிறுவனின் கழுத்தில் கயிறைப் போட்டு அவனை நடிக்க வைக்க வேண்டிய சிரமமும் தவிர்க்கப்பட்டு விட்டது.

மேலும் கேமரா எவ்வாறு ஒரு தென்றல் போல நிதானமாக அந்த நிலப்பரப்பை அவதானிக்கிறது பாருங்கள். இந்த படம் tripod, handheldஐ வைத்தே முடிக்கப்பட்டு விட்டது.இந்த Dolly, Steadycam, Gib, Drone இதையெல்லாம் வைத்துக்கொண்டு நீங்கள் பண்ணும் அலப்பறைகளை என்னவென்று சொல்வது? அதுகூட பரவாயில்லை. “ப்ரோ படம் கொஞ்சம் நல்லா இல்லையே” என்று நாம் சொன்னால், “ப்ரோ…ஆமா ப்ரோ நெறைய பட்ஜெட் restrictions.. இல்லன்னு வைங்க, 2001 space odysseyதான் பண்ணி இருக்க வேண்டியது just miss ஆயிருச்சு” என்று நீங்கள் அவிழ்த்து விடும்போது எனக்கு நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருக்கும்.

முக்கியமாக இந்த படத்தில் color gradingஐ கவனியுங்கள் எவ்வளவு saturated ஆக செய்யபட்டுள்ளது. நம்ம சைதாப்பேட்டையையே மார்கழி கோலம் போல கலர் அடித்து வைக்கும் உங்கள் கையில், Iceland கிடைத்தால் வானவில்லின் ஏழு நிறைகளையும் அல்லவா பூசி வைப்பீர்கள்? முதலில் வண்ணங்கள் நம் எண்ணங்களோடு எவ்வாறு வேலை செய்கிறது என்று வண்ணக்கோட்பாடுகளைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஓவியங்களைப்பாருங்கள், சுற்றமும் புறமும் தலையை திருப்பி ஒளியையும் வண்ணங்களையும் அவதானியுங்கள், உள்வாங்குங்கள்.

 

Sound:
யோவ்..!! சத்தியமா சவுண்ட் பத்தி வண்டி வண்டியா கேக்கணும். ஒரு திரைப்படத்தில் dubசெய்வது அயோக்கியத்தனம் மட்டுமல்ல அது ஒரு வழக்கொழிந்த நுட்பம். இன்றைய உலக சினிமாவில் dub செய்யபட்டால் அது ஒரு பாவமாகவே பார்க்கப்படும். Short film ல ஏன்யா dub பண்றீங்க?

சரி, இந்த படத்தில் என்ன என்ன சப்தங்கள் மிகைப்படுத்தப்பட்டு உள்ளது?என்ன சப்தங்கள் ஒலிகுறைத்து வைக்கப்பட்டுள்ளது? என்பதை கவனித்தாலே சப்தம் எவ்வாறு ஒரு கதை சொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது விளங்கும். தமிழ் குறும்படங்களில் இரண்டே சப்தம் மட்டுமே கேட்கும். ஏற்கனவே எரிச்சலை கிளப்பும் horn சப்தமும் வாகன சப்தமும். அதான் தினமும் கேட்டு சாகிறோமே! அது எவ்வாறு உங்கள் படத்துக்கு உதவுதுன்னு யோசிங்கய்யா! தேவையென்றால் பயன்படுத்துங்க.அப்புறம் குருவிச் சத்தம், நிசமாச் சொல்லு உங்க வீட்டாண்ட அம்புட்டு குருவியா இருக்கு?? கொன்றுவேன் ராஸ்கல்.

இந்த படத்தின் இறுதி காட்சி எவ்வாறு அண்ணன் தம்பியின் இணக்கமான மூச்சுக் காற்றில் முடிகிறது என்று கவனியுங்கள். நான் கூட அடிக்கடி நினைப்பேன் “மூச்சே விடாத ஒரு சினிமா தமிழ் சினிமா” என்று. எந்த படத்திலும் நான் மூச்சுக் காற்றைக் கேட்டதே இல்லை. அம்புட்டு பிளாஸ்டிக்கா படம் பண்றீங்கடா.

தொழில்நுட்ப விசயங்களைத் தாண்டி இந்த படம் எவ்வாறு உணர்வுத் தளத்தில் பயணிக்கிறது என்று கவனியுங்கள். எவ்வளவு குறைவாகப் பேசுகின்றது என்று கவனியுங்கள்.காட்சிகளாகவே கதை எவ்வாறு சொல்லப்படுகிறது என்று சிந்தியுங்கள். கதாப்பாத்திரங்களுக்குள் இருக்கும் உறவுநிலைகள் எவ்வாறு அழகாக வெளிப்படுகிறது பாருங்கள். இதையெல்லாம் உற்று கவனித்தாலே போதும், நிறைய கற்றுக்கொள்ளலாம்.

 

முனைப்பு:


இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் காட்சி இல்லாமலேயே இந்தக் கதை நேர்த்தியாக வேலை செய்யும். இருப்பினும், இந்த இயக்குனர் அப்படி ஒரு திமிங்கலம் கரை ஒதுங்குவதற்காக ஓராண்டு காத்திருந்திருக்கிறார். Iceland முழுக்க தேடி அலைந்திருக்கிறார். அந்த காட்சி இவர்களின் நிலப்பரப்பு, வாழ்கை முறை இப்படி பலவற்றைச் சொல்லாமல் சொல்லிச்செல்கிறது. அந்த முனைப்பு எப்போதுமே வேண்டும். இல்லையென்றால் ஒரு படைப்பாளிக்கும் வாசகனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த முனைப்பு ஒவ்வொன்றிலும் வெளிப்படும் போது உங்களின் படம் தானாகவே அருமையாக வரும். இதற்குப்பின் பல கதைகள் உள்ளன. அதை இயக்குனரின் இந்த பேட்டியில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த இயக்குனரின் தெளிவில் பாதி உங்களுக்கு உள்ளதா என்று ஒரு சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள்.

https://vimeo.com/blog/post/staff-pick-premiere-whale-valley

இறுதியாக, மேற்சொன்ன உதாரணங்கள் எல்லாம் சினிமாவின் அரிச்சுவடிகள். இதெல்லாம் முன்னரே ஓரளவாவது உங்களுக்கு தெரிந்து இருந்தால் நீங்கள் ஒரு படம் செய்ய தயாராக இருகிறீர்கள்.இல்லையென்றால் முதலில் சில வருடங்கள் இலக்கியம், நல்ல உலக சினிமா, சினிமா சார்த்த பேட்டிகள், புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் இவற்றை படிப்பதில் செலவு செய்யுங்கள். இதையெல்லாம் செய்தால், உங்களின் அடுத்த படைப்பு வேறு தளத்தில் போய் நிற்கும். இல்லையென்றால், நீங்கள் சினிமாவையும் எங்களையும் தொடர்ந்து கற்பழித்துக்கொண்டே இருப்பீர்கள் !!