தமிழ் சினிமாவில் அழகியல் – 4

தொடர் : தமிழ் சினிமாவில் அழகியல்
ஆசிரியர் : நிலவழகன் சுப்பையா
அத்தியாயம் 4 : சினிமாவில் கருவிகளும் உணர்வுகளும்

Requiem for a dream

ஒரு படைப்பாளிக்கு கதையை சொல்ல பல்வேறு ஊடகங்கள் இருக்கின்றன.  ஓவியமாக, கதையாக, பாடலாக இப்படி எந்த ஊடகத்தின் மூலமும் ஒரு கதையை, உணர்வை சொல்லலாம். சினிமாவை ஊடகமாக தேர்ந்தெடுத்தால், அந்தக் கதையை சொல்வதற்கான கருவிகளும் நுட்பங்களும் முற்றிலுமாக மாறுபடுகிறது. சினிமாவின் வரமும் சாபமும் அதுவே. சினிமாவில் ஒரு உணர்வை சொல்ல எண்ணற்ற கருவிகளை வேறு வேறு வகையில் மாற்றியமைக்க வேண்டி உள்ளது. கருவிகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக கலையைத்தான் படைத்துக்கொண்டு இருக்கிறோம் என்ற உணர்வில் நாம் எப்போதும் ஒன்றி இருக்க முடியாது. இயந்திரத்தனமாக வேலை செய்து கொண்டே ஒரு கலையையும் படைப்பது என்பது மிகப்பெரிய சவால்.

இந்த சவால்களைத் தாண்டி சினிமாவில் உணர்வை கடத்தும் வேலையை சரியாக செய்யும் இயக்குனர்கள் நம்மை எப்போதும் பிரம்மிக்க வைக்கிறார்கள். இந்த கட்டுரையில் Darren Aronofsky இயக்கிய Requiem for a dream படத்தில் பயன்படுத்தப்பட்ட சினிமாவின் மொழி அளவிலான நுட்பமும், இன்ன பிற தொழில் நுட்பங்களும் ஒரு உணர்வு ரீதியான நெகிழ்ச்சியான கதையை சொல்ல எவ்வாறு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று அலசுவோம்.

சினிமா ஆரம்ப நிலையில் இருந்து அதன் முழு வடிவத்தை வந்து அடைந்தவுடன், எடிட்டிங்கில் முக்கியமான இரண்டு தத்துவங்கள் உருவாகின. கவித்துவமான பரிசோதனைகள், மற்றொன்று கால மாற்றத்திற்கு ஏற்ற அவசரகதியிலான M-TV பாணி எடிட்டிங் முறை. உணர்வுப்பூர்வமான எடிட்டிங் என்ற தளத்தில் தர்கொவ்ஸ்கியின் படங்கள் உச்சமாக இருந்தன. அவரால் விஸ்தரிக்கபட்ட நுட்பங்கள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதைப்போல நவீன உலகின் நகரமயமாக்கலும் இயந்திர கதியிலான வாழ்க்கையும் சேர்ந்து நாம் உலகைப்பார்க்கும் விதத்தையே முற்றிலுமாக மாற்றிப்போட்டு விட்டதால், நம்மைச்சுற்றி நடக்கும் காட்சிகள் அனைத்துமே சீரற்று அதிவேகமாக இருப்பதை நம் கண்கள் பார்க்கப் பழகி விட்டது. வாழ்வியல் மாற்றங்கள் கலாச்சாரத்திலும் பிரதிபலிப்பது இயற்கையே. இந்த காலகட்டத்தில் நடனம் இசை என்று தொடங்கி இன்ன பிற காரணிகளும் சேர்ந்து கொள்ள, M-TV தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான வீடியோ இசை கோப்புகள் சினிமாவின் எடிட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இன்றைக்கு நாம் பார்க்கும் வணிகப்படங்கள் தொடங்கி பெரும்பாலான படங்கள் இந்த தாக்கத்தின் நீட்சியே. இந்த புதிய பாணி எடிட்டிங், சினிமாவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாற்றியது. இந்த பாணியில் உருவான நுட்பங்களில் செவ்வியல் நேர்த்தியை அடைந்த படம் Requiem for a dream.

Hubert Selby எழுதிய Requiem for a dream என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம், எதிர்காலத்தைப் பற்றிய பெரும் கனவுகளை சுமந்து நம்பிக்கையோடு இருக்கும் நான்கு கதாபாத்திரங்கள் தத்தம் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள தேர்ந்தெடுத்த பாதைகள் எவ்வாறு அவர்களின் வாழ்க்கையை சிதைக்கிறது என்பதை பேசுகிறது. ஒரு பெரும் அமெரிக்க கனவு வாழ்க்கைக்கான தேடல் எத்தகைய சுய அலைக்கழிப்புகளுக்கு சாமானியர்களை உட்படுத்துகிறது என்ற ஒரு வரிதான் கரு.

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறது. இந்த நான்கு முக்கிய பாத்திரங்களின் உலகம் தனித்தனி இணைக்கதைகளாக விரிந்து போதைப்பழக்கம் என்ற ஒற்றைப்புள்ளியில் ஒன்றினைகிறது. அதையே திரைக்கதையிலும் இணைப்புப் புள்ளியாக இயக்குனர் பயன்படுத்தி இருப்பது சுவாரஸ்யம். நான்கு பாத்திரங்களும் எதிர்காலத்தைபற்றிய வெவ்வேறு கனவுகளைக்கொண்டிருந்தாலும் அவர்களின் அக உலகம் கொடுமையான தனிமையால் அவதிப்படுகிறது. கனவுகளுக்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் அவசரகதியிலான வழிகள் அவர்களை சிறிது சிறிதாக சிதைப்பதை Impressionistic ஓவியத்தைப்போல பதிவு செய்யும் படம்தான் Requiem for a dream.

Hip Hop Montage:

எண்பதுகளில் Aronofsky நியூயார்க்கில் சிறுவனாக வளர்ந்து வந்த பொழுது hiphop இசையும் கலாச்சாரமும் உச்சத்தில் இருந்தது. துரிதமான இசையும் அதோடு சேர்ந்த வீடியோ வடிவங்களும் அன்றாடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்ததன் தாக்கம்தான் பின்னாட்களில் aronofsky இந்த montage உத்தியை உருவாக்க காரணமாக இருந்தது. சிறு சிறு காட்சித்துண்டுகளை சேர்த்து குட்டி கதைகளை சொல்வதை ஒரு கலையைப்போல செய்வதுதான் hiphop montage. ஒட்டுமொத்த படத்தில் திரைமொழியில் முக்கிய இணைப்பு புள்ளியாக இந்த குட்டி hiphop montage-கள் இருக்கும்.

https://www.youtube.com/watch?v=ZM1tpfSXQyU

படத்தில் நிகழும் பல்வேறு கதைகள் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவும் பொழுதும், பல காட்சிகளின் ஊடேயும் சில வினாடிகள் இதைபோன்ற காட்சிகள் மீண்டும் மீண்டும் வந்து செல்லும். இது போதையில் சிக்குண்டிருக்கும் அவர்களின் உலகம் எவ்வாறு ஒரே நடவடிக்கைகளைக் கொண்டதாக இருக்கிறது என்பதன் குறியீடென்று கொள்ளலாம். இந்த காட்சியை படத்தில் தனியாக பிரித்து விளங்கிக்கொள்வது சிரமம். இது சில வினாடிகள் நிகழும் சிறு சிறு காட்சித்துண்டுகளைக் கொண்ட கோர்வை.

இதில் சுவாரசியம் என்னவென்றால், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத இந்த காட்சிகள் காரணமில்லாமல் ஒன்று சேர்க்கப்பட்டவை போல தோன்றினாலும் அவை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது என்பது கூர்ந்து கவனித்தால் விளங்கும்- கடிக்கப்படும் ஹெராயின் பாக்கட், விரியும் செல்கள், எரியும் லைட்டர், போதை ஊசியின் சிரஞ்சு, விரியும் கருவிழி, உப்பும் பஞ்சு, ரத்தத்தில் நாளத்தில் கலக்கும் ஹெராயின். இப்படி போதை மருந்தை எடுத்துகொள்ளும் நடவடிக்கைகளைளுக்கு தொடர்புடைய சம்பவங்களின் கோர்வையே. படத்தில் இது சிறு சிறு மாற்றங்களோடு வேறு வேறு விதத்தில் பல்வேறு உட்கதைகளைக்கொண்டு வரும்.

https://www.youtube.com/watch?v=Zdlg-vYmpbA

முதல் முறை பார்த்த பொழுது எதேச்சையாக எடிட்டிங்கில் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், இயக்குனரின் இந்த பேச்சு அது எத்தகைய திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டது என்பதை விளக்குகிறது. ஒவ்வொரு வினாடியிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒலிகள் கூட பல மாதங்கள் உழைத்து பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு சில வினாடிக் கோர்வைகளிலும் ஒரு கதை சொல்லப்பட்டு இருக்கிறது. இங்கு எடிட்டிங் வெறும் ஸ்டைல் என்பதைத் தாண்டி கதையின் அடர்த்திக்கு பயன்படும் விதம் அற்புதம். இந்த காட்சிகள் எல்லாம் முன்னரே storyboard ஆக வரையப்பட்டு இருப்பதையும் இந்த காணொளியில் கவனிக்கலாம். ஒரு படத்தை இந்த அளவிற்கு முன்னரே கற்பனை செய்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

Micro கதைகள் :

படத்தில் இடம்பெற்ற முக்கியமான இந்த hiphop montage-ல் 1:01 – 1:07 இடைப்பட்ட நிமிடங்களில்களில் வரும் ஒன்பது சிறு காட்சிகள், பல்வேறு அழகியலோடும் குறியீடுகளோடும் உருவாக்கப்பட்டவை. அந்த ஒன்பது காட்சிகளில் இருக்கும் நுணுக்கங்களைப்பிரித்து ஆராய்வோம்.

https://www.youtube.com/watch?v=U-JAuw8FsrA

 1. மூவரும் தாங்கள் மொத்தமாக வாங்கி கூறுபோட்டு விற்கப்போகும் ஹெராயின் மேஜையின் மேல் கொட்டப்பட்டு இருக்க, மேலிருந்து கேமரா அவர்களின் கையை மட்டும் படம்பிடிக்கிறது, அவர்களின் அந்த துரிதகெதியிலான வேலை ஓய்வின்றி ரீங்காரமிடும் ஈக்களின் சப்தத்தோடு ஒன்றுசேர்க்கப்பட்டு இருக்கிறது. அந்த சப்தம் பாத்திரங்களின் பொறுமையின்மையையும் அவசரத்தையும் குறிக்கிறது. வெறும் கைகள் மட்டும் காட்டப்படும் விதம், அங்கு ஹெராயின்தான் முக்கிய பாத்திரம், அதை கையாளும் இவர்கள் அடையாளமற்றவர்கள் அல்லது அடையாளமற்று போக போகிறவர்கள் என்பதன் குறியீடாகவும் இருக்கிறது.
 2. அடுத்தது ஹாரி அதை விற்க ஆளற்ற கடைதெருவில் நிற்கிறான். இங்கு தெளிவில்லாமல் கேட்கும் fluorescent விளக்கின் சப்தம் அனுபவமின்றி போதை மருந்தை விற்க முற்படும் அவனின் இருப்புகொள்ளா தன்மையின் குறியீடாக இருக்கிறது.
 3. இங்கு ஹெராயின் கைமாற்றப்படுகிறது, பெரும்பாலும் போதை மருந்துகள் கைமாற்றப்படும்போது கண்கள் பார்துக்கொள்வதில்லை தானே. வாங்குபவனுக்கும் விற்பவனுக்கும் அந்த வஸ்துக்களைதாண்டி எந்த உறவுகளும் தேவைகளும் இருப்பதில்லை. அதனாலேயே கேமரா closeup-ல் அதைக்காட்டுகிறது. அதே போல துரிதகெதியில் நடக்கும் அந்த காட்சியை கீச்சிடும் இசைத்தட்டின் சப்தத்தை கொண்டு நிரப்பப்பட்டு இருக்கிறது.
 4. நடந்த வியாபாரத்திற்கான பணம் வாங்கி பாக்கட்டில் சொருகப்படும் பொழுது, closeup-ல் இருக்கும் அந்த காட்சிக்கு, சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும் கல்லா பெட்டியின் மூடும் சப்தம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
 5. அடுத்து வரும் காட்சியில், ஒரு தையல் இயந்திரம் நேர்த்தியாக துணியை தைத்துக்கொண்டு இருக்கிறது, இதற்கு முன்பு காட்டிய காட்சிகளுக்கும் இதற்கும் துளியும் தொடர்பு இல்லை. இது மரியோனின் ஆடைவடிவமைப்பாளராக உருவாக வேண்டும் என்ற கனவைக் குறிக்கிறது. சப்தமும் எந்த மறைமுக குறியீடுமின்றி தையல் இயந்திரத்தின் சப்தமாகவே கேட்கிறது. இந்த படத்தில் இணைக்கதைகள், கிளைக்கதைகள், கனவுகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பிணைத்து சொல்லப்பட்டு இருப்பதைப்போல, அதே நுட்பத்தை இந்த ஏழு வினாடி கதைக்குள்ளும் அடக்கி திரைக்கதையின் ஒட்டுமொத்த வடிவத்திற்கு நேர்மையாக இருந்திருப்பது போற்றுதலுக்குரியது.
 6. காட்சி மீண்டும் போதை உலகத்திற்கு வருகிறது, டைரோன் வேறொரு போதை வியாபாரிக்கு கை கொடுத்து `naturally´ என்கிறான். இவர்கள் மீண்டும் மீண்டும் போதை உலகத்தோடு தொடர்பு கொண்டிருப்பதை  குறித்து ஒரு பயத்தை கிளருகிறது.
 7. அடுத்த காட்சி சற்றே சிந்திக்க வைக்கிறது. மரியோனும் ஹாரியும் முத்தமிடுகிறார்கள். இந்த காட்சி ஏனைய போதை காட்சிகளைப்போல closeup-ல் இருப்பது, அவர்களின் காதல் இந்த போதை உலகத்தில் சிக்குண்டு இருப்பதை குறிக்கிறது. இருவரின் காதலும் படத்தின் கிளைக்கதைகளில் ஒன்று என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
 8. இங்கு மரியோனும் ஹாரியும் தாங்கள் உருவாக்க நினைக்கும் ஆடை வடிவமைப்பு நிறுவனத்திற்காக தேர்ந்தெடுத்த இடத்தின் முன் நிற்கிறார்கள். அது ஒரு புகைப்படமாக காட்டப்படுகிறது அங்கு கேமராவின் கிளிக் சப்தம் கேட்கிறது. ஹெராயினை விற்று தங்கள் கனவை நிறைவேற்றிக்கொள்ள துடிக்கும் இருவரின் அந்த கனவு மற்ற காட்சிகளோடு சேர்க்கப்படும் பொழுது புதிய அர்த்தங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது.
 9. இறுதியாக ஆரம்பித்த முதல் காட்சிக்கே வந்து அந்த montage முடிகிறது. ஒரு சுழற்சியில் அவர்களின் உலகம் சிக்குண்டு இருப்பதை குறிப்பிட்டு இந்த குட்டி கதையை இயக்குனர் முடித்துக்கொள்கிறார்.

இந்த ஏழு வினாடியில் அடைக்கப்பட்ட ஒன்பது காட்சிகளில் சொல்லப்பட்ட விவரணைகளும் குறியீடுகளும் இவ்வளவு என்றால் படம் முழுவதையும் நாம் உடைத்துப்பார்த்தால் எத்தனை இருக்கும் என்பது வியப்பிலும் வியப்பு.

Darren Aronofsky-ன் இயக்கமும் Mathew Libotique-ன் ஒளிப்பதிவும்:

https://www.youtube.com/watch?v=2zGF_WD–Nk

அமெரிக்க சினிமாவை இன்னும் மரியாதையான இடத்தில் வைக்க காரணமாக இருக்கும் வெகு சில இயக்குனர்களுள் ஒருவர் Aronofsky. படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பாத்திரங்களின் அக புற உலகத்தை விஸ்தரிப்பதிலேயே அவரின் ஆளுமை விளங்கும். ஹாரி தன் தாயின் வீட்டில் போதை மருந்து வாங்க பணம் கேட்டு கிடைக்காமல், தொலைக்காட்சியை நண்பனோடு சேர்ந்து இழுத்துப்போகும் இந்த காட்சியில், ஹெராயின் வாங்க பணம் கிடைக்கப்போவதை நினைத்து பூரிப்பில் இருக்கும் ஹாரி மற்றும் டைரோனின் முகத்தில் ஆரம்பித்து, போதையில் சிக்குண்டவர்கள் சுயத்தை இழந்து நிலை தாழ்ந்து விடுவதை குறிக்க, எந்த வெட்கமும் இல்லமால் ஊரே பார்க்க அந்த தொலைகாட்சியை இழுத்துச்செல்லும் காட்சி wide angle-ல் படம்பிடிக்கப்பட்டிருக்கும்.

அதைப்போல இந்த கதையை காலத்தை கடந்து சொல்லிவிட விட வேண்டும் என்பதற்காக Newyork- Queens Island இயக்குனரால் கதைக்களமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிலப்பரப்பு எந்த கால மாற்றத்திற்குள்ளும் அடங்கிவிடாத ஒரு அழகியலை கொண்டது. wide angle-ல் காட்டப்படும் பின்னணியும், வடிவங்களுமே அதை உணர்த்தும்.

 

Split screen:

https://www.youtube.com/watch?v=09rIoDx-Tts

 

படத்தில் பயன்படுத்தப்பட்ட பலதரப்பட்ட உத்திகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நோக்கங்களுக்காக தீர்க்கமான காரணகாரியங்களோடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக மிகவும் பிரசித்திபெற்ற இந்த split screen எடிட்டிங், இந்த காட்சியில் ஹாரி தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டு போவதை வேண்டாம் என தடுக்க முடியாமல் போய், தாய் சாரா அடுத்த அறையில் கதவை தாளிட்டு கொண்டவுடனேயே திரை இரண்டாக உடைகிறது. இங்கு பல்வேறு சாத்தியங்கள் உருவாகின்றன. ஒரே ஷாட்டில் அடுத்தடுத்து இருக்கும் அறைகளை cut இல்லாமல் காட்ட முடிகிறது. சிறிய விரிசல் போல திரையில் அவர்களை பிரிக்கும் அந்த மெல்லிய கோடு அவர்களின் உறவில் இருக்கும் அந்த விரிசலைக் குறிப்பது போல இருக்கிறது. ஒரே இடத்தில் அவர்களின் உலகங்கள் இரண்டாக உடைந்து கிடக்கின்றன. அதேவேளையில் ஒரு நேர்த்தியான எடிட்டிங் உத்தியாகவும், உணர்வுகளைக் கடத்தவும் என பலவாறு பயன்படுகிறது.

அடுத்த split screen காட்சியில் ஹாரி மரியோனின் அருகிலேயே படுத்து அவளை வாஞ்சையாக தடவிக்கொண்டிருக்கிறான். விரல்கள் பரஸ்பரம் இருவரின் உடல் மீதும் காதலோடு தேடி தீண்டிக்கொண்டிருக்கின்றன. கேமரா இந்த காட்சியை மேலிருந்து பார்க்கிறது. அருகருகில் ஒட்டி படுத்திருக்கும் இருவருக்கும் இடையில் அப்படி திரை உடைக்கப்பட வேண்டியதில்லை. இருப்பினும் அவ்வாறு split செய்யப்படும் பொழுது இயல்பாகவே ஒரு நெருக்கத்தையும் தூரத்தையும் ஒரே நேரத்தில் உணர்கிறோம். இந்த அன்னியோன்யமான காதலையும் நெருக்கத்தையும் போதை என்ற புறக்காரணி இரண்டாக உடைப்பது போலவும் உணர்கிறோம். படத்தில் வெவ்வேறு இடத்தில் வரும் இந்த உத்தி, ஒவ்வொரு முறையும் வேறு வேறு உணர்வுகளை கடத்துகிறது.

பொதுவாக நூறு நிமிடம் ஓடக்கூடிய படத்தில் 600 முதல் 700 cuts வரை இருக்கும். இந்த படம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட cuts களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு அதிவேகமாக வெட்டும்பொழுது வடிவத்தை இழந்து விடுவது சுலபம். ஆனால் இங்கு அந்த அடர்த்தியே திரைமொழியாக அமைந்து விட்டது. கதைசொல்லலில் பரபரப்பிற்கு மட்டுமே தான் வேகமான இந்த எடிட்டிங் உத்தி என்பதை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு முறை எடிட்டிங்கின் வேகமும் நீளமும் கூட்டி குறைக்கப்படும் பொழுது, நம்முடைய உணர்வுகளும் அதோடு சேர்ந்து பலவாறு வளைக்கப்படுகிறது.

படத்தின் வடிவத்தில் முக்கியமான இன்னொரு அம்சம் ஒலி வடிவமைப்பு, படம் முழுக்க இசையும் சப்தங்களும்தான் எடிட்டிங்கின் அச்சாணி போல இருக்கிறது. இசையின் தாளவேகத்தில் தான் பெரும்பாலான cut கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒலி வடிவமைப்பில் சில சப்தங்கள் மிகவும் கூர்மையாகவும் சில தேய்ந்தும் இருக்கும். இவை இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக வரும் பொழுது, நாம் பார்த்துகொண்டிருக்கும் அந்த உலகம் கனவிற்கும் நனவிற்கும் இடையில் ஊஞ்சலாடுவது போல இருக்கிறது. அதேபோல சில சப்தங்கள் மட்டும் பிரித்து பெரிதாக பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த சின்ன சின்ன சப்தங்களை படம் முழுக்க கேட்டுகொண்டே இருக்கலாம். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் இந்த படத்திற்காக ஒரு புதிய ஒலி உலகமே தனியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

Camera rigs:

கேமரா பொருத்தும் rigs பலவாறு வடிவமைக்கப்பட்டு, அதன் மூலம் புதிய புதிய நகர்வுகளையும், அசைவுகளையும் உருவாக்கி இருந்தது இந்த படத்தின் காட்சிமொழியில் முக்கிய அங்கம்.

Aronofsky தன்னுடைய முதல் படத்திலேயே snorri cam பயன்படுத்தி இருப்பார். அதற்கு முன்பும் சில படங்களில் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், அதை எதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதும், இந்த வகை கேமரா ஏற்படுத்தும் அசைவும் கோணமும் எந்த வகை உணர்வை கடத்த பயன்படுகிறது என்பதும் சரியாக பிடிபடாமல் இருந்தது. உடலில் கட்டிய கேமரா கதாபாத்திரத்தின் முகத்தை படம்பிடிப்பதைப்போல இருப்பதுதான் snorri cam. இயல்புக்கு மாறான நாம் பார்த்திராத கோணத்தையும், கதாபாத்திரம் நடக்கும் போது வித்தியாசமான நகர்வையும் ஏற்படுத்தும் ஒரு கருவி snorri cam.

ஒரே கருவியை வைத்து பல்வேறான உணர்வுகளை ஏற்படுத்துவது aronofsky யின் முக்கியமான திறமைகளில் ஒன்று. Hip Hop montage-ஐ வைத்து படத்தில் பல்வேறு வகையான குட்டி கதைகளை சொல்வதும், Split screen உத்தியை வைத்து காட்சிகளுக்கு ஏற்ப புதிய சிந்தனைகளை உருவாக்குவதும் என்று தொடங்கி அதே ஆளுமையை ஒளிப்பதிவிலும் செயல்படுத்தியிருப்பார்.

https://www.youtube.com/watch?v=JlETkY6ogRg

முதல் காட்சியில் டைரோன் ஒரு துப்பாகிச்சூட்டில் இருந்து தலைதெறிக்க தப்பித்து ஓடுகிறான். அவன் மிரண்டு உயிர்ப்பிழைக்க ஓடும்பொழுது அவனின் உடம்பில் கட்டிய கேமரா பதைபதைப்பை பலமடங்கு பெருக்கி காட்ட பயன்படுகிறது.

இதன் சாத்தியம் அவ்வளவுதானா என்றால், இரண்டாவது காட்சியில் மரியோன் தன்னுடைய போதைப்பழக்கதிற்கு அடிமையாகி, ஹெராயின் கிடைக்காமல் போகும் பட்சத்தில், அவள் தன்னையே விபச்சாரத்திற்கு உட்படுத்திக்கொள்ளும் அந்த உருக்கமான காட்சிக்கு பின், அங்கிருந்து கூனிக் குறுகி வெளியேறுகிறாள். அவள் தலைகுனிந்து அவமானத்தில் நடந்து வருவது நம்முடைய பார்வையிலிருந்து படம் பிடிக்கபட்டிருக்கிறது. அவள் ஒரு முறை கூட கேமேராவை நேருக்கு நேர் பார்க்கவில்லை. நாம் மட்டும் அவளை உற்று நோக்கிக்கொண்டே இருக்கிறோம். அவமான உணர்ச்சியை திரையில் பலமடங்கு பெருக்கிக்காட்ட snorricam ஒரு சிறந்த கருவி என்பதை இந்த காட்சி உணர்த்துகிறது.

இதே கருவி , மூன்றாவது காட்சியில் கனவிற்கும் நனவிற்கும் இடையில் சிக்கி குழப்பமுற்று இருக்கும் சாராவின் உலகத்தை காட்டுகிறது. இந்த காட்சியின் அமைப்பும் கோணமும் நமக்கு அவளின் குழப்பிப்போன உலகத்தை அசலாக கொண்டு வருகிறது. Snorricam என்ற ஒரே கருவி மூன்று வெவ்வேறு காட்சிகளில் மூன்று வெவ்வேறு உணர்வுகளை தருகிறது. சினிமாவில் கருவிகளின் செயற்பாட்டை அறிந்திருத்தலைத்தாண்டி. அது கதையை காட்சிமொழியாக மாற்ற எவ்வாறு பயன்படும் என்பதை அறிந்திருத்தலே முக்கியம்.

இவர்கள் அதோடு தங்கள் பரீட்சார்த்த முயற்சிகளை ஒளிப்பதிவில் நிறுத்திக்கொள்ளவில்லை. கேமராவை பொருத்தும் முறையை எவ்வாறெல்லாம் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்து வெவ்வேறு உணர்வுகளை பரிமாற முடியும் என்றும் பரிசோதித்து இருக்கிறார்கள்.

சாரா உடல் எடையைக் குறைப்பதற்காக உட்கொள்ளும் மாத்திரைகள் பக்கவிளைவை ஏற்படுத்தி அவரை போதைபழக்கதிற்கு அடிமைப்படுத்தும். அவர் தன்னைச்சுற்றி நடக்காத பல்வேறு நிகழ்வுகளை hallucinate செய்ய ஆரம்பிப்பார். அவரை வாட்டும் பயமுறுத்தும் உருவங்கள் அந்த வீடு முழுக்க நடமாடும். அந்த உருவங்கள் சற்று நெளிந்து வளைந்து அவருக்கு தெரியும். இதை காட்சியாக படம்பிடிக்க பல்வேறு இடத்தில் ஒரு சூடான பல்பை காமெராவின் அருகில் வைத்து லென்சை சுற்றியுள்ள காற்றை வெப்பமாக்குவதன் மூலம். அப்படி வளைந்த சிதிலமடைந்த உருவங்கள் உருவாக்க பட்டிருகிறது. இதை Heat cam என்று பின்னர் அவர்களால் அழைக்கப்பட்டது.

போதை பழக்கம் உச்சத்திற்கு போய் மீட்க முடியாத நிலையில் சிறையில் இருக்கும் ஹாரி மற்றும் டைரோனின் உலகம் இன்னுமே பல வகையான அதிர்விற்கு உள்ளாகும், அவர்களுக்கு போதை மருந்து மறுக்கப்படும் பொழுது அவர்கள் உடல் துடிப்பதை படமாக்க, கேமராவை பல்வேறு அதிரும் கருவிகளைக்கொண்டு வேகமாக ஆட்டி படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இது vibrating cam என்று அழைக்க்கப்டுகிறது.

மனதைக்கவ்வும் இறுதி நிமிடங்கள்:

இப்போது படத்தின் இறுதிக்காட்சியில் ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங் என மூன்றும் எவ்வாறு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த உச்சபட்ச காட்சி ஒரு பெரும் உணர்வெழுச்சியை தருவதற்கான காரணத்தை, இந்த காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ள நுட்பங்களை உடைத்துப்பார்ப்பதன் மூலம் புரிந்துகொள்வோம்.

https://www.youtube.com/watch?v=ADJE5gat_W8

காட்சியின் ஆரம்பத்தில், மரியோன் தூரத்தில் கடற்கரையின் பாலத்தில் நிற்கிறாள். ஹாரி அவளை நோக்கி ஓடி வருகிறான் அவளை நெருங்கும் போது மரியோன் மறைந்து போகிராள். ஹாரி தனக்கு கீழே இருக்கும் உலகம் உடைந்து ஒரு பெரிய மாடியின் உயரத்தில் இருந்து இருண்ட தெருவில்  விழுவது போல உணர்வான். இதை காட்சியாக மாற்ற ஒரு கட்டிடத்தின் மேலிருந்து  கேமரா கயிற்றில் கட்டப்பட்டு வேகமாக விழ வைக்கப்பட்ட்டிருக்கிறது. தன் உலகத்தில் இருந்து நிலையற்று தடுமாறி ‘மரியோன்…’ என்று கதறிக்கொண்டே விழுவது, ஹாரியுடன் நாமும் சேர்ந்து விழுந்ததைப்போல இருக்கும். இதை Bungie jumping cam என்றழைக்கிறார்கள்.

இந்த காட்சியே படத்தின் இறுதி கட்டத்தின் ஆரம்பமாக இருக்கிறது, படம் எப்படி வெளிச்சமான நம்பிக்கையை தருவதைபோன்ற ஒளியுடன் ஆரம்பித்ததோ அதைப்போலவே இந்த காட்சியும் வெளிச்சமாக ஒளியூட்டப்பட்ட கனவுலகத்தை ஒத்து இருக்கிறது. மரியோன் மறைந்து ஹாரி இருண்ட பாதையில் விழுந்தவுடன் ஒரு இருண்மை சூழ்கிறது.

ஹாரி கண்ணைத்திறக்க, செவிலியரின் முகம் இருட்டில் இருந்து விடுபடுகிறது, படுக்கையில் இருக்கும் ஹாரியின் முகம் நிழலும் ஒளியும் கலந்து Chiaroscuro shadow lighting முறையில் ஒளியூட்டபட்டு இருப்பது அவனின் இயலாமையை அவனை சூழ்ந்து இருக்கும் இருண்மையை பன்மடங்கு கூட்டி காட்டுகிறது. இந்த முறை ஒளியூட்டல் Renaissance ஓவிய மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட நுட்பம். இப்போது பொலிவற்று வாடி ஏங்கி அழும் ஹாரியின் முகத்தில் இருந்து கேமெரா மேலெழும் போது, போதை ஊசிகளால் நோயுற்ற அவனின் ஒரு கை நீக்கப்பட்டு இருப்பதை அறிகிறோம். ஹாரி உருகி சிதைந்து அழுகிறான். ஒரு குழந்தையைப்போல வலுவற்றவனாக கனவுகளை இழந்தவனாக சுருங்கி போகிறான். அந்த காட்சியையும் இருண்மை சூழ்கிறது.

அதே இருட்டில் இருந்து மரியோன் ஒரு அறைக்குள் கதவைத்திறந்து நிற்கிறாள். கேமரா கீழிருந்து ஒரு dutch கோணத்தில் அவளை நிழல்சூழ்ந்து காட்டுகிறது.

அடுத்து காட்சி டைரோன் சிறையில் வேலைசெய்து அயர்ச்சியில் படுக்கைக்கு வரும் காட்சியை dutch கோணத்தில் காட்டுகிறது, அவனின் முகத்தையும் ஒரு இருண்ட ஒளியமைப்பில் பார்க்கிறோம்.

அந்த காட்சி அம்மா சாராவை பார்க்க வந்து மனநல மருத்துவமனையில் காத்திருக்கும் தோழிகளின் காட்சிக்கு மாறும் பொழுது, ஒளி வெளிச்சமாக இருக்கிறது. அங்கு வரும் சாராவை அதீதமான வெளிச்சத்தில் பார்க்கிறோம்.  சாராவின் முகம் சிகிச்சைகளால் சிதைந்து இருக்கிறது. அவளின் அந்த வாடிய முகத்தை அதிகமான ஒளியில் பார்ப்பது அத்தனை கடினமாக இருக்கிறது. இருள் போலவே வெளிச்சமும் அதே உணர்வை தருவது சிந்திக்க வைக்கிறது. அவளைப்பார்க்க வந்த தோழிகள் இருவரும் வெறுமை சூழ்ந்த சாராவின் முகத்தை பார்த்து கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.

அவர்களிடமிருந்து விலகும் கேமரா மரியோன் முகத்திற்கு மாறும்பொழுது அதே Chiaroscuro shadow-வில் அவளைப் பார்த்து மீண்டும் சூன்யமாக உணர்கிறோம். போதை மருந்துக்காக தன்னையே பணயம் வைத்து காமுகர்களால் சிதைக்கப்பட்டவள், அவர்களிடம் கிடைத்த போதை மருந்தை மட்டும் பார்த்து ஆசுவாசப்பட்டு மெல்லிய புன்னகை புரிகிறாள். அந்த புன்முறுவல் ஒரு பெரிய ஒப்பாரியை விட ஆழ்ந்த துக்கத்தை நமக்கு விட்டுச் செல்கிறது. கசக்கி எறியப்பட்ட மரியோன் சிக்குண்டு சுருங்குகிறாள். கேமரா மீண்டும் அவளின் பலவீனமான நிலையை மேலேந்து படம் பிடிக்கும் பொழுது அவளின் அருகில் கிழிந்து கிடக்கும் காகிதங்களில் அவளுடைய கனவுகளின் எச்சங்களை பார்க்கிறோம்.

காட்சி டைரோனின் முகத்திற்கு மாறுகிறது, அவனின் முகத்தையும்  Chiaroscuro shadow-வில் பார்க்கிறோம். கேமரா அவனையும் விட்டு மேல் எழுந்து போகும் பொழுது, தான் சிறு வயதில் அம்மாவின் மார்பில் படுத்து இருக்கும் நினைவுகளை நினைத்து ஏங்கி சுருங்குகிறான்.

அடுத்து படுக்கையில் சாராவின் முகத்திற்கு மாறும் ஷாட்டிலும் அதே Chiaroscuro shadow வில் அவளைப் பார்க்கிறோம். அவள் எதையோ நினைத்து புன்முறுவல் செய்கிறாள். அவள் நினைவுகளில் நிறைவேறாத அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி வந்து போகிறது. கனவுகளை இழந்து சுருங்கும் அவளையும் கேமரா மீண்டும் மேல் எழுந்து படம் பிடிக்கிறது.

நிறைவேறாத அவளின் கனவுகள் அவளின் கற்பனையில் மட்டும் நிறைவேறுவதைப்போல அந்த கடைசி காட்சியில் சாரா தொலைகாட்சி நிகழ்ச்சியில் தனக்கு பிடித்தமான சிகப்பு ஆடையை அணிந்து கலந்து கொள்கிறாள். அவளுடன் மகன் ஹாரியும் உடன் இருக்கிறான்.

நிராசைகளுடன் படம் முடிந்து திரை இருள்கிறது. நான்கு எளிய மனிதர்களின் கனவுக்கான ஒப்பாரியை மட்டும் Clint Mansell-ன் இசை ஓலமாக ஒலிக்கச்செய்து கொண்டே இருக்கிறது.

வெறும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கதை என்று சுருக்கிவிடமுடியாதபடி நம்முடையை இயல்பான ஆசைகள்கூட நம்முடைய அழிவிற்கு காரணமாகலாம் என்ற தளத்தையும் தொட்டுச்செல்வதும், இதெல்லாம் வெறும் கருத்துக்களாக மட்டுமன்றி காட்சிகளாக படங்களாக நம் மனதில் பதிய, இந்த படத்தின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய புரிதல் இயக்குனருக்கு இருந்ததுதான் காரணம். இத்தகைய புரிதல் தமிழ் சினிமாவில் படைப்பாளிகளிடம் ஏற்படும் பொழுது, ஓரளவு நம்முடைய சினிமாவின் தரம் உயர்ந்து இருக்கும்.

 

References:

 1. Analysis of cinematography and editing used in the final sequence of Darren Aronofskyʼs “Requiem for a Dream” (2001) by Thomas Siu, Ashbourne College
 2. https://www.youtube.com/watch?v=B90F5Hwepxc&t=1068
 3. http://donatduke.blogspot.de/2009/11/much-of-darren-aronofskys-film-requiem.html
 4. https://indiefilmhustle.com/darren-aronofskys-masterclass/
 5. http://thefilmspectrum.com/?p=18648
 6. http://moviemezzanine.com/the-darren-aronofsky-retrospective-requiem/

 

நன்றி: மகேஷ் ராகவன், அத்தியா (புல்புல் இசபெல்லா)