திரைக்காலம் – அத்தியாயம் – 1

திரைக்காலம்

குறுநாவல்:- உமா பார்வதி
கனவு – இந்தச் சொல் என்னை வசீகரிக்கும் ஓர் மாயச்சொல்.அதைப் பற்றி எழுதத் தொடங்கினால் அது முடிவிலி.

கனவு ஒரு மடைமாற்றி தப்பிக்கும் கலை. நம் மனத்தை திசை திருப்ப உதவும். சமயத்தில் அதுவே பிழைப்பை கெடுக்கும் கற்பனை நினைப்பாகவும் மாறும் .

கனவு என்பது மயக்கம். மனம் அதன் பல படிமங்களை ஒரு வெளிப்பாடாக இணைப்பதால் ஓடும் காட்சி . கனவு ஒரு மாற்று அனுபவம்,

தீதும் நன்றும் பிறர் தர வாரா ..நம்மைச் சுற்றி நடப்பவற்றுக்கு நாம் தான் பொறுப்பு. தவிர நம் கனவு முன்னேற்ற பாதையிலா அல்லது விரையமான ஒன்றிலா என்பதை எதாவது ஒரு கட்டத்தில் உணர வேண்டும்.விரையமான பாதையில் அதுவே தீவிரம் ஆகும் பொழுது, நாம் விரும்பாமலே புழங்கும் ஒரு நோயென மாறும். பொருந்தாத அனுசரிக்கத் தவறிய பகல்கனவு என்பார்கள் மருத்துவர்கள் . (MADD – Mal adaptive Day Dreaming) என்று ஒரு நிலை உண்டு .

கனவு ஒருபோதும் நிகழ்காலத்தில் இருக்காது.கண் திறந்து காண்பது மட்டும் கனவு இல்லை. கண்மூடி கற்பனை செய்வது கனவுக்குள் சேர்த்திதான்.ஒரு கனவுக்குள் இன்னொரு கனவு அதற்குள் வேறொன்று என தொடர்ச்சியாக இருந்தால் எந்தக் கனவில் இந்த நான் இருக்கிறேன்.அல்லது நான் என்ற ஒன்றே வெறொன்றின் கனவா?ப்ராய்ட்டை எத்தனை முறை படித்தாலும் கனவின் பலன்களை கண்டறிய முடிவதில்லை.நம் அறிவைத் தாண்டிய விஷயங்கள் எப்போதும் ஈர்ப்பாகவே உள்ளது.இதோ கனவைப் பற்றிய கவிதை ஒன்றினை நிகழ்கணத்தில் எழுதுகிறேன். கனவு இன்னும் தொடர்கிறது…

உன் கனவினுள் நுழைந்து ஒரு கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்

நீ மறந்த சாலையின் மரங்கள் என்னை வழிநடத்துகின்றன

பால்யத்தில் வரைந்த பட்டாம்பூச்சியின் நிறம் அப்படியே தான் உள்ளது

பதின் வயதில் நீ கடித்து மீதி தந்த பழங்கள் சுவையேறி

இங்கே கிடக்கின்றன அதில் ஒரு சிவப்பு ஆப்பிள்

என் கவனம் சிதறடிக்கிறது மங்காத ஏதோ ஒரு

மைக்கறை அதன் மீதிருந்தது ஆப்பிள்கள் பற்றி

இப்போது ஞானம் இருப்பதால் அங்கிருந்து விரைகிறேன்

வனம் முழுவதும் சுற்றியலைந்து வெளியேறி கடல் அடைந்தேன்

மணல் துகள்கள்முழுவதும் அனாதி காலமாக

நம்முடைய முத்தங்கள் மிதந்து கொண்டிருக்கிறது

காற்றின் கரங்கள் கொண்டு தொட்டுணர்கிறேன்

இதோ இக்கனவுக்குள் நீ!

சிந்தனை நூல் அறுபட்டு சட்டென்று எழுதுவதை நிறுத்தினாள் மாயா.அறைக்கதவை யாரோ தட்டுவது போல் சத்தம் கேட்க எழுந்து போய் திறந்தாள்.

எவ்வளவு நேரம் தட்டறது, அப்படி என்னம்மா பண்றே?’ என்று சாரதா அவளை செல்லமாக கடிந்து கொண்டாள்.

‘புதுசா ஒரு பத்திரிகை தொடங்கறாங்கம்மா… கட்டுரை கேட்டாங்க…எழுதிட்டு இருக்கேன்.இது சரியா வந்தா அனேகமா அங்க ஜாய்ன் பண்ணிடுவேன்.முதல் ட்ராஃப்ட் முடிச்சிட்டேன்.இன்னும் எழுதணும்’, என்றாள்.

‘சரிம்மா சாப்பிட்டுட்டு என்ன வேணா பண்ணு. மணியைப் பார்த்தியா பத்தரை. எட்டு மணிக்கு உள்ள போய் கதவை சாத்தினவ இவ்வளவு நேரமா வரலைன்னா என்ன பண்றது.சித்து முழுச்சிட்டான் அவனை முதல்ல கவனி’ என்றாள்.

‘இதோ வரேன்’ என்று எழுதிய தாள்களை டேபிளில் வைத்து பேனாவை அதன் மேல் வைத்தாள் மாயா.சித்துவை மடியில் வைத்து அம்மா சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.டேய் குட்டி என்று ஓடிப் போய் அவனைத் தூக்கிக் கொண்டாள்.அம்மாவைப் பார்த்ததும் சிணுங்கிக் கொண்டிருந்த சித்தார்த் அழத் தொடங்கினான்.’என் கன்னுக்குட்டிக்கு என்ன ஆச்சு?பசிக்குதா பாப்பாக்கு’ என்று கொஞ்சியபடி அம்மா கலந்து வைத்திருந்த செரலாக்கை அவனுக்கு ஊட்ட முயற்சித்தாள்.அவளுடைய நைட்டியின் காலரை கடித்தபடி சித்து சாப்பிட முரண்டு பிடித்தான்.ஒருவழியாய் அவனை சாப்பிட வைத்து மறுபடியும் தூங்க வைத்து தொட்டிலில் போட்டு விட்டு திரும்புவதற்குள் 11.30 ஆகிவிட்டது.அதன் பின் அவளுக்கு பசிக்கவில்லை.அல்லது பசி மரத்திருந்தது.சாரதா வற்புறுத்தியதால் இரண்டு தோசையை விழுங்கிவிட்டு ஒரு தம்ளர் பாலை குடித்தாள்.மீண்டும் அறைக்குள் சென்றாள்.அவளுடைய அறையின் நடுவில் கட்டில்.சுவர்களில் முழுவதும் அவளே வரைந்த ஓவியங்கள்.இடது பக்கத்தில் ஒரு புத்தக அலமாரி.அதன் மீது தியான நிலையில் வெண்ணிற புத்தர் சிலை.தேவையற்ற எந்த பொருள் இருப்பதும் மாயாவுக்குப் பிடிக்காது.டேபிளில் இருந்த தாள்களை எடுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.விட்ட இடத்திலிருந்து மீண்டும் எழுத ஆரம்பித்தாள்.

இம்முறை எழுத்து சரளமாக வந்தது.ஒரு மணி நேரத்தில் கட்டுரையை முழுவதும் முடித்திருந்தாள்.ஓரளவுக்கு திருப்தியாக வந்திருந்தது.ஆனால் என்னவோ ஒன்று இடித்தது.அது பெண்கள் சார்ந்த வணிகப் பத்திரிகை.அவர்கள் என்ன தலைப்பில் வேண்டுமானாலும் எழுதுங்கள் என்ற சுதந்திரத்தை தந்துவிட்டார்கள்.இது அவளுடைய எழுத்துத் திறனுக்கான சோதனை, பிரசுரிக்க இல்லை என்று தெரிந்தாலும் ஏதோ சிற்றிதழுக்கு எழுதுவது போல் எழுதிவிட்டோமோ என்று நினைத்தாள்.இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்தலாமா என்று யோசித்தபடி மணியைப் பார்க்க அது இரண்டு என்றது.உறக்கம் கண்களுக்குள் சுழல படுக்கையில் விழுந்தாள்.சித்துவின் குரல் சிணுங்கலாகக் கேட்க குழந்தையை எடுத்து தன் பக்கத்தில் போட்டுக் கொண்டு மெல்ல உறக்கத்தினுள் ஆழ்ந்தாள்.

மங்கலான வெளிச்சத்தில் அவள் ஏதோ எழுதிக் கொண்டிருக்க, யாரோ அவளை மென்மையான குரலில் ‘மாயா’ என்று அழைப்பது போலிருந்தது.சுற்று முற்றும் பார்க்க யாரும் இல்லை.மெல்லிய குரலில்மீண்டும் தெளிவாக அவள் பெயரைச் சொன்னது.யார் என்று குழம்பியபடி குனிந்தாள் அவள் எழுதிக் கொண்டிருந்த பேப்பர் தான் அவளை அழைத்திருந்தது.அதிர்ச்சியுடன் அதை உற்று நோக்க, அந்த தாள் அவளுடன் பேச ஆரம்பிக்கிறது.‘மாயா என்ன பாக்கறே….நீ எழுதி எழுதி வைச்ச சொற்களுக்கு வலிமை அதிகமாகி பேசும் திறன் வந்திருக்கு.இனிமே எழுதி வைச்ச எழுத்துக்கள் எல்லாம் பேச ஆரம்பிக்கப் போகும் காலம் தொடங்கியாச்சு, அதோட என்னுடைய அனுமதி இருந்தா தான் இது வெளி வரும்’ என்றது.அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.தலை சுற்றியது.இது எதாவது பேய்ச் சேட்டையா, நைட் லாம்ப் வேறு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.டியூப் லைட்டைப் போட எழுந்து நடக்க வேண்டும்.பயத்திலும் பதற்றத்திலும் அவள் செயலற்றுப் போனாள்.ஆனால் அந்தத் தாள் சும்மா இருக்கவில்லை.மீண்டும் பேச ஆரம்பித்தது.நீ எழுதறது எனக்கு சுத்தமா பிடிக்கலை.என்ன எழுதறே…கனா வினான்னு.உலகத்துக்கு சொல்ல எவ்வளவு விஷயம் இருக்கு?எதுக்கு இப்படி ஃபேண்டஸியில விழுந்து கிடக்கறே’ என்றது.மாயாவுக்கு இப்போது பயம் சற்று மறைந்து எரிச்சல் தோன்றியிருந்தது.இது பேசுவதே அதிர்ச்சி அதில் விமரிசனம் வேறு செய்கிறதே என்று தாளை தன் விரலால் மெள்ள தடவினாள்.

‘உன்னால எப்படி பேச முடியுதுன்னு முதல்ல சொல்லு’ என்றாள்.அவள் கேட்டதை அது கண்டு கொள்ளவே இல்லை.அது பாட்டுக்கு தொடர்ந்தது.‘எழுதறது முதல்ல எழுதறவனுக்குப் புரியணும்.நீ எழுதி வைச்சிருக்கியே ஒருஅரைகுறை கட்டுரை அதுல ஒன்றுடன் ஒன்று எதாவது தொடர்பு இருக்கா?இந்த அழகுல ஒரு கவிதை வேற?அது முதல்ல கவிதையா?சரி விடு கட்டுரையில் பல வாக்கியங்கள் அர்த்தமற்றதா இருக்கு. நிறைய தாவல். உன்னோட சிந்தனையில் தாவல் இருக்கலாம் ஆனால் இப்படி எழுத்துல இருக்கக் கூடாது.அதோட இப்ப கனவைப் பத்தி நீ எழுதி என்ன ஆகப் போகுது?ஆதான் ப்ராய்ட்லேர்ந்து பல மேதைகள் அதைப் பத்தி எழுதியிருக்காங்களே. அவ்வளவு ஏன் உனக்குப் பிடிச்ச எழுத்தாளர் பாவ்லோ கொய்லோ கூட ஒரு புத்தகமே எழுதியிருக்காரே ஆல்கிமிஸ்ட். அதை நீ மூணு தடவை படிச்சிருக்கே.அப்ப கூட இப்படி அமெச்சூர்த்தனமா எழுதிட்டு இருக்கே?’ என்று அதட்டலாகச் சொன்னது.

‘என்ன ரொம்ப பேசறே?’ என்று மாயாவும் குரலை உயர்த்த சித்து சிணுங்கினான்.‘ஏய் நீ யார் உண்மைய சொல்லு’ என்றாள் மாயா.

‘இங்க பாரு மாயா.நான் உன் தாள் தான்னு கேவலமா நினைக்காதே.என்னை குறைச்சு மதிப்பிடாதே.உன்னோட கனவுகள் கட்டுரை அமைப்பில் சரியா வரலை.அதான் உண்மை.ஒப்புக்க. அதுக்கு முன்னால ஒரு கதை எழுதினியே அதுக்கு இந்தக் கட்டுரையே பரவால்ல. புனைவு அவ்வளவு சுலபம்னு நினைச்சியா.ஒரு புனைவு எப்பவும் நிகழ்வுகளின் தொடர் தான்.உன்கிட்ட இருக்கற பிரச்னை நிறைய எழுதறே.நினைக்கறதை எல்லாம் அப்படியே எழுதிடறே.அது சரியா வராது.நிகழ்வுகளின் சரடை அர்த்தமுள்ளதும் அழுத்தமுள்ளதுமாக ஆக்கத்தான் எழுதணும்.வெறும் நினைவுகளையும் எண்ணங்களையும் இல்லை உன்னோட மேலான கருத்துக்களையும் புனைவில் நேரடியாக புகுத்தறே.அது சரியா வராது.அதோட நீ இன்னும் சிறந்த கதைகளையோ கட்டுரைகளையோ படிக்கலைன்னு நினைக்கறேன்.இன்னும் தீவிரமா கவனிச்சு வாசிச்ச பிறகு எழுத ஆரம்பி.அப்ப தான் எழுத்து உனக்கு வசப்படும்.புரியுதா.இல்லை இன்னும் விளக்கமா பேசலாமா, ரொம்ப சோர்வா இருக்கியேன்னு கேட்கறேன்.இந்தப் பிரச்னையை இப்பவே பேசி முடிச்சிடலாமா?’ என்று வக்கீல் கணக்காக கேள்விக் கணைகளை தொடுத்துக் கொண்டிருந்தது.

மாயாவுக்கு வியர்த்துக் கொட்டியது, தொண்டை வரண்டு தாகமாக இருக்கவே சட்டென்று கண் விழித்துப் பார்த்தாள்.அறையில் மெல்லிய ஏஸியின் சத்தத்தை தவிர எந்த சத்தமும் இல்லை.டேபிளைப் பார்த்தாள்.அவள் வைத்தபடி தாள்கள் அதே நிலையில் இருந்தன.இதுவரைக் கண்டது கனவு தான் என்று உறுதியான பின் மெள்ள எழுந்தாள்.பாத்ரூம் போய்விட்டு திரும்பினாள்.மணி ஆறாகியிருந்தது. இதென்ன பகல் கனவு அதுவும் பேப்பர் பேசுது எப்படி ஏன் இந்தக் கனவு வந்தது என்று நினைத்து பார்த்தபோது, அவளுடைய எழுத்தைப் பற்றி அவளுக்குப் பிரியமான எழுத்தாளர் கூறிய விமரிசனம் தான் தாளின் பேச்சுக்களாய் கனவில் வந்ததை உணர்ந்தாள். அவர் இதே வார்த்தைகளைச் சொல்லியிருக்கவில்லை.கிட்டத்தட்ட அந்த கருத்தை ஒட்டித் தான் பேசியிருந்தார்.என்னவோ இன்றைய நாள் ஒரு கனவில் தொடங்கியிருக்கிறது நல்லது தான் என்று நினைத்துக் கொண்டே கிச்சனுக்குச் சென்றாள்.சாரதா காபி போட்டுக் கொண்டிருந்தாள்.இவளைப் பார்த்ததும் உடனே முகம் மலர்ந்து, ‘இவ்ளோ சீக்கிரம் எழுந்திருச்சிட்டியேம்மா, இந்தா காபி’ என்று ஒரு தம்பளரை நீட்டினாள்.

‘அம்மா இன்னும் பல்லே தேய்க்கலை சரி கொடு ஒரு நாள் பெட் காபி குடிச்சா ஒண்ணும் ஆகாது’ என்று அதை வாங்கிக் கொண்டாள் மாயா.

‘அம்மா வேலையை விட்டுடலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்’ என்ற மாயாவை கவலையுடன் பார்த்தாள் சாரதா.

ஏற்கனவே புருஷனுடன் சண்டைப் போட்டுவிட்டு இங்கு வந்து இரண்டு மாதம் ஆகிறது.இங்கிருந்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்தவள் இன்னும் சில நாட்களில் அவள் வீட்டுக்குப் போய்விடுவாள் என்று நம்பிக் கொண்டிருந்தனர் சாரதாவும், கணேசனும்.ஆனால் இவள் வந்த நாளிலிருந்து அந்தப் பிரச்னையைப் பற்றி எதுவும் பேசாமல் அவள் பாட்டுக்கு எழுதுவதும் வேலைக்குப் போவதும் குழந்தையுடன் இருப்பதுமாக இருந்தாள்.சாரதாவிடம் கூட எதையும் சொல்லவில்லை.கணேசன் ஒரு பக்கம் சாரதாவை நச்சரித்துக் கொண்டிருந்தார்.விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்ப என்ன பிரச்னைன்னு தெரியலை என்று அவர்கள் குழம்பினார்கள்.மாயா அசைந்து கொடுப்பவளில்லை.அவளிடம் ஒரு பழக்கம்.எந்த விஷயத்தையும் அவள் உடனடியாக சொல்வதில்லை.மலையை கூட விழுங்கிவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் அவளால் இருக்க முடியும்.ஒரே பெண்ணின் வாழ்க்கையில் என்ன சோதனை என்று கணேசனும் சாரதாவும் தவித்தார்கள்.கடைசியில் அவளே சொல்லட்டும் என்று விட்டுவிட்டார்கள்.இந்த விஷயத்தில் இன்னும் வாயைத் திறக்காத மாயா புதிதாக ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறாள்.

‘அந்த பத்திரிகை வேலையை நம்பியா மா நல்ல வேலையை விடப் போறே’ என்றாள் சாரதா.

‘எதும்மா நல்ல வேலை?அந்த ஆள், அதான் என் பாஸ், நாலு மணிக்கு தான் ஆபிஸ் வருவார்.அதுக்கப்பறம் அஞ்சு மணிக்கு என்னை கூப்பிட்டு வேலை கொடுப்பார்.ஆறு மணிக்கு ஆபிஸ்ல ஒரு ஈ காக்கா கூட இருக்காது, நான் மட்டும் வேலையை முடிச்சிட்டு தினம் பத்து மணிக்கு வீட்டுக்கு வர்றது பிடிக்கலை.அப்பா கூட சிலப்ப மூஞ்சி காட்டினாங்க இல்லை.எனக்கு அந்த வேலையும் சுத்தமா பிடிக்கலை மா.நான் ஒரு கிரியேட்டிவ் ஆள். என்னை கொண்டு போய் அக்கவுண்ட்ஸ்ல போட்டா எப்படி நான் அதுல தொடர்ந்து இருக்க முடியும்?’ என்ற மாயாவை பார்த்த சாரதா இப்போதைக்கு இவளிடம் பேசினால் நேர விரயம் தான் என்று இட்லிச் சட்டியில் மாவை ஊற்றினாள்.

மாயாவின் மனம் முழுவதும் பத்திரிகை கனவுகள்.எப்படியாவது இந்த வேலை கிடைத்தால் இழந்த எல்லாவற்றையும் மீட்டுவிடலாம் என்று அவளுக்குத் தோன்றியது.அவளுடைய வாழ்க்கையில் அப்போது தான் அந்த மூன்றும் நிகழ்ந்திருந்தது… அந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருந்தது.அதிலிருந்து மீள வழி தெரியாமல் ஏதேதோ செய்து கொண்டிருந்தாள்.அவளுக்குள் இருந்து அவளை எப்போதும் வழிநடத்தும் ஏதோ ஒரு சக்தி தான் அவள் உடைந்து உருக்குலையாமல் இருக்க வழி செய்தது. அந்த மூன்றும்

முதல் தோல்வி

முதல் துரோகம்

முதல் பிரிவு

தொடரும் …

அத்தியாயம் 2 . . .

அத்தியாயம் 3 . . .