திரைக்காலம் – அத்தியாயம் – 2 

திரைக்காலம் – அத்தியாயம் – 2

குறுநாவல்:- உமா பார்வதி

மாயாவின் மடியில் சித்து அமர்ந்து கொண்டிருக்க, சாரதா அவனுக்கு இட்லியை ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள். ஒரு வாய் மாயாவுக்கு ஒரு வாய் சித்துவுக்கு என அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். வேலைக்கு நேரம் ஆகிவிட்டது. திருமணத்துக்கு முன்னால் மாயா அலுவலகத்துக்கு தாமதமாகச் சென்றதே இல்லை. அரை மணி நேரம் முன்னால் சென்றுவிடுவாள். அவள் தான் கடைசி ஆளாகக் கிளம்புவாள். “ஏனிப்படி வொர்க்ஹாலிக்கா இருக்கே?” என்று தோழிகள் அவளை கிண்டல் செய்தாலும், அவள் வேலையில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பதை விரும்புவாள். எதைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும் அவளுக்கு. சிலர் வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்ப பாரத்தை சுமப்பார்கள். சில பெண்கள் தன்னுடைய திருமணத்துக்கு சேர்த்து வைக்கவே வேலைக்குச் செல்வார்கள். மாயாவுக்கு அது அவசியம் இல்லை. அவள் தன்னுடைய அடையாளத்தைத் தேடிக் கொள்ள விரும்புகிறவள். பதின் வயதிலிருந்து அவளுக்குள் ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். பாரதியாரின் தேடிச் சோறு நிதம் தின்று பாடத்தை தமிழ் ஐயா நடத்தும் போது உண்மையில் அதை உணர்ந்தாள். தேடித் தேடி பாரதியாரின் கவிதைகளைப் படித்து யோசிக்க ஆரம்பித்தாள். அவளுடைய சிந்தனையில் ஓரளவு தெளிவு கிடைக்க முதற் காரணமாக இருந்தவன் அந்த முண்டாசுக் கவிஞன்தான். அதன் பின் வாசிப்பு அவளை வழிநடத்த ஆரம்பித்தது எல்லாம் மேஜிக் போன்ற விஷயங்கள். எப்போதும் புத்தகங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் என்று அவளுடைய வாழ்க்கையின் ஒரு பகுதி கலைத் தேடல்களுக்குள் இழுத்துச் சென்றது. கவின் கலைக் கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டாள், ஆனால் அவளை வற்புறுத்தி பி.காமில் சேர்த்துவிட்டார் அப்பா. எதற்கும் வற்புறுத்தாத அப்பா ஏன் அப்படி செய்தார் என்று அவளுக்குக் கோபம் இருந்தாலும் அகாதெமி படிப்பையும் பொழுதுபோக்கையும் ஒன்றாகக் கலக்க வேண்டாம் என்று அப்பா தெளிவாக சொல்லவே வேறு வழியின்றி அவள் அப்போது அதிகம் பிடிவாதம் பிடிக்கவில்லை. அப்பா கணேசன் நெஸ்லே கம்பெனியில் ஜி.எம். அவருக்கு தன் மகள் எம்பிஏ படிக்க வேண்டும் என்று ஆசை. அவர் ஆசைப்படி படித்தாள், ஆனால் ஆசைப்பட்டது போல எல்லாம் நடந்ததா என்று நினைத்தாள். காலையில் இதென்ன சிந்தனை என்று தன் எண்ண ஓட்டங்களை சற்று துரத்திவிட்டு சித்துவின் கள்ளமில்லா முகத்தைப் பார்த்தாள் மாயா.

இப்போது சித்துவுக்கு இன்னும் ஒரு வயது கூட ஆகவில்லை. ஆனால் அம்மா வெளியே கிளம்பும் நேரம் வந்துவிட்டது என்பதை தெரிந்து கொண்டு சிணுங்க ஆரம்பித்துவிடுவான். அவளுடைய துப்பட்டாவை தன் பிஞ்சு விரல்களால் இறுக்கப் பற்றிக் கொள்வான். சில சமயம் பொக்கை வாய் தெரியச் சிரிப்பான். அந்த முகத்தைப் பார்த்துவிட்டால் வெளியே கிளம்பிச் செல்லவே மனசு வராது. எதற்குப் படித்தோம், ஏன் வேலைக்குப் போகிறோம், பேசாமல் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு சித்துவின் சிரிப்பில் மட்டுமே அமிழ்ந்து கிடக்க வேண்டும் என்று நினைத்தாள் மாயா.

வேறு வழியில்லை வேலைக்குச் செல்வது தான் இப்போதைய மனநிலையை மாற்றுவதற்கான ஒரே வழி. மீட்சியில்லாத ஒரு சுழலில் சிக்கியிருக்கிறாள் என்பது அவளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ராஜனிடமிருந்து எந்தவித அழைப்பும் இல்லை. சித்து பிறப்பதற்கு முன் அவள் அம்மா வீட்டுக்கு கோபித்துக் கொண்டு வந்துவிட்டால் நேராக வீட்டுக்கு வந்துவிடுவான் அல்லது அலுவலகத்துக்கு வந்து இடம் சூழல் பார்க்காமல் மன்னிப்பு கேட்டு கெஞ்சி கையோடு அழைத்துச் சென்றுவிடுவான். இப்போது அவனுடைய ஈகோ அதற்கெல்லாம் இடம் கொடுப்பதில்லை என்பதை உணர்ந்தாள் மாயா. ‘எங்க போயிடப் போறா… வீட்டுக்கு வந்து தானே ஆகனும்’ என்று உறுதியாக நம்பினான். அவனுடைய புரிதல் அப்படி. அவன் தேடி வரட்டும் என்று மூன்று மாதங்கள் மனத்தை வேறு விஷயங்களில் திருப்பிக் கொண்டிருந்தாள் மாயா. ஆனால் அவன் அசையவில்லை. இந்தக் கண்ணாமூச்சி நாடகத்தைத் தொடக்கி வைத்தவன் அவன் தான். காயப்படுத்தியதும் அவன் தான். எனவே அவன் தான் வர வேண்டும் என்ற முடிவில் அவள் உறுதியாக இருந்தாள்.

அம்பேத்ராஜனை முதன் முதலில் சந்தித்தது அவள் இதற்கு முன் வேலை பார்த்த அலுவலகத்தில்தான். அவள் அசிஸ்டெண்ட் மார்கெட்டிங் மானேஜர். அம்பேத் ட்ரைவர். சில சமயம் வேலை முடித்து அவள் கிளம்ப நேரமாகும் சமயங்களில் அவளுடைய பாஸ் கிருஷ்ணகுமார் காரில் அவளை வீடு வரை இறக்கிவிடச் சொல்வான். அம்பேத் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசமாட்டான். காரில் இவள் மெளனமாக வந்து கொண்டிருப்பாள். இவள் வீடிருக்கும் பகுதி அலுலகத்திலிருந்து வெகு தூரம். போரடிக்கிறதே என்று மாயா எதையாவது பேச ஆரம்பித்தால் அவன் கண்ணாடி வழியாக அவளைப் பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் இருப்பான். மிஞ்சிப் போனால் உம் கொட்டுவானே தவிர ஒரு வார்த்தை கூட அவன் உதிர்த்ததில்லை. கிருஷிடம் கூட ‘உங்க ட்ரைவர் ஊமையா’ என்று கேட்பாள். கிருஷ் அதற்கு, ‘அவன் தங்கமானவன் அனாவசியமாகப் பேச மாட்டான்’ என்று அவன் பக்கம் தான் பேசுவார். மாயாவைப் பொருத்தவரையில் அவன் தலைக்கனம் பிடித்தவன். மரியாதை தெரியாதவன். கலகலப்பு அற்ற சிடுமூஞ்சி. மாயாவின் அழகில், பேச்சுத் திறனில் கவரப்பட்டு அவளைச் சுற்றி எப்போதும் தோழியர், நண்பர்கள் என்றிருப்பார்கள். இதே அலுவலகத்தில் எம்.டி கிருஷ் முதல் ஆபிஸ் அசிஸ்டெண்ட் மூர்த்தி வரை அனைவரும் மாயா மேம், மாயாக்கா, மாயா சேச்சி, மாயாம்மா என்று அன்பைப் பொழிவார்கள். இவளும் அப்படித்தான். தனியாகவே வளர்ந்த அவளுக்கு மனிதர்கள் வேண்டியிருந்தது. எதைக் கொடுக்கிறோமோ அது திரும்பக் கிடைக்கும் என்பது அன்பைப் பொருத்தவரை நூறு சதவிகிதம் உண்மை. மெய் அன்பிற்கு அசையாதவர்கள் யாரும் இருக்க முடியுமா என்ன ? ஆனால் அம்பேத்ராஜன் வேறு மாதிரியாக இருந்தான். இறுக்கமான முகபாவம். எப்போதும் பபுள் கம் மென்று கொண்டிருக்கும் ஒரு அலட்சிய சுபாவம். மற்றவர்களிடம் ஓரளவுக்குப் பேசும் அவன்  மாயாவை ஒரு மனித உயிராகக் கூடப் பொருட்படுத்துவதில்லை. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆபிஸில் லேட் சிட்டிங் இருக்கும். ஏன் தான் இவனுடன் காரில் வருகிறோமோ என்று எரிச்சல் அடைவாள் மாயா. உம்மனாம் மூஞ்சி குரங்கு என்றெல்லாம் மனதுக்குள் வைவாள். ஆனால் அவளையும் மீறி அவனிடம் ஒரு ஈர்ப்பு அவளுக்கு இருந்ததை வெகு நாட்கள் பிறகு தான் உணர்ந்தாள். பின்னர் ஒரு நாள் ராஜன் சொன்னதும் அவளால் மறக்க முடியாது. இருவரும் பழைய விஷயங்களை அடிக்கடி அசைப் போட்டு தங்களுடைய காதலின் ஆரம்ப அத்தியாயத்தைப் பேசி பேசி சுவாரஸ்யப்படுத்திக் கொள்வார்கள். அப்போதெல்லாம் மாயாவிடம் பேசிவிட்டால் எங்கே தான் அவளை காதலிப்பதை சொல்லிவிடுவோமோ என்ற தயக்கத்தில் தான் அவளை கடுமையாகத் தவிர்த்திருக்கிறான் ராஜன். அவள் நிறைய படித்தவள். சாதியில், வேலையில் தன்னை விட உயர்ந்தவள். இவள் நம் தகுதிக்கு மீறியவள் என்ற எண்ணம் அவன் மனத்துக்குள் இருந்ததால் அவளிடம் பேசுவதையே தவிர்த்துவிட்டான் ராஜன்.

முதன் முதலில் அவள் இந்த அலுவலகத்துக்கு இண்டர்வ்யூ வந்த போது அவனுக்கு மிகப்பிடித்த அடர் நீல நிறச் சேலை அணிந்து வந்தாள். வந்த பத்து பேர்களில் இவளைப் பார்க்கவென அவன் குறுக்கும் நெடுக்கும், அலைந்து கொண்டிருந்தான். மீண்டும் மீண்டும் அந்த முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டு ஒரு கட்டத்தில் ரிசப்ஷனில் வேணியிடம் அரட்டை அடித்துக் கொண்டு அங்கேயே நின்றுவிட்டான். வேணிக்கும் ஆச்சரியம். இவன் ஏன் திடீரென்று பேசுகிறான் என்று நினைத்தாள். நீல வண்ணச் சேலைக்காரியின் பெயரைத் தெரிந்து கொள்ள முயற்சித்தான். அவளுக்கே வேலை கிடைக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அவள் வேலைக்குச் சேர்ந்த உடன் அவன் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவனுடைய தங்கை மலருக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்தான். அம்பேத்தின் பழக்கம் அது. அவன் மனம் பூரிப்படைந்தால் உடனே கூட இருப்பவர்களுக்கு கை வசதிக்கேற்ற வாறு சாக்லேட் அல்லது ஸ்வீட் வாங்கித் தருவான். அப்படித்தான் அவன் தலைவன் ரஜினிகாந்த்தின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் போஸ்டர் அடிப்பது முதல், வீதி வீதியாக சென்று சொந்த செலவில் சாக்லெட் வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை கடமையாகச் செய்துவந்தான்.

திமிர் பிடித்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் திடீரென்று அவள் சீட்டுக்கு வந்து, “மேடம் இந்தாங்க” என்று தயங்கித் தயங்கி சாக்லெட்டைக் கொடுத்தான். அப்போது அவன் முகத்தில் தெரிந்தது வெட்கமா, சந்தோஷமா என்று மாயாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. “எங்க தலைவருக்குப் பொறந்தநாள்” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு மின்னலாக மறைந்துவிட்டான்.

அன்று லேட்டாகக் கிளம்பியதால், காரில் அவனுடன் பயணம் செய்தாள்.

‘உங்க தலைவருக்கு எத்தனாவது பர்த் டே அம்பேத்?’

அவன் வழக்கம் போல பதில் சொல்லவில்லை. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் போல விடாமல் கேள்வி கேட்டாள் மாயா. ‘நீயா நானான்னு பாத்திடலாம்’ என்று உள்ளூர நினைத்தபடி, “உங்க சூப்பர் ஸ்டாரை நேர்ல பாத்திருக்கியா” என்று ஒருமையில் கேட்டாள்.

“எங்க தலைவரை நேர்ல பாக்கணும்னு ரொம்ப ஆசைங்க. நிறைய தடவை முயற்சி பண்ணிட்டேன். முடியலை. ஆனா என் வாழ்க்கையோட லட்சியமே அவரை மீட் பண்ணனும். அடுத்து அவரை டச் பண்ணனும். அப்பறமா ஞாபகமா ஒரு ஃபோட்டோ எடுத்துக்கனும்” என்றான்.

மாயா சிரித்துவிட்டாள்.

“இவ்வளவு பெரிய லட்சியமா?”

ராஜனுக்கு இவள் கிண்டலாகக் கேட்டது புரியவில்லை. உண்மையாகத்தான் கேட்கிறாள் என்று நினைத்து பெருமையுடன் ‘ஆமாம்’ என்று தலையாட்டினான்.

“நீ எத்தனாவது வரை படிச்சிருக்கே அம்பேத்?” என்றாள் மாயா.

“ப்ளஸ் டூல பெயில் ஆயிட்டேங்க. அதுக்கப்பறம் கொஞ்ச நாள் வெறுப்புல ஊர் சுத்திட்டு இருந்தேன். அப்பா தான் ட்ரைவிங்காவது கத்துக்கன்னு சொல்லி என்னை வற்புறுத்தினாரு…. அவர் தோட்டக்காரர். எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. நான் தான் பெரியவன். என்னை படிக்க வைச்சு பெரிய ஆளா ஆக்கணும்னு ஆசைப்பட்டாரு. நான் ப்ளஸ் டூ வரைக்கும் வந்ததே லக்குதான். பரிட்சை டைம்ல என் அம்மா உடம்பு முடியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க… அப்பறம் செத்துடுச்சு. எனக்கு அது போனதிலேர்ந்து மனசு ரொம்ப கஷ்டம். அதை மறக்க தான் சினிமா நிறைய பார்த்தேன். தலைவரை சின்ன வயசிலேர்ந்து பிடிக்கும். சங்கத்துல சேர்ந்து ஏதேதோ செஞ்சிட்டு இருக்கேன். இங்க வேலைக்கு சேர்ந்து ரெண்டு வருஷம் ஆச்சு. ஓரளவுக்கு வருமானம் மத்தபடி என் லைஃப் ஒரு ஜீரோங்க..”, என்றான் படபபடவென்று.

மாயாவுக்கு ஏன் தான் கேட்டோம் என்று தோன்றியது. அவன் சிந்தனை செயல் எல்லாவற்றிலும் சினிமா இருப்பதை தெரிந்து கொண்டாள். “ஸாரி அம்பேத் உங்களுக்குள்ள இவ்வளவு கஷ்டம் இருக்குன்னு எனக்குத் தெரியாது. வருத்தப்படாதீங்க. நீங்க கரெஸ்பாண்டன்ஸ்ல படிங்க. படிப்பு ரொம்ப முக்கியம்.” என்றாள்.

“அதெல்லாம் படிக்கற காலத்துலேயே ஏறல. விடுங்க. நீங்க என்ன படிச்சிருக்கீங்க?”

“நான் எம்.பி.ஏ. முடிச்சிருக்கேன். இதோ இங்க தான் என்னோட முதல் வேலை. ஆனா எனக்கு மீடியால வேலை செய்யணும்னு ரொம்ப ஆசை. அதான் எம்.ஏ ஜர்னலிசம் அப்ளை பண்ணியிருக்கேன். நிச்சயம் படிப்பேன்.”

“நீங்க புத்திசாலி. பாத்தாலே தெரியுது….நிறைய இங்கலீஷ் பேசறீங்க…” என்றான்.

“இங்கலீஷ் பேசறதாலே யாரும் புத்திசாலி கிடையாது அம்பேத். அது ஒரு மொழி. அவ்வளவு தான். படிப்புதான் நம்மளை உருவாக்குது. நான் சொல்றது பாடப் படிப்பு மேற்படிப்பு இதெல்லாம் இல்லை. அதைத் தாண்டி ஒரு படிப்பு இருக்கு” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் வீடு வந்துவிட்டது.

“சரிங்க. நாளைக்கு பாக்கலாம்” என்றான் அம்பேத்.

“நீங்க இவ்வளவு பேசுவீங்கன்னே எனக்கு இன்னிக்குத்தான் தெரியும்…” என்றாள் மாயா.

“பேசக் கூடாதுன்னு எல்லாம் இல்லைங்க. நான் மனசுல பட்டதை ஓப்பனா பேசற டைப் அதனால தான் உங்ககிட்ட பேசறதில்லை” என்றான்.

“நல்ல விஷயம் தானே. வெளிப்படையா பேசறவங்கள எனக்கு பிடிக்கும். சரி பை” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.

வீட்டில் அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. அவளுடைய அத்தையும் அத்தை மகள் நீலாவும் வந்திருந்தார்கள். இவளைப் பார்த்துவிட்டுப் போகத்தான் காத்திருந்தார்கள்.

“வாங்க அத்தை, ஹாய் நீல்ஸ் எப்படி இருக்கே, இருங்க நான் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்றாள் மாயா.

“உன்னைப் பாக்கத்தான் வெயிட் பண்றோம்மா. நாங்க கிளம்பறோம். இப்படி உட்காரு” என்றாள் ஜானகி அத்தை.

அப்பா இன்னும் வந்திருக்கவில்லை.

“தினமும் இவ்வளவு நேரம் ஆகிடுமாடி?” என்றாள் நீலா.

“இல்லை நீலா. ஒரு சில நாள் இப்படி ஆகும். ஆபிஸ் கார்ல ட்ராப் பண்ணிடுவாங்க.”

“எங்க வீட்டுக்கு வந்தா நீ வேலையை விட்றணும் புரியுதா?” என்றாள் நீலா.

சட்டென்று மாயாவின் முகம் மாறியது.

“சரி நீங்க பேசுங்க இதோ வரேன்.” என விருட்டென்று அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

அத்தையும், நீலாவும் மறுபடியும் மகேந்திரனுக்காக தூது வந்திருக்கிறார்கள். மகியை கணவனாக அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நல்ல வேலை, நெருக்கமான உறவு, அழகு மட்டுமேதான் ஒரு திருமணத்துக்குத் தேவையா? தனக்கென்று ஒரு மனது இருக்கிறதென்று ஏன் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மகியாவது இவளைப் புரிந்து கொள்கிறான் என்றால் இல்லை. இவர்களைவிட அவன்தான் ஒரேடியாகப் பிடிவாதம் பிடிக்கிறான். இதிலிருந்து எப்படி தப்புவது என்றே தெரியவில்லை மாயாவுக்கு. வெளியே அப்பா வரும் சத்தம் கேட்டது.

உடை மாற்றி வந்தாள். அன்றிரவு அத்தையும் நீலாவும் அங்கேயே தங்கினார்கள். அப்பாவுக்கும் தன் தங்கை மகனுக்கு மகளை கட்டி வைக்க ஆசைதான். சொத்து வெளியே போகாது, ஒண்ணுக்குள்ள ஒண்ணு தவிர மகளை செல்லமாகப் பார்த்துக் கொள்வார்கள் என்று அவளிடம் பல முறை எடுத்துச் சொல்லிவிட்டார். ஆனால் அவளால் அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“எனக்கு நம்ம மகியைப் பார்த்தால் எதுவுமே தோண மாட்டேங்குதுப்பா தயவு செஞ்சு என்னை விட்ருங்க.”

“அப்ப வெளியிலயாவது மாப்பிள்ளை பாக்கறேன்” என்று ஆரம்பிப்பார். “இப்போதைக்கு எதுவும் பாக்காதீங்க. எனக்கு என்னோட கேரியர் ரொம்ப முக்கியம். தயவு செஞ்சு என்னை கொஞ்ச நாள் வாழ விடுங்க” என்று சொல்லி அவர் பேச்சை பாதியில் நிறுத்திவிடுவாள்.

சாராதாவுக்கும் கணேசனுக்கும் அவளுடைய இந்த பிடிவாதம் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால் பேசாமல் இருந்துவிடுவார்கள். தேவைக்கு அதிகமாக அவளுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டோமே என்று இப்போதெல்லாம் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் அளவுக்கு மாயா சுயம் சார்ந்து இயங்க ஆரம்பித்திருந்தாள்.

மகளுக்கு எதாவது காதல் இருக்குமோ என்று அதையும் கேட்டுப் பார்த்து அப்படி எதுவும் இருந்தால் சொல்லிவிடுமாறும் நிச்சயம் தகுந்த வரன் என்றால் பேசி முடிப்பதாகவும் கூட சொல்லிவிட்டார் கணேசன். ஆனால் மாயா தன்னுடைய இலக்குகளை எழுதி அவரிடம் காட்டுவாள். அந்தத் தாளில் அவளுடைய கனவுகள் மின்னும்.

  1. பத்திரிகையாளர் ஆவது
  2. எழுத்தாளர் ஆவது
  3. புகழ் அடைவது

தொடரும்…

அத்தியாயம் 1 – கனவு . . .

அத்தியாயம் 3 . . .