திரைக்காலம் – அத்தியாயம் – 3

திரைக்காலம் – அத்தியாயம் – 3

குறுநாவல்:- உமா பார்வதி

மாயாவுக்கு அன்று முழுவதும் வேலையே ஓடவில்லை. பழைய நினைவுகள் அவளின் மனத்தை அழுத்திக் கொண்டிருந்தது. ராஜன் ஏன் தன்னை இப்படி நோகடிக்கிறான் என்று யோசித்துப் பார்த்தாள். அவனுடைய நடவடிக்கைகளில் பெண் என்பவள் இவ்வளவு தான். இதற்கு மேல் இருக்கக் கூடாது என்று வரையறை செய்து வைத்திருந்தான். காதலிக்கும் போது இருந்த ராஜனுக்கும் திருமணத்துக்குப் பிறகான ராஜனுக்கும் சம்பந்தமே இல்லை. காதல் தன் கண்ணை மட்டும் அல்ல அறிவையும் சேர்த்து மறைத்துவிட்டது என்று இப்போது புரிந்து என்ன பயன் என்று தன்னையே நொந்து கொண்டாள். ராஜன் கெட்டவன் இல்லை. எந்த பிரச்னைக்கும் போக மாட்டான். ஆனால் மனத்தை ரணப்படுத்துவதில் பெரும் ஆற்றல் பெற்றிருந்தான். அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தில் கத்தி சொருகியத்தைப் போலிருக்கும். ஆனால் திருமணத்துக்க்கு முன்னால் அதிர்ந்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டான். நீ நிலா நான் தரை, நீ ஏ செண்டர் நான் சி என்று தத்துவம் பேசுவான். தள்ளித் தள்ளியே நிற்பான். ஆனால் உரிமை வந்த சில நாட்களில் ஆளே மாறிப் போனான். அதற்குப் பாதி காரணம் அவன் சுற்றம். மீதிக் காரணம் மாயா தான். எல்லோரிடமும் பொறுமையாகவும் நிதானமாகவும் பேசும் அவள், ராஜனிடம் மட்டும் எரிந்து விழுவாள். இருவருக்கும் சண்டை வந்துவிட்டால் அந்த அறை போர்க்களம் போலாகிவிடும்.

அவன் காதல் சொன்ன தினத்தை நினைத்துப் பார்த்தாள். அன்று சரியான மழை. மில்லினிய வருடத்தின் வரவை எதிர்நோக்கி உலகமே காத்துக் கொண்டிருந்தது. கணினியில் Y2K பிரச்னை வேறு பெரும் அச்சுறுத்தலாய் அனைவரையும் உலுக்கிக் கொண்டிருந்தது. பாண்டிச்சேரியில் இருக்கும் தொழிற்சாலைக்கு மாயா போயாகவேண்டும். கிருஷ் ஏற்கனவே அங்கு தான் இருந்தான். ராஜன் கறுப்பு சுமோவில் அவள் வீட்டு வாசலில் நின்று ஹார்ன் அடித்தான். அவள் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு அவசர அவசரமாக காரில் ஏறிக் கொண்டாள். அந்தப் பயணத்தை அவளால் ஆயுசுக்கும் மறக்க முடியாது. முதல் சம்பாஷணைக்குப் பிறகு ராஜனைப் பார்த்தால் அடிக்கடி ஏதாவது கிண்டல் செய்வாள். போங்க மேடம் என்பது போங்க மாயா என்று மாறிய சமயம் தான் இந்த பயணம்.

ராஜனுடைய ட்ரைவிங் மாயாவுக்கு மிகவும் பிடிக்கும். வேகமாகப் போக வேண்டிய இடங்களில் வேகமாகவும், மற்ற சமயங்களில் நிதானமாகவும் ஓட்டுவான். கார் ஓட்டுவது கூட ஒரு கலை தான் என்றாவது நிச்சயம் கார் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். அவள் எண்ணத்தை நூல் பிடித்தாற் போல் ராஜன் கேட்டான்.

என்ன மாயா அமைதியா வரீங்க….. போரடிச்சா நீங்க வேணும்னா கார் ஓட்டுங்க என்றான்

ஆஹா. எனக்கு கார் எல்லாம் ஓட்டத் தெரியாது ராஜன். ஆனா கத்துக்க ரொம்ப ஆசை.

அட. இவ்ளோ நாள் ஏன் என்கிட்ட சொல்லலை. சரி இந்த ட்ரிப் முடிச்சு வந்ததும் உங்களுக்கு ட்ரைவிங் க்ளாஸ் ஆரம்பம். சரியா?

சரிங்க சார். என்றாள் சிரித்தபடி

அதன் பின் அவளுக்குப் பிடித்த பாடல்களை இடைவிடாமல் ஒலிபரப்பினான். சில சமயம் கண்கள் மூடியும் பல சமயம் கூடப் பாடியும் மாயா சந்தோஷத்தில் மிதந்தாள். டீ குடிக்க ஒரு கடையில் நின்ற சமயம் அவன் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை என்றாலும் அவர்களுக்குள் ஏதோ ஒன்று நிகழ்வதை உணர்ந்தனர்.

ராஜன் கறுப்பு. நல்ல உயரம். களையான முகம். லேசான தாடியுடன் தான் எப்போதும் இருப்பான். இவள் மாநிறம். அவன் அளவுக்கு உயரம் இல்லை என்றாலும், சமீபத்தில் தான் ஹீல்ஸ் போட்டு நடக்க பழகிக் கொண்டிருந்தாள். அந்த டீயை முழுவதும் குடித்து முடிப்பதற்குள் அவர்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்களை அவர்களாலேயே வெகு நாட்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. எத்தனையோ ஆண்களிடம் அலுவலகத்தில், பக்கத்து வீட்டில், உறவுகளில் பேசி, பழகியிருந்தாலும் யாரிடமும் இதுவரை ஏற்படாத ஒரு ஈர்ப்பு இவனைப் பார்த்ததும் ஏன் ஏற்பட வேண்டும் என்று மாயாவால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் நேரடியாக அவள் கண்களைப் பார்த்துவிட்டால் போதும் லேசாக அவள் இதயம் படபடக்கும். அவளும் பிடிவாதமாக அவன் கண்களையே பார்ப்பாள். ஒருவர் கண்களை ஒரு கட்டத்தில் அகற்றும் வரை பார்வை பரிமாற்றம் இருக்கும். ஆனால் எவ்வளவு பார்த்தாலும் ஒருவரை மற்றவர் சரியாகப் பார்க்கவில்லை என்று தோன்றவே நேரில் இயலாத சமயங்களில் கனா காணத் தொடங்கியிருந்தனர். எதாவது சொல்லேன் என்று அவள் மனத்தில் நினைக்க, அவன் மெளனத்தையே கேடயமாக வைத்திருந்தான்.

பின் சீட்டில் அமர்ந்து வந்தவள் டீ குடித்து முடித்ததும் முன் சீட்டுக்கு மாறினாள். அவன் முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சி தெரிந்தது. அந்தக் காரின் சொந்தக்காரன் போலவும், அவளுக்கே உரியவன் போலவும் மனத்தில் உற்சாகம் பிறந்தது. அவள் டேஷ்போர்ட்டிலிருந்த கேசட்களை ஆராய்ச்சி செய்தாள்.

எல்லா கேசட் பாட்டும் கேட்டாச்சு. நீங்க பாடறீங்களா மாயா என்றான்.

ம்கூம் நான் தான் இவ்ளோ நேரம் பாடினேன். நீங்க தான் பாடணும் ராஜன். ப்ளீஸ் எனக்காக.. என்றாள். கார் பாண்டிச்சேரியை நெருங்கிக் கொண்டிருந்தது.

அவனுக்குப் பிடித்த பாடலான ‘கனவா காற்றா..கையில் மிதக்கும் கனவா நீ, கைகால் முளைத்த காற்றா நீ…’ என்ற பாடலை மென்மையாகப் பாடத் தொடங்க அவள் கண்களை மூடி ரசித்தாள். ஸ்ரீநிவாஸ் போலவே அவன் குரல் இருந்தது அல்லது இருந்தது போலத் தோன்றியது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் முடித்ததும் ஒன்ஸ் மோர் கேட்டாள்.

அவன் மறுபடியும் பாட, அவள் உணர்ச்சி வசப்பட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ….. காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது, உன் பளிங்கு முகத்தைப் பார்த்து கொண்டால் பசியும் வலியும் தெரியாது, உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது, உன்னில் வந்தொரு பூ விழுந்தால் என்னால் தாங்க முடியாது….என்று ஹை பிட்சில் பாடவே அவள் உருகிக் கரைந்தாள். அவளுக்குப் பிடித்த நடிகர் நாகார்ஜுன். சுஷ்மிதா சென்னை தூக்கி படிகளில் நடந்து வரும் காட்சியை கற்பனை செய்தாள். ஒரு கணம் நாகார்ஜுன் மறைந்து ராஜன் தெரிய, வெட்கப்பட்டாள். அவர்கள் காரில் தான் இருக்கிறோமா அல்லது வேறு உலகத்துக்கு மாறிச் சென்றுவிட்டோமா என்பதைத் தெரியாமல் பாடல் தந்த அர்த்த சுகத்தில் மெய் மறந்தார்கள். அவன் ஒருவழியாக சுயநினைவுக்கு வந்து, ‘உங்க கூட எப்பவும் இருக்கணும்னு ஆசைப்படறேன் மாயா, தப்பா சொல்லிட்டேன்னா மன்னிச்சிடுங்க. ஆனால் உங்களை பார்த்த முதல் நாள்லேர்ந்து எனக்கு இப்படித்தான் இருக்கு. இதுக்கு மேல ஒளிச்சு வைக்க என்னால முடியலை’ என்றான்.

அவள் இதை எதிர்ப்பார்க்கவில்லை. அவளுக்கும் அவனை பிடித்திருந்தது. ஆனால் ஏதோ ஒரு தயக்கம். ஏதோ ஒரு விலகல் அடிமனத்தில் லேசான ஒரு எச்சரிக்கை உணர்வு. ஆனால் அவற்றை எல்லாம் மீறி அவனுடைய சிறு புன்னகைக்கு மொத்த ஆயுசைக் கொடுத்துவிடலாம் போல அவனைக் காதலிக்க அவளுடைய ஒட்டுமொத்த ஹார்மோன்களும் கோரியது. உடனே பதில் சொல்ல முடியாதபடி ஃபேக்டரி வந்துவிடவே, க்ருஷ் சிகரெட் புகைத்தபடி வாசலில் நின்றிருந்தான்.

எதுவும் பேசாமல் அவர்கள் இறங்கினார்கள். வெல்கம் மாயா. நீங்க இதான் முதல் தடவை பாக்டரிக்கு வரீங்க இல்லையா என்றான்.

ஆமாம் கிருஷ். என்று அவள் அவனுக்கு பதில் சொன்னாலும் அவள் பார்வை ராஜனிடம் இருந்தது.

ராஜன் காரை பார்க் செய்ய கிளம்பிவிட்டான். கிருஷ் அவளை உள்ளே அழைத்துச் செல்ல, அவள் மனமோ பின்னோக்கியே சென்று கொண்டிருந்தது. என்ன இது இவன் சொன்ன வார்த்தைகளிலிருந்து மீள்வதற்குள் உயிர் உறைந்துவிடும் போல் உள்ளதே என்று இனம் புரியாத ஒரு சுழலுக்குள் சிக்கியதாக உணர்ந்தாள். ஆனால் அதிலிருந்து தப்பிக்க அவள் நினைக்கவில்லை. மூழ்கவே பிரியப்பட்டாள். கிருஷ் கான்ப்ரன்ஸ் அறைக்கு செல்ல, கீ கொடுத்த பொம்மைப் போலவே பின் தொடர்ந்தாள். அவன் சொன்னவற்றுக்கு எல்லாம் ம் ம் என்ற ஒற்றை வார்த்தை பதில்கள் மட்டுமே அளித்துக் கொண்டிருந்தாள்.

கான்பரன்ஸ் அறையில் சக ஊழியர்கள், ஃபேக்டரி நிர்வாகிகள் அனைவரும் குழுமி இருக்க, கிருஷ் இவளை தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தினான். மென்மையாகப் புன்னகைத்து அனைவரிடமும் கைகுலுக்கினாள் மாயா. அறிமுகப் படலம், காபி, டீ மற்றும் சிறிய இளைப்பாறுதலுக்குப் பிறகு மீட்டிங் தொடங்கியது.

‘நம்ம லேட்டஸ்டா சந்திச்சிக்கிட்டிருக்கற பிரச்னை மற்றும் சந்திக்க போற பிரச்னைகளுக்கு தீர்வா மாயா ஒரு ப்ரெசெண்டேஷனை தயார் பண்ணியிருக்காங்க. ஓவர் டூ மாயா என்று கிருஷ் சொல்லி முடிக்க, மாயா எழுந்து நின்று அனைவருக்கும் மறுபடி வணக்கம் சொல்லி விட்டு ப்ரொஜெக்டரை நோக்கித் திரும்பினாள்.

அடுத்த கணம் பவர் கட் ஆனது. அறை முழுவதும் இருள் சூழ்ந்தது. உடனே சலசலப்பு ஏற்பட ஜன்னலுக்கு அருகே சென்று வெனிஷியன் ப்ளைண்டை திறந்தாள் மாயா. வெளிச்சம் உள்ளே புகுந்தது.. மாயா பேச ஆரம்பித்தாள்.

’என்னோட பாயிண்ட்ஸ் பவர்புல்லா இருக்கும்கிறந்தால பவர் இருக்கணும்னு அவசியமில்லை என்றாள்.

வாவ் என்று சிலரின் புருவ உயர்த்தலை கவனித்தபடி பேச ஆரம்பித்தாள்.

கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் ராஜன். அனைவரின் பார்வையும் அவன் மீது லேசான எரிச்சலுடன் விழ, அவன் சந்திக்க வேண்டிய விழிகளில் காதலெனும் போதை ஏறியிருப்பதைப் பார்த்தபடி, க்ரிஷ்ஷிடம் வேகமாகச் சென்றான்.

அவரின் காதில் ஏதோ சொல்ல கிருஷ் முகபாவம் சட்டென்று மாறியது. மாயாவுக்கு அந்த நொடி தலையே வெடித்துவிடும் போலிருந்து.

(தொடரும்…)

அத்தியாயம் – 2

அத்தியாயம் – 1