திரைக்காலம் – அத்தியாயம் – 4

திரைக்காலம் – அத்தியாயம் – 4

குறுநாவல்:- உமா ஷக்தி

அந்தப் பிரபல பெண்கள் பத்திரிகை அலுவலகத்தின் வாசலில் படபடப்புடன் காத்திருந்தாள் மாயா. அவள் எழுதி அனுப்பியிருந்த கட்டுரையை படித்திருப்பார்களா என்று தெரியவில்லை. பத்திரிகை ஆசிரியை மிருதுளா இவளை நேரில் வரச் சொல்லியிருந்தார். ஏதாவது கேள்விகள் கேட்டால் என்ன சொல்வது? உளறி கொட்டிவிடுவோமோ? இப்படியே ஓடிப் போய்விடலாமா என்று யோசித்தபடி மாயா மணி பார்த்தாள். மிருதுளா இன்னும் வந்திருக்கவில்லை. வாசலில் அவள் தயக்கத்துடன் காத்திருப்பதைப் பார்த்த வயதான செக்யூரிட்டி, ‘யாரைப் பார்க்கணும்?’ என்றார். ‘மிருதுளா மேடம் வரச் சொல்லியிருந்தாங்க” என்றதும், ‘ஓ. சரி. ஆனா அவங்க இன்னும் வரலைம்மா நீங்க உள்ளார போய் வெயிட் பண்ணுங்க’ என்றார்.

முதன்முதலில் ஒரு பத்திரிகை அலுவலகத்துள் நுழைகிறோம் என்ற பரவசத்துடன் மாயா உள்ளே சென்றாள். அவள் கற்பனை செய்திருந்ததைப் போல அந்த அலுவலகம் இல்லை. ஒரு பெரிய அறைக்குள் சின்ன சின்ன கண்ணாடி அறைகளாக அமைக்கப்பட்டிருந்தது. உள்ளேயிருப்பவர்கள் வெளியேயும் வெளியிலுள்ளவர்கள் உள் இருப்பவர்களையும் பார்க்க முடிவது போன்ற இண்டீரியரில், அந்த அலுவலகம் மொத்ததும் ப்ரைவசி மருந்துக்கும் இல்லாத இடம் போலத் தோன்றியது.

மிருதுளாவின் கண்ணாடி க்யூபிக் அறை எதுவென்று பார்த்தபடி நடந்தாள். யாரேனும் தன்னை கவனிக்கிறார்களா என்று மாயா ஓரக் கண்ணால் பார்த்தபடி நடந்தாள். அவரவர் வேலையில் மூழ்கியிருந்தார்கள். சத்தமாகப் பேசி சிரித்தபடி ஒரு க்ரூப் ஒரு பெரிய டேபிள் அருகே கூடியிருந்தது. அதில் ஒருவன் இவளையே பார்த்தான். அவன் அணிந்திருந்த டீ ஷர்ட்டில் நிறைய வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. உடனே அவளுக்கு பதின்வயதில் மிகவும் பிடித்த எழுத்தாளர் பி.கே.பி கதைகளில் வரும் பரத் சுசிலாவின் நினைவு வந்தது. அவன் டீ ஷர்ட் வசனங்களைப் படிக்க முயற்சித்தபடி அவனைக் கடக்கும் போது, ‘ எக்ஸ்கியூஸ் மீ மேடம்’ என்றான் அவன். என்னவென்பதைப் போல அவனைப் பார்த்தாள். பார்க்க லட்சணமாக இருந்தான். கன்னத்தில் குழி விழ அவளைப் பார்த்து தெரிந்தவன் போல புன்னகைத்தான். ‘புதுசா ஜாய்ன் பண்ணியிருக்கீங்களா?’ என்றான். இல்லை என்பது போலத் தலையசைத்தாள். அதற்கு மேல் என்ன கேட்பதென்று அவனுக்குத் தெரியவில்லை. அவளே தொண்டையை சற்று செறுமிக் கொண்டு, ‘மிருதுளா மேடம் பார்க்க வந்திருக்கேன்’ என்றாள். ‘ஓ… ஒக்கே இப்ப வந்துடுவாங்க. அதான் அவங்க கேபின். உள்ள போய் உட்காருங்க’ என்றான். ‘தேங்க்ஸ்’ என்று வாய்க்குள் முனகியபடி அவள் ரெண்டு அடி எடுத்து வைப்பதற்குள் அவன் கூட்டாளிகள் அவனை ஏதோ கிண்டல் செய்யவே அனைவரும் சத்தமாகச் சிரித்தார்கள். வேகமாக அவன் சுட்டிக் காட்டிய அறைக்குள் சென்று அங்கு ஒரு நாற்காலியில் அமர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தாள். சுவர் முழுவதும் அந்த பத்திரிகையின் அட்டைப் படங்கள் அடங்கிய போஸ்டர்கள். இந்தப் பத்திரிகை வரத் தொடங்கி இரண்டு மாதம் தான் ஆகியிருந்தது. பெண்களுக்கான கலர்ஃபுல் பத்திரிகை இல்லாத குறையை அது தீர்த்ததால் நல்ல வரவேற்பு இருந்தது. மாயா ஃபெமினா, வுமன்ஸ் ஈரா போன்ற பத்திரிகைகளை விரும்பிப் படிப்பாள். அட்டையின் வழுவழுப்பு தொடங்கி அந்த பத்திரிகைகளின் செய்நேர்த்தியும் துணிவான கட்டுரைகளும் அவளுக்கு ஆச்சரியம் தரும். அதுவும் முக்கியமாக கேள்வி பதில் பகுதி. இப்படியெல்லாம் பிரச்னையா என்று அதிர்ச்சி தரும் வகையில் உறவுச் சிக்கல்களில் ஆரம்பித்து, பருக்களை எப்படி ஒழிப்பது என்பது வரையிலான கட்டுரைகள் அதில் இருக்கும். ஃபெமினா மும்பையிலிருந்து வரும் பத்திரிகையா அல்லது வெளிநாட்டிலிருந்தா என்று ஆச்சரியப்படுவாள். காஸ்மாபாலிட்டன், டெபனிர் போன்ற பத்திரிகைகளை அவள் தோழி சந்தியாவின் வீட்டில் பார்த்திருக்கிறாள். வாங்கிப் படிக்க வேண்டும் என்று அப்போது தோன்றும், ஆனால் அதன் பின் அப்படியே மறந்து விடுவாள். மாயாவுக்கு மிகவும் பிடித்த நூலகம் பிரிட்டிஷ் கவுன்சில். அதன் பின் கன்னிமரா. லைப்ரரியன் கோர்ஸ் படித்து நூலகத்தில் வேலைக்கு சேர்ந்து விடலாமா என்று அடிக்கடி ஓர் எண்ணம் அவளுக்குள் தோன்றி மறையும். வீட்டையே ஒரு மினி லைப்ரரியாக மாற்ற அவளுக்கு ஆசை. ஆசைகள் ஒவ்வொன்றும் சீட்டுக் கட்டாக அடித்தளம் வலுவில்லாமல் அடிக்கடி உருவாகிக் கொண்டிருப்பதை அவளே கவனித்தாள். மாயாவுக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது. கிட்டாதாயின் வெட்டென மற என்றும் வசனத்தை அப்படியே பின்பற்றுபவள் அவள்.

இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை. மிருதுளா இன்னும் வரவே இல்லை. தற்போது அவள் வேலை செய்யும் ஆபிஸ்க்கு பெர்மிஷன் தான் போட்டிருந்தாள். ஃபோன் செய்து லீவ் சொல்லி விடலாமா என்று யோசித்தாள். அந்த அலுவலகம் அவளுக்கு பிடிக்கவில்லை. நல்ல சம்பளம் ஆனால் பிரச்னை எம்.டி ரூபத்தில் அவளை எரிச்சல் படுத்தியது. அலுவலகத்தில் எல்லோரும் போன பின்னர் தான் அவர் உள்ளே வருவார். இவள் மார்க்கெட்டிங் ஜி.எம் என்பதால், அவளை கட்டாயம் இருக்கச் சொல்லிவிடுவார். இவளும் விதுபாலா மேனனும் தான் பெண்கள். மற்ற அனைவரும் ஆண்கள். எல்லோரையும் அனுப்பி விட்டும் கூட இவளிடம் ஒன் டூ ஒன் டிஸ்கஷன்கள் இருக்கும். அவளை உட்கார வைத்துவிட்டு அவர் பல சமயம் ஃபோனில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பார். சில சமயம் அவள் காத்திருப்பதையே மறந்து வேறு வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுவார். லேசாக அவரிடம் நினைவுறுத்தினால் பெண்களை பெரிய பொறுப்புகளில் வேலைக்குச் சேர்ப்பதன் கஷ்ட நஷ்டங்களை சொல்வது போலச் சொல்லி குத்திக் காட்டுவார். மொத்தத்தில் அபினவ் ஒரு சிடுமூஞ்சி. எல்லா அக்கப்போர்களையும் முடிந்து வீடு வர சில சமயம் பத்து மணிக்கு மேலாகிவிடும். மாயாவுக்கு சித்துவின் முகம் நினைவுக்கு வரும். அவன் அழும் குரல் தலைக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆனால் கார்ப்பரேட் உலகம் அவள் தாய்மையை மண்டியிடச் செய்தது. அவள் மனத்தை ரண களமாக்கி வேடிக்கைப் பார்த்தது.

வேலை, பணம் என்பதைத் தாண்டி, தன் சுய அறிவால் கம்பெனிக்கு மாதம் பல லட்சம் ரூபாய்களை அவள் சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் பெருமை அவளின் ஏதோ ஒரு ஈகோவுக்குத் தீனியாக இருந்தது. தன்னுடைய வசீகரத்தின் மீதும், கொலை செய்ய வருபவன் என்றால் கூட அவனையும் பேச்சால் பணிய வைத்துவிடக் கூடிய திறனின் மீதும் அவளுக்கே பெருமை உண்டு. தனக்கு சுய மோகம் உள்ளது என்று ஒரு தடவை அவளுக்குத் தோன்றியது. ஆனால் தன்னை நேசித்தல் என்பது ஒருபோதும் சுய மோகம் ஆகாது என்றும் முடிவுக்கு வந்தாள். பிரதியொரு மனிதனும் செய்ய வேண்டியது அதுதான். முதலில் தன்னை நேசிப்பவரே அடுத்தவரை ஆழமாக நேசிக்க முடியும். தன்னைப் போல் பிறர் என்ற எண்ணம் வர, முதலில் தான் சரியாக இருக்க வேண்டும் அல்லவா? தன்னையே அடிக்கடி சுய பரிசோதனை செய்வது அவள் வழக்கம். எங்கும் எதிலும் தேங்கிவிடக் கூடாது. சிறிய வாய்ப்புகளை பெரியதாக்கும் திறனை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவாள் மாயா. நினைவு ஏணியின் படிகளில் விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஏறத் தொடங்கினாள் மாயா.

அன்று பவர் பாயிண்ட் ப்ரெசெண்டேஷனின் துவக்கத்தில் பவர் கட் ஆன நொடியில் ராஜன் உள்ளே வந்து சொன்ன விஷயத்தை கிருஷ் அனைவருக்கும் சொன்னார். ‘ஸாரி நண்பர்களே, நம்ம எம்.டிக்கு சடன் மாஸிவ் ஹார்ட் அட்டாக். ஐசியூவில் இருக்கிறாறாம். ஐ கேன்சல் திஸ் மீட்டிங்.’ என்றதும் எல்லோருக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. ராஜனின் காரில் வேறு சிலர் உடனடியாகக் கிளம்ப, மாயா கிருஷ் வண்டியில் ஏறினாள். கிருஷ்ஷுக்கு உள்ளூர மகிழ்ச்சி தான்.

மாயா அணிந்திருந்த வெளிர் நீல நிற பெங்கால் காட்டன் சேலையும், தலை குளித்து லூஸ் ஹேர் விட்டிருந்ததும், அவளிடமிருந்து இயற்கையாகவோ செயற்கையாகவோ வந்து கொண்டிருந்த மணமும் அவனுக்குப் பிடித்திருந்தது. கிருஷ் மணமானவன். ஒரு குழந்தையும் உண்டு. ஆனால் அவனுக்கு அவன் மனைவிக்கும் ஏழாம் பொருத்தம். முணுக்கென்றால் கோவித்துக் கொண்டு ஹோசூருக்கு கிளம்பி விடுவாள். அங்கே தான் அவள் பெற்றோர்கள் இருந்தார்கள். கோபம் தீர்ந்து அவளே வந்தால் தான் உண்டு. கிருஷ் கிட்டத்தட்ட வாழ்க்கையையே வெறுத்த நிலையில் தான் மாயாவைப் பார்த்தான். முதல் பார்வையிலேயே அவன் மனத்தில் ஏதோவொன்று உடைந்தது. அவள் பேசிய தொனியும், அவள் உடல்மொழியும், இவள் மற்ற பெண் போல இல்லை என்று அவனுக்குச் சொன்னது. அவள் வேண்டும் என்று அந்த கணமே முடிவெடுத்தான். கொஞ்சம் பழகியதில் அவளுக்காக நீலாவை விவாகரத்து செய்யக் கூட முடிவெடுத்தான். ஆனால் மாயா ஒரு வித்தியாசமான பெண்ணாக இருந்தது அவனுக்கு ஆச்சரியம். விஷய ஞானம் அதிகம் இருந்தாலும் ஒரு சொல் கூட தேவைக்கதிகமாக பேசாமல் இருப்பதால் அவனால் பெர்சனல் விஷயங்களை பேச முடிந்ததில்லை. இப்போது இந்த பயணம் அதற்கான ஒரு வாய்ப்பை கொடுத்திருந்தது அவனுக்கு மகிழ்வாக இருந்தது. எம்.டி அவனுடைய உறவினர் தான். மனதுக்குள் ஒரு பதற்றம் இருந்தாலும் அதையும் மீறி கிடைத்த நேரத்தில் என்ன பேசினால் சரியாக வரும் என்று அவன் மூளை கணக்கிட்டது.

‘மாயா ஸாரி நீங்க ரொம்ப அப்செட் ஆகியிருப்பீங்க, இதானே உங்க முதல் ஃபேக்டரி மீட்டிங்’ என்றான்.

‘லேசா அப்செட் ஆனது உண்மைதான் க்ருஷ். ஆனா அதுக்கென்ன பண்ண முடியும். சாருக்கு இப்படி சடன்னா ஆகும்னு யார் நினைச்சா? தட்ஸ் ஆல் ரைட்’. என்றாள்.

‘தட்ஸ் குட் ஸ்பிரிட். இப்ப நேரா நான் ஹாஸ்பிட்டல் போறேன். உங்களை வீட்டுல தானே ட்ராப் பண்ணனும்? இல்லை ஹாஸ்பிட்டலுக்கு வரீங்களா?’ என்றான்.

‘இல்லை கிருஷ்… நான் வழியில இறங்கிக்கறேன். நீங்க முதல்ல போய் பாருங்க. எனக்கு கொஞ்சம் தலைவலி. அதோட ஹாஸ்பிட்டல் அட்மாஸ்பியரைப் பார்த்தாலே உடம்புக்கு முடியாம போயிடும். ஸாரி…தப்பா நினைக்காதீங்க’ என்றாள்

‘உங்களைப்போய் நான் தப்பா நினைப்பேனா மாயா?’ என்றான் கிருஷ். அவன் இதை சொன்ன விதத்தில் ஒரு நெருக்கத்தை சேர்த்தாற் போல குழைவாகச் சொன்னான்.

அவனுடைய கார் ஸ்டீரியோவில் ‘நீ தானே எந்தன் பொன் வசந்தம், புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்’ பாடல் சன்னமாக பாடிக் கொண்டிருந்தது. வெளியே மழையும் இல்லாமல் வெயிலும் வராமல் க்ளைமேட் மந்தமாக இருந்தது.

மாயா எதுவும் சொல்லவில்லை. கிருஷ்ஷுக்கு அவளை பிடிக்கிறது என்று தெரியும். ஆனால் அதற்கு மேல் ஒன்றும் அவளுக்குத் தோன்றவில்லை. அவனுடைய தோற்றமும், நுனி நாக்கு ஆங்கிலமும், சிரிக்கப் பேசும் ஆற்றலும், புத்திசாலித்தனமும் எம்.டி முதற்கொண்டு அனைவரும் பாராட்டும் விஷயங்கள். அவனுடைய மூளையில் சதா சர்வ காலம் இந்த கம்பெனி தான் இருந்தது. வெகு சீக்கிரத்தில் வேறொன்று வந்தது என்றால் அது மாயா மட்டுமே.

நீண்ட நேரம் எதுவும் பேசாமல் வந்த அவளிடம் ‘மாயா ஹோட்டல்ல நிறுத்தறேன். ஒரு காபி குடிச்சிட்டு போகலாமா? தலைவலின்னு சொன்னீங்க’ என்றான்.

சரி என்றாள் மாயா.

நெடுஞ்சாலையை ஒட்டியிருந்த ஒரு சிறிய ரெஸ்டாரண்டில் காரை நிறுத்தினான் கிருஷ். அவள் ஒரு டீயும் வடையும் சாப்பிட, அவன் காபி குடித்தான்.

அவர்கள் அமர்ந்திருந்த மேஜையில் செயற்கை பூக்கள் மீது செயற்கையாக வடிந்திருந்த நீர்த்துளிகளை அவள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘நல்ல வேளை இன்னிக்கு க்ளைமேட் நல்லாயிருக்கு இல்லை?’ என்றான்.

அவள் ஆமாமென்று தலையாட்டினாள். அவள் மனத்தில் ராஜன் எந்த ரூட்டில் போயிருப்பான். அவனுடன் போயிருக்கலாமே என்று அவசர அவசரமாகத் தோன்றியது.

‘உங்க ஹாபிஸ் பத்தி தெரிஞ்சுக்கலாமா? என்ற கிருஷ்ஷிடம் ‘நிச்சயம் என்னைப் பத்தி ஒரு பயோகிராபி எழுதுவேன் அப்ப உங்ககிட்ட முதல்ல தரேன். படிச்சு தெரிஞ்சுக்கங்க’ என்றாள்

அவள் கடுப்பில் சொல்கிறாள் என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் ‘ஓ. இஸ் இட். தட்ஸ் கிரேட்’ என்றான் கிருஷ். ஆண்கள் வழிவதைப் பார்த்தால் ஏனோ மாயாவுக்குப் பிடிக்காது. கரைந்து உருகுவது என்பது வேறு, இப்படி விழுங்கிவிடுவதைப் போலப் பார்ப்பதும் தேவையே இல்லாமல் பேசுவதையும் நினைத்து மாயா எரிச்சல்பட்டாள்.

இருவரும் மீண்டும் வண்டியில் ஏற, கிருஷ் தொண தொணவென்று ஏதேதோ பேசிக் கொண்டே வந்தான். மாயா உம் கொட்டிக் கொண்டும், செயற்கையாக புன்னகைத்துக் கொண்டும் வந்தாள். எப்போது சென்னை வரும் என்று பாதை மீது பார்வையை புதைத்தாள். ஆனால் என்ன செய்வது. அது அவளுக்கு நெடிய பயணமாக இருந்தது.

சென்னைக்குள் வண்டி வந்ததும் கிருஷ்ஷிடம், சட்டென்று மின்னலாக ஏதோ ஒன்று உந்த, என்னோட ஃபைல் ஒண்ணு ஆபிஸ்ல இருக்கு, என்னை அங்க விட்டுடுங்க என்றாள். அவனும் ஆல்ரைட் என்று சொல்லி மீண்டும் பேசிக்கொண்டே வந்தான்.

அலுவலகத்தில் அவளை விட்டு விட்டு பிரியவே மனசில்லாதவன் போல் கிளம்பினான். மாயா நேராக வாஷ் ரூமுக்குச் சென்று அப்பாடா என்று நினைத்தபடி முகம் கழுவி பொட்டை வைத்துக் கொண்டாள். அவள் அறைக்குச் சென்று அமர்ந்த சில நிமிடங்களில் வெளியே கார் சத்தம் கேட்டது. அவர்களை ஹாஸ்பிட்டலில் இறக்கிவிட்டு ராஜன் திரும்பி வந்தான். அவளைப் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது. அவளுக்கும் தான்.

‘நீ இங்க இருப்பேன்னு எனக்குத் தெரியும்’ என்றான்.

‘நீ இங்க வருவேன்னு எனக்கும் தெரியும்’ என்றாள்.

‘நெசமாவா’ என்றான் அவன் அவள் கண்களில் ததும்பிய காதலைப் புதுசாகப் பார்த்தபடி.

‘நெசமே தான். சரி என்னை வீட்ல விட்டுடு’ என்றாள்.

‘அப்படியெல்லாம் அவளோ சீக்கிரமா விட்டுடவா பாண்டியிலேர்ந்து அவ்ளோ ஃபாஸ்டா ட்ரைவ் பண்ணேன்?’ என்றான்.

‘பின்ன எங்க போகணுமாம்? என்றாள்.

‘சொன்னாதான் மேடம் வண்டியில ஏறுவாங்களா’ என்றான் மிகவும் கனிந்த குரலில். அவன் பார்வை அவள் மீது போர்வையாக படிந்திருக்க, அவள் உடல் முழுவதும் சட்டென குளிர்ந்தது. அதே நேரத்தில் வியர்க்கவும் செய்தது. இதென்ன ரசாயன வேலை நமக்குள் என்று நினைத்தபடி அவன் முகத்தைப் பார்க்க முடியாத அளவுக்கு அவளுக்கு வெட்கம் ஏற்பட்டது. இனம் தெரியாத ஏதோவொரு பரவசத்தில் அவள் உடல் லேசாக நடுங்கியது. ஏன் இவன் மீது இப்படியொரு அபரிதமான ஈர்ப்பு என்று புரியாமலே இருந்தது அவளுக்கு. எதற்கு புரிய வேண்டும் என்று அவளுடைய காரண அறிவும் சரண் அடைந்துவிட்டிருந்தது. புன்னகைத்தபடி,

‘அப்படியெல்லாம் இல்லைன்னு உனக்குத் தெரியும் தானே ராஜன். என்ன ட்ராமா இது’ என்றாள்.

வாய் தான் அப்படி சொன்னதே தவிர, அவன் பின்னால் பூனை மாதிரி சென்று முன் சீட்டில் அமர்ந்தாள்.

கார் கிளம்பியது. அவனுடனான அவள் வாழ்க்கையும் அந்த நொடி முதல் புதிதாகத் தொடங்கியது.

தொடரும்….

அத்தியாயம் – 3

அத்தியாயம் – 2

அத்தியாயம் – 1